ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஜக்கி வாசுதேவின் திட்டம் வர்ணாசிரமத்திற்கு வாசல் திறக்கும்! - ஐயா கி. வெங்கட்ராமன், கட்டுரை!ஜக்கி வாசுதேவின் திட்டம்
வர்ணாசிரமத்திற்கு வாசல் திறக்கும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

“அரசின் அடிமைத்தனத்திலிருந்து கோயில்களை மீட்க வேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களைப் பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று ஜக்கி வாசுதேவ் கூக்குரலிடுகிறார். பல காலமாக ஆர்.எஸ்.எஸ். சொல்லி வந்ததைத்தான் இப்போது ஜக்கியின் வழியாகச் சொல்கிறார்கள். 

இதற்கு சில வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள். “முசுலீம்களின் மசூதி, கிறித்தவர்களின் சர்ச்சுகள் ஆகியவற்றில் தலையிடாத அரசு, இந்துக் கோயில்களை மட்டும் அறநிலையத்துறையின் கீழ் வைத்திருப்பது ஒருதலைபட்சமானது; கோயில்களின் சொத்துகளை மீட்க முடியவில்லை. அரசியல் தலையீடே இதற்குக் காரணம்! பல கோயில்கள் விளக்கேற்றாமல் இருண்டு கிடக்கின்றன. அரசின் அலட்சியமே இதற்குப் பொறுப்பு!” ஆகியவையே இந்தக் காரணங்களாகும். 

முசுலீம்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு உலகு தழுவிய ஒற்றைப் புனித நூல், ஒற்றை மதத் தலைமை என்பவை இருக்கின்றன. இந்து மதம் அப்படியானதல்ல! ஒற்றை மத பீடம் என்றோ, ஒற்றைப் புனித நூல் என்றோ இந்து மதத்தில் எந்த ஒன்றையும் காட்ட முடியாது! இது பன்மைத்தன்மை வாய்ந்தது.  

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கிற பல்வேறு பழமையான கோயில்கள் அரசர்கள் உள்ளிட்டு பல தலைமுறையினரால் கட்டி விரிவாக்கப் பட்டவை. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு ஆகமத்தை ஒழுகுகின்றன. 

பொத்தாம் பொதுவாக “பக்தர்களின் கட்டுப்பாடு” என்று சொன்னால், எந்தக் கட்டுப்பாட்டை ஜக்கி சொல்கிறார்? அவர் சொல்லாமல் சொல்வது பிராமணர்களின் கட்டுப்பாட்டைத்தான்! பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இந்துமத பக்தர்களின் வழிபாட்டுரிமையை - சமய உரிமையை மறுப்பதுதான் இவரது உள்நோக்கம்! 

இன்று அரசின் நிர்வாகத்தில் கோயில்கள் இருந்தாலும், அவற்றின் விழாக்கள், கோயில் மரபுப் பழக்கங்கள் ஆகியவை குறித்து, அக்கோயில்களைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள், அக்கோயில் அர்ச்சகர்களையும், பக்தர்கள் பலரையும் கலந்துதான் நாள் குறிப்பதிலிருந்து, நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது வரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

பக்தர்கள் என்ற பெயரால், தனியார் கொள்ளையிலும் ஒழுங்கீனத்திலும் கோயில்கள் இருந்த காரணத்தினால் தான் இந்து சமய அறநிலையத்துறையே ஏற்படுத்தப்பட்டது. கோயில் சொத்துகளை மீட்பது, அரசால்தான் முடியும். அதில் குறைபாடு இருந்தால் அரசின் கையில் இருந்தால்தான் பக்தர்கள் தலையிட முடியும். குறைகளைக் களைய முடியும்! கோயில் வருமானத்தைப் பெருக்க முடியும்! 

எடுத்துக்காட்டாக, சிதம்பரம் நடராசர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்த காலத்தில் கணக்கில் காட்டப்பட்ட உண்டியல் வசூலைவிட, இப்போது தீட்சிதர்களின் தனி நிர்வாகத்தின் கீழ் வந்ததற்குப் பிறகு பல மடங்கு குறைத்துக் காட்டப்படுபடுகிறது. இது நிர்வாக சீர்கேடு எங்கே அதிகமாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த உண்மை வெளியில் தெரிந்த பிறகும், நடராசர் கோயில் பக்தர்கள் நிர்வாகத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லை. ஏனென்றால், அது தீட்சிதர்களின் தனி நிர்வாகத்தில் இருக்கிறது. அரசின் கைகளில் இல்லை!

செயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பூசைகள நடைபெறாத பல கோயில்களில், ஒரு கால பூசையாவது நடப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்தார். அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அதுபோல் இன்னும் இருக்கிற கோயில்களில் முறையான வழிபாடு நடத்த அரசின் வழியாகச் செய்தால்தான் தொய்வின்றி நடக்கும். தனியார் நன்கொடை வரவு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறபோதுதான் நெறிப்படுத்தப்பட்டு, கோயில்களுக்குக் கிடைக்கிறது.

“பக்தர்களின் நிர்வாகத்தின்கீழ்” என்றால், பிராமணத் தலைமையின் கீழும், அதற்கு அடிபணிவோர் கீழும் நிர்வாகம் செல்கிறது என்று பொருள்! வருணாசிரம உயர்வு தாழ்வு கோயில்களில் புது வடிவம் எடுக்கும் என்று பொருள்! இப்போது, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறபோதே தமிழில் வழிபாடு நடத்துவதற்கு மிகப்பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. மொத்தமாகத் தனியார்வசம் போய்விட்டால், தமிழ் தலைகாட்டுவதற்கு வாய்ப்பே இல்லை! 

இந்து மதம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், வடநாட்டு வழிபாட்டு முறைகளுக்கும், தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளுக்கும் முற்றிலும் வேறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. ஜக்கியும் அவருக்குப் பின்னால் இருக்கிற ஆர்.எஸ். எஸ்.சும், தமிழ்நாட்டுக் கோயில்களின் தனித்தன்மையையும், தமிழ்நாட்டு பக்தர்களின் வழிபாட்டு உரிமையையும் பறித்து, “ஜெய் ஸ்ரீராம்”, “ஜெய் ஸ்ரீ அனுமான்” என்ற ஒற்றை முழக்கத்தின்கீழ் ஒட்டுமொத்தக் கோயில்களையும் அடக்குவதற்குத்தான் சூது செய்கிறார்கள். 

சைவத் திருமுறைகளையும், ஆழ்வார் பாசுரங்களையும், அருணகிரிநாதர் பாடல்களையும் நீக்கிவிட்டு, சமற்கிருத மந்திரங்கள் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் இதனை முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டுக்குத் தொடர்பே இல்லாதவர் என்பது மட்டுமல்ல, சிவலிங்கத்திற்குத் தம்விருப்பம் போல் மனித வடிவம் கொடுத்து, கட்டடத்  திறப்புவிழா போல் தலைமையமைச்சர் மோடியை வைத்து, சிலைத் திறப்புவிழா நடத்தியவர்தான் ஜக்கி வாசுதேவ்! 

தமிழ்நாட்டு சமய ஆகமங்களுக்கோ, மரபுகளுக்கோ கொஞ்சமும் தொடர்பில்லாத ஜக்கி வாசுதேவும், அவரை இயக்குகிற ஆர்.எஸ்.எஸ்.சும் தமிழர்களைக் கோயில்களிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கு சூழ்ச்சி செய்வதை தமிழர்கள் புரிந்து கொண்டு முறியடிக்க வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் 2021 மார்ச்சு இதழின் ஆசிரியவுரையாக எழுதியது)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.