ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்தியா திவாலாகிறது ‍- நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி - கி.வெங்கட்ராமன்


(கோவை பி.எஸ்.ஜி. கலை - அறிவியல் கல்லூரி பொருளியல் துறை மாணவர்களிடையே 9.7.09 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெ. ஆற்றிய உரையைத் தழுவியது இக்கட்டு்ரை. இந்நிகழ்ச்சிக்கு அக்க்கல்லூரியின் பொருளியல் துறை தலைவர் முனைவர் செல்வ்வராஜ் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்).

ஆகாற ளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை

என்றார் ஆசான் திருவள்ளுவர். வருவாய் குறைவாக இருப்பது தாழ்வில்லை. அதைவிட செலவு குறைவாக இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்பதே இதன் சாரம். ஆனால் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 06.07.2009 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள வரவு- செலவுத் திட்டம் (பட்ஜெட்) சென்ற நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் திட்டம்போலவே எதிர்காலத்தை எரித்து நிகழ்காலத்தைத் தக்க வைக்கும் முயற்சியாகும். மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி (inclusive growth) என்ற அவரது முன்னுரைக்கு முரணாக அவரது வரவு - செலவுத் திட்டம் உள்ளது.

வழக்கமாக பிப்ரவரி இறுதி வேலைநாளில் வரவுசெலவுத் திட்டம் முன் வைக்கப்படும். ஆனால் தேர்தல் காரணமாக தாமதமாக 2009 -2010-க்கான வரவு செலவு சூலை 6 அன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று காலகட்டங்களாக வரவு- செலவு திட்டத்தின் தன்மையை வகைப்படுத்தி பேரா. செல்வராஜ் இங்கே பேசினார். முதல்கட்டம் 1951 முதல் 1977 வரை. தற்சார்பை வலுப்படுத்தும் வகையில் பொதுத்துறையை நோக்கிய திட்டமிடலுக்கு வரவு செலவுத் திட்டம் துணை செய்தது. இரண்டாவது காலகட்டம் 1977 முதல் 1990 வரை. இதில் தனியார்மயம் வேகம் பெறத் தொடங்கியது. 1991-க்குப் பிறகான தாராளமயம்- தனியார்மயம் - உலகமயம் (LPG) காலகட்டம். இதில் நிதிநிலையறிக்கையில் வெளியார் நலன் பேணப்படுவது முதன்மைப் போக்கானது என்று பேரா. செல்வராஜ் குறிப்பிட்டது பொதுவில் சரியான ஆய்வுதான்.

உலகமயப் பொருளியல் 1991-ல் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகமானது. அறிமுகமானபோது நாட்டில் ஏடுகளும், பல்கலைக்கழகங்களும் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் கொடிய விளைவுகளைப் பலர் உணர்ந்தனர்.

இதன் காரணமாக ‘வளர்ச்சி’ (Growth) என்றால் என்ன என்னும் விவாதம் எழுந்தது. ஒரு சிலர் பயன்பெறும் செங்குத்துப் பெருக்கம் (Vertical Development) வளர்ச்சி ஆகாது் மாறாக அனைவரும் பயன்பெறும் கிடைநிலை வளர்ச்சிதான் (Horizontal Development) தேவையான வளர்ச்சிமுறை என்ற கருத்து வலுப்பெற்றது. நீடித்த வளர்ச்சி (Sustainable Development), மக்களை இணைத்துக் கொண்ட வளர்ச்சி (Inclusive Growth) என்பது ஏற்கப்பட்டது.

பல்வேறு மொழி இனங்களும், மதங்களும், சாதிகளும் அரசியல் சக்திகளாக வலுப்பெற்றுள்ள இந்தியாவில், தேர்தல் சனநாயகத்தின் காரணமாக ‘மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி’ என்ற வாதத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதைத்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் அவர் முன் வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம் அதற்கு நேர்மாறாக உள்ளது. அதுமட்டுமின்றி, தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் உள்ளது.

மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி என்பதில் இடம் பெற வேண்டியவை யாவை? தொழில் - வேளாண்மை உற்பத்திப் பெருக்கம், வேலைவாய்ப்புப் பெருக்கம், விலைவாசி நிலைநிறுத்தம், பல்வேறு மாநிலங்களுக்கிடையே நியாயமான வருமானப் பகிர்வு போன்றவை அதில் முக்கியமானவை. இவை எதுவும் பிரணாப் பட்ஜெட்டில் இல்லை.

