ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்! [ பகுதி – 6 ] க.அருணபாரதி


 திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
[ பகுதி – 6 ]

க. அருணபாரதி

துணைப் பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================
“வடமாநிலத் தொழிலாளர் குறித்து மே 17 இயக்கம் தமிழின துரோகம் செய்கிறது என அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்” என்று கூறி கவலைப்படுகிறார் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி! அப்படி என்ன அபாண்டமான குற்றச்சாட்டை நாம் முன்வைத்து விட்டோம்?
ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுவழித் தாயகத்தில், இன்னொரு தேசிய இனத்தவர்கள் பெருமளவில் குடியேறுவது ஊக்குவிக்கப்பட்டால், அந்தத் தாயகம் செயற்கையாக ஆக்கிரமிக்கப்படுகிறது என்று பொருள்! பாலத்தீனத் தாயகத்தில் யூதர்கள் குடியேற்றப்படுவது இந்த நோக்கத்தில்தான்! காசுமீர் தாயகத்திற்குள் இந்திக்காரர்கள் திணிக்கப்படுவதற்காக, ஆரியத்துவ மோடி அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ நீக்குவது, இந்த நோக்கத்தில்தான்! தமிழீழத் தாயகத்திற்குள் சிங்களர்கள் குவிக்கப்படுவதும் இந்த நோக்கத்தில்தான்!
இதே நோக்கில்தான், தமிழ்நாட்டுத் தமிழர் தாயகத்திற்குள் வடமாநிலத்தவர்கள் குடியேறுவதை இந்திய அரசு ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறது, அவர்களுக்காகவே “ஒரே நாடு – ஒரே ரேசன்” திட்டத்தை பா.ச.க. செயல்படுத்த ஆணையிடுகிறது. எந்தக் கேள்வியுமின்றி தி.மு.க. – அ.தி.மு.க. திராவிடக் கட்சிகள் அதைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கமோ, வெளியாரை வெளியேற்றி, தமிழர் தாயகத்தைப் பாதுகாப்போம் என்கிறது!
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த வடவர் திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை என்று நாம் கேள்வி கேட்டதற்கு, “தொழிலாளர் இடப்பெயர்வு என்பது மூலதனத்தின் இடப்பெயர்வின் அங்கமாகவே நடக்கிறது. மூலதனத்தின் மீது தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்” என்று வடவர் “வருகை”யை ஞாயப்படுத்துகிறார் தோழர் கொண்டல்சாமி! இதுதான் தமிழின துரோகம் என்கிறோம் நாம்!
எதிரி நம் மீது ஒரு கல் எறிந்தால், நாம் என்ன செய்வோம்? நம்மை நோக்கி வரும் அந்தக் கல்லை முதலில் தடுத்துவிட்டு, எதிரியை விரட்டுவோம் அல்லவா! ஆனால், மே பதினேழு இயக்கமோ, “அந்தக் கல் (வடவர் திணிப்பு) பாவம். அந்தக் கல்லை எறிந்த எதிரிதான் (இந்திய அரசு – மூலதனம்) குற்றவாளி. எனவே அந்தக் கல் நம் மீது படட்டும்” எனக் கூறி பரிதாபமாக நிற்கிறது!
“இச்சிக்கல் குறித்து எவ்வித ஆய்வுமில்லாமல் உணர்வு நிலையிலும், முதலாளிகள் ஆதரவு நிலையிலும், தொழிலாளர் விரோத மனநிலையிலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இயங்குகிறது” என்று கற்பனைக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தோழர் கொண்டல்சாமி! அதாவது, வடமாநிலத்தவர் இங்கு வருவதை நாம் எதிர்ப்பது “தொழிலாளர் விரோத - முதலாளிகள் ஆதரவு” மனநிலை”யாம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைப்பாட்டில் எங்கே “முதலாளிகள் ஆதரவு மனப்பான்மை” என்பது வருகிறது?
