ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மொழிப்போர் ஈகி ப. பெரியசாமி அவர்களுக்கு வீரவணக்கம்! - ஐயா பெ. மணியரசன்




மொழிப்போர் ஈகி
ப. பெரியசாமி அவர்களுக்கு வீரவணக்கம்!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


திருப்பூர் மொழிப்போர் ஈகி ப. பெரியசாமி அவர்கள், கடந்த 26.07.2020 அன்று காலமான துயரச்செய்தி இருவகையில் வேதனை தருகிறது. ஒன்று, அவரது இழப்பு. இரண்டாவது, கொரோனா முடக்கக் காலமான தால், உரிய சிறப்புகளின்றி அவரது இறுதிச் சடங்கு நடந்த துயரம்!

ஈகி பெரியசாமி ஒரு தன்மான அரிமா! தி.மு.க.வில் திருப்பூர் பகுதியில் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராக விளங்கியவர்; வேலம்பாளையம் பேரூராட்சித் தலை வராகத் தேர்வு செய்யப்பட்டு நேர்மையாகப் பணியாற்றி யவர்; மிகச்சிறந்த தொழிற்சங்கத் தலைவர்.

தடையின்றித் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றவே மெல்ல மெல்ல தி.மு.க.விலிருந்து விலகிக் கொண்டார் மொழிப்போர் ஈகி!

ஈழ விடுதலைப் போரையும், புலிகளையும் முழுக்க முழுக்க ஆதரித்து களப்போராட்டங்களில் கலந்து கொண்டார்.

மொழிப்பேர்ர் ஈகி ப. பெரியசாமி அவர்கள் தமிழ் மொழி உரிமைக்கான பொதுக்கூட்டங்களில் மாநாடு களில் முழங்கினார். அவரே அவ்வாறான நிகழ்வுகளைத் திருப்பூரில் ஏற்பாடு செய்தார்.

அவர் பெயருக்கு முன்னால் மொழிப்போர் ஈகி என்ற சிறப்பு முன் ஒட்டு வருகிறதே அது எப்படி? உண்மையான மொழிப்போர் ஈகி ப. பெரியசாமி! அவருடைய இளம் பருவத்தில் 1965இல் தமிழ்நாட்டில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போர் நடந்தது. மாணவர் போராட்டமாகத் தொடங்கியது - மக்கள் போராக விரிவடைந்தது.

இந்தி எதிர்ப்பு தமிழர் போராட்டத்தை அடக்கத் தமிழ்நாடு காவல்துறையினர் போதாமல் படையாட் களையும் அப்போதிருந்த காங்கிரசு ஆட்சி வர வழைத்தது. நானூறு பேர்க்கு மேல் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கூட்டம் கூட்டமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட ஊர்கள் திருப்பூர், குமாரபாளையம், பொள்ளாச்சி ஆகியவை! திருப்பூரில் நடந்த இந்தி எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் பங்கேற்றவர் இளைஞர் பெரியசாமி!

பெரியசாமியும் அவர் நண்பர்களும் திருப்பூரில் இந்திக்காரர்களின் - மார்வாடிகளின் கடைகளை மூடச் செய்து, “தமிழ்நாட்டை விட்டு ஓடிப் போ!” என்று முழங்கிப் போராடினர்.

அந்த வழக்கில் காவல்துறை பெரியசாமியைத் தீவிரமாகத் தேடியது. தலைமறைவாக இருந்த பெரிய சாமி, பின்னர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து நேர் நின்று சிறைக்குப் போனார். பல மாதங்கள் சிறை யிலிருந்து பின்னர் பிணையில் வெளி வந்தார். அதனால் தான் அவர் மொழிப்போர் ஈகி ஆனார்.

தமிழ்நாடு முழுவதும் மொழிப்போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் இறந்து போன மற்றும் சிறைக்குப் போன ஈகியர் குடும்பங்களுக்கும் ஈகியர்களுக்குமான “மொழிப்போர் தியாகிகள் சங்க”த்தை நிறுவி, அதற்குத் தலைவரானார். மொழிப்போர் ஈகியர்க்கு அரசின் மாத நிதி உதவித்தொகை கிடைக்க முயற்சிகள் எடுத்தார்!

தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியவுரையில் மொழிப்போர் ஈகியர்க்கு அந்தந்த ஊரிலும் நினை வகங்கள் - சிலைகள் - நினைவுத் தூண்களை அரசு எழுப்பவில்லை, நாம் அவற்றை நிறுவித் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். அந்த ஆசிரிய வுரையால் எழுச்சி பெற்று மயிலாடுதுறையில் காலஞ் சென்ற தோழர் நாக. இரகுபதி முயற்சியில் மாணவ ஈகி சாரங்கபாணிக்கு தமிழ் உணர்வாளர்கள் நினைவுத் தூண் திறந்தார்கள். திருப்பூரில் மொழிப்போர் ஈகி ப. பெரியசாமி முயற்சியில் 1938, 1965 மொழிப்போர் ஈகியர் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.

இலஞ்ச ஒழிப்பு சங்கம் நடத்தி, இலஞ்ச ஊழலுக்கு எதிராகச் செயல்பட்டார்.

தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசிய இயக்கங்களுடன் நெருங்கிச் செயல்பட்டார். தமிழர் தேசிய முன்னணியில் பொறுப்பு வகித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடனும் குறிப்பாக என்னு டனும் நேசமாக இருந்து, எமது ஈரோடு “வெளியாரை வெளியேற்றுவோம்!” மாநாடு (2005) உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பல மாதங்கள் நோயுற்று வீட்டிலேயே இருந்து மருத்துவம் பார்த்துக் கொண்ட ஐயா மொழிப்போர் ஈகி ப. பெரியசாமி அவர்கள், 26.07.2020 அன்று கால மானது பெருந்துயரம் அளிக்கிறது. தமிழ்வழிக் கல்விக்காகப் போராடி வரும் ஐயா க.இரா. முத்துச்சாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கி.ரா. சிவக்குமாரன், ஸ்டீபன் பாபு, குணசேகரன், பாண்டி யரசன், இராசாகுமார் ஆகியோர் பெரியசாமி அவர்களின் இல்லத் திற்குச் சென்று அவரது மனைவி பாக்கியலட்சுமி, மகன் கண்ணன், மகள் கோதைபிரியா ஆகியோரைச் சந்தித்து நேரில் ஆறுதல் கூறினர்.

மொழிப்போர் ஈகி அவர்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.