ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆறு தமிழர் விடுதலை: மக்கள் போராட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றி!

 ஆறு தமிழர் விடுதலை: மக்கள் போராட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றி!

======================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்



ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

=====================================

                                     

இராசீவ் காந்தி கொலை வழக்கில் கற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏழு தமிழர்களில் பேரறிவாளனை 17.5.2022 அன்று விடுதலை செய்த உச்சநீதிமன்றம் இன்று (11.11.2022) எஞ்சிய நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், இரவிசந்திரன், செயகுமார் ஆகிய ஆறு தமிழர்களையும் இன்று விடுதலை செய்திருப்பது சனநாயக உணர்வாளர்களின் நெஞ்சில் நெடுங்காலமாக நிலை கொண்டிருந்த பெருந் துயரத்தை நீக்கியதாக அமைந்துள்ளது.


இந்தியா எதேச்சாதிகார இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதே என்ற பேரச்சம் எழுந்துள்ள இக்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, சனநாயக வெளிச்சம் காட்டியுள்ளது.


அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியும் பா.ச.கவும் அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளையெல்லாம் புறந்தள்ளி தூக்கு கயிறுகளைத் தயாரிப்பதிலேயே உறுதியாய் இருந்தன. அதில் அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தோற்றுப் போன பின், உயிருள்ள வரை சிறைக்குள் இருந்து மடிய வேண்டும் என்று வன்னெஞ்சத்தோடு செயல்பட்டன.


தம்பி பேரறிவாளனும் அவர் வழக்கறிஞர்களும் நடத்திய சட்டப் போராட்டம் கடந்த 17.5.2022 அன்று அவரை விடுதலை செய்தது. அந்த முன் எடுத்துக்காட்டும், அத்தீர்ப்பில் நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு காட்டிய வெளிச்சமும் இன்று ஆறு தமிழர்களை விடுதலை செய்துள்ளது.


நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினா அமர்வு ஆறு தமிழர்களை விடுதலை செய்தது உலகெங்கும் வாழும் சனநாயக உணர்வு கொண்ட தமிழர்களையும் மற்ற மற்ற நாட்டினரையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் வாதங்களை எடுத்து வைத்தது பேருதவியாக இருந்தது.


சட்ட நடைமுறைகளைத் துச்சமாகத் தூக்கி எறிந்து உயிர்ப்பலி வாங்குவிதிலேயே உறுதியாய் இருந்த காங்கிரசு, பா.ச.க. தலைமைகளுக்கும், தமிழ்நாட்டு முன்னாள் இந்நாள் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் நல்ல பாடம் கற்பித்திருக்கிறது.

இவர்கள் விடுதலைக்குப் பாடுபட்ட அனைத்து சனநாயக ஆற்றல்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.


தழல் ஈகம் செய்த செங்கொடிக்கு வீரவணக்கம்!


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.