அவ்வாறெனில், தமிழீழத்திற்குள் சிங்கள மூலதனத்தை மட்டும்தான் நாங்கள் எதிர்க்கிறோம், அதன்வழியே தமிழீழத்திற்குள் வரும் சிங்களத் தொழிலாளிகள் “வருகை”யை நாங்கள் ஏற்கிறோம் என மே17 வெளிப்படையாக அறிவிக்குமா? பாலத்தீனத்தில் யூதர்களின் மூலதனத்தை மட்டும் தான் எதிர்க்கிறோம், பாலத்தீனத்திற்குள் யூதர்கள் “வருகை”யை நாங்கள் ஆதரிக்கிறோம் என அறிவிப்பீர்களா? காசுமீருக்குள் வடவர் மூலதனத்தைத்தான் எதிர்க்கிறோம், இந்திக்காரர்கள் “வருகை”யை நாங்கள் எதிர்க்கவில்லை என்பீர்களா? ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வடமாநிலத்தவர் குவிவதை “மூலதனம் மட்டும்தான் சிக்கல்” என்று கூறி, வடவர் ஆக்கிரமிப்பை மறைமுகமாக ஏற்பதற்குப் பெயர் என்ன? அதுதான் தமிழின துரோகம்!
“இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியர்கள் – இந்துக்கள் – உழைக்கும் மக்கள் - பாட்டாளிகள்! இங்கே தேசிய இனம் என்றெல்லாம் பிரித்துப் பேசக் கூடாது; பார்க்கக்கூடாது. எனவே, பீகாரின் இந்து காசுமீரில் குடியேறினால் என்ன தவறு? மேற்கு வங்க இந்து, வடகிழக்கில் குடியேறினால் என்ன தவறு? உத்தரப்பிரதேச - மத்தியப்பிரதேச இந்து தமிழ்நாட்டில் குடியேறினால் என்ன தவறு?” என்று ஆர்.எஸ்.எஸ். கூடாரம் பேசும் அதே இந்தியத்தேசிய வெறிக் கூச்சலுக்கு, “மூலதனம்” என்றெல்லாம் சிகப்புச்சாயம் அடித்து விட்டால் சரியாகிவிடுமா? தமிழ்நாட்டுத் தாயகத்திற்குள் மிகை எண்ணிக்கையில் அயலார் திணிக்கப்படுவது, முதலாளிகள் என்ற வகையில் வந்தாலும்சரி, தொழிலாளிகள் என்ற வகையில் வந்தாலும் சரி, அது ஆபத்தானதே!
பன்னாட்டு – வடநாட்டு மூலதனத்தையும், அவர்களின் நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும், அவர்களால் குடியமர்த்தப்படும் வடவர்களையும் ஒருசேர எதிர்க்கிறோம் என்பதே சரியான நிலைப்பாடு! தமிழ்த்தேசியப் பேரியக்கம், பன்னாட்டு – வடநாட்டுப் பெருநிறுவனங்களை எதிர்த்துப் போராடியுள்ளது; வடவர்கள் குவிவதையும் எதிர்த்துப் போராடுகிறது. ஆனால், மூலதனத்தை மட்டும்தான் எதிர்க்கிறோம் என்று கூறி, வடவர் வருகையை ஏற்பீர்களானால், திரிபுராவிற்கு நேர்ந்த கதிதான் தமிழ்நாட்டிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறது!
திரிபுராவில் மண்ணின் மக்களான திரிபுரி மக்கள் வெறும் 31.8% தான் என்கிறது 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு! “வர்க்கம்” எனப் பேசி, வங்காளிகளும், இந்திக்காரர்களும் திரிபுராவின் மலைப்பகுதிகளில் மிகை எண்ணிக்கையில் குவிக்கப்பட்டதால்தான், மண்ணின் மக்களான திரிபுரிகள் அங்கு சிறுபான்மை ஆக்கப்பட்டு, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு வங்காளி அங்கு பல ஆண்டுகளாக முதல்வர் பதவிக்கு வர முடிந்தது! தமிழர் தாயகத்தையே “திராவிட மண்” எனத் திரிக்கும் திராவிடக் கட்சிகள், இந்தியில் துண்டறிக்கை அடித்து, ஓட்டுக் கேட்பதைத் தவிர எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை! இதுபோன்ற நிலைமைதான், தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்கிறதா மே 17 இயக்கம்?
