ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு - ம.செந்தமிழன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)

ஒரு சமூகத்தின் அரசை, புரட்சியின் வழி கைப்பற்றிப் புதிய அரசு அமைக்க வேண்டுமெனில், அச்சமூகத்தின், நிலவும் அரசைப் பற்றிய கோட்பாட்டுப் புரிதல் அவசியமாகும். நிலவுகின்ற அரசின் ஒடுக்குமுறைகளும், எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளும், அவ்வரசின் வெளிப்படையான செயல்பாடுகள் ஆகும். இச்செயல்பாடுகளுக்கு மூலமாகவும் மூளையாகவும் இருந்து இயக்கும், மெய்யியல், கோட்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து தெளிவது புரட்சிகர மாற்றத்தை விரும்பும் இயக்கங்களின் கடமையாகவும் முன் தேவையாகவும் உள்ளது.


இந்திய வல்லாதிக்க சக்திகளிலிருந்து தமிழ்த்தேசியம் விடுதலை பெற வேண்டுமெனில், ‘இந்திய அரசு’ எனும் அமைப்பின் கோட்பாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘அரசுக் கோட்பாடு’ என்பது அரசு எனும் பொறியின் இயங்கு முறை, அதிகாரப்படிநிலை, சமூகம் குறித்த மதிப்பீடு, தனிமனித உரிமைகள் குறித்த பார்வை அரசுத் தலைமைக்குத் தேவையான இயல்புகள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.


இந்திய நிலப்பரப்பில் அரசுகள் உருவான வரலாற்றில், ஆரியப் பார்ப்பனியத்தின் மேலாதிக்கமே பெரும் பங்கு வகித்தது. அரசு உருவாக்கம் என்பது, நிலவுடைமையின் தீவிர வளர்ச்சியின் விளைவாகும். நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை ‘உடைமை’ ஆக்குதல் எனும் கருத்தியல் ஆரியர்களது அரசியல் தலையீட்டுக்குப் பிறகே தீவிரமடைந்தது.


தமிழர்கள் இனக்குழு வாழ்க்கை முறையை மெற்கொண்டு, கூட்டு உழைப்பு, கூட்டுப் பகிர்வு எனும் பேரளவு சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்து வாழ்ந்தனர். இச்சமூகத்தில், இனக்குழு தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி மிகவும் குறைவு. ‘உடைமையாக்கல்’ இல்லாததால் - குறிப்பிட்ட இனக்குழு சமூகங்களுக்குள் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் இல்லை. சாதிகளே இல்லாத சமூகங்கள் அவை. ஆகவே, சாதியப் பாகுபாடு குறித்த பேச்சுக்கே இடமில்லை.


தொழில் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மட்டுமே இருந்தன. ஒரு தொழில் செய்வோர், பிற தொழில் செய்யத் தடை ஏதும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் தொழில் பிரிவினையும் வகுக்கப்படவில்லை. சாதியத்தின் மூலம், பிறப்பை அடிப்டையாகக் கொண்டது. ஆகவே, தமிழர் இனக்குழு நாகரிகத்தில் சாதிகள் இல்லை.


தமிழரது நாகரிகம் ஆரியர்களின் சுரண்டல் கோட்பாடுகளுக்குப் பெரும் தடையாக இருந்தது. அனைத்தையும் உடைமைகளாக்கி, சுரண்டிக் கொழுக்கும் வெறி பிடித்த ஆரியர்கள், நிலத்தை உடைமையாக்குவதைத் தீவிரப்படுத்தினர். (இது குறித்த சான்றுகளும் விளக்கங்களும் ‘நிலம் பெண்ணுடல் நிறுவனமயம்’ நூலில் காணலாம். ஆசிரியர் ம.செந்தமிழன், பன்மைவெளி வெளியீடு).


‘அரசு’ எனும் அமைப்பு அதன் இயல்பிலேயே ஒடுக்குமுறையின் வடிவமாக உள்ளது. அதிகாரக்குவிப்பு, மூலதனக்குவிப்பு இவ்விரண்டும் அரசின் அடிப்படைகள். இவை தான் அரசின் கட்டமைப்பைத் தாங்கி நிற்கின்றன.


