ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தேர்தல் மோகம்!" ஐயா பெ. மணியரசன்,"தேர்தல் மோகம்!"

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


வாக்குரிமை உள்ள மக்கள் நாயகமே உயர்ந்த உரிமை வடிவம் என்று மொட்டையாக நம்பிவிடக் கூடாது. வாக்கெடுப்பு யாருக்கிடையே நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதை வைத்துதான் அதன் பொருத்தப்பாட்டைக் கணிக்க முடியும்! 

ஒரு தேசிய இனத்தின் ஆட்சிக்கு, அந்தத் தேசிய இனத்திற்குள் வாக்கெடுப்பு நடந்தால், அது சனநாயகம்! அந்தத் தேசிய இன அதிகாரத்திற்கு அயல் இனத்தாரும் வாக்களிக்க வேண்டும் என்றால் அது மக்கள் நாயகம் அன்று; மக்கள் நாயகம் போல் மயக்கும் ஏகாதிபத்திய நாயகம்! 

தமிழ்த்தேசிய இனத்தின் உயர் அதிகாரம் - இறுதி அதிகாரம் 1947 வரை இலண்டனில் இருந்தது. 1947க்குப் பின் அந்த அதிகாரம் புதுதில்லிக்கு வந்தது. புதுதில்லி நாடாளுமன்றம்தான் தமிழ்நாட்டின் வரி வருமானத்தைக் கையாளும்; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதில் அதிகாரம் இல்லை! புதுதில்லி நாடாளுமன்றம்தான் தமிழ்நாட்டின் கல்வி, நிலம், வேளாண்மை, தொழிற்சாலை, மருத்துவம், மின்சாரம் அனைத்தையும் தீர்மானிக்கும்; செயல்படுத்தும்! இத்துறைகளில் இந்திய அரசுக்கு முகவராக இருந்து தமிழ்நாடு அரசு செயல்படும்! 

மூடி மறைத்துச் சொன்னால், தமிழ்நாடு அரசு புதுதில்லியின் முகவர்; நேரடியாகச் சொன்னால், கங்காணி! தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைக் கங்காணி! 

தலைமைக் கங்காணி பதவியை அடைந்திட எவ்வளவு மோகம் - எத்தனை போட்டி! கங்காணி முதலமைச்சர், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியின் மீது இத்தனை மோகம் வரக் காரணம் என்ன? இவர்கள், தங்களை ஓர் இனத்தின் பிரதிநிதியாய்க் கருதாமல் தனிநபராய் - தன் குடும்ப உறுப்பினராய் சுருக்கிப் பார்த்து, தனக்கு இந்தப் பதவி வாழ்வில் கிடைக்க முடியாத “வரம்” என்று கருதுகிறார்கள்.

இரவு பகலாக உழைக்கிறார்கள்! மக்கள் வாழ்வுரிமைக்கு, உரிமைப் பாதுகாப்பிற்கு இவ்வாறு இத்தலைவர்களும், இவர்களின் தொண்டர்களும் இரவு பகலாக உழைத்ததுண்டா? இல்லை! 

செய்திக்கு வருவோம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் புதுதில்லி நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளன. அதன் மக்களவையில் 543 உறுப்பினர்கள். அதில் தமிழ்நாட்டிற்கு 39 பேர் - புதுவைக்கு ஒருவர்! ஆக மொத்தம் 40 பேர். 543இல் 40 என்பது மிகவும் அற்பமான சிறுபான்மை! (Insignificant Minority). நாடாளுமன்றத்தில் நம்மால் ஒரு மாற்றமும் ஒரு உரிமை மீட்பும் கொண்டு வர முடியாது. நம் உரிமைகளைப் பலி கொள்ளும் பீடம் அது! 

