ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு! - தங்கம்


மரத்தில் மலர் போன்று சரித்திரத்தினின்றும் மலர்வது கலாச்சாரம். - அமில்கார் கப்ரேல்

                     ( ஆப்பிரிக்க விடுதலைச் சிந்தனையாளர் )

அ : மண்ணும் மக்களும்

ஒரே மண்ணில் பிறக்கிறோம். ஒரே மொழி பேசறோம். நமக்குள்ள ஒத்துமையா இருக்கணும்என்ற கருத்து, அசுரனின் திரைப்படத்தின் இறுதி காட்சியில், சிவசாமியிடமிருந்து வெளிப்படுகிறது.

1 : மண்ணும் கலைஞனும்

சினிமா விகடன்” 14.11.2019 இதழில் வெளிவந்த அசுரன்இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணலில், தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றி தமது ஆதிக்க அடையாளங்களாக மாற்றிக் கொள்வோர் குறித்த விழிப்புணர்வை வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அசுரன்படத்தின் கருத்தியல் சாரத்தை இவ்வாறு கூறினார் வெற்றிமாறன். வெளியிலிருந்து வந்து தங்கள் ஆதிக்கப் பண்பாட்டை தமிழர்கள் மீது திணித்தவர்களைத்தான் அவர்கள்என்று இயக்குநர் குறிப்பிடுகிறார்.

ஆ : வகுப்பியமும் மொழியியமும்

‘1960களில் தமிழ்நாடுஎன்றொரு காலவெளியில் நின்று, மொழியியத்தை முன்வைத்து, இனவொற்று மையைத் தீர்வாக மொழிகிறான் சிவசாமி.

ஒரே மண்ணில் பிறந்து ஒரே மொழி பேசுகிற ஓரினமானது வகுப்பியம் கொண்டு தமக்குள் ஒரு பகுதியினரை அடக்கியொடுக்குகிறது. அடங்க மறுப்பவர்கள் வீறுகொள்ள, ஓரினத்தைச் சார்ந்த மனிதர்களுக்குள்ளேயே பகை முற்றி, உள்ளினப் போராக வடிவு கொள்கிறது. இந்த உள்ளினப் போர்க்களத்தைக் கலைஞனின் கண்கொண்டு கண்டு, போர்க்களக் காட்சிகளை இயங்குபடக் கருவி கொண்டு வரைந்து காட்டுகிறார் வெற்றிமாறன். ஒடுக்குபவர்கள் வன்முறை கொண்டு தாக்குதலை நிகழ்த்துபவர்களாகவும், ஒடுக்கப்படு பவர்கள் எதிர் வன்முறையைக் கையாண்டு தற்காத்துக் கொள்பவர்களாகவும் வரைந்து காட்டப் படுகின்றனர். இந்த உள்ளினப் போரினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் வகுப்பியத்தை அந்த இனம் கைவிட வேண்டும். வகுப்பியம் என்பது, ‘இனத்துள் வேற்றுமைஉருவு கொள்ள வழிவகுக்கிறது; மொழியியம் என்பது, ‘இனத்துள் ஒற்றுமைமலர வழி வகுக்கிறது. ஒரு தேசிய இனத்தைப் பிளக்கிற வகுப்பியத் தைத்துறக்குமாறும், தேசிய இனத்தைப் பிணைக்கிற மொழியியத்தை ஏற்குமாறும் சொல்கிறான் சிவசாமி. தனது மகன் சிதம்பரத்திடம் நேரடியாகச் சொல்கிறபடியாய், எளிய உரையாடல் வடிவில், ‘மொழித் தேசிய ஒற்றுமைஎன்கிற கோட்பாடு வெளிப்படுகிறது சிவசாமியிடமிருந்து.

2 : ஆரியமும் தமிழியமும்

’21 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத் தமிழ்நாடுஎன்கிற காலவெளியில் நின்று, மொழித் தேசியம் ஒன்றின் முறைப்பாடுகளை சினிமா விகடனிடம் முன்வைக்கிறார் வெற்றிமாறன். ராஜராஜ சோழன், திருவள்ளுவர் போன்ற தமிழ் அடையாளங்கள் மீது அவர்கள் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்என்கிறார். அவர்களது கமுக்க அரசியலை அப்பட்டமாக்குகிறார்.

