ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும் பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும்

பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும

க.அருணபாரதி


ஜி-20 மாநாடு


உலகமயத்தின் பேயாட்டத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை, வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என மனித குலத்தை ஆபத்தில் தள்ளயிருக்கின்றது. முதலாளிய நாடுகள், இதனை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் முதலாளியப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரவும், தோய்ந்து போயிருக்கும் பொருளாதாரச் சுரண்டலை விரைவுபடுத்தி விரிவுபடுத்தவும் திட்டம் தீட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தான் அரங்கேறியிருக்கிறது, அண்மையில் இலண்டனில் நிகழ்ந்த பெரும் - 20 நாடுகளின் ‘ஜி-20’ கூட்டம்.

இம்மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியது, இங்கிலாந்து அரசு. வளர்ந்த முதலாளிய நாடுகளில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையை தகர்த்தெறிய ‘வளரும்’ நாடுகளின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற ‘அதிமேதாவி’த் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் மந்தநிலையின் மீட்சிக்காக, சுமார் 1.1. ட்ரில்லியன் டாலர், அதாவது 55 இலட்சம் கோடிகள் தேவை என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தொகை ஏற்கெனவே முற்றுகையில் தவிக்கும் முதலாளிய நாடுகளிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. மாறாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் மூலம் வளரும் நாடுகளிடமிருந்து பெறப்பட்டு வங்கி முதலாளிகளின் மூலம் முதலாளிய நாடுகளுக்குப் போய்ச் சேரும். முதலாளிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளுக்கு நிதி அளிப்பதுப் போல பாசாங்கு செய்து விட்டு, இவற்றை கபளீகரம் செய்து கொள்ளும். உலகமயத்தால் கொழுத்துத் திரிந்த போது ‘ஜி-8’ என்று சுருங்கிக் கிடந்த முதலாளிய நாடுகள், தன்னிலை ஆட்டம் கண்டுள்ளதால் தற்பொழுது ‘ஜி-20’ என ‘வளரும்’ நாடுகளையும் சுரண்டல் நோக்கோடு வலிந்து சேர்த்துக் கொண்டன. இந்த ‘பெருந்தன்மை’யை வியந்தபடி முதலாளிய நாடுகளுக்கு புகழாரம் சூட்டுகிறார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.


மேலும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதை ‘வளர்ந்த’ நாடுகள் ‘வளரும்’ நாடுகளுக்குக் கொடுத்த அங்கீகாரம் என்கிறார். ஆம், அங்கீகாரம் தான். ‘வளரும்’; நாடுகளை சுரண்டி அடிமைப்படுத்துவதற்கு, அந்நாடுகள் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட ‘அங்கீகாரம்’ இது. இக்கூட்டம் நிகழ்ந்த அடுத்த மாதத்தில், சீனா ஆதிக்கம் செலுத்தும் ‘hங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இந்த சுரண்டல் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கையும் விடுத்தார். முதலாளிய நாடுகளின் விருப்பம் போல் உலகப் பொருளாதாரத்தில் ‘டாலர்’ ஆதிக்கம் செலுத்தவதை முறியடிக்க சீனா, ஜி-20 மாநாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதைப் பற்றி கடைசிவரை மன்மோகன் சிங் எதுவும் சொல்லாமல் தவிh;த்து, அமெரிக்க விசுவாசம் பேணிணார்.


