தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுச்சேரி சேதராப்பட்டில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு!
தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுச்சேரி சேதராப்பட்டில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு!
================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர்
தோழர் இரா. வேல்சாமி அறிக்கை!
================================================
தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 23.06.2022 அன்று புதுச்சேரி சேதராப்பட்டில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு தெரிவிக்கிறது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தெரிவித்தார். இதுகுறித்து, இன்று (21.06.2022) காலை புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி்ப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, த.தே.பே. புதுச்சேரி வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் தே. சத்தியமூர்த்தி, ஐயா ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரியக்கத்தின் சார்பில் அப்போது வெளியிடப்பட்ட ஊடகக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
"புதுச்சேரியின் சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகள் தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாக தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. சட்டவிரோதப் பணி நீக்கம், பணியிட மாற்றம், சங்கம் அமைப்போர் மீதான அச்சுறுத்தல் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் வழியாக தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல் நடத்துகின்றனர்.
இன்றைக்கு எட்டு மணி நேர வேலை என்பதே எங்கும் கிடையாது என்ற அவலம் சூழ்ந்துள்ள நிலையில், பா.ச.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு புதுச்சேரியிலிருந்து பெருமளவிலான தொழிலகங்கள் வெளியேறி வருகின்ற கொடுமையும் நடக்கிறது. சட்டவிரோதக் கும்பல்கள் பணம் பறிப்பதாலும், ஜி.எஸ்.டி. வரித் தாக்குதலாலும் தொழிற்சாலைகள் வெளியேறிக் கொண்டுள்ள நிலையில், அதைத் தடுக்காமல் புதுச்சேரி அரசு வேடிக்கைப் பார்க்கிறது. தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, புதுச்சேரி மக்களுக்கும் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குப்பையைப் போல் தெருவில் வீசப்படுகின்ற கொடுமையை தொழிலாளர் நலத்துறை கண்டு கொள்ளவில்லை!
சேதராப்பட்டு எல்&டி நிறுவனத்தில் சட்ட உரிமைக் கேட்டுப் போராடிய 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை விலக்கி பணி வழங்கவும், சேதராப்பட்டு - எஸ்&எஸ் நிர்வாக சட்டவிரோத கதவடைப்பு செய்து தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் சென்னைக்கு இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தவும், புதுச்சேரி மாநிலத்திலேயே ஆலையைத் தொடர்ந்து இயக்கவும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்ட உரிமையான இ.எஸ்.ஐ., பி.எஃப்., கூடுதல் பணி நேரத்திற்கு இரண்டு மடங்கு ஊதியம் போன்றவற்றை வழங்கவும், புதுச்சேரி - காரைக்காலில் மண்ணின் மைந்தர்களுக்கு 90 விழுக்காடு வேலையை வழங்க உறுதி செய்யவும் வலியுறுத்தி, வரும் வியாழன் (23.06.2022) அன்று சேதராப்பட்டில் முழு அடைப்பு போராட்டத்திற்கு சேதராப்பட்டு தொழிற் பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைப்பு அறைகூவல் விடுத்திருக்கிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இக்கோரிக்கைகளை ஆதரித்து, அம்முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறோம். மிக மிக நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற இந்த பொது வேலை நிறுத்தத்தில், புதுச்சேரி சேதராப்பட்டு வாழ் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.
புதுச்சேரி அரசும் தொழிலாளர் நலத்துறையும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், தொழிற் சாலைகள் மற்றும் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்".
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Leave a Comment