ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர்!

 பிரித்தானியத் தலைமை அமைச்சா் ரிஷி சுனக் இந்தியப் பரம்பரை என்பதில் ஏமாறாதீர்!

============================


======

ஐயா பெ. மணியரசன், 

தலைவா், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

==================================


பிரிட்டனின் தலைமை அமைச்சராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார். இவா் தலைமை அமைச்சர் ஆன முறை குறித்தும், இவர் இந்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் இரு திறனாய்வுகளைப் பகிர்ந்து கொள்வோம்.


ரிஷி சுனக் தலைமை அமைச்சராகத் தேர்வான முறை மிகவும் நாகரிகமாக சனநாயகக் கட்டுக்கோப்புடன் நடந்துள்ளது. தமிழ்நாட்டைப் போல் உட்கட்சி சனநாயகமற்று, தலைவர் வழிபாடும் – குழு மோதல் இல்லாமலும், தலைவா்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யத்திட்டம் என்ற குற்றச்சாட்டுகள் இல்லாமலும் பண்பட்ட முறையில் உட்கட்சிச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன.


தலைமை அமைச்சராக இருந்த லிஸ்டிரஸ் பதவி விலகிய நிலையில், எஞ்சிய காலத்திற்கான தலைமை அமைச்சரை ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. மூன்று பேர் அப்பதவிக்குப் போட்டியிட முன்வந்தார்கள். அக்கட்சியில், நாடாளுமன்ற உறுப்பினா்களில் 100 அல்லது 100 க்கு மேல் ஆதரவு பெற்றவர்கள் அவர்கள் கட்சிக்குள் இறுதி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சியின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் 357 பேர். 


ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், பென்னி மார்டண்ட் அம்மையார் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 140க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றார். போரிஸ் ஜான்சனுக்கு 51, பென்னி மார்டண்ட் அம்மையார்க்கு 27 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். எனவே இவ்விருவரும் போட்டியிடும் தகுதியை இழந்தனர். எந்தப் புகைச்சலும் தள்ளுமுள்ளும், வம்புதும்பும் இல்லாமல் ரிஷி சுனக் ஆளுங்கட்சித் தலைவரானார். ஆளுங்கட்சித் தலைவர்தான் அந்நாட்டில் ஆட்சித் தலைவா் (தலைமை அமைச்சர்) என்ற நடைமுறை வைத்துள்ளார்கள். எனவே அமைதியாக ரிஷி சுனக் பிரிட்டனின் தலைமை அமைச்சரானார். 

இதுபோன்ற உட்கட்சி சனநாயக நடைமுறை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வந்தால் நல்லது.


இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டியது, இந்தியப் பரம்பரையைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவில் தலைமை அமைச்சரானது குறித்த பெருமிதம் பற்றியது. இதை வைத்துத் தமிழ்நாட்டில் சிலர் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ”வெளியாரை வெளியேற்றுவோம்” போராட்டத்தை மனிதநேயமற்றது; சனநாயக நாகரிகமற்றது என்று பேசுகின்றனர்.


வெள்ளைக்காரர்கள் தங்களுக்குத் தொடர்பே இல்லாத தொலை தூர நாடுகள் பலவற்றை அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களைப் படுகொலை செய்தும், தூக்கில் போட்டும், மக்களைக் குவியல் குவியலாகக் கொன்று தங்கள் அரசை உருவாக்கிக் கொண்டனர்! நூற்றைம்பதிலிருந்து இருநூறு ஆண்டுகள் அடிமை நாடுகளை வைத்து ஆண்டனர். ஆங்கிலேயர்களும், அவர்களின் இனக் கலப்பால் உருவானவா்களும் இன்று இந்தியா உள்ளிட்ட அவா்களின் முன்னாள் காலனிகளில் வாழ்கிறார்கள். எனவே எல்லா வகையிலும், முன்னாள் காலனி நாடுகளின் மக்களுக்கும் ஆப்பிரிக்கக் கண்ட மக்களுக்கும் கடன்பட்டவர்கள் பிரித்தானியர்கள்.


பிரித்தானிய நாடாளுமன்ற வரலாறு 210 ஆண்டுகள் கொண்டது. இந்த 210 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெள்ளையர் அல்லாத ஒருவர், இந்தியாவின் துணைக்கண்டத்தைச் சார்ந்த ஒருவர் ரிஷி சுனக் அந்நாட்டின் தலைமை அமைச்சராகிட அனுமதித்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு இன்னும் இறையாண்மையே கிடைக்கவில்லை. 