இனக்குழுக்குள் இவற்றிற்கு நேர் எதிரானவை. அதிகாரம் - உழைப்புப் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். அவ்வதிகாரமும் நிலையானதல்ல. மூலதனம் எந்த இடத்திலும் குவிக்கப்படுவதில்லை. ஏனெனில், கூட்டு உழைப்பு - கூட்டுப் பகிர்வு என்பதே இனக்குழுவின் பொருளியல் அடிப்படை.


தமிழரின் இத்தகைய சமத்துவ வாழ்வு, ஆரியருக்குப் பெரும் சவாலாகவும், அவர்களே ஆதிக்க வெறிக்கு இடையூறாகவும் இருந்தன. இந்தப் பின்புலத்திலிருந்து தான் ‘இந்தியாவில் அரசு’ உருவானது. இந்திய நிலப்பரப்பில் அரசு உருவாக்கம் என்பது, ஆரியர் தமிழரை வெற்றி கொண்ட வரலாற்றுடன் தொடர்புடையதே!


ஆரியப் பார்ப்பன நலன்களுக்கான அரசை உருவாக்குவதில், ருக் வேதம், மனுதர்மம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் பெரும் பங்காற்றியுள்ளன.


ருக் வேதம்


சிந்து வெளித் தமிழர் நாகரிகத்தை ஆரியர் வெற்றி கொண்ட வரலாற்றுப் பதிவு. தமிழரை வீழ்த்தி ஆரிய அரசுகள் அமைக்கப்பட்டவிதத்தை விளக்குகிறது.


மனுதர்மம்


ஆரிய அரசுகள் அமையத் தொடங்கியப் பிறகு, அவ்வரசுகளின் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளைப் பொது நியதிகளாக்கிய ஆவணம்.


அர்த்த சாஸ்திரம்


ஆரிய அரசின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக விரிவாக அறிவிக்கும் நூல். சிறிய அரசுகள் எனும் நிலையைத் தாண்டி ‘ஆரியப் பேரரசுகள்’ அமைப்பதை வலியுறுத்தி அவற்றுகாண வழி முறைகளை கற்பித்த நூல். இவற்றில் அர்த்த சாஸ்திரம் கூறும் அரசுக் கட்டமைப்பை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.


அரசனின் முதல் கடமை


அர்த்த சாஸ்திரத்தில் அரசனின¢ கடமை என்று முதல் முறையாகக் குறிப்பிட்டிருப்பன, ‘...மன்னன், மக்களில் எவரும் சுயதர்மத்தை மீறாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’(1) என்பதாகும்.

மக்களது சுயதர்மம் என்று சாணக்கியன் குறிப்பிடுபவை.
வேதத்தை ஓதுதல், கற்பித்தல், யாகம் செய்தல், தானம் கொடுப்பது, தானம் வாங்குவது - பிராமணர் சுயதர்மம்.


வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, ஆயுதங்கள் செய்து கொள்வது, பிற உயிர்களைக் காப்பாற்றுவது - சத்ரியர் சுயதர்மம்.


வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, வாணிபம் - வைசியர் சுயதர்மம்.


மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் பணி செய்தல், விவசாயம், கால்நடைப் பராமமரிப்பு, வாணிகம் செய்தல், மரம், கல், உலோகங்களாலான சிற்பங்களை வடித்தல், பாடல், நடனம் - சூத்திரர் சுயதர்மம்.


இந்த ‘சுயதர்மங்களைப் பாதுகாப்பதே அரசனது முதல் கடமை என்கிறான் சாணக்கியன். அரசு உருவாகும் போது, அதிகாரக் குவிப்பு - அரசனிடத்தும், மூலதனக்குவிப்பு - அரசன் மற்றும் வணிகத்திடத்தும் சென்றது. மூவ்வகைக் குவிப்பிற்கு அடிப்படை பெருவாரி மக்களின் உற்பத்தித் திறனும் உழைப்பும் ஆகும். சூத்திரன் எனப்பட்ட பெருவாரி மக்களே - அறிவாளர்களாகவும், உற்பத்தி ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர்.