இ + 3 : நிலமும் பொழுதும்

எந்தவொரு கதையும் அந்தக் கதைக்கே உரிய புனைவுலகைக் கொண்டிருக்கிறது. புனைவுலகை நிறுவுவதற்கான அடிப்படைக் கூறுகள் மூன்று.

1 ) வெளி; 2 ) காலம்; 3 ) மாந்தர்.

குறிப்பிட்டதொரு காலவெளியில் மானுட வாழ்வை ஆராய்ந்து பார்ப்பது தான் கதையாகும்.

‘1960களில் தமிழ்நாடுஎன்கிற காலவெளியில், வகுப்பிய முரண்களால் சிதைந்துபோன மனித வாழ்வை ஆராய்ந்து பார்க்கிறது அசுரன். அந்தக் காலவெளியில் கோலோச்சிய தமிழியம்என்கிற கருத்தாற்றல் புனைவுலகின் சிக்கலுக்குத் தீர்வாக முன்மொழியப் படுகிறது சிவசாமியால்.

தமிழியம் புனைவுலகச் சிக்கல்களுக்கு மட்டுமான தீர்வாக அமைந்து விடவில்லை; 21 ஆம் நூற்றாண்டின் நடப்புலகில் - வெற்றிமாறன் முன்வைக்கிற - தமிழினத்தின் பண்பாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கும் தீர்வாக அமைந்து விடுகிறது. அப்படி யென்றால், தீர்க்கப்படாத நெருக்கடிகளாய்த் தொடர்கிற தமிழர் வரலாற்றின் சிக்கல்களுக்குப் பொது மருந்தென தொடர்கிறது தமிழியம்.

அசுரனில் கையாளப்படுகிற வகுப்பியம், பிற தேசிய மொழித் திரைப்படங்களிலும் கையாளப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் தாய்மொழியான மராட்டியத்திலோ, இன்ன பிற மொழிகளிலோ வெளியான திரைப்படங்கள் எவற்றிலும் கோட்பாட்டு வழிமுறையில் வகுப்பியத்திற்குத் தீர்வு சொல்லப்படவில்லை. ஒரு கதையை ஓரிடத்தில் தொடக்கி ஓரிடத்தில் முடிப்பார்கள்; அவ்வளவே. கதைதான் முடிவுறும்; வகுப்பிய முரண்களை வரலாற்றிலிருந்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கோட்பாட்டு வழிமுறை முன்வைக்கப்பட்ட தில்லை. அசுரனில், ‘மொழியால் ஒன்றிணைக்கிற தேசிய இன ஒற்றுமைதான் தீர்வுஎன்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இப்படியொரு கோட்பாட்டு வழிகாட்டுதல், பிற தேசிய மொழிகளின் திரைப்படங்கள் எவற்றிலும் காணக் கிடைக்கவில்லை.

மேலும், 2019 ஆம் ஆண்டு அசுரனில் முன்வைக்கப்படுகிற கோட்பாடானது, அதற்குக் கால் நூற்றாண்டு முன்னரே ஈழத்தில் செயல்வடிவம் எய்திவிட்டது 1980களின் தொடக்கத்திலிருந்தே ஈழ நாட்டில் வகுப்பியத்தை முடக்கி வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், 1993 இல் வகுப்பிய ஒழிப்பைச் சட்ட வரையறைக்குள் கொணர்ந்தது. தேசிய இன ஒற்றுமையை எழுப்பித்தான் வகுப்பியத்தின் விளைவான பூசல்களை ஒழிக்க முடிந்தது.

