ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கோவை பெரியார் நூலகத்தில் போலி நூல் கொள்முதல் ஊழலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

கோவை பெரியார் நூலகத்தில் போலி நூல் கொள்முதல் ஊழலில் ஈடுபட்டவர்களை

விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில், தகுதியற்ற மற்றும் போலியான நூல்கள் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு பெரும் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதை, எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் விரிவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இன்று (06.11.2026) விரிவான கட்டுரையின் வழியே அவர் வெளியிட்டுள்ள கள ஆய்வுத் தரவுகள் தமிழ் அறிவுலகை உலுக்கியுள்ளன.

 

கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களுக்கே தெரியாத ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தின் பெயரில் கிட்டத்தட்ட 1,800 நூல்களும், ‘பீனிக்ஸ் பதிப்பகம்’ பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களும் “தமிழ் நூல்கள்” பிரிவில் (4-ஆம் தளம்) வைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் அச்சிடப்பட்டுள்ள ‘பன்னாட்டுத் தரப் புத்தக எண்களை’ (ISBN) இணையத்தில் சரிபார்த்தால் அப்படிப்பட்ட எண்களே இல்லை என்பதும் புலனாகிறது. மேலும், அப்பதிப்பகம் குறிப்பிட்டுள்ள முகவரியும் போலியானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்பம் முதிராத காலத்தில், செய்யறிவை (AI) வைத்து, அப்பட்டமான வரலாற்றுப் பிழைகளுடன் இந்நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சான்றாக: ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்ற நூலில், நாலடியார் என்பது சமண முனிவர்கள் எழுதிய அறநூல் என்பது கூடத் தெரியாமல், "நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி" என்று படுமுட்டாள்தனமாக அச்சிடப்பட்டுள்ளது. ‘மதுரைக் காஞ்சி ஒரு இலக்கியப் பயணம்’ (ஆசிரியர்: தேவ் நிலன்) என்ற நூலில், மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்ட ஒரு நீண்ட பாட்டு என்பதை அறியாமல், "மதுரைக் கூழத்திப் பெருவழுதி பாடிய 782 செய்யுள்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு" என்று அபத்தமாக எழுதப்பட்டுள்ளது.

 

பொதுவாக 300 பக்கங்கள் கொண்ட தமிழ் நூல்கள் ரூ.350 முதல் ரூ.400 வரையே விற்கப்படும் சூழலில், ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை 1445 ரூபாயாம்! இத்தகைய தரமற்ற போலிப் புத்தகங்களுக்கு ரூ.1,395 முதல் ரூ.1,445 வரை அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நூலக விநியோகத்திற்காகவே திடீரென உருவாக்கப்பட்டுள்ள பல போலி பதிப்பகங்களின் நூல்கள், மிகப்பெரும் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன.

 

பொது நூலகங்கள் என்பவை மாணவச் சமுதாயத்திற்கும் இளையோருக்கும் வரலாற்று அறிவையும் மொழியறிவையும் வழங்கும் கருவூலங்கள். அங்கு போலியான ஆசிரியர்களின் பெயர்களிலும் செய்யறிவுத் தொழில்நுட்பத் தவறுகளுடனும் நூல்களைத் திணிப்பது என்பது வெறும் நிதி ஊழல் மட்டுமல்ல; தமிழர்களின் வரலாற்றையும் அறிவையும் திட்டமிட்டுச் சீரழிக்கும் சமூக விரோதக் குற்றமாகும்.

போலிப் பதிப்பகங்களின் பின்னணியில் உள்ள இடைத்தரகர்கள், அரசு விதிகளை மீறி ஒப்புதல் அளித்த அதிகாரிகள், இதன் மூலம் முறைகேடாகப் பலன் அடைந்த அரசியல் புள்ளிகள் அனைவரையும் கண்டறிந்து கைது செய்ய, குற்றப்புலனாய்வில் தேர்ந்த நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் தமிழ்நாடு அரசு உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலும், நடுநிலையான மூத்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் தணிக்கை செய்து போலி மற்றும் தரமற்ற நூல்களை நூலக அலமாரிகளிலிருந்து உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். இம்முறைகேட்டின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட போலிப் பதிப்பகங்கள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து அரசுடைமையாக்கி மீட்க வேண்டும்; அந்த நிறுவனங்களை நிரந்தரமாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சிக்கலில் தலையிட்டு, நேர்மையான நடவடிக்கைகளைத் தொடங்கத் தவறினால், தமிழ் அறிவுலகத்தினரைத் திரட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கம் களப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறோம்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================
Uploaded Image

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.