உறுதிமிக்கப் பழங்குடியின மக்களின் தாயகக் காப்புப் போராட்டத்தின் காரணமாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் உள்நுழைவுச் சீட்டு (Inner Line Permit) முறையை செயல்படுத்தி வருகிறது. இதேபோல், வடவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்க் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த, அதே முறையை தமிழ்நாட்டில் கொண்டு வாருங்கள் என்று தொடர்ந்து போராடுகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! அதுகுறித்த விழிப்புணர்வை பல்வேறு போராட்டங்கள் வழியே ஏற்படுத்தியுள்ளோம். நாம் இதனை வழிமொழிந்த பிறகே, பல அரசியல் கட்சிகளும் இதை ஏற்று கோரிக்கைகள் முன்வைத்தார்கள்.
வெளிநாடு சென்றிருக்கும் தமிழ்த் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை ஏற்படுமெனில் த.தே.பே. என்ன செய்யப்போகிறதெனக் கேட்கிறார் தோழர் கொண்டல்சாமி! வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தமிழர்கள், அந்தந்த நாடுகளில் “விசா” அனுமதியோ, வேலை அனுமதியோ (Work Permit) இல்லாமல்தான் சென்றிருக்கிறார்களா? அவ்வாறு அந்த நாடு ஏற்காமல் - அனுமதி அளிக்காமல் இங்கிருந்து தமிழர்களால் சட்டப்படி அங்கு சென்று பணிபுரிய முடியுமா? சட்டவிரோதமாகச் சென்றால், அவர்களை சட்டப்படி நாடு கடத்தி வெளியேற்றும் நடவடிக்கை இன்றைக்கும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
இறையாண்மை கொண்ட ஒவ்வொரு நாடும், தனது தாயகத்திற்குள் வெளி இனத்தவரை எந்தளவுக்கு அனுமதிப்பது என முடிவெடுத்துதான் “விசா” போன்ற அனுமதிகளை வழங்குகின்றனர். அதன்படிதான் தமிழர்கள் அங்கு சென்று பணியாற்றுகின்றனர். ஒருவேளை, அந்த நாட்டிலுள்ள சொந்த இனத்தின் மக்கள் தொகையை விட, வெளி இனத்தவரின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறதெனில், அந்த நாடுகள் வெளியார் குடியேறுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றைக்கும் நடைமுறையில் தானே இருக்கிறது? அவரவர் தாயகத்தைப் பாதுகாக்க, அந்த மண்ணின் மக்களுக்கான அரசு இவ்வாறு நடவடிக்கைகள் எடுப்பதை யாராவது கேள்விக்கு உட்படுத்திவிட முடியுமா?
தமிழ்நாடு இன்றைக்கு இந்திக்காரர்களின் - இந்திய ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருப்பதால், எந்தக் கட்டுப்பாடும் இன்றி இங்கே இந்திக்காரர்கள் குவிக்கப்படுகிறார்கள். எங்காவது இந்தி மாநிலங்களில் தமிழர்கள் இப்படி குவிந்துள்ளார்களா?
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசத்தில் 14,444 தமிழர்கள் வாழ்கிறார்கள்! பீகாரில் 986 பேர்! மத்தியப் பிரதேசத்தில் 20,544 பேர்! அரியானாவில் 12,658 பேர்! உத்தரகாண்ட்டில் 2,584 பேர்! ஒரிசாவில் 6,155 பேர்! மொத்தமாக இந்தி மாநிலங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 57,371 பேர்! இதர வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து வைத்துக் கணக்கிட்டால்கூட, வடநாட்டில் மொத்தமாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டவில்லை! 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு, இன்று 2025ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால்கூட, 14 இலட்சம்பேர்தான் வருகிறார்கள்.