ஆயினும், வகுப்பியவுணர்வு என்பது திறனற்றவர்களின் தற்பெருமையாகப் பன்னூறாண்டுகள் ஆழ்மனத்தில் வேர்பிடித்து நின்றிருக்கிறபடியால், ஆழ் மனதிலிருந்து வகுப்பியவுணர்வைக் கில்லியெறியாத வரை, வகுப்பியம் தனது வேலையைச் செய்து கொண்டிருக்கும் தான். எண்ணவியக்கத்தை இடையறாத விழிப்புணர்வுடன் உற்று நோக்கி, மனத்தின் இயங்கு முறையை நோட்டமிட்டபடியே இருக்கிற போதுதான் தான்என்கிற தன்மயம் - அகந்தை - புரிபடும். அகந்தையைக் கைவிடுவதுதான் மனிதனாக மலர்வதற் குரிய ஒரே வழி; இரண்டு வழிகளெல்லாம் அதற்குக் கிடையாது. உண்மையான கல்வி என்பது இதுதான். இப்படிப்பட்ட கல்வியே பழந்தமிழர் கல்வி முறையாகும். தமிழரது மெய்யியல் என்பது இதுதான். இந்த மெய்யியலை, வெகு மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதான உருவகங்கள் கொண்டு சமைத்தபோது சமயம் உருவா யிற்று.

இந்த மெய்யியல் மரபின் வாடையை நுண்ணிய அளவு கூட நுகர முடியாதவாறு நுட்பமிழந்தவர் பெரியார். மெய்யியலையும் சமயத்தையும் பிரித்தறிவதற்கான நுட்பம் வாய்க்காததால், சமயத்தைத் தமிழர் வாழ் விலிருந்து அப்புறப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, மெய்யியலையும் வெளியேற்றிவிட்டார். தமிழியம் இன்றைக்கு ஆரியத்திடம் தோற்றுக் கொண்டிருப்ப தற்கான முதற்காரணம் பெரியார்தான்!

ஈழ அரசியலில், ஈழத் தமிழரின் பண்பாட்டு வாழ்வில் - பெரியாருக்கு, அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடமில்லை. இவர்களைவிடப் பேரறிவாளர்கள் தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறார்கள். அதனால்தான் ஈழ மண்ணிலிருந்து பாலசிங்கம், பிரபாகரன், பிரமிள் போன்ற தூய பேராளுமைகள் உதித்தெழுந்தனர். காலங்காலமாக அறிவுச் செம்மையை ஒரு மரபாகப் பயின்று வந்திருக்கிறது தமிழினம். அந்த மரபின் தெடர்ச்சிதான் ஈழ மண்ணில் வகுப்பியத்தை வீழ்த்தியது.

தான்னின் நிழலுருவம், ‘எனதுஎன்கிற உடைமைப் பற்று. நான் - எனதுஆகியன உதிர்ந்த நிலையில்தான் அகம் மலர்ச்சியுறும். இப்படி அக மலர்ச்சியுற்ற மனிதரால் தான், ‘நான் - எனதுஎன்பனவற்றை வெளியேற்றிய மனிதரால்தான் வகுப்பியவுணர்வை வெளியேற்ற முடியும். இப்படி அக மலர்ச்சியுற்ற உள்ளத்திலிருந்து தான் பொதுவுடைமையையும் கட்டியெழுப்ப முடியும். உலகு முழுவதும் பொதுவுடைமை தோற்றுக் கொண்டிருப்பதற்கான காரணம், அக மலர்ச்சியுற்ற மனிதரைப் படைக்கத் தெரியாததால்தான். இத்தகு மனிதர்களைப் படைக்க வேண்டுமாயின் கல்வி யமைப்பில் மாற்றத்தைக் கொணர வேண்டும். தமிழீழ நிலையரசு அமைந்த பின்னர் மேற்படி மாற்றங்களைக் கொணர்வது குறித்து ஆன்டன் பாலசிங்கம் எழுதியிருக்கிறார். ஆனாலும் முதற் கட்டமாக, சட்ட வரையறை கொண்டு வகுப்பியத்தின் பொருண்மையுருவத் தைத் தாக்கியழித்தது தமிழீழ அரசு.

