களங்கத்தைத் துடைக்க வேண்டும் - தமிழேந்தி
களங்கத்தைத் துடைக்க வேண்டும்
தமிழேந்தி
புற்றுக்குள் கருநாகப் பாம்பாய் இங்கே
புகுந்திட்ட இந்திமொழி அண்டா குண்டா
விற்றேனும் ஆங்கிலத்தில் படிக்க வைக்க
விரும்புகிற அடிமைநிலை, இவற்றை மாற்றச்
சற்றேனும் துணிவுண்டா? தமிழ கத்தைத்
தமிழ்ஆட்சி செயவைக்கும் தறுகண் உண்டா?
வெற்றுச்சொல் வாய்வீரம், மேடை யெல்லாம்
வீண்பகட்டு, எல்லாமே பொய் புரட்டு
தாவுகின்ற குரங்குகளாய்க் கன்ன டர்கள்
தறிகெட்டே ஆடுகின்றார்; நாமோ அன்றே
காவிரியின் உரிமையினை இந்திரா வுக்காய்க்
கைவிட்டோம்; வாய்க்கரிசி போட்டு விட்டோம்
சாவினையே அன்றாடம் விலையாய்க் கொள்ளும்
தமிழ்நாட்டு மீனவர்கட் கெதிராய்க் கச்சத்
தீவினையும் எப்போதோ தாரை வார்த்தோம்
தில்லிக்கு நல்லடிமை ஏவல் பார்த்தோம்
மலையாளி பார்ப்பனர்கள் இரண்டு பேரும்
வைத்ததுதான் தில்லியிலே மாறாச் சட்டம்
கொலைகார இராசபக்சே தமிழர் தம்மின்
குருதியினைக் குடிக்கின்றான் நித்தம் நித்தம்
அலைக்கழியும் தமிழீழ மக்களுக்காய்
அழுவதையும் தடுக்கிறது அரம்பச் சட்டம்
உலைத்தீயாய்க் கொதிக்கின்றார் மக்கள்; ஆனால்
உடும்பாய்நாம் பதவியிலே! வெட்கம்! வெட்கம்!
'எலும்புகளை உடைத்தாலும் ஒக்கே னக்கல்
எங்களுக்கே' எனச்சொன்ன வீரம் எங்கே?
கலகங்கள் இல்லாமல் உரிமைப் போரில்
களபலியாய்ச் சிலரேனும் மடிந்தி டாமல்
விளங்காது தமிழ்நாடு; தில்லிக் காரன்
விலங்கைநாம் ஒடிக்காமல் மீட்சி ஏது?
களங்காண வேண்டும்நாம்; வாக்கு வேட்டைக்
கட்சிகளின் களங்கத்தைக் துடைக்க வேண்டும்
Leave a Comment