ஆகவே, இம்மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதே ஆரிய அரசுக் கோட்பாட்டின் மையக் கருத்து. இம்மக்கள் தமது அமைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காக, மிக மோசமான ஒடுக்குமுறைகள் இவர்கள் மீகு கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அரசனது ‘கடமைகள்’ என்றாக்கப்பட்டன. சுருங்கக் கூறின், பெருவாரி அறிவாளர் உழைப்பாளரின் உற்பத்தித் திறனைச் சுரண்டி மூலதனக் குவிப்பை உருவாக்க வைசியர் எனும் வணிகப் பிரிவினரும், இம்மூலதனக் குவிப்பைப் பாதுகாக்கவும், புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கவும் தேவையான அதிகாரக்குவிப்பு அரசனிடத்திலும் ஒப்படைக்கப் பட்டன. இந்த ‘ஒழுங்குகள்ள்ள்ள்ள்’ முறையாக நடக்கின்றனவா என மேற்பார்வையிட்டு ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். இதுவே ஆரியரது அரசுக் கோட்பாடு.


அரசின் நிலை


அரசன், தோற்றத்திற்கு வானாளவிய அதிகாரங்கள் கொண்டவனாகத் தெரிந்தாலும், அர்த்த சாஸ்திரத்தின்படி அரசன் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டு பணிவுடன் நடந்து கொள்ளும் நிலையில் இருந்தான்.


அரசனுக்கு ஆலோசனை கூறும் பணியில் அமாத்வர், புரோகிதர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்கிறான் சாணக்கியன். இவ்விருவருமே பார்ப்பனர் என்பதில் ஐயமில்லை.


‘பிரத்யட்சம், பரோட்சம், அனுமேயம் என்று மூன்று விதங்களில் அரச விவகாரங்கள் அடங்கும். தானே நேரடியாகப் பார்ப்பது பிரத்யட்சம், மற்றவர்கள் செய்வது பரோட்சம். ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட வேலையைக் கொண்டு, இனி செய்து முடிக்க வேண்டியதை ஊகிப்பது அனுமேயம். மன்னனுக்கு செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கும். நிறைய காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்க வேண்டியுமிருக்கும். அவையும் ஒரே இடத்திலல்லாது வேறு வேறு பிரதேசங்களில் செய்ய வேண்டியவையாக இருக்கும்...


... மன்னன் தானே நேரடியாக கவனிக்க வேண்டிய காரியங்களைத் தவிர்த்து மற்றவைகளைச் செய்ய வேண்டியது அமாத்வர்களுடைய கடமையாகும்(2)


- இவ்விதிகளின்படி அரசனது செயல்படு எல்லை மிகவும் குறுக்கப்பட்டு, பிராமணர்களின் எல்லை அனைத்துத் தளங்களுக்கும் விரிவாக்கப்படுகிறது. எந்தப் பணிகளுமே, யாரோ ஒருவர் செய்த பணியின் தொடர்ச்சியாகவோ, பலர் செய்து முடித்தவையாகவோ தான் இருக்கும். இவ்விரண்டைத் தவிர, ‘நேரடியாக’ செய்யும் பணி என்பது அரிதிலும் அரிது.


நேரடியாகச் செய்யும் பணியைத் தவிர, பிற பணிகளை அமாத்வர்கள் மேற்கொள்வார்கள் என்பது, அரசனது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் ஆட்சி செய்யும் தந்திரத்தின் வெளிப்பாடு ஆகும்.


இவை தவிர, புரோகிதர்களின் செல்வாக்கு குறித்து பின்வரும் விதியைப் பார்ப்போம், ‘மன்னன் புரோகிதனிடத்தில், தந்தையிடம் பிள்ளை போன்றும், எஜமானிடம் வேலையாள் போன்றும் பணிவுடன் அனுசரித்து நடக்க வேண்டும்’(3)


அரசன், பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும், கட்டளை களையும் நிறைவேற்றுபவனாகவே வைக்கப்பட்டான். இதன் பொருள், அரசன் ஒன்றுமறிய அப்பாவி நிலையில் வைக்கப்பட்டான் என்பதல்ல!


அரசர்கள் மூலதனம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அனைத்துப் பலன்களையும் அனுபவித்தனர். அதே வேளை, நிர்வாகம், நீதி உள்ளிட்ட பொறுப்புகளைப் பார்ப்பன மேலாதிக்கத்திடம் ஒப்படைத்தனர். உழைப்பு மற்றும் அறிவாற்றல் கொண்டு உற்பத்தியின் ஈடுபடும் பெருவாரி மக்கள் ஒரு முனையிலும், அரசன் மறுமுனையிலும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தப்பட்டனர். இவ்விரு எதிர்வுகளின் இணைப்பாகவும் முரணாகவும் பார்ப்பனர்கள் செயல்பட்டனர்.


