தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்! நீட் தேர்வைக் கைவிடவேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!
தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்!
நீட் தேர்வைக் கைவிடவேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!
பல மொழி இனங்கள் வாழும் நாட்டில் அதிகாரம் மையப்படுவது அடிப்படையில் இன ஒடுக்குமுறை ஆகும். ஆயினும் காலப்போக்கில், இவ்வாறு மையப்பட்ட அதிகாரம் அதனால் பயனடைந்த ஆதிக்க மொழி இன மக்களின் கண்காணிப்பில் இருந்து விலகி, அவர்களிலும் பெரும்பாலோரை வஞ்சிப்பதாக சீரழிந்துவிடுகிறது. நீட் தேர்வில் நிகழ்ந்திருப்பது அதுதான்!
நீட் தேர்வுமுறையே அறிவை ஆய்வு செய்வதற்கு மாறாக, வினாக்களுக்கு விடையளிக்கும் திறன்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால் தனிப்பயிற்சி மையங்கள் (கோச்சிங் சென்டர்) முதன்மை பெற்றன. பத்து இலட்சம், இருபது இலட்சம் ரூபாய் கொட்டிக் கொடுத்தால் தான், நீட் பயிற்சி மையங்களுக்குள்ளேயே தலைகாட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள்.
பல கோடி ரூபாய் புரளும் சமூகவிரோத தொழிலாக தனிப்பயிற்சி மையங்கள் மாறிய நிலையில் தனியார் வணிகப் போட்டியில் மேற்கொள்ளப்படும் குறுக்கு வழிகள் இதிலும் கையாளப்பட்டன. அதன் அடுத்தகட்ட விளைவாக திட்டமிட்ட முறையில் பல இலட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு வினாத்தாள்கள் கசியவிடப்பட்டன. தேர்வு மையங்களுக்கு வெளியில் எழுதித் தரப்படும் விடைத்தாள்கள் இணைக்கப்பட்டன.
இந்த ஊழல் வலைப் பின்னலின் தலைமை இடமாக இந்திய அரசின் உயர்கல்வித்துறை மாறிப்போனது.
நீட் தேர்வில் தொடங்கிய இந்த ஊழலும், கையூட்டும், முறைகேடுகளும் JEE, CBSE போன்ற கல்வித் தேர்வுகளுக்கும் அனைத்திந்திய வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கும் விரிவடைந்தது. படித்தால் தேற முடியாது. காசு கொடுத்தால்தான் தேர்வு பெற முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகியது.
இந்தச் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அனிதாவைப்போல உயிர்மாய்த்துக் கொள்வது அனைத்திந்திய அளவில் ஆண்டுக்கு ஆண்டு பெருகியது. இந்த ஆண்டில் மட்டும் 35 மாணவர்கள் தகுதியிருந்தும் வஞ்சிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.
இதில் வெடித்ததுதான் இன்று தில்லியே போர்க்களமாக மாறும் அளவுக்கு இளையோரின் கொந்தளிப்புக் களமாக மாறியிருக்கிறது.
திடீரென்று தோன்றிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (Cockroach Janata Party of India). இந்த இளையோரின் கோபத்திற்கு வடிவம் கொடுக்கிற அமைப்பாக உருவானது. பல்வேறு இடதுசாரி மற்றும் பட்டியல் சமூக, இசுலாமிய மாணவர் அமைப்புகளும் இதில் இணைந்து போராட்டத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்தினார்கள்.
அபிஜீத் திப்கே என்ற இக்கட்சியின் தலைவராக உள்ள இளைஞரின் அழைப்பை ஏற்று தில்லி ஜந்தர்மந்தரில் நாள்தோறும் பெருகிவரும் போர்க்குணமுள்ள இளையோரைப் பார்த்து உலகமே வியக்கிறது. லடாக்கைச் சேர்ந்த அறிவியலாளர் - மனித உரிமை செயல்பாட்டாளர் - சோனம் வான் சுக் இம்மாணவர்களோடு 26 நாட்கள் நடத்திவந்த உண்ணாநிலைப் போராட்டம் இதன் அற வலிமையை எடுத்துக்காட்டியது.
வான் சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சூழலில், நாடாளுமன்றம் நோக்கி இளையோர் பேரணி நடக்கும் என்று அபிஜீத் அறிவித்ததை ஏற்று, கடந்த 20.7.2026 அன்று நடைபெற்ற பேரணி தில்லி மாநகரத்தையே குலுங்கச் செய்தது. இணையம் முடக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்ட நிலையிலும், அனைத்து திசைகளிலிருந்தும் ஆயிரம் பல்லாயிரமாய் இலட்சக்கணக்கில் இருபால் இளையோர் அணிதிரண்டார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது தலைமை அமைச்சர் மோடி தர்மேந்திரப் பிரதானை நீக்கவேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையோடு, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கை விண்ணதிரக் கிளம்பியது.
அமைதியான பேரணி நடத்திய மாணவர்கள் மீது மிகக் கொடிய காவல்துறை அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. சீருடை அணிந்த காவலர்கள், அடையாளத்தை மறைப்பதற்காக, அவர்களது பெயர்குறித்த அடையாள வில்லைகள் நீக்கப்பட்டன. அடையாளம் மறைக்கப்பட்ட காவல் துறையினர் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். அடியாட்களும் தடியேந்தி பேரணியில் பங்கேற்ற ஆண்களையும் பெண்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையின் ஒருபிரிவினர் பயன்படுத்திய தடியில் ஆணிகள் பொருத்தப்பட்டு, குருதி சொட்டச் சொட்ட இளையோர் தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகை குண்டுகளின் ஊடாக சிறிய ரவைகள் (பெல்லட் குண்டுகள்) வீசப்பட்டு படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோர் உடலில் என்ன வகை காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வெளியிடக் கூடாது என்று மருத்துவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இக் கொடுந்தாக்குதல் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததோடு, அது குறித்த காணொலிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க முடியாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் வன்மத்தோடு கூறியது நீதித்துறை எந்த அளவுக்கு பாசிச நிழல் படிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.
இத் தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், சென்னையிலும் மதுரையிலும், அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக அடக்குமுறையை விஜய் அரசு கட்டவிழ்த்து விட்டது.
இந்திய மோடி அரசின் பாசிச அடக்குமுறையையும், விஜய் அரசின் கண்மூடித்தனமான காவல்துறை தாக்குதல்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தில்லியில் நடந்தது போலவே சென்னையிலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் தங்கள் சட்டையில் தொங்கிய பெயர் வில்லைகளை எடுத்துவிட்டே தாக்கினார்கள். இது பா.ச.க. அரசைப் பின்பற்றியே விஜய் அரசு செயல்படும் என்பதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.
கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முழுமையாக ஆதரிக்கிறது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு மாணவர்கள் நடத்துகிற உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறது.
அதே நேரம், நீட் தேர்விலும் பிற அனைத்திந்தியத் தேர்வுகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு நிற்காமல், நீட் தேர்வையும் பிற அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளையும் இந்திய அரசு கைவிடவேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.
Leave a Comment