பேராண்மை - திறனாய்வு - நா.வைகறை
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த “பேராண்மை” திரைப்படத் திறனாய்வு)
பீஸ் வஸ்சீலியெவ் எழுதிய “அதிகாலையின் அமைதியில்’ என்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி. ஜனநாதன் திரைக்கதை, இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் பேராண்மை. ஐந்து பெண்கள் ஒரு இராணுவத் தளபதி தலைமையில் செர்மன் பாசிஸ்டுகளின் சதித் திட்டத்தை முறியடிக்கும் சாகசம்தான் அதிகாலையின் அமைதியில் கதையின் மையக்கரு. இதே பாணியில் இந்திய அரசிற்கு எதிரான வெளிநாட்டவரின் சதித்திட்டத்தை முறியடிக்கும் கதைதான் பேராண்மை. தமிழகச் சூழலுக்கு ஏற்ப கதையும் களமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வெள்ளிமலையில் இருந்து ‘பசுமை’ என்ற செய்மதி (சாட்டிலைட்) அனுப்பத் தயாராக உள்ளார்கள். பழங்குடி சமூகத்தில் பிறந்த துருவன் (‘ஜெயம்’ ரவி) இடஒதுக்கீட்டில் படித்து முள்ளிமலை கல்லூரியின் என்.சி.சி. பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து பெண்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஜீப்பில் செல்கிறார். வாகனம் விபத்துக்குள்ளாகிறது. இதனால் இரவு காட்டில் தங்க நேரிடுகிறது. ஐந்து பேரில் ஒரு பெண் காட்டில் வெளி நாட்டவர் நடமாட்டத்தைப் பார்க்கிறாள். துருவனிடம் சொல்கிறாள்.
வெள்ளிமலையில் இருந்து செலுத்தப்பட உள்ள செய்மதியைத் தடுப்பதற்காக வந்துள்ள வெளிநாட்டு கூலிப்படையினரைத் தடுத்து நிறுத்தத் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். 16 வெளிநாட்டு கூலிப்படையினரை இந்த 6 பேரும் எப்படித் தாக்கி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதுதான் பேராண்மை படத்தின் மையக்கரு.
இந்தியா ஒரு விவசாய நாடு. பசுமைப்புரட்சி என்ற பெயரில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கியுள்ளனர். அதிக மகசூல் வரும் என்று பன்னாட்டு கார்கில், மன்சாண்டோ கம்பெனிகளின் விதைகளை அறிமுகப்படுத்தினர். மகசூல் வரவில்லை. மாறாக விதைத்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைதான் அதிகமானது.
மரபணு மாற்றப்பட்ட அமெரிக்காவின் மன்சாண்டோ நிறுவனம் தயாரித்த பி.ட்டி காட்டன் என்ற பருத்தி விதை அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையூட்டப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நம்பி பயிரிட்ட மராட்டிய விதர்பா, ஆந்திராவின் பகுதி விவசாயிகள்தான் கடனாளியாகத் தற்கொலை செய்து கொண்டுமடிந்தனர். இந்தச் செடிகளைத் தின்ற ஆயிரக் கணக்கான கால்நடைகள் இறந்தன.
இயற்கையாக நமது பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ். சுவாமிநாதனின் தவறான விவசாயக் கொள்கையால் மண்μம் மலடாகி விவசாயிகள் வாழ்வும் கேள்விக்குறியாக உள்ளது. தற்சமயம் மகிகோ என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித்துள்ள மரபணு மாற்று கத்திரிக்காய்க்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும். விதைகளற்ற இந்த மரபணு கத்திரிக்காய் விவசாயிகளை மேலும் பாதிக்கும்.
அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் சூழலில், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக கருத்து களைப் பரப்பும் வகையில் வெளி வந்துள்ள பேராண்மை திரைப்படம் வரவேற்புக்குரியது. மண்ணை மலடாக்கிவிட்டு நம் வாழ்க்கை மட்டும் எப்படிச் சிறக்கும்? என்ற கேள்வி மூலம் இயற்கை வேளாண்மைக்கு மக்களைத் திரட்டுகிறது இப்படம். தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற கருத்தை மாற்றி வெளிநாட்டினரைக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது. இயக்குநர் ஜனநாதன் தமது உரையாடல் மூலம் தமது சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் படிப்பவர்கள் திறமை குறைவானவர்கள் என்று கருத்து பரப்பும் திரையுலகினர் நடுவில், பழங்குடி சமூகத்தில் பிறந்த ஒருவன் இடஒதுக்கீட்டில் படித்து எப்படிச் சாதிக்கிறான் என்பதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டும் திரையுலகில் அவர்களைப் போராளி களாக மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.
