ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அர்ச்சகராவதைத் தடுக்கிறது உயர் நீதிமன்றத் தீர்ப்பு! தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்!

 ஆகமம் என்ற பெயரில் அனைத்துச் சாதியினர் 

அர்ச்சகராவதைத் தடுக்கிறது உயர் நீதிமன்றத் தீர்ப்பு!

தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்!

===========================================


தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் 

பெ. மணியரசன் அறிக்கை!

===========================================பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2020இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் பெயர் “தமிழ்நாடு இந்து சமய நிறுவன ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள் – 2020” என்பதாகும். இதில் உள்ள 7 மற்றும் 9 ஆகிய விதிகள் அர்ச்சகர்கள் மற்றும் இதரக் கோயில் ஊழியர்களை அமர்த்தும் அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வழங்குகின்றன. இந்த அதிகாரிகளைத் தக்கார் (Fit Persons) என்று இந்த ஆணை கூறுகிறது. 


இந்த ஆணையைப் பயன்படுத்தி, 2021 ஆகத்து 14ஆம் நாள் இப்போதைய தி.மு.க, ஆட்சி 24 அர்ச்சகர்களைப் பல்வேறு கோயில்களில் அமர்த்தியது. இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று, தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள். 


இந்த இருபத்து நான்கு பேரையும் அர்ச்சகர்களாகப் பணியமர்த்தியதும், மேற்படி அரசாணையும் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959-க்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானவை; இந்த அரசாணையை நீக்கி, 24 பேர் பணி அமர்த்தலையும், நீக்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் தலைவர் பி.எஸ்.ஆர். முத்துக்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த டி.ஆர். இரமேசு உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 


இவ்வழக்கை எதிர்த்துத் தமிழ்நாடு அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் வழக்கு நடதினர். அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் வாதிட்டார். 


இந்த வழக்கை விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி – நீதிபதி என். மாலா அமர்வு 22.08.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. 


இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959-இன்படி, திருக்கோயில்களின் அறங்காவலர் குழுக்கள் தாம், அர்ச்சகர்களைப் பணி அமர்த்த வேண்டும், அதுவும் அந்தந்த கோயிலுக்குரிய ஆகமப்படியும், அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்த குடும்பங்களில் பிறந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாகப் பணி அமர்த்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைகளில், அறங்காவலர்கள் மட்டுமே பணி அமர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள் என்ற கோரிக்கையை நிராகரித்து, ஆகமக் கோயில்களில் அவற்றிற்குரிய ஆகமக் குடும்பங்களில் பிறந்தவர்களையே அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் முனீசுவர் நாத் பண்டாரியும், என். மாலாவும் தீர்ப்பளித்தனர். 


பணி அமர்த்தத்திற்கான மேற்படி அரசு ஆணை விதிகள் 7 மற்றும் 9 ஆகியவை அர்ச்சகர் பணி அமர்த்தத்துக்கு மட்டும் இல்லாமல், கோயில்களில் உள்ள மற்ற பணியாளர்களையும் அமர்த்தும் அதிகாரம் கொண்டிருப்பதால் அவ்விதிகளை இரத்துச் செய்யவில்லை என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள். 


அத்துடன், தமிழ்நாட்டில் அறநிலையத்துறையில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் எது, எது - எந்தெந்த ஆகமப்படி கட்டப்பட்ட ஆகமக் கோயில் என்று கண்டறிந்து அறிக்கை தர, ஓர் ஆய்வுக் குழுவையும் அமைக்குமாறு நீதிபதிகள் தமிழ்நாடு அரசைப் பணித்தனர். 