காங்கிரசு அரசின், இது போன்ற அமெரிக்க விசுவாச நடவடிக்கைகளுக்கும், தீவிர உலகமய ஆதரவுப் போக்கிற்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வெற்றி என்று யாரேனும் கருதுவார்களானால், அது உண்மை அல்ல. அதிகரித்துக் கொண்டிருக்கும் விலைவாசி, வேலையிழப்புகள், எதிர்காலம் குறித்த உத்திரவாதமின்மை என மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் உலகமயத்தை, தீவிரமாக அமல்படுத்தும் இது போன்றக் கட்சிகளை மக்கள் மன்றத்தில் சரியான முறையில் அம்பலப்படுத்தி தோலுரிக்காமல் விட்டதே, இக்கட்சிகளின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

யஷ்பால் பள்ளிக்கல்விச் சீர்த்திருத்தப் பரிந்துரைகள்

மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்று வருகின்றது உலகமயம். கல்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகமயத்தின் வரவால் கல்வி ஏற்கெனவே முழுமையாக வணிகமயமாகிவிட்ட நிலையில், தற்பொழுது ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அக்கல்வி மேலும் சீரழிகின்றது.


பள்ளிக் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பேராசிரியர் யஷ்பால் தலைமையிலானக் குழுவினரின் அறிக்கை 24.6.09 அன்று இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலிடம் வழங்கப்பட்டது. கல்வி வணிகமயமாவதையும், நிகர்நிலைக் பல்கலைக்கழகங்கள் கல்வியை விலை பேசுவதையும் இவ்வறிக்கை சில இடங்களில் சாடுகின்றது. இது போக, அவ்வறிக்கையில் மத்திய அரசிற்கு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இரத்து செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு அகில இந்தியாவிற்குமான ஒரு புதிய கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தான் இப்பரிந்துரைகளில் முதன்மையானவை.

இவ்வறிக்கையை பெற்ற பின்னர், 25.06.09 அன்று புதுதில்லியில் அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்வுகளால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அகில இந்தியா முழுவதுக்குமான ஒரே பள்ளிக் கல்வி வாரியத்தை ஏற்படுத்தவும், வெளிநாட்டுக்குச் சென்று பயிலும் இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கே அழைத்து வரவும் நடுவண் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 23.06.09 அன்று ‘தி டெலிகிராப்’ ஏட்டிற்கு அளித்த பேட்டி ஒன்றில், நடுவண் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஆசிரியர் பணிநியமனத்தின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படத் தேவையில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் நகைப்புக்குரியதாகும். ஆசிரியர் பணி நியமனத்திக்கு போதிய அளவிற்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் கிடைக்க வில்லை என்பதாகும். ‘சமூகநீதி’ வேடமிட்டு மறைந்திருக்கும் காங்கிரஸ் கபடதாரிகள் இப்படித்தான் அவ்வப்போது அம்பலப் படுகின்றனர்.


நடுவண் அரசிற்கு சொந்தமான உயர்கல்வி நிலையங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் மட்டுமல்லாது, தனியார் கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அவரைக் கேட்டால், இது குறித்து ‘தேசிய’ அளவில் பொதுக் கருத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.

மாணவர்களின் நலன் கருதியே பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து செய்யப்படுகின்றது என்று தோன்றினாலும், இதற்குள் பல்வேறு சூட்சமங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

இந்தியாவில், பள்ளிக் கல்வியுடன் கல்வியை முடித்துக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 1990- 1991 ஆம் கல்வியாண்டில், 42.6% விழுக்காடாக இருந்தது. இவ்வெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு அரசுகளாலும் பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையிலும் கூட 2004 ஆம் ஆண்டு வெறும் 40.67% விழுக்காடாகவே குறைந்தது. (பார்கக்க் : தி டைமஸ் ஆப் இந்தியா, 19, சனவரி 2004). இது தற்பொழுது சுமார் 39% விழுக்காடாக உள்ளது. மேலும், பள்ளிக்கல்வி பெறும் மாணவர்களில் வெறும் 11% விழுக்காட்டினரே கல்லூரி வரை சென்று படிக்கின்றனர் என்பதும் கூடுதல் தகவலாகும் (பார்க்க : டெக்கான் க்ரானிக்கல், சூன் 27, 2009.) இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரே என்பதை இன்றைய சூழ்நிலையில் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.


இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து என்பது இவர்களை பள்ளிக் கல்வியை விட்டே ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் அமையும். மேலும், பொதுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு ஆசிரியர்களிடம் மாணவர்கள் மதீப்பீட்டிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது ஆசிரியரின் விருப்பு வெறுப்பு மதீப்பீடாக அமையவே வாய்ப்புள்ளன. மேலும், ஆசிரியர் மாணவர் உறவில் இது விரிசலையும் உண்டாக்கும். எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பிடுதலும், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியான முறையில் மதிப்பீடுதலும் கூடிய மாற்றுத் தேர்வு முறை அவசியமாகின்றது. எனவே, பொதுத் தேர்வு இரத்து என்பது எதற்கும் தீர்வல்ல.

இன்றைய சூழ்நிலையில் மனஅழுத்தங்களுக்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தலைமை தாங்கும் உலகமயத்தை விரட்டுவதை விட்டுவிட்டு, மாணவர்களின் கல்வியில் கைவைப்பது முரணாக உள்ளது.

மாநிலக் கல்வி வாரியங்களைக் கலைத்து விட்டு, அகில இந்தியாவிற்குமான பொது பள்ளிக் கல்வி வாரியம் ஏற்படுத்துவதென்பது, இந்தியாவில் தேசிய இனங்களுக்கு எஞ்சியிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் ஒடுக்குமுறைத் திட்டமாகும். மேலும், இந்தித் திணிப்பிற்கும் இது வழிவகுக்கும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள், அதன் மாநிலக் கல்வி வாரியங்களைக் கொண்டு அந்தந்த இனத்து மக்களின், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை ஓரளவாவது தெரிந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும் இது சிதைத்து விடும். இதைத் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் விரும்புகிறது. எதிர்க்கட்சி என்பதால் தான் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல பாசாங்கு செய்கிறது, பாh;ப்பனீய பா.ச.க. ஒரு வேளை, பா.ச.க. ஆட்சியிலிருந்தால், இதே போன்ற திட்டத்தை அமல்படுத்தி ‘அகண்ட பாரத’க் கனவுகளை மாணவர்களுக்கு அள்ளி விட்டிருப்பார்கள்.


சொந்தநாட்டு மக்களின் உழைப்பையும் உடைமைகளையும் அயலானுக்குத் திறந்து விட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது கல்வியிலும் அதனை செய்யத் துடிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புகுந்து வணிகம் செய்திட அவற்றை அனுமதிக்கக் கோரும் ‘வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குமுறை மசோதா’வை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறார், கபில் சிபில்.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டு மாணவர்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்களைத் தவிர்க்கவே இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கத் தேவை எழுந்துள்ளது என்றும் வாதிடுகின்றார், கபில் சிபில். அமெரிக்கா உள்ளிட்ட ‘வளர்ந்த’ நாடுகள் பெரும்பாலானவற்றில் உயர் கல்வி அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றவை என்பதும் தனியார் பல்கலைக்கழகங்கள் அங்கு குறைவு என்பதும் மத்திய அமைச்சர் கபில் சிபில் அறியாததல்ல. இருந்த போதும், அது குறித்து அலட்டிக் கொள்ளாத கபில் சிபில், கல்வியில் தனியார் நிறுவனங்கள் போடும் ஆட்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.


தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் ‘நன்கொடை’ என்ற பெயரில் நடத்தி வரும் வசூல் வேட்டையை, பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், கண்துடைப்புக்காக சில கல்லூரிகளில் சோதனை நடத்திவிட்டு பிரச்சினை, தீர்ந்ததென்று செயல்படுகின்றது தமிழக அரசு. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வித் துறையை கூறுபோடுவதற்கு தில்லி ஏகாதிபத்தியம் திட்டமிட்டுக் கொண்டிருக்க, ‘மாநில சுயாட்சி’ பேசும் தமிழக அரசோ, கண்மூடிக் கொண்டிருக்கிறது.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.