தஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்! - தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்!
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!
தமிழ்ப் பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழாவான சதய விழாவை இவ்வாண்டு 26.10.2020 திங்கட் கிழமை ஒருநாள் நிகழ்வாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை முடிவு செய்ததைத் தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வரவேற்கிறேன். கொரோனா காலம் என்பதால், பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை இவ்வாண்டு தவிர்த்ததும் சரியான முடிவே.
பேரரசன் இராசராசனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக நடைபெறும் இவ்விழாவின் போது, மூலவரான பெருவுடையார் கருவறையிலும், மற்ற தெய்வ பீடங்களின் கருவறையிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தேவாரம், திருமந்திரம் முதலிய கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்தி உள்ளார். தேவையானால் வெளியிலிருந்து மூத்த ஓதுவாமூர்த்திகளை அழைத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது கருவறையில் அர்ச்சனை செய்து கொண்டிருப்பவர்களையும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வழி காட்டலாம்.
எமது இந்த வேண்டுகோளானது தமிழ்நாடு அரசின் – இந்து அறநிலையத்துறையின் கோயில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதே!
கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணை இடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நானும், மற்றவர்களும் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில் 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழிலும் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணையின் படியே அக்குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்பட்டது.
இப்பொழுது நடைபெறவுள்ள தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவிலும் பெருவடையார் கருவறை மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சைப் பெரிய கோயில்
உரிமை மீட்புக் குழு
பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
Leave a Comment