ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணனிடம் காவல்துறையின் அத்துமீறல்! பொய் வழக்கு!

 


ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணனிடம் காவல்துறையின் அத்துமீறல்! பொய் வழக்கு!

====================================

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

====================================

கள்ளக்குறிச்சி மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற பெரும் சிக்கல் தமிழ்நாட்டில் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் மேற்படி பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்ற விமர்சனம் பலரால் பேசப்படுகிறது. 


“அறம்” இணைய இதழ் ஆசிரியர் தோழர் சாவித்திரி கண்ணன், இச் சிக்கலில் தமிழ்நாடு அரசும் மற்றும் அதன் காவல்துறையும், நடுநிலை தவறி மேற்படி பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விமர்சனக் கட்டுரைகள் தனது இதழில் எழுதியுள்ளார். 


அதற்காக இன்று (11.09.2022) பிற்பகல் சென்னையில் சாவித்திரி கண்ணன் இல்லத்துக்குள் கள்ளக் குறிச்சி காவல் துறையினர் 6 பேர் நுழைந்து, அவரைக் கையைப் பிடித்து முறுக்கி, தரதரவென்று இழுத்து வந்து காவல் துறை வண்டியில் ஏற்றிக் கொண்டு போயுள்ளார்கள். சாவித்திரி கண்ணன் காவல் துறையினரை எதிர்த்தோ, அல்லது அவர்களை அவமதிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையிலும் இறங்காத நிலையில் அவரை அவமானப் படுத்தும் வகையிலும் துன்புறுத்தும் நோக்குடனும் கள்ளக் குறிச்சி காவல் துறையினர் நடந்து கொண்டது சட்ட விரோதச் செயலாகும்; சனநாயக விரோதச் செயலாகும். 

                                                                                                                                                                      ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து விமர்சிக்கும் உரிமை மக்களின் மற்றும் ஊடகத் துறையினரின் அடிப்படை உரிமையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த உரிமையை வழங்குகிறது. 


கடத்திக் கொண்டு போவதுபோல் கொண்டு சென்ற காவல் துறையினர் திண்டிவனம் அருகேயுள்ள ஓலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து சாவித்திரி கண்ணனிடம்  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41(A) இன்படி ஓர் அறிவுறுத்தல் அறிக்கை கொடுத்துள்ளார்கள். அதன்படி சாவித்திரி கண்ணன் மீது கள்ளக் குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 10.09.2022 நாளன்று இந்தியத் தண்டனைச்சட்டப் பிரிவுகள் 153, 153A, 504, 505(1)(b) இத்துடன் தகவல் சட்டப் பிரிவு 2000 இன் கீழ் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணையில் வரமுடியாத பிரிவுகள் இவ்வழக்கில் உள்ளன. 


திமுக ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும் என்று மிரட்டுவதாகவே இவ்வழக்கையும் காவல்துறையினரின் அடாவடி நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. பாசக ஆட்சியாளர்கள் ஏற்கனவே தங்கள் அரசையும், மோடியையும் விமர்சிக்கும் ஊடகத்துறையினர், குடிமை உரிமை இயக்கத்தினர் மற்றும் அறிவுத்துறை சார்ந்தவர்கள் எனப் பலரையும் உபா (UAPA) உள்ளிட்ட கொடிய சட்டப்பிரிவுகளில் சிறையிலடைத்து வருகிறார்கள். இந்த மோடி மாடல்தான் திராவிட மாடல் என்று ஒப்பிடும் அளவுக்கு திமுக ஆட்சியின் இந்த சனநாயக உரிமைப் பறிப்பு செயல் அமைந்துள்ளது. 

                                                                                                                                                                                               இன்று காவல் துறையினர் கடத்துவது போல் சாவித்திரி கண்ணனை காவல் வண்டியில் திணித்துக் கொண்டு போனது தமிழ்நாட்டில் பரவலான எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. இந்தப் பின்னணியில்தான் சாவித்திரி கண்ணனைத் தற்காலிகமாகப் பாதிவழியில் விடுவித்தார்களோ என்று கருதிடத் தோன்றுகிறது. 

                                                                                                                                                                                          குறிப்பாக, சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனி காவல் துறையை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் அரசும் அதேபோல் தமிழ்நாடு தழுவிய சிறப்பு ஊடகங்களைக் கண்காணிக்க காவல் துறையை உருவாக்கியுள்ளது. 

                                                                                                                                                                                        முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற மோடி மாடல்களைப் பின்பற்றுவதைக் கைவிட வேண்டுமென்றும், தோழர் சாவித்திரி கண்ணனிடம் அத்துமீறீ நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவர்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளைக் கைவிட வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.