[பொங்கல் மலர் கட்டுரைகள்] - தொடக்கக் கல்வி மீது உலகமயத்தின் தாக்கம்
தாராளமயம், தனியார் மயம், உலகமயம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவே. மூன்றில் நோக்கங்களும், நடைமுறைகளும் பெரும்பாலும் ஒன்று போன்றவை. அரசுகளும் இம் மயங்களே நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்ற நம்பிக்கையில் இவற்றிற்கு அதிகளவு இடம் கொடுத்து வருவதைக் காண்கிறோம்.
பாராளுமன்றம் நிறைவேற்றிய தொழிற்கொள்கை, தொழிலாளர் கொள்கை, வேளாண் கொள்கை, கல்விக் கொள்கை போன்றவை காற்றில் விடப்பட்டுள்ளன. பொதுத் துறையின் மேன்மை நிலை (Dominant) குலைக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இவ்வாறு குறைந்த விலையில் வாங்கிய நிறுவனத்தை மறுஏலம் விட்டு கோடிகள் சம்பாதித்தவர்களும் உண்டு. அரசியல் சட்டம் வலியுறுத்தும் சோசலிசம், சமத்துவம், சமநீதிக்கோட்பாடுகள் துறக்கப்படுகின்றன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற இந்தியாவில் நாளொன்றுக்குச் சராசரி வருமானம் ரூ. 20/-க்கும் குறைவானர் 81 விழுக்காட்டினர் என்று அரசின் அறிக்கையே தெரிவித்துள்ளது. ''மயங்களின்'' வளர்ச்சி பாமரர்க்கு இல்லை என்பது தெளிவு. மாறாக இவ்வளர்ச்சி சாதாரண மக்களை மேலும் கொடிய வறுமை நிலைக்குத்தள்ளியுள்ளது.
கல்வியின் மீதான தாக்கம்
ஆங்கிலேயர் காலத்திலும், தனியார் பள்ளிகள் இருந்த போதிலும், அவை அனைத்தும் அரசு உதவிபெறுபவை. அவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடும் அரசிற்கு இருந்தது. 1986-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான் கல்வியில் தனியார் பெருமளவில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். நர்சரி கல்வி தொடங்கி மருத்துவக்கல்வி வரை எல்லா நிலைகளிலும் தனியார் நுழைந்தனர். இலவசக் கல்வி தேய, கட்டணக்கல்வி, வெகுவேகமாக வளர்ந்தது. தமிழ்வழிக் கல்விக்கு மாறாக ஆங்கில வழிக்கல்வி பரவியது.
''இனாம்தார்'' வழக்கில் உச்சநீதிமன்றமானது அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் அரசின் கட்டுப்பாட்டினை வெகுவாகத் தளர்த்தி தீர்ப்பளித்தது.
இப்பள்ளிகள் மீது அரசின் அதிகாரம் ஏதுமில்லாமல் போயிற்று. இன்று பட்டி தொட்டியெல்லாம் ஆங்கில வழிக்கல்வி அளிக்கும் கட்டணப் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகள் பரவியுள்ளன. அவை பெருகியது போலவே, அரசுப்பள்ளிகளின் தரத்தைக் குறைக்கும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பொதுப் பள்ளிகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைய, வயிற்றையும் வாயையும் கட்டிக் கட்டணப் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப அடித்தட்டு மக்களும் விரும்பினர். தரமான கல்வி மறுக்கப்பட்டவர் பல்கிப் பெருகினர். தனியார் மயத்தினுடைய போக்கு பொதுத்துறை நிறுவனங்களை முடக்குவது என்பது கல்வித்துறையிலும் மெய்ப்பிக்கப்பட்டது.
கல்வியில் உலகமயம்
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய மூன்றுமே கல்வியை ஒரு சேவை என்ற நிலையிலிருந்து ஒரு வாணிபப் பொருளாக மாற்றியுள்ளன. காசுக்கேற்ற கல்வி என்பதே இவற்றின் நடைமுறை. கல்வி என்பது உலகளவில் பல லட்சம்கோடி டாலர் வாணிபமாகும். இதனால் கல்வி அளிப்பில் பெருமளவில் படையெடுக்க அன்னியர் தயாராகிவிட்டதில் வியப்பில்லை. ஏற்கெனவே உயர்கல்வியில் தனியார் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் அன்னிய நாட்டுக்கல்வி நிறுவனங்களோடு புரிதல் ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் இத்தகைய உடன்பாடுகள் காண்பதில் பெருமளவில் செயல்படுகின்றன. ஆனால் இம்முயற்சியெல்லாம் நம் அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது.
உலக மயக்கொள்கையின் ஆதார சுருதியே நடையில்லா வர்த்தகமாகும். இதற்கென்றே உருவான அமைப்பு உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation). பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதியினின்று சேவைத்துறைக்கும் விரிவுபடுத்த உ.வ.நி. எடுத்த முயற்சியே G.A.T.S. (General Agreement on Trade and Services) எனப்படும் சேவைத் தொழிலில் பொது உடன்படிக்கையாகும்.
இவ்வுடன்படிக்கைப்படி, 160க்கும் மேற்பட்ட சேவைத்தொழில்கள் உலகமயமாதலின் வீச்சிற்கு உட்படும். தொடக்கக்கல்வி, இடை நிலைக்கல்வி, உயர்கல்வி, முதியோர்கல்வி, பிறவகைக் கல்வி ஆகிய அனைத்தும் ''கேட்ஸ்'' பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசு உயர்கல்விக்கு மட்டும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்போம் என்று கூறிவந்தாலும், அனைத்துக் கல்வியிலும் வெளிநாட்டவர் நுழைவதற்கு வழி உண்டு. முற்றிலும் இலவசமாகப் பேதமின்றி வழங்கப்பெறும் சேவையினங்களுக்கே கேட்ஸ'லிருந்து விலக்கு உண்டு. நர்சரி முதல் தொழிற்படிப்புகள் உள்ளிட்ட அனைத்திலும் கட்டணம் பெறப்படுவதால், எந்நிலைக்கல்வியும் கேட்ஸ்ஸ'ற்கு அப்பால் இருக்க இயலாது. மேலும் உயர்கல்வியில் தங்கள் தேவைகளுக்கேற்பவே மாணவரைத் தேர்ந்தெடுக்க விரும்புவதால் பள்ளிக்கல்வி மீதும் வெளிநாட்டவர் ஆதிக்கம் இருக்கும்.
கல்விக்கூடங்கள் தொட.ங்கல், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் வகுத்தல், பாடநூல் வெளியிடல், தேர்வு நடத்தல், பட்டம் வழங்குதல் ஆகிய அனைத்திலும் வரம்பற்ற சுதந்திரம் அன்னிய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு. மேலும், நமது நாட்டில் வழங்கப்பெறும் சலுகைகளும் தங்கு தடையின்றி அந்நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும். அவற்றின் மீது எவ்வித மேலாதிக்கமும் நடுவண் அரசோ, மாநில அரசுகளோ செலுத்த இயலாது. சுருங்கக்கூறின், ஒரு நாட்டிற்குள் ஒரு நாடாக அவை அமையும்.
இவற்றின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்று காண்போம்.
நமது நாட்டின் தேவைகள், விருப்பங்கள், பண்பாடு ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது அயல்நாடுகளின் தேவைகளை நிறைவு செய்யும் முறையிலேயே அவை செயல்படும்.
முதலாளித்துவ நாடுகளிலுள்ள பெரும் நிறுவனங்களே இங்கே கடையை விரிக்கும். சோஷலிச நாடுகளுக்கு அவ்வெண்ணம் இல்லை. கல்வி நிறுவனங்களில் அயல் நாட்டுக்கலாச்சாரமே மேலோங்கி நிற்கும். ஏற்கெனவே பெரும் பாகுபாடுகளோடு இயங்கிவரும் கல்வி முறையில், மிகப்பெரிய விரிசலை அயல் நிறுவனங்கள் உண்டாக்கி, நமது கல்வி நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்யும்.
கல்வி வாய்ப்பு மட்டுமின்றி வேலை வாய்ப்பும் பெருமளவில் பாதிக்கப்படும். எளியவர் முழுவதும் புறக்கணிக்கப்படுவர். நடுத்தர வர்க்கத்தினரும் இன்றைய நிலையினின்று தாழ்ந்து போவர்.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக, இன்று நமது நாட்டில் செயல்பட்டுவரும் தன் நிதி வணிக மயக்கல்வி நிறுவனங்களையும் முடக்க அயல் நிறுவனங்கள் முற்படும். எனவே அவை உயிர் கொடுக்கும் விதைகளாகாது; உயிர்கொல்லும் களைகளாகவே செயற்படும்.
சமுதாயத்தொடர்பு ஏதுமின்றி சமஸ்தானங்களாகவே இயங்கும். எனவே கேட்ஸ் ஒப்பந்தத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவ நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஆசிரிய இயக்கங்கள் ''கல்வித்துறையினின்று கேட்ஸ் ஐ விலக்கு'' என்று போரிட்டு வருகின்றன.
நமது தொடக்கக்கல்வி கட்டணம் ஏதுமில்லாக் கல்வியாகவே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்றது. உலகமயமாதலில் அந்நிலையும் மாறி பள்ளி செல்லும் வாய்ப்பே இல்லாது போகும். நம் நாட்டிற்கு முற்றிலும் புறம்பான பாடத்திட்டத்தைச் செயல்படுத்துவர். கல்வி முறையே முழுவதும் žரழிந்துவிடும்.
முழு விழிப்போடு அனைத்து மக்களும் உலகமயமாதலை முறியடிக்க, நம் கல்வி முறையில் பெரும் மாற்றங்களை கொணர்ந்து தரமான கல்வியை நமது நாட்டு மக்களுக்கு பாகுபாடின்றி வழங்கிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
Leave a Comment