ஐந்து பேரைக் கொண்ட அந்த ஆய்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் அவர்களையும், சமற்கிருத – பிராமணப் பிரிவுப் பிரதிநிதியாக – சென்னை சமற்கிருதக் கல்லூரியின் தலைமை நிர்வாகி என். கோபால்சாமி என்பவரையும், நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி அமர்வு அமர்த்திவிட்டது. இதில் தமிழ்நாடு அரசுக்கு வேலை இல்லை! இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இக்குழுவில் உறுப்பினராக இருப்பார். மேலும், இருவரைத் தமிழ்நாடு அரசு உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் இக்குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு இக்குழு ஆகமக் கோயில்கள் எவை எனக் கண்டறியும் பணியைத் தொடங்க வேண்டும். 


இத்தீர்ப்பை, “வரலாறு படைக்கும் வெற்றித் தீர்ப்பு” என்று திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்கள் வரவேற்றுள்ளது வியப்பை அளிக்கிறது. பா.ச.க. தலைவர் அண்ணாமலையோ, “தமிழர் வாழ்வியல் முறையைத் திராவிட மாடலாக ஆக்க முடியாது என்று இத்தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறுகிறது என்று பாராட்டி வரவேற்றுள்ளார். 


அமைக்கப்பட உள்ள ஆய்வுக்குழு தமிழ்நாடு முழுதும் சுற்றி, ஆகமக்கோயில் எவை என்று  கண்டறிந்து பட்டியல் இட எவ்வளவு காலம் ஆகுமோ, அவ்வளவு காலம் வரை புதிதாக அர்ச்சகர்களை இந்து சமய அறநிலையத்துறை அமர்த்த முடியாது. பழைய பிராமணப் பாரம்பரிய அர்ச்சகர்களே கோயில்களில் புதிய அர்ச்சகர்களாகவும் ஆவார்கள். 


அடுத்து, ஆகமக் கோயில் எவை என்று கண்டறியப்பட்ட பின் அக்கோயில்களில், பிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகவே முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட கோயிலுக்குரிய ஆகமக் குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமே அக்கோயிலில் அர்ச்சகராக முடியும் என்று இத்தீர்ப்பு கூறுகிறது. 


ஆகமக் குடும்பத்தினர் என்பது ஆரிய ரிஷி கோத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தான் பொருந்தும். தமிழர்களுக்கு ரிஷி கோத்திரம் இல்லை. 


எடுத்துக்காட்டாக, வைணவக் கோயில் ஒன்று, வைணவ வைகாநாசா ஆகமம் சார்ந்தது என்றால், அதில் நான்கு ரிஷி கோத்திரங்கள் உள்ளன. 1. பிர்கு ரிஷி கோத்திரம், 2. ஆத்ரி ரிஷி கோத்திரம், 3. மரிச்சி ரிஷி கோத்திரம், 4. காஸ்யப ரிஷி கோத்திரம். இவை அனைத்தும் ஆரிய – பிராமண குடும்பங்களுக்குரிய கோத்திரங்கள்; வடநாட்டு மூலஸ்தானங்கள் கொண்டவை! 


இவ்வாறான கோத்திரம் எதுவும் தமிழர்களுக்கு இல்லை. ஆரிய – பிராமண வர்ணாசிரமப்படி தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள். இப்படிப்பட்ட தமிழர்களை ஆரிய சமற்கிருத நூல் எதுவும் ரிஷி கோத்திரத்தில் சேர்க்கவில்லை. தமிழர்களில் சில பிரிவினர் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொள்வதற்காக சில கோத்திரங்களைக் கூறிக் கொள்வார்கள். ஆரிய – சமற்கிருதச் சான்றுகள் அவர்களின் கூற்றுக்கு இல்லை. தமிழின முன்னோர்கள் கோத்திரப் பிரிவினைகளை எக்காலத்திலும் ஏற்கவில்லை. 