இந்த வரவு - செலவுத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை இந்திய அரசு உயர்த்தியது. இந்த எரி எண்ணெய் விலையில் 58 விழுக்காடு வரி இனங்களால் வருவதாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை இந்த உயர்வுக்குப்பிறகு லிட்டருக்கு ரூ.49.13 என்றால் இதில் ரூ.28.51 என்பது உற்பத்திவரி, சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, விற்பனைவரி முதலான வரி இனங்களால் வருவதாகும். இவ்வாறு எரி எண்ணெய் மீதுள்ள வரிமூலம் தில்லி அரசு இந்த நிதியாண்டில் 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிற எல்லா பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பது வெளிப்படை. அரசின் கணக்கீட்டு முறையில் உள்ள குளறுபடி காரணமாக பணவீக்கம் - விலையேற்றம் குறித்த உண்மை நிலவரமே தெளிவுப்படுத்தப்படுவதில்லை. பட்ஜெட் உரையில் பிரணாப் முகர்ஜி பணவீக்கம் சுழியத்துக்கும் குறைந்து எதிர் நிலையில் (Negative Inflation) இருப்பதாகக் கூறுகிறார். மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் (Negative Inflation) கணக்கிடப்படும். பணவீக்க விகிதம் இது.உண்மையில் நுகர்வோர்விலைக்குறியீட்டு எண். உயர்வு (Wholsale Price Index) 10 விழுக்காட்டைத் தாண்டி செல்கிறது. இதுதான் மக்கள் சந்திக்கிற விலைவாசிக்கு நெருக்கமானது. இன்றியமையாப் பொருள்களின் விலை தாறுமாறாக இருக்கிறது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இதன்படி வறுமைக்கோட்டிற்குக் கீ்ழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி கிலோ 3 ரூபாய் விலையில் வழங்கப்படும். இங்கு வறுமைக்கோடு என்ற வரையறை முக்கியமானது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஒருவர் நாள் வருமானம் ரூ.11.80 க்கு கீழ் பெற்றால் அவர் வறுமையில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறார். இந்த ரூ.11.80 என்ற வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டால் அவர் சலுகை பெறத் தகுதியில்லை. அதேபோல் நகர்ப்புற வறுமைக் கோடு என்பது ரூ.17.80 ஆகும். அதாவது கிராமப்புறத்தில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ரூ.1417 மாத வருமானம் பெற்றாலோ, நகர்ப்புறத்தில் 4 பேர் உள்ள குடும்பம் ரூ.2137 மாத வருமானம் பெற்றாலோ இந்த மூன்று ரூபாய் அரிசி வாங்க முடியாது. பிச்சைக்கார நிலைக்கும் கீழான நிலைமையைத்தான் மன்மோகன்சிங் அரசு வறுமை என்பதாக ஏற்றுக்கொள்கிறது.

இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழ்நாட்டுக்குப் பெரிய நன்மை ஏதுமில்லை. ஏனெனில் இங்கு ஏற்கெனவே ‘ஒரு ரூபாய் அரிசித்திட்டம்’ செயலில் உள்ளது. அதுவும் ரேசன் அட்டை உள்ள அனைவருக்கும் இதைப் பெறத் தகுதி உள்ளது. மறுபக்கம் பார்த்தால் இந்த ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்கள் வேளாண்மையை நசுக்கி விடும் தன்மையன. ஏனெனில், ஏற்கெனவே பொருளியல் ஆய்வறிக்கையும் சரி, பிரணாப் முகர்ஜியின் வரவு - செலவுத் திட்ட உரையும் சரி வேளாண் மானியத்தை வெட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. உணவு மானியத்தைக் கட்டுக்குள் வைக்கக் கோருகின்றன. இந்த நிலையில் ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்களால் நெல்லுக்கு உரிய இலாபவிலை கிடைக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இது உழவர்களை இக்கட்டில் வைத்துவிடும்.