நாம் அற்பச் சிறுபான்மை ஆக்கப்பட்டது எப்படி? பீரங்கிக் கொலைகளால், மரங்களில் தொங்கவிடப்பட்ட தூக்குக் கயிறுகளால், இந்த மண்ணிலும், அந்தமானில் கட்டப்பட்ட சிறைகளால் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்களை - பல்வேறு நாடுகளை அடிமைச் சங்கிலிகளால் பிணைத்துப் பிரித்தானியர் உருவாக்கியது இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் இராபர்ட் கிளைவ்களே! 

தொடர்பில்லாத தொலைதூரத் தேசங்களுடன், இனங்களுடன் தமிழர்களை - தமிழ்நாட்டைப் பிணைத்து விட்டார்கள். அவர்களோடு நம்மைச் சேர்த்துக் கணக்கிடும்போது நாம் அற்பச் சிறுபான்மை! நம் மக்கள் தொகை இப்போது 8 கோடி! பிரிட்டன், பிரான்சு மக்கள் தொகையைவிட அதிகம்! ஆனால், செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டோம். 

இரண்டு கோடிக்கும் குறைவாக உள்ள சிங்களர்கட்கு ஐ.நா. மன்றத்தில் இடம் உள்ளது. ஒரு கோடிக்குக் கீழே மக்கள் தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கும் மேலே! அவையெல்லாம் ஐ.நா. மன்றத்தில் வீற்றிருக்கின்றன. 

நாடாளுமன்ற மக்களவையில் இந்திக்காரர்களுக்கு 250 உறுப்பினர்கள்; இந்தி மாநிலங்கள் 10 இருக்கின்றன. இந்திய நடுவண் அரசின் அதிகாரங்கள் சாரத்தில் இந்தி மாநிலங்களின் அதிகாரங்களே! 

இந்தி மாநிலங்களோடு ஒத்துப்போகும் மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால், அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகியவை தமிழ்நாட்டுடன் இணங்கிப் போவதில்லை. முடிந்தவரை தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்படுகின்றன. 

நாடாளுமன்றத்தின் - பெரும்பான்மைச் சனநாயகம் என்பது - தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எப்போதும் கிடைக்காது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு சனநாயகம் என்பது தமிழர்களின் உரிமைகளுக்கான - “சனநாயகத் தூக்குக் கயிறு”! நாடாளுமன்றம் என்பது, தமிழர்களுக்கு சனநாயகச் சிறைச்சாலை! 

நாடாளுமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட எந்தப் பொருள் மீதும் தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்ற முடியாது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்து, மாநில உரிமைகளை மீட்க முடியுமா? 

நடுவண் அரசு பறித்துக் கொண்ட மாநில உரிமைகளை மீட்பதற்கு சட்டமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது! தீர்மானங்கள் நிறைவேற்றலாம். அவை தில்லிச் சுல்தான்களின் மேசை அருகே உள்ள குப்பைக் கூடைக்குப் போகும். 

234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று தில்லிச் சுல்தான்கள் கேலிச்சிரிப்பு சிரிப்பார்கள். 

கொள்கை உறுதியுள்ள ஒரு கட்சி ஆளுங்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டப்பேரவையை - தமிழ்நாடு அரசை உரிமை மீட்புப் போராட்டக் கருவியாக மாற்றக் கூடாதா? அப்படிப் போராட்டக் களமாக சட்டப்பேரவையைத் தொடர்ந்து மாற்றினால், அந்த ஆட்சியை இந்திய அரசு கலைக்கும்! 

கங்காணி ஆட்சியை இழக்கக் கட்சித் தலைவர்களும், அவர்களின் தளபதிகளும், உறுப்பினர்களும் விரும்ப மாட்டார்கள்! மக்களுக்கு இலவசங்கள் கொடுத்தோம், இன்னும் கொடுப்போம் என்று கூறி, கங்காணிப் பதவியில் ஒட்டிக் கொள்ளவே விரும்புவார்கள்! அடிமை அதிகாரத்திற்கு, தமிழ்நாட்டுக் கட்சிகளிடையே போட்டி! இதுவே மக்கள் நாயகத்தின் மாண்பு என்று கயிறு திரிப்பார்கள். 