உழைப்பை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை அரசியல் பொருளாதாரம் தொடர்பான வகுப்பறையில் ஒருசில நிமிடங்கள் விளக்குகிறார். தமிழ்த் திரையுலகில் வகுப்பறை என்றாலே தமிழையும், தமிழாசிரியரையும் கிண்டலடிக்கிற வகையில்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த நிலையில் இருந்து மாறுபட்டு மார்க்சியப் பாடத்தை எளிய முறையில் விளக்கியிருப்பதற்காக இயக்குநர் ஜனநாதனைப் பாராட்டலாம்.
நீங்க ஏன் ஆங்கிலம் பேசுவதில்லை என்று ஒரு மாணவி கேட்கும்போது, “நான் ஆங்கிலம் பேசினா எங்க சனங்களுக்குப் புரியாது, உங்களுக்கும் பிடிக்காது” என்று பழங்குடிஇனக் கதாநாயகன் துருவன் பேசும் வசனம் அருமை. அரசியல் பொருளாதரத்தைப் புரிந்து கொள்ளாமல் இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. பொதுவுடைமை அரசியலைப் படிக்க முடியாது என்பது போன்ற வசனங்கள் நன்று.
துருவன் வேடத்தில் ‘ஜெயம்’ ரவி அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கோவணம் கட்டிக்கொண்டு எருமை மாட்டுக்குப் பேறு (பிரசவம்) பார்க்கும் காட்சி இயல்பாக உள்ளது. நாயக பிம்பத்தைப் (ஹீரோ இமேஜ்) பார்க்காது கதைக்காகத் தன்னை மாற்றியிருப்பது நல்லது.
சாதியைச் சுட்டிக் காட்டி உயர்வகுப்பு மாணவிகள் இழிவுபடுத்தும் போதும், உயர் அதிகாரி இழிவுபடுத்தும் போதும் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
உரையாடலை உச்சரிக்கும் முறை, சண்டைக்காட்சி - என்று இன்னும் பல வகைகளில் மாறுபட்டு நடித்துள்ளார். மாணவிகளாக வரும் ஐந்து பேரும் சரியான தேர்வு. ஊர்வசி, பொன்வண்ணன், ஊனமுற்ற பழங்குடி இளைஞராக வரும் குமர வேலு உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர். வடிவேலு நடிப்பு ஊறுகாய் போல. ஓவியர் மருதுவும் நடித்துள்ளார். வனத்துறை அதிகாரி பழங்குடி மக்களைத் தாக்குகிற காட்சி, வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியத்தை நினைவுபடுத்துகிறது.
கல்லூரி மாணவிகளின் வீரச்செயல்கள் ஈழவிடுதலைப் பெண் போராளிகளை பிரதிபலிக்கிறது. மாணவி ஒருத்தி இறந்தவுடன் அவளைப் புதைத்துவிட்டு துப்பாக்கி வைக்கும் காட்சி ஈழத்தை மனக்கண்முன் கொண்டுவருகிறது.
சதீஸ்குமாரின் ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசையில் வித்யாசாகர் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம். சில இடங்களில் வரும் இரட்டைப் பொருள் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். திரைப்படம் என்ற தளத்தைக் கடந்து சிந்தித்தால்... இப்படம் முன் வைக்கும் அரசியல் மிக விரிவானது. பொதுவுடைமைக் கருத்தியல் மட்டுமின்றி, சூழலியல், இயற்கை வேளாண்மை, பெண்ணியம், சாதியம் உள்ளிட்ட தளங்களிலும் கதை நகர்கிறது. இது இயக்குனரின் நேர்மையான பிடிவாதத்தைக் காட்டுகிறது. அவர் விரும்பிப் புகுத்திய இக் கருத்தியல் கூறுகள், உறுத்தலாக இல்லாமல் கதையோடு இயைந்து விட்டன.
இவற்றைத் தவிர, இப்படம் பற்றி நாம் சில மறுப்புரைகளையும் முன்வைக்கிறோம்.
1. இந்தியா ‘இயற்கை வேளாண்மை’க்காக செய்மதி (சாட்டிலைட்) அனுப்பும் என்று இயக்குனர் உண்மையிலேயே நம்புகிறாரா? அமெரிக்காவே அனுமதிக்காத பி.ட்டி விதைகளை அனுமதித்து வேளாண் தொழிலை இரசாயனப் பெருந்தொழிலுக்குப் பலி கொடுக்கும் நாடு அல்லவா இந்தியா! 2. ’நாம் ரெண்டு பேரும் அடிச்சிக்கிறதுக்கு நாம காரணமில்ல. மூணாவதா ஒரு சக்தி இருக்கு’ என்று பசுமை விகடன் நேர்காணலில் கூறியுள்ளார் இயக்குனர். பெரும் பொருளாதாரத்தில் எல்லா ஒடுக்குமுறைகளும் ஏகாதிபத்திய நாடுகளின் இறக்குமதிதான் என்ற பார்வை அவருக்கு இருப்பதை இது உணர்த்துகிறது.
