இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறு! தமிழ்நாட்டையும் வெளியேறு என்பார்களா? - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!
இந்திய அரசின் இந்திய மரபுவழி மருத்துவத்துறைக்கான ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் காணொலியில் பயிலரங்கம் நடத்தி, மாநிலங்களில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இப்பயிலரங்கின் தலைமைப் பயிற்சியாளர் அத்துறையின் நடுவண் அமைச்சகச் செயலாளர் வைத்தியா இராஜேஷ் கொட்டேச்சா!
இக்காணொலிக் கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் 37 பேர் பங்கேற்றனர். இந்த 37 பேரும் மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மூன்று நாள் இக்கருத்தரங்கு நடந்துள்ளது.
நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்தியா இராஜேஷ் கொட்டேச்சா முழுக்க முழுக்க இந்தியிலேயே பயிலரங்கத்தை நடத்தியுள்ளார். மற்றவர்களும் இந்தியிலேயே வகுப்புகளை நடத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டிலிருந்தும், மற்ற சில மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட இந்தி தெரியாதோர், ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்துமாறு கோரியுள்ளனர்.
தமக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது; இந்தியில்தான் நடத்துவோம்; “இந்தி தெரியாதோர் வெளியேறுங்கள்” என்று வைத்தியா கூறியுள்ளார்.
வகுப்பு நடத்தியவர்களில் ஒருவருக்குமே ஆங்கிலம் தெரியாதா? அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் அலுவல் மொழி ஆங்கிலம்! நடுவண் அமைச்சரவையில் ஒரு துறைக்கு செயலாளராக இருக்கும் வைத்தியாவுக்கு ஆங்கிலத்தில் பேச வராதா? இது உண்மையான காரணமல்ல; செய்தியாளர்கள் கேட்டதற்குச் சமாளித்து பதில் சொல்லி இருக்கிறார் வைத்தியா.
“போக்கிரிகள், காலிகள், அந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டு, சத்தம் போட்டு, அதைச் சீர்குலைத்து விட்டனர்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் வைத்தியா!
பயிலரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவத் துறையினர், “ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டதற்கு “பயிலரங்கத்திற்கு எதிராக இடையூறு செய்கிறீர்கள். இதற்குரிய தண்டனை உங்களுக்குத் தரப்படும்” என்று வைத்தியா மிரட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளை – மரபுவழி மருத்துவர்களை போக்கிரிகள் என்றும், வெளியேறுங்கள் என்றும் தண்டிப்பேன் என்றும் மிரட்டி இழிவுபடுத்தும் துணிச்சல் நடுவண் அமைச்சகம் ஒன்றின் செயலாளர்க்கு எங்கிருந்து கிடைத்தது?
மோடி அரசின் இந்தித் திணிப்பின் வேகத்திலிருந்தும், ஒற்றை ஆட்சி எதேச்சாதிகாரத்திலிருந்தும் இந்த இழிசெயல் துணிச்சல் நடுவண் அரசின் அதிகாரிகளுக்குக் கிடைத்திருக்கிறது.
இதுதான் இட்லர் பாணி அதிகாரவர்க்கத்தின் குணம்! உலகை ஆளப்பிறந்தது ஆரிய இனம் என்று கொக்கரித்தார் இட்லர். இந்தியாவை ஆளப்பிறந்தது ஆரிய இனமும் சமற்கிருத மொழியுமே என்று தனக்குள் கொக்கரித்துக் கொண்டு, அதற்கான நாஜி வேலைகளில் ஈடுபடுகிறது மோகன் பகவத் மோடி அரசு!
இதற்கேற்ப முன் மழலைப் பருவத்திலிருநது முதுநிலை ஆய்வுக் கல்விவரை இந்திமயமாக்கப்படுவதற்கும், இந்தியப் பன்மைப் பண்பாட்டை ஒற்றை ஆரிய – சமற்கிருதப் பண்பாடாக மாற்றுவதற்கும் புதிய கல்வித் திட்டத்தைத் திணித்துள்ளது மோடி அரசு!
சில நாட்களுக்கு முன் 09.08.2020 அன்று வானூர்தி நிலையத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியைப் பார்த்து, “இந்தி தெரியாது என்றால் நீங்கள் இந்தியரா? இல்லையா?” என்று கேட்டார் நடுவண் அரசின் தொழில்துறைக் காவல்படையைச் சேர்ந்த இந்திக்காரர்!
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தாமலேயே கிட்டத்தட்ட ஒற்றையாட்சியை நிலைநாட்டிவிட்டார் மோடி! பல்வேறு தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழிப்பது, அவர்களின் தாய்மொழியை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பது, இந்தி – சமற்கிருத ஏகாதிபத்தியத்தை நிர்மானிப்பது என்ற தங்களின் இலட்சியத்தில் ஆரியத்துவாவாதிகள் வெகு தொலைவு சென்றுவிட்டார்கள்!
ஏ, தமிழினமே, உனக்கு இன்னுமா இச்சூது விளங்கவில்லை? விளங்கவில்லையா? அல்லது 2021 சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு வாக்களி; அதுவே சர்வரோக நிவாரணி என்று பேசிக் கொண்டிருக்கும் தேர்தல் கட்சிகள் உன்னைக் குழப்பிவிட்டனவா?
தமிழர்களைப் பார்த்து, இந்தி தெரியாதென்றால் பயிலரங்கை விட்டு வெளியேறு என்று கொக்கரித்த அதிகாரி மீது இதுவரை மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி அரசு ஏன் கோரிக்கை எழுப்பவில்லை?
ஆங்கிலம் இந்திய அரசின் அலுவல் மொழி என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அந்த மொழியில் பேசும்படிக் கேட்டால் குற்றமா?
இந்தி தெரியாத தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து வெளியேற்றி விடுவார்களா?
Leave a Comment