ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கட்டாயக் கொடியேற்றத் தீர்ப்பு சட்டப்படி சரியா? - பெ.மணியரசன்

கட்டாயக் கொடியேற்றத் தீர்ப்பு சட்டப்படி சரியா? பெ. மணியரசன்.


சென்னை உயர்நீதி மன்றம் மாறுபட்ட பிணை ஆணை வழங்கி, சனநாயகத் திரையில் கிழிசலை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டை வழியே உள்ளே இருக்கும் விகாரங்கள் தெரிகின்றன. இந்திய அரசுக் கொடி எரிப்பு வழக்கில் இவ்வாறு மாறுபட்ட பிணை ஆணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஆர். இரகுபதி வழங்கியுள்ளார். அவ்வாணை பின்வருமாறு கூறுகிறது.

விலைமதிப்பற்ற தேசியச் சின்னத்தின் மதிப்பை அவர்கள் உணரவேண்டடும்.. அதன் புனிதத் தன்iமையை அவர்கள் உயர்த்த்திப் பிடிக்கவேண்டும் என்பதற்காகக் கீழ்வரும் நிபந்தனை விதிக்கிறேன்.“ எட்டுப் பேரும் தங்கள் வீட்டு முன்பு கொடிக்கம்பத்தை நட்டு, ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அத்துடன் அனாதை இல்ல்லத்த்திற்குகுச் சென்று ஒரு வாரத்திற்கு நாள்தோறும் மூன்று மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளும் 25.4.2009 அன்று இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டத்தை நடத்தின. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு கொடிய போர்க்கருவிகளையும் கோடிகோடியாய் பணத்தையும் கொட்டிக் கொடுக்கிறது இந்திய அரசு, எங்கள் இனத்தை அழிக்கும் போரை இந்தியா இயக்குவதைக் கண்டிக்கும் வகையில் ஒரு சனநாயகப் போராட்டமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, ஓசூர் போன்ற இடங்களில் இப்போராட்டங்களில் ஈடுபட்ட தோழர்களைத் தளைப்படுத்தி அன்று மாலையே விடுவித்து விட்டனர். தஞ்சை, ஈரோடு ஆகிய இடங்களில்தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பின்னர் அன்றாடம் காவல் நிலையத்தில் கையொப்பமிடும் நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தஞ்சையில் நமக்காக வழக்குரைஞர் கருணாநிதி வாதாடினார். ஈரோட்டில் வழக்குரைஞர் ப.பா. மோகன் வாதாடினார்.ஆனால் கோவையில் மட்டும், குற்றவியல் நடுவர் மன்றம் மாவட்ட நீதிமன்றம் ஆகியவை பிணை வழங்க மறுத்தன. அங்கு வழக்கறிஞர் காந்தி நமக்காக வாதாடினார்.

பின்னர் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி நமக்காக வாதாடினார். ”ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல் சென்னை உயர்நீதிமன்றம் 9.6.2009 அன்று மேற்படி நிபந்தனை விதித்து பிணை வழங்கியது.

இந்த வழக்கில் எட்டுத் தோழர்கள் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1. தோழர் பா. தமிழரசன்(த.தே.பொ.க) 2) தோழர்.வி. பாரதி (த.தே.வி.இ), 3) தோழர் பா. சங்கரவடிவேலு(த.தே.பொ.க), 4) தோழர் க. தேவேந்திரன் ( த.தே.வி.இ), 5) தோழர் பி. தனபால் ( த.தே.பொ.க), 6) தோழர் குணசேகரன் (த.தே.வி.இ), 7) தோழர். வி. திருவள்ளுவன்- ஆதரவாளர், 8) தோழர் ஜி.சீனிவாசன் - இன உணர்வாளர்.மேலே விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நடப்பில் உள்ள சட்டநெறிகளுக்குப் புறம்பானவை.

நீதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆகும். பிணையில்லா (Non-Bailable) குற்றப் பிரிவுகளில் சிறைப்பட்டோர்க்குப் பிணை வழங்குவது நீதிபதியின் விருப்பத் தேர்வாகும் (Discretion).பிணை மறுப்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. சாதாரணக் குற்றங்களில் அறுபது நாட்களுக்குள் காவல்துறை குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனில். எந்த நிபந்தனையுமின்றி சிறையில் உள்ள வரைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பிணையில விடுவித்து விடவேண்டும். கொலைவழக்கில் இந்தக் காலக்கெடு 90 நாட்கள். இந்தக் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள், பிணையில பிணையில்லாப் பிரிவுகளில் சிறைப்பட்டோர்க்குப் பிணை வழங்குவது நீதிபதியின் விருப்பத்தேர்வாகும். பிணை வழங்கலாம், பிணை வழங்க மறுக்கலாம்.

பிணைவழங்குவதற்கு சட்ட நெறிமுறைகள் இருக்கின்றன. இந்தியக் குற்றவியல்நடைமுறைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்மீது விசாரணை நடந்து, குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான். இந்த நிரபராதியை ஐயத்தின் பேரிலேயே நீதித்துறை தனது காவலில் வைத்துள்ளது. சிறைக்காவல் என்பது சட்டப்படி நீதித்துறைக் காவல்தான். நீதித்துறைக்கு உதவுவதற்காகவே அரசு, சிறைகளைப் பராமரிக்கிறது. கற்றறிந்த நீதிபதி இரகுபதி அவர்கள் மேற்கண்ட சட்டநெறிகளை, நாம் விவாதிக்கும் வழக்கில் கடைபிடிக்கவில்லை.

பிணை வழங்கும் கட்டத்திலேயே, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாக அவர் முடிவுக்கு வந்து விட்டார். அதவாது காவல்துறை குற்ற அறிக்கை (Charge sheet) அணியப்படுத்தும் முன், அவ்வறிக்கை அடிப்படையில், நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் முன் காவல்நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையை (FIR) மட்டும் சார்ந்து நின்று பிணை நிபந்தனை என்ற பெயரில் தண்டனை வழங்கியுள்ளார். எந்தக் கொடியை எரித்தார் என்று குற்றச்சாட்டு உள்ளதோ அந்தக் கொடியைத் தன் வீட்டு முன் ஒருவாரம் ஏற்ற வேண்டும் என்பதும் அனாதை இல்லத்தில் ஒருவாரத்திற்கு நாள் தோறும் மூன்று மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்பதும், குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாக முடிவு செய்து கொண்டு, அதற்கான பரிகாரமாக வழங்கப்பட்ட தண்டனை ஆகும்.இவ்வாறு பிணை நிபந்தனையில் தண்டணை வழங்க இந்திய நீதிமுறையில் நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. இரண்டாவதாக பிணையில் விடுதலை செய்யும் போது விதிக்கப்படும் நிபந்தனைகள், வழக்கு விசாரணைக்கு உதவி செய்வதற்குத் தானே அன்றி, குற்றச்சாட்டின் தன்மைக்கேற்ப தண்டனை வழங்குவதற்கு அல்ல. குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில், வெளியே வந்து சாட்சிகளைக் கலைப்பார் என்றோ, விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டார் என்றோ தலைமறைவாகிவிடுவார் என்றோ ஐயங்கள் ஏற்பட்டால் அதற்கேற்றவாறு நிபந்தனைகள் விதிக்கலாம் அல்லது பிணை மறுக்கலாம்.

