ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நீட் விலக்கு : ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் முடிவில்! அனைத்துக் கட்சியினர் பாசாங்குத் தீர்மானத்தில்! ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 13.9.2021 அன்று நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி 140 நாள் வரை கிடப்பில் போட்டு வைத்து, 1.2.2022 அன்று “இது சரி இல்லை; மறு ஆய்வு செய்க” என்று கூறி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்குத் திருப்பி அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரிய செயல். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பைத் தடுக்கும் தன்மையில் உள்ளது ஆளுநரின் இச்செயல்!

மாறாக, ஆளுநர் ஆர்.என். இரவி திருப்பி அனுப்பியதற்கான காரணத்தைத்  தலைகீழாகச் சொல்கிறார். நீட் தேர்வு இல்லை என்றால் கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வில் பெற்ற அதிக மதிப்பெண் வரிசைப்படி ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றபோது கிராமப்புற, ஏழை மாணவர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் இந்திய அரசு நீட் என்ற நுழைவுத் தேர்வை திணித்தபின் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது குறைந்து விட்டது.

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த நீட் நுழைவுத் தேர்வு இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி வினாக்களைக் கொண்டது தமிழ்நாட்டு மாணவர்கள் மிகப்பெரும்பாலோர் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத் திட்டத்தின்படி தேர்வெழுதி வென்றவர்கள்.

இரண்டு, வசதி படைத்த மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயின்று, தேர்வெழுதி வெல்கிறார்கள்.

மூன்று, இந்தி மாநிலங்களில் நீட் உள்ளிட்ட எல்லா நுழைவுத் தேர்வுகளிலும் பணம் கொடுத்துத் தவறான வழிகளில் செயற்கையாக அதிக மதிப்பெண் "வாங்குகிறார்கள்".

நீட் தேர்வை நீக்கிவிட்டால் பொருளியல் அடிப்படையில் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆர்.என். இரவி கூறுவதில் மறைமுகமாக வேறு ஒரு பொருள் இருக்கிறது. இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் ஆதிக்க சாதிகளில் உள்ளோர் அனுபவித்து வந்த ஏகபோகம் பாதிக்கிறது என்று மனம் பாதித்த மோகன் பகவத் - மோடி ஆட்சி, முன்னேறிய சாதிகளில் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயும் அதற்கு கீழும் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி செயல்படுத்தி வருகிறது நீட் தேர்வு இருந்தால் அந்த “ஏழைகளுக்கு” மருத்துவக் கல்லூரிகளில் அவர்களின் ஏகபோகம் சிதையாமல் பாதுகாக்கப்படும் என்ற நோக்கில் நீட் தேர்வு தேவை என்று ஆளுநர் ஆர்.என். இரவி முடிவு செய்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க.வின் இந்திய அரசு, ஆரியத்துவ இந்தியக் கொள்கையும் மாநில அரசுகளை மாநகராட்சியாக்கும் ஒற்றையாட்சி கொள்கையும் கொண்டுள்ளது. மாநில அரசு நிதியில் நடக்கும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய அளவில் இந்திய அரசு தேர்வு செய்யும் விதிமுறையை கொண்டுவர உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான் நீட்! தமிழ்நாடு அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேர்க்கையும் இந்திய அரசே நடத்தும் திட்டமும் மோடியின் மேசை மீது உள்ளது.
 
இவை அனைத்தும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் நீட் தேர்வு நீக்கத்தை வலியுறுத்துவதற்காக 5.2.2022 சென்னை கோட்டையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு ஏமாற்றமளிக்கிறது.

வரும் 8.2.2022 அன்று சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தி, மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என். இரவிக்கு அனுப்புவது என்ற முன்மொழிவை முதலமைச்சர் சார்பில் நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் முன்வைக்க, அனைத்துக் கட்சிகளும் ஒருமனமாய் அதைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாம் முறையாக அனுப்பினால், அதை ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை. மீண்டும் காலவரம்பின்றி அதை ஆளுநர் கிடப்பில் போடலாம். அல்லது ஆதரவுப் பரிந்துரையின்றி, “ஆய்வு செய்க” என்று குடியரசுத் தலைவர்க்கு அனுப்பிவிடலாம். குடியரசுத் தலைவர் மோடி அரசின் கொள்கைகளைக் கொண்டவர். ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைத்தால்தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் போட முடியும் என்பது சட்ட முறைமை!

மோடி அரசின் கொள்கையைச் செயல்படுத்தும் முறையில்தான் ஆளுநர் ஆர்.என். இரவி நீட் விலக்கு சட்ட முன்வடிவை செல்லாததாக்கித் திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநர் தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டிற்கு எதிரானவர் போலும், மோடி அரசின் பார்வைக்குப் போய்விட்டால் நீட் விலக்கு சட்ட முன்வடிவு சட்டமாகிவிடும் என்பது போலவும் தி.மு.க. திட்டமிட்டுப் பாசாங்கு செய்கிறது.

மேற்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் அண்ணாவின் மேற்கோளை எடுத்துக்காட்டினார். “ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்பது அந்தப் “பொன் மொழி”! தாடியினால் ஆட்டுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ஆளுநரால் மாநில இறையாண்மைக்கு – உரிமைகளுக்கு ஆபத்து.  “ஆண்டை – அடிமை” பகுப்பைப் பராமரிப்பதற்காகவே பிரித்தானிய ஏகாதிபத்தியம்  உருவாக்கியது மாநில ஆளுநர் பதவி! இவ்வளவு ஆபத்துகளும் உரிமைப் பறிப்புகளும் நிரம்பிய பதவியை ஆட்டுத் தாடியுடன் ஒப்பிட்டுப் பேசும்போதே, தி.மு.க. ஆட்சியாளர்களின் தில்லி விசுவாசம் பளிச்சிடுகிறது.

தி.மு.க.வின் நீட் எதிர்ப்பு வெறும் நடிப்பு என்பதை இன்று (6.2.2022) “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது. தந்தி தொலைக்காட்சியில் 6.2.2022 இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ். பாரதியின் நேர்காணல் அது! அதன் தலைப்பு : “நீட் விலக்கு : 2022 லட்சியம்.. 2024 நிச்சயம் – அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். பாரதி”. – “தந்தி டி.வி. கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சி!

அடுத்த ஆண்டில் கூட நீட் தேர்சை நீக்க முடியாது என்று ஆர்.எஸ். பாரதி கூறுவதாகத் தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி வென்று, இராகுல் காந்தி தலைமை அமைச்சர் ஆகிவிடுவார். அப்போது நீட்டுக்கு விலக்குக் கிடைக்கும் என்கிறார் ஆர்.எஸ். பாரதி! 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தி.மு.க. இப்போதே தொடங்கி விட்டது.

காங்கிரசுக் கட்சிதான் 2010இல் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. அப்போது, காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி! ஒன்றிய அமைச்சர்களாக தி.மு.க.வினர் வீற்றிருந்தனர். அப்போது நீட்டை எதிர்த்துக் குரல் கொடுத்ததா தி.மு.க.? நுழைவுத் தேர்வே கூடாதென 2006இலேயே சட்டம் கொண்டு வந்ததாக, இப்போதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க., 2010இல் நீட் தேர்வுக்கான சட்டத்தைக் காங்கிரசு கொண்டு வந்தபோது என்ன செய்தது? நீட்டைக் கைவிட காங்கிரசு மறுத்தால் தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகிப் போராடி இருக்கலாமே! எதுவும் இல்லை!

தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிகளும், தி.மு.க.வைப் போலவே பாசாங்காக நீட் எதிர்ப்புப் பேசி பசப்புகின்றனர், மக்களை மயக்குவதற்காக! அதேவேளை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து மோடி விசுவாசத்தை மீண்டும் நிலைநாட்டிய அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டகம் படுமோசமானது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் 5.2.2022 அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நீட் விலக்கை வலியுறுத்திப் போராட்டம் எதையும் முடிவு செய்யவில்லை. தி.மு.க. முன் கூட்டியே எழுதிக் கொண்டு வந்திருந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்கும் வேலையைத்தான் மற்ற கட்சிகள் செய்திருக்கின்றன. தமிழ் மக்களைக் கவர போராட்டமெல்லாம் தேவை இல்லை, கவர்ச்சி வசனங்கள் போதும் என்பது தி.மு.க. – அ.தி.மு.க.வின் நிரந்தர நிலைபாடு! குட்டிக் கழகங்களாக மற்ற கட்சிகளும் மாறிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்க, தமிழ்நாட்டு மாணவர்கள் தாராளமாக மருத்துவர்கள் ஆவதற்கு, நீட் விலக்குப் போராட்டத்தைத் தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சியாகச் செயல்படுத்த வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்திட, உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட, ஏறு தழுவுதல் என்ற சல்லிக்கட்டுத் தடையை நீக்கிட, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளையோரும் பெரியவர்களும் போராடி வென்றதுபோல், நீட்டைத் தடுத்திடத் தமிழ்நாடு தழுவிய மக்கள் போராட்டம் தேவை!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.