இந்தியத் துணைக்கண்டத்தின் பிற தேசிய இனங்கள் எவற்றிலும் வகுப்பிய ஒழிப்பு செயல்வடிவம் கொள்ளவில்லை. மாறாக, வகுப்படையாளத்தைப் பெயரின் பின்னொட்டாக போட்டுக்கொள்கிற வழக்கம்தான் நீடித்து வருகிறது. மிகக் குறுகிய காலம் மட்டுமே தமிழீழ நிலத்தை ஆட்சி செய்கிற வாய்ப்பைப் பெற்றிருந்த விடுதலைப்புலிகள், பண்பாட்டு பிற்போக்குத் தனங்கள் யாவற்றையும் வெகு விசையுடன் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இத்தகையதொரு பண்பாட்டுப் புரட்சி, துணைக் கண்டத்தின் இடதுசாரி மாநிலங்களிலோ, அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புனைவுத் திராவிடத்தின் பிடிக்குள் மாட்டியிருக்கிற தமிழ்நாட்டிலோ நடை முறைக்கு வரவில்லை. அம்பேத்கர், பெரியார், காந்தி ஆகிய எவருடைய அடியொற்றியும் அல்லாமல் தேசத்தின் குரல்அன்ரன் பாலசிங்கத்தின் அரசியல் வழிகாட்டுதல்படி தமிழ் மரபின் அறப்பார்வையை அடியொற்றி, புத்துலக விழுமியங்களோடு இசைமையுறு பண்பாட்டுப் புரட்சியொன்று நிகழ்த்திக் காட்டப் பட்டது ஈழத்தில். இந்தப் பார்வைதான்,‘ஒரு நிலத்தில் பிறந்து ஒரு மொழி பேசுகிறஎன்கிற கருத்தாக, கோட்பாடாக சிவசாமியிடமிருந்து பெறப்படுகிறது.

ஈழத்தில் தமிழர் இழந்திருந்த பழைய தாய் நாட்டை மீளக் கட்டியெழுப்புகையில், தமிழ் அறிவுலகம் பேணி வந்திருந்த பழம் விழுமியங்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. இதே பழைய விழுமியங்களின் உயிர்ப்பான மலர்ச்சி தான் அசுரன் என்கிற புனைவிலும் வெளிப் பட்டிருக்கிறது.

எனவே, வகுப்பிய ஒழிப்பு என்கிற தீர்வை அம்பேத்கரிடமிருந்தோ, பெரியாரிடமிருந்தோ மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலை தமிழருக்கு இல்லை. மேற்கண்ட தலைவர்கள் பிறப்பதற்கு முன்னிருந்தே தமிழ் அறிவினத்தார் வகுப்பியத்தைச் சாடி வந்துள்ளனர்.

தமிழரின் மெய்யியல் மரபில் எவ்விடத்திலும் வகுப்பிய ஏற்பு கண்டோமில்லை. தமிழ் அறிவுலக மரபு என்பது கங்கை சமவெளியின் அல்லது ஆரிய வர்த்தத்தின் அல்லது இந்துஸ்தானத்தின் பார்ப்பனீய வேத மரபுக்கு நேரெதிரானது. பார்ப்பனியத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பது பிற இனங்களின் வாழ்வைச் சுரண்டுவதாகும்; வரலாற்றை அழிப்பதாகும். பிற தேசிய இனங்களின் சொந்த கண்டு பிடிப்புகளைத் திருடி வைத்துக் கொண்டு, பிடுங்கி வைத்துக் கொண்டு பார்ப்பனர்களுடையது என்று பொய் பேசுவதாகும்.

கங்கைச் சமவெளியில் இருந்து வேராழ்ந்து, 14 ஆம் நூற்றாண்டில் விந்திய சாத்பூரா மலைத் தொடர்களுக்குத் தெற்கே தக்காணத்தில் விழுதூன்றி, இந்த நூற்றாண்டில் காவிரிச் சமவெளி அல்லது மூவேந்தர் நிலம் அல்லது தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிற பழந்தமிழ் நிலத்திலும் விழுதூன்ற முயற்சிக்கிறது. அவ்வகையில் ஆரியம் தமிழரை வென்று கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. மாற்றிச் சொன்னால், தமிழினம் தோற்றுக் கொண்டிருக்கிறது! இந்தத் தோல்வியைச் சுட்டுகிறது வெற்றிமாறனின் பேட்டி. தமிழரது இந்தத் தோல்விக்கு காரணம், தமிழரின் ஒற்றுமையை குலைக்கிற புற ஆற்றல்களாகும்.

தமிழர் ஒன்றுபட்டுவிடாமல் தடுக்கிற மிகப்பெரும் ஆற்றல் புனைவுத் திராவிடமாகும். இந்தப் புனைவுத் திராவிடம் இன்றைய தமிழரின் தமிழியத்தை இனவாதம் என்றும் குறுகின வாதம் என்றும் ஆரியக் கைக்கூலிகளின் கோட்பாடு என்றும் ஓயாமல் பொய்யுரைக்கிறது.