இந்த வகையில்தான் வெளியூரிலோ அல்லது சொந்த ஊரிலோ, காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்தில் ஒருநாளைக்கு இருமுறை அல்லது ஒருமுறை கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனைவிதிப்பார்கள். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கையொப்பமிடவேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பார்கள். கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கச் சொல்வார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று வரப்போகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அவர் மேசையில் அது வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏழு ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை உள்ள குற்றங்களில், தளைப்படுத்தப்படுவோரை காவல்நிலையத்திலேயே பிணையில் விட்டுவிடலாம்.அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்க வேண்டியதில்லை என்பதே அத்திருத்தம்.கொடியெரிப்புக் குற்றத்திற்கு அதிக அளவு தண்டனையே மூன்றாண்டுகள்தான்.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் போதும். ஆனால் எரிக்கப்போன கொடியை “ஏற்று’’ என்று நிபந்தனை விதிப்பது, கண்ணைக் குத்தியவன் கண்ணைக் குத்து என்ற கட்டளையிடும் அநாகரீகக் காலத் தண்டனையாகும். நாகரிகக்கால குற்றவியல் நீதிமுறைக்கு (Criminal Justic system) எதிரான தீhப்பாகும் இது. மங்கைதீட்டானால் கங்கையில் குளிக்கலாம். கங்கையே தீட்டானால் எங்கு குளிப்பது என்பது போன்றதுதான்.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்கும் போது காவல்துறை காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது. நீதிமன்றமே அப்படி நடந்து கொண்டால் அதை என்ன வென்று சொல்வது?நீதிமன்றம் வழங்கிய இந்த அநாகரிகத் தண்டணை, வெறும் “நிபந்தனை’’ என்று மூடி மறைப்பது, புண்ணை மறைக்கப பட்டுத்துணியால் அதைப் போர்த்தும் உத்தியாகும்.

நீதிபதி இரகுபதி அவர்களின் தேசபக்தியை நாம் குறை சொல்லவில்லை. அவர் மிகை உற்சாகத்தில், சட்டநெறிகளுக்குப் புறம்பாக செயல்படக்கூடாதல்லவா!இந்திய அரசுக் கொடியை அவமதித்தால் அதிக அளவு மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கலாம். அதே கொடியைத் திரும்ப ஏற்ற வேண்டும் என்ற தண்டனை அந்தச் சட்டத்தில் (The prevention of Insults to national Honour Act-1971, Section 2) கிடையாது. மேற்படிச் சட்டம் கொடியை அவமதிக்கக்கூடாது என்கிறதே தவிர,கொடியை மதித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

கற்றறிந்த நீதிபதி இரகுபதி அவர்கள் சட்டத்தின் இந்த உண்மை நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. தேசபக்தியின் மிகை உற்சாகம் சட்ட உண்மைகளைப் பார்க்கவிடாமல் அவர் கண்களை மறைத்துவிட்டது.இந்திய அரசுக் கொடியை ஏற்றும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்துவதற்கு எந்தச் சட்டமும் இல்லை. இப்படிக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும். தேசியச்சின்ன அவமதிப்புத் தடைச்சட்டத்திற்கும் எதிரானதாகும். ஏற்கெனவே இதுகுறித்து உச்சநீதிமன்றத்தீர்ப்பொன்று உள்ளது. அது ஜனகனமனப் பாடலைப்பாட மறுத்த கேரள மாணவிகளைப் பள்ளியைவிட்டு நீக்கியது தொடர்பான வழக்காகும்.

பிஜோ இம்மானுவேலும் மற்றவர்களும் எதிர் கேரள அரசும் மற்றவர்களும் - 1986 என்பது அவ்வழக்கு.கிறித்துவமதத்தில் ஜெஹோவா விட்னஸ் என்றொரு பிரிவு இருக்கிறது. அப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இறைவனை அன்றி வேறு யாரையும் புகழ்ந்து பாடமாட்டார்கள். ஆகவே, பள்ளியில் ஜனகணமனப் பாடப்படும்போது அப்பிரிவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் பிஜோ, பிந்துமோல், பிந்து இம்மானுவேல் ஆகியோர் பாடாமல், நிற்பார்கள். இதற்காக, தேசியச் சின்னத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி அம்மூன்று சிறுமிகளையும் பள்ளியைவிட்டு நீக்கி விட்டார்கள்.