இன்னொரு புறம் உரமானியத்தை நேரடியாக உழவர்களுக்கே வழங்குவது என்ற திட்டத்தை இந்த பட்ஜெட் அறிவிக்கிறது. மாலைபோட்டு கழுத்தறுக்கும் சூழ்ச்சி இதில் உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக உழவர்கள் இந்த முறையைச் சந்தித்திருக்கிறார்கள். உழவர்கள் மின் கட்டணம் செலுத்தவேண்டும். அந்த தொகையை உழவர்களுக்கு அரசு நேரடியாகத் தந்துவிடும். தொடக்கத்தில் என்னக் கட்டணம் உண்டோ அது அப்படியே கிடைக்கும். பிறகு மின்கட்டணம் உயரும்போது பழைய தொகையே வரும் அபாயம் - அதன்வழி இலவச மின்சாரத்தைக் கைவிடும் அபாயம் அதில் இருந்தது. உழவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.
அதுபோல் உரமானியத்தை நேரடியாகத் தருவது எனத் தொடங்கி, உரவிலை உயர்வு ஏற்படும்போது அதற்கு ஈடாக மானியத்தொகை வழங்கப்படாமல் விழிபிதுங்கும் நிலை ஏற்படும். உரவிலையின் மீதுள்ள அரசின் கட்டுப்பாடு நீக்கப்படும் என்று இதே பட்ஜெட் குறிப்பிடுவது, இந்த ஆபத்தை உறுதிப்படுத்துகிறது.

வேளாண் கடன் சென்ற ஆண்டு இருந்த 2 இலட்சத்து 87 ஆயிரம் கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் 3 இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவித்தவுடனேயே இது ‘உழவர்களுக்கு நட்பான வரவு - செலவு அறிக்கை’ என ஏடுகள் பலவும் பாராட்டின. உண்மையில் இது ஒரு மோசடியான அறிவிப்பு. ஏனெனில் 3.25 இலட்சம் கோடி ரூபாய் அல்ல, ஒரு ரூபாய்கூட இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது அரசுடைமை வங்கிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டலே தவிர, அரசின் வரவு - செலவுத் திட்டத்திற்கும் அதற்கும் நேரடித்தொடர்பு ஏதுமில்லை.

இன்னொன்று, ஏற்கெனவே "வேளாண்மை" என்பதற்குள் வேளாண் சார் தொழில்கள் பலவும் சேர்க்கப்பட்டுவிட்டன. எனவே வேளாண் கடன் என்ற வகைப்பாட்டில் வறுவல், மிளகாய்த்தூள், ஜாம் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டுத்தொழிலகங்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் கடன் பெற்றுச் சென்றுவிடுகின்றன. உழவர்களுக்குக் கடன் வழங்க அரசு வங்கிகள் பெருமளவு தயக்கம் காட்டுகின்றன என்பதே உண்மை நிலை. பிரணாப்பின் அறிவிப்பு இதில் எந்த மாறுதலையும் கொண்டு வரப்போவதில்லை.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 144% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக மண் வேலைக்கு என்று ஒதுக்குவது பயன்தராது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கிராமப்புற மண் வேலைக்கு தொழிலாளிகள் கிடைப்பது அரிது. இங்குள்ள நிலைமைக்கு ஏற்றவாறு இங்கு கிராமம் சார்ந்த வேறு தொழில் முயற்சிகளுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் என்ற பணிக்கே இத்திட்டத்தை ஒதுக்குவதால் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு வழி ஏற்படுகிறது. வேலை செய்யாமல், பெயர் கொடுத்து குறைப்பணம் பெறுவோரே இதில் அதிகம். எந்திரம் மூலம் நிறைவேற்றியோ, எந்த வேலையும் செய்யாமலோ, அல்லது மேலாக மண்ணைக் கீறிவிட்டோ உள்ளாட்சி நிர்வாகிகள் ‘பணம் பார்க்க’ இது ஒரு ‘நல்ல’ வழியாகக் கிடைத்துள்ளது.

