ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது! ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது! ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா நோயாளிகளுக்கு வட இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை குறுக்குவழியில் திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் துணையை நாடியிருக்கிறது வேதாந்தா நிறுவனம்!

வடஇந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யாமல் காலங்கடத்திவிட்டு, தமிழினத்தை பலி கொடுத்து ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க இந்திய அரசு சதி செய்கிறது. 

வேதாந்தா என்ற பேரழிவு முதலாளிய நிறுவனத்திற்கு துணை செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று வாதுரை செய்கிறார். 

அதைவிட நேற்றோடு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பாப்டே தனது கடைசி வேலை நாளில், இந்த வழக்கை விசாரிக்கிறார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை நோக்கிக் கடும் கோபம் கொட்டுகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறந்தால், மீண்டும் உயிர்ப்பலி தொடரும், உயிர்க்கொல்லி நோய்கள் தீவிரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கூறியதை தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் எடுத்துக்காட்டினார். அதற்குத்தான் தலைமை நீதிபதி பாப்டே, தமிழ்நாடு அரசின் மீது சீறுகிறார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததே ஆக்சிஜன் உற்பத்தி செய்துத் தர தாங்கள் தயார் என்று வேதாந்தா நிறுவனம் கூறியதால் அல்ல! வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை அதனுடைய வருடாந்தர பராமரிப்புப் பணிக்காகத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த விசாரணையின் போதுதான் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தனது ஆலையைத் திறப்பதற்கான குறுக்குவழியாகப் பயன்படுத்த வேதாந்தா நிறுவனம் மனு செய்தது. 

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனமும், மோடி அரசும் சேர்ந்து சதி செய்கின்றன. இதுகுறித்து கவனம் செலுத்தாமல், தலைமை நீதிபதி பாப்டே திறக்க அனுமதித்தால் என்ன எனக் கேட்கிறார். இந்திய அரசு வட இந்திய மாநிலங்களில் ஏன் ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை, குறைந்தது கொரோனா ஏற்பட்ட கடந்த ஓராண்டுக்குள்ளாவது போர்க்கால வேகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்க முன்வரவில்லை! 

மாறாக, ஆக்சிஜன் உற்பத்தி தமிழ்நாட்டில் உபரியாக இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கூடாது என்கிறீர்களா எனத் தலைமை நீதிபதி எதிர்க்கேள்வி கேட்கிறார். ஸ்டெர்லைட் ஆலையில் தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் உற்பத்தி செய்தால் என்ன என்று கேட்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு அரசால் மூடி முத்திரை வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதன் உரிமை தமிழ்நாடு அரசுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுவிடவில்லை. இவ்வாறான சூழலில், அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் தமிழ்நாடு அரசு செய்தால் என்ன எனக் கேட்பது – சட்ட முரண்பாடானது என்பதுகூட தலைமை நீதிபதிக்குப் புரியாத ஒன்றா? 

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் பலமுறை ஆட்சி செய்த பா.ச.க. உயிர்காக்கும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்காதது ஏன்? மத்தியப்பிரதேசம் போன்ற பெரிய மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் கூட ஒரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஏற்பாடோ, இரண்டு – மூன்று மாவட்டத்திற்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையோ கூட திறக்காமல் இருந்து, மக்கள் உயிர்ப்பலியாகக் காரணமான இந்திய அரசு, தனது கையாலாகாத்தனத்தை மறைக்கப் பார்க்கிறது. தனது குற்றத்தை மறைத்துத் திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டு மக்களை பலி கொடுத்து ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கொல்லைப்புற வழியைத் தேடுகிறது. 

தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை இடித்துவிட்டு, அந்த ஆலை அமைந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு மூடிமட்டும் வைத்திருப்பது மீண்டும் மீண்டும் அந்த ஆபத்துத் தலைதூக்க வழி ஏற்படுத்துகிறது. 

எனவே, தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், உடனடியாக அந்த ஆலையின் நிலம் – கட்டுமானம் ஆகியவற்றை கையகப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அனில் அகர்வாலின் வேதாந்தா குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.