வெள்ளைக்காரர்களைப் போல் தமிழ்நாட்டுத் தமிழா்கள் அயலார் யார்க்கும் கடன்பட்டவர்கள் இல்லை! சனநாயகக் காலத்திலும் அயல் இனத் தாயகத்தை ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்தவா்கள் அல்லர். 


இன்றும் கூட ஆங்கிலேயர்கள் அவர்களின் அண்டை நாடுகளான அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றை ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அந்நாடுகள் விடுதலைக்குப் போராடுகின்றன.


அடுத்து, வெள்ளையர்கள் தங்களது பிரிட்டனில், இறையாண்மையுள்ள சொந்தத் தனிநாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டு அதிகாரத்தோடு இருக்கிறார்கள். அவா்களிடம் நுழைவு அனுமதி (விசா) வாங்கிக் கொண்டுதான் அயல் இனத்தார் உள்ளே நுழைய முடியும். அவர்களின் அரசு அனுமதித்தால்தான் அயலார் அங்கு குடியுரிமை பெற முடியும். 


அப்படிப்பட்ட இறையாண்மையோடு தமிழ்நாடு இருக்கிறதா? இல்லை! எல்லா அதிகாரங்களும் இந்திக்காரர்களுக்கே என்ற நிலை இந்தியாவில் உள்ளது. அவா்களின் தலைநகரம் புதுடில்லி. இந்தியர் என்ற போர்வையில் இந்திக்காரர்கள் மட்டுமல்ல ஏராளமான அயல் இனத்தார் தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அலுவலகங்களில் இந்திய அரசால் வேலைக்குச் சேர்க்கப்படுகிறார்கள். இதற்குத் தமிழ்நாடு அரசிடமிருந்து அவர்கள் அனுமதி பெறுவதில்லை. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் இந்திக்காரர்களும் மற்ற அயல் இனத்தவரும் தமிழ்நாட்டிற்குள் வந்து குவிகிறார்கள். தமிழர்கள் பார்க்க வேண்டிய பல வேலைகளை அவர்கள் பார்கிறார்கள். தமிழா்கள் வேலையின்றித் தவிக்கிறார்கள். 


வெளிநாடுகளில் எந்த வேலை கிடைத்தாலும் சரி என்று தமிழா்கள் போகிறார்கள்; அதற்காகக் காத்திருக்கிறார்கள். அயல் மொழி பேசும் அயல் இனத்தார் தமிழ்நாட்டிற்குள் நுழைய எந்த உள்நுழைவு அனுமதியும் தமிழ்நாடு அரசிடமிருந்து பெற வேண்டிய தேவை இல்லை!


இந்தியா என்பது ஒரு தேசிய இன மக்கள் வாழும் ஒற்றைத் தேசமல்ல; இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேச நாடு (Multinational country). மண்ணின் மக்களை – அவா்களின் அரசர்களை, அரச குடும்பத்தினரைத் தூக்குக் கயிறுகளிலும், பீரங்கி நெருப்புக் குண்டுகளிலும் கொன்று குவித்தவா்கள் ஆங்கிலேயர்கள். அவர்களைக் கொடுஞ்சிறைகளில் அடைத்தவர்கள்! இக்கொடிய உண்மைகளைத் தமிழர்கள் மறக்க முடியாது. 


அடுத்து இந்தியாவின் பரம்பரையைச் சேர்ந்தவர் ரிஷி சுனக் என்கிறார்கள். இன்றைய பாக்கித்தானில் உள்ள பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்! சுனக் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர் அல்லர். அவர் ஒரு வேளை இந்திக்காரரோடு இணக்கம் காணலாம். தமிழரை இந்தி அடையாளத்துக்குள்தான் காண்பார். தினமணி ஏடு, ரிஷி சுனக் ”இந்திய வம்சாவளி ஹிந்து” என்று பெருமையுடன் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது (26-10-2022). அதாவது அவர் ஆரிய இந்து வகையைச் சோ்ந்தவர். தமிழர் என்ற அடையாளத்தோடு தமிழர்களோடு இணக்கம் காணமாட்டார். 


இந்தியாவில் தமிழர்களை ஆளுவோர், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோர் இந்திக்காரர்கள் என்ற உண்மையை மறந்து விடாதீர்! அயலார் ஆதிக்க சூழ்ச்சிக்குத் தமிழர்கள் பலியாகாதீர்!


உள்ளதை உள்ளபடி பார்ப்போம். தமிழர்கள் மீது ஆதிக்கம் செய்வோர், தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்போர் பரப்பும் ”பரந்த மனப்பான்மை” என்ற பசப்பு மொழிக்குப் பலியாகி விடவேண்டாம். தமிழ்நாட்டில் நிலவும் அயலார் ஆதிக்கத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.  


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.