வேளாண்மைப் பணி இல்லாத கோடை காலங்களுக்கு எனத் தொடங்கி, இன்று ஆண்டு முழுவதும் என விரிவாக்கப்பட்டுவிட்டது இத்திட்டம். இதன் காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் உழவர்கள் திண்டாடுகின்றனர். இதற்கு ஈடாக எந்திரமயமாக்கலுக்கு ஈடு கொடுக்கும் பண வலுவும் பெரும்பாலான உழவர்களுக்கு இல்லை. இந்த வரவு - செலவுத்திட்டம் உள்ளிட்டு, அரசின் திட்டங்கள் அனைத்தும் உழவர்களை வேளாண்மையிலிருந்து பிதுக்கி வெளியேற்றும் முயற்சியாகவே உள்ளன.
இயற்கை வேளாண்மை சார்ந்த நீடித்த வேளாண் முயற்சிகளுக்கு சிறப்பு மானியம், சந்தை வாய்ப்பு ஆகியவற்றை செய்து கொடுத்து மாற்று வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்தால் தவிர உழவர்களைக் கிராமங்களில் இருக்க வைப்பது கடினம். இவ்வாறு வெளியேறும் உழவர்கள் அனைவரையும் உள்வாங்கும் அளவுக்குத் தொழில் வளர்ச்சியும் இல்லை.

கடந்த ஆண்டு தொழில் வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட 8.5% என்பதிலிருந்து 2.4% ஆக சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பின்னலாடைத்தொழில், செயற்கை வைரம், தானியங்கி முதலான தொழில்களில் இதன் பாதிப்பு மிக அதிகம்.

இன்னொருபுறம் ஒழுங்கமைக்கப்படாத சிறு தொழில்களில் ஆள் பற்றாக்குறையால் அவதி. வேலையின்மை என்பது குறை வேலை வாய்ப்பு (Under-Employment) என்ற வடிவத்தில் மறைந்துள்ளதை இது காட்டுகிறது.

மிக முக்கியமான இச்சிக்கல் குறித்து தில்லி அரசின் வரவு- செலவுத் திட்டம் உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை. மாறாக சிறு தொழில்களையும் , சில்லரை வணிகத்தையும் சீரழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக தங்கம் தாராள இறக்குமதியாவதை கட்டுப்படுத்த சுங்க வரியை உயர்த்தி உள்ள அதே நேரத்தில் நிறுவன முத்திரை பெற்ற தங்க நகைகளுக்கு (Branded Jewellery) 2% உற்பத்திவரி குறைக்கப்படுகிறது

இது டாடா, ஆலுக்காஸ் போன்ற பிரண்டட் நகைத் தொழிலகங்களுக்குச் சாதகமானது. ஏற்கெனவே செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கடல்போல் கடை என்று பளபளப்பாக கடை விரித்துள்ள பெரு நிறுவனங்களால் நகைத் தொழிலில் உள்ள சிறு உற்பத்தியாளர்களும், நகைத் தொழிலாளர்களும் கடுமையாக நசிந்து வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு இவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும்.

சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக வருவதற்கு இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் திருப்பிவிட இந்த பட்ஜெட் ஊக்கம் வழங்குகிறது. ஓய்வூதிய நிதியை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தினால் அதற்கு பங்குப்பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமாம்.
பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி உரிய இலாபம் சம்பாதிக்காமல், ஓய்வூதியர்கள் ஓட்டாண்டிகளாகி , உழைத்துச் சேர்த்த சேமிப்பை இழந்து நின்றதைப் பார்த்திருக்கிறோம். இந்த ஆபத்து இங்கேயும் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறையை இந்த வரவு- செலவுத் திட்டம் அறிவித்திருக்கிறது. 4 இலட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை! இது மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறி. கிட்டத்தட்ட இதே அளவுக்கு அதாவது 4இலட்சம் ரூபாய் கடன் வருவாய் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் மொத்த வருவாயில் சுமார் 40% இதன் மூலமே எழுப்பப்படுகிறது.

இந்த கடன் தொகை புதிய முதலீடுகளாக மாறி, இலாபம் சம்பாதித்தால் இந்தக் கடனை அடைப்பது எளிது. ஆனால் செலவு வழி அவ்வாறி்ல்லை. 3 இலட்சம் கோடி ரூபாய் பழைய கடனுக்கு வட்டி செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறாவது சம்பள ஆணையப் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்குவதால் இந்த நிதியாண்டில் ரூ.40000 கோடி செலவு. மானியச்செலவுகள் ஏறத்தாழ ரூ.50000 கோடி. இவைபோக மீதி 10000 கோடி ரூபாய்தான் முதலீட்டுச்செலவு. திறமையான நிதியமைச்சர்!