கேரள உயர்நீதிமன்றம் 1971-தேசிய சின்ன அவமதிப்பு தடைச் சட்டப்படி அம்மாணவிகளைப் பள்ளியை விட்டு நீக்கியது சரி என்று தீர்ப்பளித்தது.உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு வந்தது. நல்ல வாய்பப்பாக நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி அமர்வு மன்றத்தில் அவ்வழக்கு ஆய்வு செய்யப்பட்டது. இன்னொரு நீதிபதி எம்.எம்.தத். சின்னப்பரெட்டி அமர்வுமன்றம், கேளர உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கி, அம்மாணவிகளைப் பள்ளியில் சேர்க்குமாறு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் கூறப்பட்ட காரணங்கள் நம் கட்டாயக் கொடியேற்றத் தீர்ப்புடன் முரண்படுகின்றன.

“ஒருவரைக் கட்டாயப்படுத்தி தேசிய கீதத்தைப் பாடவைக்க எந்த சட்டப்பிரிவும் இல்லை... தேசிய கீதத்தைப் பாட மறுப்பது தேசியச் சின்ன அவமதிப்புத் தடைச்சட்டம் விதி மூன்றை மீறய செலாகாது. “மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு, மனச்சான்று மறுக்கும்போது அதன்படி தேசிய கீதத்தைப் பாடமறுப்பது அரசமைப்புச் சட்ட விதி 51யு(ய) விதிக்கும் குடிமக்கள் கடமையைச் செய்யத் தவறிய குற்றமாகாது. “(கேரள) உயர்நீதிமன்றம் தன்னைத்தானே தவறாக வழிநடத்திக் கொண்டு விட்டது என்று நாங்கள் அஞ்சுகிறோம், முற்றிலும் மாறுபட்ட திசையில் அது சென்று விட்டது” – 1986, SCC Vol3, Page 615-632.அரசமைப்புச்சட்ட விதி 51-யு(ய) பின்வருமாறு குடிமக்கள் கடமையை வரையறுக்கிறது.51-யு(ய) ஒவ்வொரு குடிமகனுக்குமுரிய கடமையாக இது இருக்கிறது. (ய) அரசமைப்புச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அதன் உயர்நோக்கங்களை மதிக்க வேண்டும்.

அதன் கீழ் அமைந்த நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். நீதிபதி சின்னப்பரெட்டி வழங்கிய மேற்படித்தீர்ப்பில், மாணவிகள் தேசிய கீதம் பாடாதது விதி 51யு(ய) - இன்படி குற்றமாகாது என்று கூறியுள்ளார். அதாவது தேசிய கீதத்தைப் பாடும்படி கட்டாயப்படுத்த சட்டம் எதுவுமில்லை என்கிறார்.

அதேபோல் “தேசியக்கொடியை“ ஏற்றும்படி கட்டாயப்படுத்தவும் சட்டம் எதுவும் கிடையாது என்பது நமது நிலைப்பாடு.நீதிபதி இரகுபதி அவர்கள் தமது தேசபக்தி மிகை உற்சாகத்தின் காரணமாக, “தேசியக்கொடியை” ஏற்றும்படி, சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டாயப்படுத்தி உள்ளார். அவருடைய மிகை உற்சாகம் அத்துடன் நிற்கவில்லை.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இவ்வழக்கின்போது பொருத்தமில்லாது புகழ்ந்து தள்ளினார்.அவருடைய 9.6.2009 நிபந்தனை ஆணையை மறு ஆய்வு செய்யுமாறு சிறையில் உள்ள தோழர்கள் தமிழரசன், பாரதி, சங்கரவடிவேலு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மறு ஆய்வு மனு விசாரணையின் போது, 23.6.2009 அன்று நீதிபதி இரகுபதி கருணாநிதியை விதந்து பாராட்டினார்.இந்திய அரசுக் கொடியை ஏற்றும் உரிமை முதலமைச்சர்களுக்கு இல்லாமல் இருந்தது, இப்போதைய தமிழக முதலமைச்சர் தான் போராடி அவ்வுரிமையைப் பெற்றார் என்றார். கருணாநிதியின் கொடிப் போராட்ட வரலாறு கற்றறிந்த நீதிபதிக்குத் தெரியவில்லை போலும்.

