ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும் ! கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் ஆணை! - ஐயா -பெ.மணியரசன்




எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும் !
கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில்  
மதுரை உயர்நீதிமன்றம் ஆணை!

-பெ.மணியரசன், தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு நாளை (04.12.2020) நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு கருவறை, வேள்விச் (யாக) சாலை, கோபுரக் குடமுழுக்கு ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதி பூசை செய்ய ஆணை இட்டிருப்பது தமிழ்கூறும் நல்லுலகின் பேருவகைக்கும் பெருமிதத்திற்கும் பெரு நன்றிக்கும் உரியதாகும்.

கொரோனா கால முடக்கம் உள்ள நிலையில் மிகக் குறுகிய அவகாசம் வைத்து, பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு அறிவிக்கப்பட்டது. அக்கோயில் வளாகத்திற்குள்தான் கருவூரார் நல்அடக்கக் கோயில் உள்ளது.
 
கரூர் வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன் அவர்கள்  மூலம் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நிறுவனத்தில் அந்த சந்திப்பு நடந்தது. அக்கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது. இந்து வேதமத மறுமலர்ச்சி இயக்கத்தின் சித்தர் மரபுப் பெரியவர் ஐயா மூங்கிலடியார் என்கின்ற பொன்னுச்சாமி அடிகளார், சித்தர் மரபு சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவர் சத்தியபாமா அம்மையார், நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, கோ.மாரிமுத்து, வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன், சிவனடியார் நாகேந்திர கிருஷ்ணன், வழக்கறிஞர் கு.பச்சையப்பன், தமிழின உணர்வாளர் சாமியப்பன் முதலியோரும், நாம்தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆகியவற்றின் தோழர்களும் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவுக்குப் பின், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பசுபதீசுவரர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் அலுவலகங்களுக்குச் சென்று, திருக்குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்துமாறு கேட்டுக் கொள்ளும் மனுக்கள் கொடுத்தோம்.

கோயில் கருவறை, வேள்விக் கூடம் (யாகசாலை), கோயில் கோபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ்மந்திரம் ஓதி பூசையும் சடங்குகளும் செய்ய வேண்டும் என்றும், கோபுரக் கலசத்தில் நீராட்டு செய்து தமிழ்மந்திரம் ஓதுவார் ஓதிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரி 2.12.2020 அன்று உண்ணாப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தோம்.

அதன் பின்னர் கோபுர வாசலில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மேற்படிக் கோரிக்கையை வலியுறுத்தினோம்.

நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் திரு.செல்வ.நன்மாறன் தலைமையில் 2.12.2020 காலை 9.00 மணியளவில் பசுபதீசுவரர் கோயில் வாயிலுக்கு எதிரே உண்ணா நோன்பிருக்க வந்த உணர்வாளர்களைத் தடுத்து காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். தோழர்கள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர். வழக்கறிஞர் நன்மாறன், சத்தியபாமா அம்மையார், தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் இரமேசு இளஞ்செழியன் மற்றும் நாம்தமிழர் கட்சித் தோழர்களும் சத்தியபாமா அறக்கட்டளை மகளிரும், த.தே.பே தோழர்களும், இன உணர்வாளர்களும் சற்றொப்ப 35 பேர் தளைப்படுத்தப்பட்டு, மண்டப்பத்தில் வைக்கப்பட்டனர்.

மண்டபத்தில் அவர்கள் அனைவரும் உண்ணாப் போராட்டம் தொடர்ந்தனர். உணவு உண்ண மறுத்தனர்.

மாலை 5.00 மணியளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், வீரத்தமிழர் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்நாதன் சேகுவேரா, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.தென்னவன், தோழர்கள் குடந்தை தமிழ்த்தேசியன், திருச்சி இனியன் (த.தே.பே பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோர் மண்டபத்தில் இருந்த உணர்வாளர்களைச் சந்தித்துப் பாராட்டினர். அவர்களின் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து பிஸ்கட், தேநீர் வழங்கினர்.
 =========================
உயர்நீதி மன்றத் தீர்ப்பு!
==========================
வீரத்தமிழர் முன்னணியின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் இரமேசு இளஞ்செழியன் கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடைபெற ஆணைஇடக் கேட்டுக் கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கறிஞர் ரூபஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்தார்.
அடுத்து, கரூர் வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன் முயற்சியில் கருவூரார் வழிச் சித்தர் பீடத் தலைவர் மூங்கிலடியார் என்னும் பொன்னுசாமி அடிகளார், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடக்க ஆணை இடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இவ்வழக்கை வழக்கறிஞர் அருணாச்சலம் தாக்கல் செய்தார்.

இன்று (03.12.2020) பிற்பகல் இவ்வழக்குகள் நீதிபதி கிருபாகரன்-நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. மிகச் சிறப்பான தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். தீர்ப்பு விவரம்:

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கில் எல்லா இடத்திலும் தமிழ் அர்ச்சனை இடம் பெறவேண்டும். சமற்கிருதத்தில் மந்திரம் சொன்னாலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

ஏற்கெனவே தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்று இதே நீதிமன்றம் ஆணை இட்டு அது செயல்படுத்தப்பட்டபின், மீண்டும் தமிழுக்காக, இவர்கள் இங்கு வரவேண்டிய நிலை ஏன் வந்தது? இந்து சமய அறநிலைத்துறையை எச்சரிக்கிறேன்!

இனிமேல் தமிழ்நாட்டில் வேறு எந்த இந்து சமய அறநிலையக் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய அனுமதி கோரி யாரும் உயர்நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையை இந்து சமய அறநிலையத்துறை உண்டாக்க வேண்டும். அப்படி எந்தக் கோயிலிலாவது தமிழ் மந்திர அர்ச்சனை மறுக்கப்பட்டு, அனுமதி கோரி யாரேனும் உயர்நீதி மன்றம் வந்தால், அந்த வழக்குக்காக  இந்து சமய அறநிலையத் துறையிடம் 10 இலட்சம் ரூபாய் செலவு தொகை வசூலிக்கப்படும்.

தமிழ் மொழியானது தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரையில் இந்நீதிமன்றம் அமைந்துள்ளது. தமிழை யாரும் புறக்கணிக்கக்கூடாது.

இவ்வாறு முத்து முத்தான கருத்துகளை நீதிபதி கிருபாகரன் தமது தீரப்புரையில் கூறினார். விரிவான எழுத்துவடிவிலான தீரப்பை இரண்டு நாட்களில் அளிப்பதாகக் கூறினார்.

தொலைகாட்சியில் இத்தீர்ப்பை அறிந்த தமிழ் ஆன்மிகர்களும் தமிழர்களும் பெருமகிழ்வு கொண்டு, ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மதுரைத் தீரப்பைத் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த தமிழ் ஆன்மிகச் சான்றோர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்த்தேசியர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.