மாநகராட்சி மேயர் அளவிற்குக் குறைக்கப்பட்டாலும் அந்த முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என்பதே கங்காணி உளவியல்! இனப்பெருமிதம், இன உரிமை ஆகியவற்றிற்கு  மாறாக, தனிநபர் ஆதாயம், தனிநபர் பிரபலம் என்பதே கங்காணிகளின் உளவியல்! 

அடைந்தால் திராவிடநாடு; இல்லையேல் சுடுகாடு என்று முழங்கிய தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது மட்டுமின்றி, இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பா.ச.க.வுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்து நடுவண் அமைச்சரவையிலும் சேர்ந்து தமிழின உரிமைகளைக் காட்டிக் கொடுத்தது. காவு கொடுத்தது. தி.மு.க.விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க. மேலும் தீவிரமாகத் தமிழின உரிமைகளைப் பலி கொடுத்ததைப் பார்த்தோம்! 

சம்மு காசுமீரில், இனத் தன்னுரிமைப் போராளியாய் விளங்கிய சேக் அப்துல்லா கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைத்துக் காலியாகிப் போனதை அறிவோம். இப்போது சம்மு காசுமீரின் மாநில உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக இந்திய ஏகாதிபத்தியம் மாற்றிவிட்டது. 

மிசோரம் விடுதலைக்குப் போர்ப்படை உருவாக்கியப் போராடிய லால் டெங்கா காங்கிரசுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி அமைத்து, காலியாகி சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து ஓய்ந்து ஒதுங்கிப் போனார். 

மக்களைக் கெடுத்து விட்டார்கள்
---------------------------------------------
தமிழ்நாட்டு மக்களின் கணிசமானவர்களைத் தற்சார்பற்றவர்களாக - போர்க்குணம் அற்றவர்களாக - இலவசங்களை எதிர்பார்க்கும் கையேந்திகளாகத் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அவற்றின் கையடக்கக் கட்சிகளும் மாற்றிவிட்டன! அடையாளப் போராட்டங்கள் நடத்தி அரசியல் நடத்தும் நாடகக் கம்பெனிகள் அவை! நோகாமல் நொங்கு எடுக்கும் வாய்வீச்சப் பாசறைகள்! 

இந்திய ஏகாதிபத்தியச் சட்டகம் மாநிலத் தேர்தல் கட்சிகளைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட கங்காணிகளாகக் கட்டமைத்துக் கொள்கின்றது. 

அடுத்து, தேர்தல் கட்சிகள் பெருங்குழுமங்களாக (கார்ப்பரேட்டுகளாக) மாறி விட்டன! மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து, பெரும்பெரும் முதலாளிகளாக - கட்சித் தலைவர்கள் வலம் வருகிறார்கள். இலவசங்கள் வழங்குவது, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் மக்களை ஊழல்வாதிகளாக மாற்றுவதே தங்கள் கொள்ளைக்கும் தலைமைக்கும் பாதுகாப்பு என்பது இத்தலைவர்களின் உளவியல் கண்டுபிடிப்பு! 

தமிழர்களே, நமது தேசிய இன உரிமைகளை மீட்கத் தேவைப்படுவது தி.மு.க. - அ.தி.மு.க. அல்ல; அவற்றின் மறுவடிங்களும் அல்ல. இறையாண்மை மீட்பு வெகுமக்கள் எழுச்சி இயக்கம்! 

நமக்குத் தேவை தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்களின் மறுபிறவிகள் அல்ல! ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்கள்; தமிழ்த்தேசியக் காந்திகள்; தமிழ்த்தேசிய மண்டேலாக்கள்!

( தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் –  2021 ஏப்ரல் மாத இதழின் ஆசிரியவுரை இது!)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.