1970களின் தொடக்கத்தில், மாநில சுயாட்சி மாநாடு நடத்தி, இந்திய தேசியக் கொடிக்கு மாற்றாக, தமிழக அரசு அலுவல்களில் ஏற்ற ஒரு புதிய தமிழ்த் தேசியக் கொடியை அம்மாநாட்டில் ஏற்றி அறிமுகப்படுத்தினார். அதே கருணாநிதிதான், தாம்கோரிய தமிழ்த்தேசியக் கொடிக்கு உரிமை பெறப்போராடமல், குட்டிக்கரணம் அடித்து இந்திய தேசியக் கொடியை விடுதலை நாளில் ஏற்றுவதைப் பெரும் பேறாகக் கருதி அவ்வுரிமை கோரினார்.தமிழ்த் தேசியக்கொடி கோரியவர் பாரதமாதா பஜனை பாட முன்வந்ததைக் கண்டதும் தில்லி ஆட்சியாளர்கள் பூரித்து, பாதை திரும்பிய வளர்ப்பு மகனாக கருணாநிதியை ஏற்று, தங்கள் கொடியை அவர் கையில் கொடுத்தனர்.

கருணாநிதியின் இன்னொரு வரலாறும் கற்றறிந்த நீதிபதிகுத் தெரிந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். இந்தித் திணிப்பை எதிர்த்து 1986 அல்லது அதை ஒட்டி இந்திய அரசமைப்புச் சட்ட விதி 343-ஐக் கொளுத்தினார் கருணாநிதி. அவர் மட்டுமல்ல.

தி.மு.கவினர் பலரும் கொளுத்தினர். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக, அரசமைப்புச் சட்ட எரிப்புக்காக அவர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார். ஆனால் அந்த வழக்கில் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.கற்றறிந்த நீதிபதி இரகுபதியைப் போல், கருணாநிதி முன்னுக்குப்பின் முரணில்லாத தேசபக்தர் அல்லர் என்பதற்காக இவற்றைச் சுட்டிக் காட்டினோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தவர் தாம் இன்று நீதிபதி மெச்சும் முதலமைச்சராக உள்ளார்.

ஈழத்தில் தமிழ் இனத்தை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க ஆயுதம் கொடுத்த இந்திய அரசைக் கண்டிப்பதற்காக அடையாளப்பூர்வமாக அரசுக்கொடி எரிப்புப் போராட்டம் நடத்தினால் அது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் அதே நீதிபதி. ஆளுக்கொரு நீதியா?இந்திய அரசுக்கொடி பொறித்த பீரங்கிகளும் டேங்குகளும் எங்கள் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கும்போது நாங்கள் அந்தக் கொடியை வணங்க வேண்டுமா? ஈழ இனப்படுகொலை எங்கள் பிள்ளைகளின் நெஞ்சில் மாறா வடுவாக இருக்கிறது.

ஒவ்வொரு காலையிலும் கல்விக்கூடங்களில் இக்கொடி ஏற்றப்படும் போது எங்கள் பிள்ளைகளுக்கு, அக்கொடியில் ஈழக்குழந்தைகள் அலறும் ஒலிகேட்கும். ஈழத்தமிழர்களின் குருதியும் சதையும் அந்தக் கொடியில் வழிவது அவர்கள் மனக்கண்ணில் தோனறும்.
கொடி எரிப்புப் போராட்டத்தில் சிறைப்பட்ட தோழர்களே, தமிழ் இனத்தின் உயிர்காக்கப் போராடியிருக்கிறீர்கள், உங்களை வரலாறு வாழ்த்தும், வருங்காலத் தலைமுறை போற்றும். உங்கள் விடுதலைக்காக சட்ட வழிகளிலும் சனநாயக வழிகளிலும் போராடுவோம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.