ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மேக்கேத்தாட்டு அணை தடுக்க களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேதாட்டு அணை தடுக்க

களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், இன்று (21.05.2026) முற்பகல், தஞ்சை தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்கள், ஐயா சாமி. கரிகாலன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஐ.ஜே.கே. கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ப. செகதீசன், பூதராயநல்லூர் இராமலிங்கம், ஒரத்தூர் சிவப்பிரகாசம், துரை. இரமேசு, தி. செந்தில்வேலன், திருவாரூர் ச. கலைச்செல்வம் (தமிழர் தேசியக் களம்), புண்ணியமூர்த்தி (ஆழ்துளைக்குழாய்க் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்), பூதலூர் சுந்தரவடிவேல், மன்னார்குடி இராசசேகர், தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர்  தோழர் பி. தென்னவன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் – 1

தமிழ்நாடு முதலமைச்சர்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் பெற வேண்டும்!

 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018இல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. 2018இல் இருந்த அ.தி.மு.க. ஆட்சியோ, அதன்பிறகு 2021இல் வந்த தி.மு.க. ஆட்சியோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாத வாரியாகக் காவிரி நீரைக் கர்நாடகத்திடம் பெற்றதில்லை! அதற்குரிய முயற்சிகளை நேர்மையாக இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

 

கடந்த சில ஆண்டுகளாகப் பருவந்தவறிக் கோடையில் கொட்டிய பெருமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி, வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் அணை நிரம்பியது.

 

வரும் சூன் 12 அன்று முறைப்படி மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட வேண்டும். இவ்வாண்டு இதுவரை பருவந்தவறிய கோடை மழை பெரிதாகப் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு மிகை வெள்ள நீர் வரவில்லை. வெறும் 78 அடி தான் மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், கர்நாடக முதலமைச்சருடன் பேசி காவிரி நீர் திறக்க வலியுறுத்திப் பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 27 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். 22 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.

 

இந்நிலையில், கடந்த 09.05.2026 அன்று கர்நாடகத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் காவிரிக் காப்புக்குழுக் கூட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 177.25 டி.எம்.சி. காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை மாற்றி, மேலும் குறைத்துத் தீர்ப்பளிக்க மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் போட வேண்டுமென்று கன்னட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயிர் காக்க மனித உயிர் காக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு, 2018 தீர்ப்பை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

 

தீர்மானம் – 2

மேக்கேதாட்டு அணை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை!

 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேலும் ஒரு எல்லைப்புற அணையாக மேக்கேதாட்டு அணை கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது. இந்திய நீர்வளத்துறை, காவிரி மேலாண்மை ஆணையம் முதலியவை மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஒன்பதாயிரம் கோடி மதிப்பீட்டிலான அந்த அணையின் தொடக்க நிலைப் பணிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கி, வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறப்பு வல்லுநர் குழு அமைத்து, கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக நடைபெறும் வேலைகளைக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மேக்கேதாட்டு அணை முயற்சிகளுக்குத் தடை ஆணை கோர வேண்டும்.

 

தீர்மானம் – 3

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக சிப்காட் கூடாது!

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, 2019இல் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்ற உழவர்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது, அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கி சட்டம் இயற்றினார். ஆனால், கடந்த மு.க. ஸ்டாலினது தி.மு.க. ஆட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி பகுதியிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை – உம்பளச்சேரி பகுதியிலும், சிப்காட் பெருந்தொழில் குவிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தது. உழவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் ஆட்சி சட்டை செய்யவில்லை.

 

வெளிநாடுகள் மற்றும் வடநாடு முதலியவற்றிலிருந்து பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைக் காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு அழைத்து வரும் சட்ட விரோத வேலைகளில் முரட்டுத்தனமாக ஈடுபட்டார் மு.க. ஸ்டாலின். அவர் அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 

அன்புகூர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்கள், இச்சிக்கலில் தனிக் கவனம் செலுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழில் பெருக்கத் திட்டங்களைக் கைவிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இது தொடர வழிவகை செய்யுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் – 4

நடுநிலை தவறிய ஹல்தரை நீக்குக!

 

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி – அந்த ஆணையத்தை கர்நாடகத்திற்குச் சாதகமாக நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த ஆணைகளில் எதையும் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதைக் கண்டு கொள்ளவே மாட்டார் ஹல்தர். முடிவு செய்த ஆணைகளை நிறைவேற்றப் படுவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை!

 

அது மட்டுமின்றி, சட்டவிரோதமான மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கும், குறுக்கு வழியில் பெரும்பான்மை அடிப்படையில் மேலாண்மை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஹல்தர்.

 

எனவே, தொடர்ந்து – திட்டமிட்டு நடுநிலை தவறி – கர்நாடகத்தின் துணை மன்றம் போல், காவிரி மேலாண்மை ஆணையத்தை நடத்தி வரும் ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்கி, நடுநிலை உள்ள புதிய தலைவர் ஒருவரை மேற்படி ஆணையத்திற்கு இந்திய அரசு அமர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது! 

 

========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================

Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.