ஈழத்தில் இழந்து போயிருந்த பழந்தமிழ்நாட்டை ஈழத்தவர் புதுப்பித்துக் கட்டியெழுப்பியபோது ஆரியப் பகையும், திராவிடச் சூதும் கலந்து நின்று அந்த நாட்டை அழித்தன. 2009க்குப் பின்னர், தமிழரின் இன்னொரு தாயகமான தமிழகத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன. தாயக அழிப்பின் பண்பாட்டு நிலைத்தாக்குதலைச் சுட்டுகிறது, ‘தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்களது அரசியல்என்கிற சொற்றொடர்.

இந்தியாவின் இனங்கள் அனைத்தும் தத்தம் நிலங்களிலிருந்து உயிர்பெற்று வந்தவையாகும். எனவே இந்த இனங்கள்யாவும் தேசிய இனங்களாகும். பார்ப்பனர்கள் தேசிய இனம் அல்ல. அவர்களுக்கென்று தேசிய நிலம் இல்லை. குருதி வழி மட்டுமே சந்ததிப் பெருக்கம் செய்து கொள்கிற மக்களினம் என்றுதான் பார்ப்பனரைக் குறிப்பிட முடியும். அதனால் நிலமற்ற பார்ப்பனீயம், பிற தேசிய இனங்களின் வரலாற்று நிலங்களை ஆட்டையைப் போடுகிற அரசியல்தான் இந்திய அரசியல். பிற தேசிய இனங்களின் நிலங்களைக் கைப்பற்ற வேண்டுமாயின், தேசிய இனங்களை அழித்து விட முடியாது. ஆனால் தேசிய இனங்களின் பண்பாடுகளை அழித்துவிட முயற்சிக்கலாம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது இந்தியப் பார்ப்பனியம்!

அழிய மறுக்கிற இறுதிப் பண்பாடாக, மிஞ்சியிருக்கிற ஒற்றைப் பண்பாடாக மிளிர்கிறது தமிழ் நிலத்தில் தமிழர் பண்பாடு. தமிழரது பண்பாட்டை அழித்தால் தமிழரின் நிலத்தைக் கைப்பற்றலாம் என்பது திட்டம். எனவே தமிழினத்தின் மீதான வல்லடிப் போரைத் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களது தாக்குதலிலிருந்து தமிழர்தம் பண் பாட்டையும் வரலாற்று உரிமைகளையும் காப்பதெனில் - ஒன்றுபட வேண்டும்!

இந்த ஒற்றுமையைத்தான் முன்னிறுத்துகிறது அசுரன் என்கிற காலகட்டத் திரைப்படம். இவ்வகையில் அசுரன் காலகட்டத் திரைப்படமாக (Period Film ) மட்டு மல்லாமல் தேசிய இனத் திரைப்படமாக (Ethnic Cinema) வும் உருப்பெற்று நிற்கிறது; அசுரன், வகுப்பொடுக்கத் திரைப்படமல்ல (Dalit Cinema).

20 ஆம் நூற்றாண்டு சிவசாமி, 21 ஆம் நூற்றாண்டின் வெற்றிமாறன் சுட்டிக்காட்டுகிற வரலாற்றுச் சிக்கலுக்குத் தீர்வைச் சொல்கிறான். அவர்கள் வல்லடிப் போரினைத் தொடக்கி விட்டார்கள்என்று எச்சரிக்கிற வெற்றிமாறன், அவர்களை எதிர்கொள்வதற்கான பண்பாட்டு போர் முறையைத் தனது படைப்பில் வெளிப்படுத்திவிட்டு, அந்தப் படைப்பை அவர்களே ஒப்பேற்பு கொள்ளும் படியான தந்திரத்துடன் கட்டமைத்து, அவர்களிட மிருந்தே அவார்ட் வாங்கியிருக்கிறார். இதுதான் கலைஞனின் போர்முறை!

நன்றி : பிரமிள் ( அமில்கார் கப்ரால் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் )

நன்றி : சினிமா விகடன் ( கட்டுரைத் தலைப்பு )

 

 

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.