இந்தியா எனும் அரச வடிவம் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகவும் சுரண்டல் ஆயுதமாகவும் இருப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறுகிறார். அவரது முந்தைய படமாகிய ஈ-யிலும் இத்தன்மை இருந்தது.
பேராண்மையில் இக்கருதுகோளை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். எந்த ஏகாதிபத்தியத்திற்கும் புறக் காரணிகளும் உண்டு; அகக் காரணிகளும் உண்டு என்பதே இயல்பு. அமெரிக்காவின் பெரும்பகுதி மக்கள் இன்று வேலையில்லாமை, வறுமை, மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் காரணம் ‘சீனா’ உள்ளிட்ட பிற பெருமுதலாளியச் சுரண்டல் நாடுகளும் காரணம். இந்தியாவிலிருந்து போய்க்குவியும் பிழைப்புதேடிகளும் காரணம்தான். இவர்களும் சேர்ந்துகொண்டுதான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். அதற்காக... அமெரிக்காவில் நிலவும் வறுமைக்கு அமெரிக்கா காரணமாக இல்லாமல் போய்விடுமா? முதல் குற்றவாளி அமெரிக்காதானே!
இந்தியா எனும் அரச வடிவம் தன்னளவிலேயே ஓர் ஒடுக்கு முறைக் கருவியாகவும் இருக்கிறது. தன் ஒடுக்குமுறையை வலுப்படுத்திக் கொள்ளவும் சுரண்டலைப் பெருக்கிக் கொள்ளவும், தன் வர்க்க-இன நலன்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்தியா பிற ஏகாதிபத்தியங்களை நாடுகிறது. பிற ஏகாதிபத்தியங்கள் சுரண்டிக் கொள்ள வழி வகுக்கிறது. குறிப்பாகவே கூற வேண்டுமெனில்...
உலகமயப் பொருளாதாரம் எனும் கருத்தியல் ஆதிக்கம் தோன்றும் முன்புதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரால் இந்தியா இந்திய மரபு வேளாண்மையை ஒடுக்கியது. பசுமைப் புரட்சி எனும் ஆயுதம் இந்திய வேளாண்மை மீது பாய்ச்சப்பட்டதன் காரணம் இந்திய அரச வடிவத்தின் சுரண்டல் தன்மையே தவிர, நேரடி அந்நிய ஏகாதிபத்திய ‘நெருக்குதல்’ அல்ல! இந்திய வர்க்க - சாதி ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுரண்டல்களுக்காக வேளாண் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளை அனுமதித்தனர். பசுமைப் புரட்சியில் இந்திய ஏகாதிபத்தியமும் பலனடைந்தது. அது முழுமையான இறக்குமதியோ சதியோ அல்ல!
இந்தச் சிக்கலில் இயக்குனர் தீவிரப் பரிசீலனை செய்யாவிட்டால்...
அவரது தொடர் உழைப்பும் ஈகங்களும் ‘இந்தியா எனும் ஒடுக்கு முறை கருவி’யைக் காப்பாற்றவே பயன்படும். உயிரைப் பணயம் வைத்து செய்மதியைக் காக்கும் துருவன் பரிதாபமாக தன் வழமையில் ஈடுபட.. சாதி வெறி பிடித்த கணபதிராம் எனும் அயோக்கியனுக்கு இந்திய அரசு விருது வழங்குவதாக இறுதிக் காட்சியைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர். ’எங்கள் உயிர்களைக் கொடுத்தேனும் இந்தியாவைக் காப்போம்’ என்று அப்போதும் துருவன் முழங்குவான். இது ஐயமில்லாமல், இந்தியா மீதான சாட்டையடிதான். ஆனால்... இந்தியாவை ஏற்றுக் கொண்டு செய்யும் விமர்சனமாக மட்டுமே இது உள்ளது. இயக்குனர் மார்க்சியம் படித்தவர் என்பதால் அவருக்கும் தெரிந்த மொழியில் சொல்கிறோம்;
‘இந்தியாவை நேச முரணாக அணுகுகிறார் இயக்குனர். மாறாக, இந்தியா தமிழருக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்குமான பகை முரண்’ என்பதை அவர் ஆய்ந்து உணர வேண்டும். இந்தியா எனும் அரச ஒடுக்குமுறை வடிவம் தகர்ந்தால் மட்டுமே...தேசிய இன, வர்க்க விடுதலை கிடைக்கும். இந்தப் பார்வை இன்றி இயங்கினால், நாமும் அப்பாவி துருவன்களாகவே முழங்கிக் கொண்டிருப்போம், இறுதி வரை!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த “பேராண்மை” திரைப்படத் திறனாய்வை குறிப்பிட்டு, 21.11.09 அன்று தமிழக நாளேடுகளில் வெளியிடப்பட்ட அப்படத்தின் விளம்பரம்)
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment