ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை


தென்காசியிலும் அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸின் கோரமுகம் - க. அருணபாரதி கட்டுரை.

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக தென்காசி நிகழ்வால் அம்பலப்பட்டு நிற்கிறது ஆரியப் பார்ப்பனிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட இந்துமதவெறி பார்ப்பனிய அமைப்புகள் எவையுமே நேருக்கு நேர் நின்று தன் எதிரியை சந்திக்காமல் சதியில் ஈடுபட்டு அவர்களை வஞ்சகத்தால் வீழ்த்துவதே செயல்திட்டமாக கொண்டவை என்பது நாடறிந்த ஒன்றாகும். நச்சுச் செயல்களைத் தானே செய்து விட்டு தன் எதிரியின் மேல் பழியைப் போடுவது உள்ளிட்ட கோழைத்தனமான நடவடிக்கை களில் அதற்கு பழகியும் போய்விட்டது.

காந்தியை சுட்டுக் கொல்லச் சென்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கோட்சே தான் ஒரு முஸ்லிம் என்று பிறர் எண்ணும்படியாக தன் கையில் 'இஸ்மாயில்' என்ற
முஸ்லிம் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு சென்றான். கடந்த 2006- ம் ஆண்டு மகாராட்டிரத்தில் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின் போது அங்கு முஸ்லிம்கள் சமுதாயத்தினர் அணியும் தொப்பிகளும், ஒட்டு தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டுக் கொண்டு தான் வருகின்றது.

எங்காவது குண்டு வெடிப்புச் சம்பவத்தில் விசாரணைக்காக ஒரு முஸ்லிம் அழைத்துச் செல்லப்பட்டால் எந்தத் "தீவிரவாத" அமைப்பைச் சார்ந்தவர் என
பட்டிமன்றம் போட்டு ஆராய்ந்து பரபரப்புக்காக பல்வேறு பொய்ச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்கள் அனைவரும் பயங்ரவாதிகள் என்று சித்தரித்து இழிவு செய்யும் ஊடகங்கள் அனைத்துமே சங்பரிவாரங்களின் இது போன்ற நேரடி பயங்கரவாதச் செயல்களை விளம்பரப்படுத்துவதில்லை. 'வளர்ந்து வரும் சமுதாயங்கள் குறித்த ஆய்வு மையம்" (Centre for the Study of Developing Societies -CSDS) என்ற அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில், மக்கள் தொகையில் வெறும் 7% உள்ள இந்து "மேல்" சாதியினர்தாம் இந்திய ஊடகத்துறையில் 71% இடத்தை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தது (ஆதாரம்:http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html).
மேற்படி குண்டுவெடிப்புச் சம்பவங்களும் சதித்திட்டங்களும் ஊடகத்துறையில் பெருமளவில் இடம்பெறாமலிருந்ததற்குக் காரணம் என்ன என்ற வினாவுக்கு இந்த ஆய்வின் முடிவே விடை சொல்லும்.

தென்காசி நிகழ்வு

கடந்த 2007 சனவரி மாதம் 24-ம் நாள் இரவு தென்காசி  ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும்  பேருந்து நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த தானி(ஆட்டோ) ஆகியவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம் என்றும் அவர்களை கைது செய்ய வெண்டும் என்றும் தென்காசி இந்து முன்னணி பொருளாளர் ராசேந்திரன் அறிவித்தார். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன், பா.ச.க.  கட்சியின் இல.கணேசன் உள்ளிட்டவர்கள் இது நிச்சயம் முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயல்களே என்றும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் இவ்வாறு பயங்கரவாதிகள் தலை து}க்குவதாகவும் தெரிவித்தார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்பாட்டங்களும் நடத்த இவ்வமைப்பினர் திட்டமிட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வாய்கிழிய பயங்கரவாதிகளை பற்றி பேசிய பா.ச.க.வும் இந்து முன்னணியும் வாய் மூடிக் கொண்டன.

நிகழ்வின் பின்னணி

கடந்த 2006-ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தென்காசி நகர இந்து முன்னணி அமைப்புத் தலைவர் குமார் பாண்டியன் என்பவர் முன்விரோதம் காரணமாக சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 3 முஸ்லிம்கள் கைது  செய்யப்பட்டனர். இதன் காரணமாக கலவரம் ஏற்பட்டு முஸ்லிம்களின் கடைகள் உள்ளிட்ட உடைமைகள் இந்துமத வெறியர்களால் தாக்கப்பட்டன. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். இருதரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் சிறுவன் ஒருவனைத் தவிர மற்ற அனைவர் மீதும்; வழக்குத் தொடரப்பட்டது. அனீபா, அப்துல்லா ஆகிய இருவரும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினமும் மும்முறை கையெழுத்திட வேண்டும் என்றும் கபிலன், சுரேந்திரன், செந்தில் ஆகிய மூவரும் அருகிலுள்ள உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து நீதிமன்றம் இவர்களை பிணையில் விடுவித்தது. ஒரே ஊரில் பகைமை உள்ள இருதரப்பினரையும் அருகருகே உள்ள இடங்களில் கையெழுத்திடுமாறு நீதிமன்றம் பணித்தது.

பொதுவாக இது போன்ற வழக்குகளில் இருதரப்பினரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளும் விதம் கையெழுத்து அளிக்கும் இடத்தை அனுமதிப்பதில்லை. ஆனால் நீதிமன்றம் தவறான வகையில் அனுமதித்ததன் விளைவாக முஸ்லிம்கள் கையெழுத்திட்டுவிட்டு செல்லும் பொழுது காரில் எதிரில் வந்த எதிர்த்தரப்பினர் தாக்கியதில் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜயகுமார் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "தாக்க வந்த வர்களே தாக்கப்பட்டார்கள்" எனவும், இது குமார் பாண்டியன் குடும்பத்திற்கும் அனீபாவிற்கு முள்ள தனிப்பட்ட தகராறு, மதப் பிரச்சினை அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் காவல்துறையில் சிலர் இதனை மதப்பிரச்சினை என்பது போல் சொன்னதை ஊடகங்கள் பெரிதாக பரபரப்புச் செய்திகளாக வெளியிட்டன. இந்து முன்னணி அமைப்பினரும் இதனை மதப்பிரச்சினையாக மாற்றி முஸ்லிம்கள் மீது பகைமையைப் பரப்பிக் கொண்டிருந்தன.

இந்நிலையில் தான் கடந்த சனவரி மாதம் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து
முன்னணி அமைப்பைப் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் விசாரித்த போது, குமார் பாண்டியனின் மரணத்தால் இந்துக்களிடம் எழுச்சி ஏற்படவில்லை என்றும், இது போன்ற குண்டு வெடிப்புகள் நடந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள் என்றும் அதனால் தான் குண்டு வைத்ததாகவும் கைதான அவரது அண்ணன் ரவிப்பாண்டியனே காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது போன்ற பயங்கரவாதச் செயல்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து நிகழ்த்தி வந்தாலும் கூட அதனை கண்டித்து ஊடகங்களும் அரசியல் கட்சியினரும் பேசுவதேயில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இந்து மதவெறியை து}ண்டி விட்டு செயல்படுகின்ற அமைப்பு என்பது தெரிந்திருந்தும் அதன் பயங்கரவாத செயல்கள் பலமுறை அம்பலப்பட்ட பிறகும்கூட அந்த அமைப்பின் மேல் சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் தில்லி அரசு மவுனமாயிருப்பது அது சார்ந்துள்ள இந்தியத் தேசியத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறது. பார்ப்பனியத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியத் தேசியத்தில் இது போன்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்புகள் ஒய்யாரமாகத் தான் உலாவரும். மதத்தைக் கடந்து தேசிய இன அடையாளத்தை முன்னிறுத்தி செயல்பட்டு இவ்வமைப்புகளை மக்களே தடை செய்து அதன் பயணத்தை முடித்து வைக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.