மிகவும் பிரபலமாக உள்ள சிவநெறி, திருமால் நெறிக் கோயில்களை ஆகமக் கோயில்கள் என்று ஏற்கெனவே அவற்றில் ஆதிக்கம் செலுத்துவோர் பட்டியலிடுவர். அவற்றில் எல்லாம் எப்போதும் தகுதியுள்ள அனைத்துச் சாதித் தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது. பிரபலமான கோயில்கள் அனைத்திலும், இத்தீர்ப்பின்படி பிராமணர்களே அர்ச்சகர்களாக இருப்பார்கள். கருவறைக்குள் தீண்டத்தகாதவர்களாகவே தகுதியுள்ள தமிழ் ஆன்மிகர்கள் விலக்கப்படுவார்கள். இத்தீண்டாமை – இத்தீர்ப்பின்படி நிரந்தரமாகிவிடும்! 


முனீசுவர நாத் பண்டாரி அமர்வு இவ்வாறு அளித்த இத்தீர்ப்பு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 1972இல் அளித்த சேசம்மாள் - எதிர் - தமிழ்நாடு அரசு தீர்ப்பிற்கும், 2015இல் நீதிபதி இரஞ்சன் கோகோய் அமர்வு அளித்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் - எதிர் - தமிழ்நாடு அரசு தீர்ப்பிற்கும் எதிரானது. இவ்விரு தீர்ப்பிலும் எந்த அளவு ஆகமத்தை ஏற்க வேண்டும், எந்த அளவுக்கு மேல் அதை ஏற்கக் கூடாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள். 


இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 14, “இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதையும், “சட்டப்பாதுகாப்பு அனைவர்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதையும் அரசு மறுக்க முடியாது” என்று கூறுகிறது. இந்த விதிக்கு முரணாக இந்தியாவில் ஏதாவது ஒரு ஆகமம் கூறினால் அதை ஏற்க வேண்டியதில்லை என்று மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இரண்டும் உறுதி செய்துள்ளன. சாதி வேறுபாடு இல்லாமல் தகுதியுள்ள இந்துக்கள் அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று இத்தீர்ப்புகள் கூறியுள்ளன. 


உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இவ்வாறு இருக்கும்போது, முனீசுவரநாத் பண்டாரி அமர்வு ஆகமக் கோயிலில் ஆகமக் கோத்திரப்படி தான் அர்ச்சகராக வேண்டும் என்று கூறியதைத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டது பெரும் வினாவாக உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கோரும் தமிழர்களுக்கும், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரும் சனாதனிகளுக்கும் இடையே, ஒரே நேரத்தில் இந்த இரண்டு முகாம்களிலும் இருக்கும் தந்திரத்தைத் தான் கடந்த காலங்களில் முதலமைச்சர் கருணாநிதி கடைபிடித்தார். மு.க. ஸ்டாலினும் அதே உத்தியைத் தான் கடைபிடிக்கிறார் என்ற ஐயம் வலுவாக எழுகிறது. 


புதிதாக ஆறு அனைத்துச் சாதியினர்க்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மு.க. ஸ்டாலின் ஆட்சி திறந்துள்ளது. இவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்று, வேலை வாய்ப்பின்றித் திண்டாடும் அதே அவலம் மீண்டும் ஏற்படும் என்பது அதிர்ச்சியாக உள்ளது. 


இத்தீர்ப்பைச் செயலற்றதாக்கப் புதிதாக அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகிடத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு ஆளுநர் ஆர்.என். இரவி கையொப்பமிட மறுத்தால், தமிழ்நாட்டுக் கட்சிகள், ஆன்மிக அமைப்புகள், இயக்கங்கள், அனைத்துப் பகுதி மக்கள் அனைவரையும் ஆளுநருக்கு அழுத்தம் தரும் அறப்போராட்டங்களை முன்னெடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


அத்துடன், உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

 

( பெ. மணியரசன் )

ஒருங்கிணைப்பாளர் – தெய்வத் தமிழ்ப் பேரவை.


================================ 

தெய்வத் தமிழ்ப் பேரவை

================================ 

முகநூல்: www.fb.com/theivathamizh

சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh

பேச: 9841949462, 9443918095

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.