ஆனால், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டிற்குள் குடியேறியுள்ள வெளி மாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கை மட்டும் 67.74 இலட்சம் பேர்! அவர்களின் குடும்பத்தினரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் சற்றொப்ப 1 கோடி பேர்! இந்தி மாநிலங்களில் வாழும் சில இலட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 1 கோடி இந்திக்காரர்களை வெளியேற்றி, அங்கிருந்து வரும் சில இலட்சம் தமிழர்களுக்கு இங்கேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர முடியாதா?
மேலும், வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் ஒன்றும் பிணைக் கைதிகள் அல்ல! புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ மக்களுக்கு சிக்கல் வருமோ என்று அச்சப்பட்டெல்லாம் புலிகள் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்காமல் அமைதியாக இருக்கவில்லை! தங்கள் தாயகத்திற்கு எது சரியோ, அதையே முன்னிறுத்தினர். நாமும் தமிழ்நாட்டு தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க, இங்குள்ள பல கோடித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தியே செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள இந்த 1 கோடி வெளி மாநிலத்தவரை தமிழ்நாட்டிற்குள்ளேயே வாக்காளர்கள் ஆக்கி, பா.ச.க. – காங்கிரசு – சி.பி.எம். போன்ற வடநாட்டுக் கட்சிகளுக்கான வாக்கு வங்கியை உருவாக்குவது தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டம்! இந்த 1 கோடி பேரின் நலனுக்காகத்தான், தமிழ்நாட்டிலுள்ள வங்கிகளில் இந்தி மொழி பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள தங்கள் வணிக நிறுவனப் பெயர்களைக் கூட வெளிப்படையாக இந்தியில் அவர்கள் எழுதிக் கொள்கிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு மார்வாடி குடியிருப்பில் தமிழர்கள் உள்ளே வரக் கூடாதென பலகை மாட்டினார்கள். தங்கள் ஊர்திகளில் இந்தியில் பெரிய எழுத்துகளில் எழுதிக் கொள்கிறார்கள். மார்வாடி – குசராத்தி – செயின்கள் என இந்திக்காரர்ளின் கோட்டையாக ஒவ்வொரு தமிழ்நாட்டு நகரமும் மாறி வருகிறது. தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் இந்தியைக் கொண்டு வந்தால் என்ன என்று பா.ச.க. இவர்களை வைத்தே எளிதாகத் திட்டமிடுகிறது. இவர்களை வெளியேற்றாமல், வெறும் மூலதனத்தை மட்டும் எதிர்க்கிறோம் என்று கூறி தப்பித்துக் கொண்டு, தமிழர் தாயகம் அழிவதை வேடிக்கைப் பார்ப்பதன் பெயர்தான் தமிழின துரோகம்! அதை செய்யாதீர்கள் என்கிறோம்!
தமிழ்நாடு – தமிழர்களின் வரலாற்றுவழித் தேசிய இனத் தாயகம்! தனித்த தேசமாக – தனி நாடாக இருக்கத் தகுதி பெற்றத் தாயகம்! இதற்குள், யார் வரலாம், எவ்வளவு பேர் வரலாம், எவ்வளவு நாட்களுக்கு வரலாம் என்று அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம், தமிழ்நாட்டு அரசிடம்தான் இருக்க வேண்டும். தமிழர் தாயகத்திற்கு இறையாண்மை வேண்டும் என்கிறோம் நாம். ஆனால், 'இந்தியர்கள்” – “உழைக்கும் மக்கள்” என்ற பெயரில், இந்தத் தாயகத்தை எவர் வேண்டுமானாலும் வந்து குடியேறி ஆக்கிரமிக்கலாம் என்று, கதவு திறந்துவிட வேண்டும் என்ற கூச்சலிடுவதற்குப் பெயர் என்ன? அதுதான் தமிழினத் துரோகம்!
( தொடரும் )
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.