வரிச்சலுகையால் தொழில் உற்பத்திப் பெருகி, வரிவருமானம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இழப்பு அச்சத்தை (Risk) துணிந்து மேற்கொண்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் நடப்பு நிலை வேறாக உள்ளது. சென்ற நிதியாண்டில் வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டைவிட 46 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதே நிலை தொடரும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து. அரசின் பொருளியல் ஆய்வறிக்கையும் (Economic Survey 2008-2009) இதனையே சூசகமாகத் தெரிவிக்கிறது. அரசுத்துறை நிறுவனப்பங்குகளை விற்பது, 3ஜி ஸ்பெக்டரம் விற்பனை ஆகியவையே பெருமளவு நிதிதிரட்டுவதற்கு பிரணாப் வைத்துள்ள மாற்றுவழி. பாட்டன் சேர்த்து வைத்ததை விற்று வாழ்க்கையை ஓட்டும் நாட்டு சோக்காளியின் செயல் போல் இந்திய நிதியமைச்சரின் வரவு - செலவுத் திட்டம் உள்ளது. இதற்குமேல் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்திய அரசுக்கு இருக்கும் இன்னொரு வழி பணநோட்டு அச்சடிப்பதுதான். அது பணவீக்கத்தை அதிகரிக்கும் கண்மண் தெரியாத விலையேற்றத்திற்கு வழி வகுக்கும்.

தற்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற தெம்பில் இந்த மக்கள் விரோத வழிமுறைகளை அரசு செயல்படுத்த இருக்கிறது. இன்னொருபுறம், மாநிலங்களை நசுக்கும் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி சுங்கவரி, உற்பத்திவரி போன்ற வரிவருமானங்கள் குறைந்துள்ளன. இவைதாம் மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கக் கூடிய வருமான வழிகள். இந்த வரிவருமானங்கள் குறைவதால் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரிப் பங்கு வெகுவாகக் குறைகிறது. இந்திய அரசின் வருவாயில் வரி அல்லாத வருவாய் (Non – Tax Revenue) 46% அதிகரித்துள்ளது. வரி அல்லாத வருமானத்தில் ஒரு ரூபாய்கூட மாநிலங்களுக்குக் கிடைக்காது. பிரித்துத்தர வேண்டும் என்ற சட்டக்கட்டாயம் ஏதும் தில்லி அரசுக்கு இல்லை. அதேபோல் கடன் வருவாய் 4 இலட்சம் கோடியிலோ, பொதுத்துறை நிறுவனப்பங்கு விற்பனைத் தொகை 25000 கோடியிலோ, 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைத்தொகை ரூ.35000 கோடியிலோ மாநிலங்களுக்கு பங்கு ஏதும் தரவேண்டியதில்லை.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்களை இந்த வரவு - செலவுத் திட்டம் மேலும் கசக்குகிறது. இதிலும் நிதி ஆணையத்தின் நிதிப்பங்கீட்டு முறை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திலும், வரி வசூல் திறனிலும் முன்னேறியுள்ள தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக உள்ளது. ‘வாட்’ போதாதென்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax –GST) என்று புதிதாக ஒன்றை பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ளார். இது மாநிலங்களின் வரிவருவாயை பெருமளவு குறைத்துவிடும். ஆக மொத்தத்தில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ள 2009 -10 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் மக்கள் வளச்சிக்கு உதவாத, உலகமய நிறுவனங்களுக்குச் சாதகமான திட்டம். இது உழவர்களுக்கு எதிரானது் சிறு தொழில்களுக்கு எதிரானது.

வேலைவாய்ப்பை உருவாக்கவோ, விலை உயர்வை நிலை நிறுத்தவோ பயன்படாதது. இந்த வரவுசெலவுத் திட்டம் கூட்டாட்சி முறைமைக்கு எதிரானது. மாநிலங்கள் மீது நிதிவகை தாக்குதலைத் தொடுப்பது . இந்த வரவுசெலவுத் திட்டம் தொலைநோக்கு இல்லாதது. சிக்கல்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப்போடும் உத்தி மட்டுமே இதில் உள்ளது. இது எதிர்க்கப்பட வேண்டிய வரவுசெலவுத் திட்டம் ஆகும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.