இதன் வழியே வர்க்க, சாதி ஏற்றத் தாழ்வுகள் பெருகத் தொடங்கின. உற்பத்தியில் ஈடுபட்ட உழைப்பாளர், அறிவாளர் மீது சாணக்கியன் ஏவிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் சிலவற்றைக் காண்போம்.


கிராமங்கள் கடுமையான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.


‘10 கிராமங்கள் சேர்ந்த தலைமையிடத்துக்கு சங்க்ரஹம் என்று பெயர். 200 கிராமங்களுக்குத் தலைமையகம் சார்வாடிகம். 400 கிராமங்களின் தலைமையகம் துரோனகம். 800 கிராமங்களுக்கு நடுவே இருப்பது ஸ்தானீயம்’(4)


இந்த நிர்வாக மையங்கள் கிராமங்களை நேரடிக் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தன. நிலம் அரசின் உடைமை என்று ஆக்கப்பட்டது. இதனால், வேளாண் தொழிலில் ஈடுபடு வோருக்கே நிலம் சொந்தமில்லை என்ற முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை வலியுறுத்தும் விதிகள்,


‘விவசாயத்துக்குத் தகுந்த நிலத்தை வரி செலுத்துபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதை அவர்கள் வாய்நாள் வரைதான் அனுபவிக்க முடியும்’.


‘விவசாயத்துக்காக கொடுக்கப்பட்ட நிலத்தில் யாரேனும் விவசாயம் செய்யாமலிருந்தால், அவர்களிடமிருந்து அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிவிட வேண்டும். அந்நிலத்தில், கிராமவாசிகளோ, வர்த்தகர்களோ விவசாயம் செய்ய வேண்டும்’.


‘விவசாயம் செய்யாதவர்கள், அதனால் மன்னர் கருவூலத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்த வேண்டும்’


- இவ்விதிகள், ‘நிலம் - அரசின் சொத்து என்பதையே நிலைநாட்டுகின்றன. விவசாயிகள் காலம் முழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். குறிப்பிட்ட காலத்தில் அல்லது குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்யாமல் இருந்தால் அது குற்றமாகக் கருதப்பட்டது. விவசாயிகள் அனைவரும் அரசின் அடிமைகள் என்பதையே இவ்விதிகள் உணர்த்துகின்றன.
‘கிராமத்தில் உல்லாசத்துக் கான நடன நாட்டியச் சாலைகளோ, உலாவுவதற்கான உத்யானவனங்களோ இருக்கக்கூடாது. நடிகர்கள், நடனக் கலைஞர்கள், கதை சொல்பவர்கள், பாடகர்கள் முதலானோர் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, கிராமங்கள், நடன, நாடகக் கலைஞர்கள் கூட வேண்டிய இடங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தத்தமது நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டேயிருப்பதால் அவர்களும் மேன்மைக்கு வருவார்கள் கருவூலத்தில் செல்வமும் பெருகும்’(5)
ஊருக்குத் தேவையான நீர்த் தேக்கங்கள், இடங்கள் போன்றவற்றைக் கட்டமைக்கும் பணிகளை அந்தந்தப் பகுதி மக்களே செய்து கொள்ள வேண்டும். யாராவது ஒருவர், அந்தப் பணியிலிருந்து பாதியில் விலகினால் அவருக்குக் கடும் அபராதம் விதிக்கப்பட்டது(6)


விபசாரம் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது ஆரியர் கோட்பாடு. அர்த்த சாஸ்திரம் இதையே பதிவு செய்துள்ளது.


விபசாரம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘தொழில்’ ஆகும். இதற்கென வரி விதிக்கப்பட்டது.


‘கண்ணிகையரில், அவர்களின் அழகு, அலங்காரம் இவற்றையெல்லாம் பார்த்து, மூன்று வகையாக அவர்களைப் பிரித்து அரசு சேவகத்தில் சேர்க்க வேண்டும்’(7)


இது தவிர விபசாரம் தொடர்பான ஏராளமான விதிகள் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர் மெய்யியலுக்கு நேர் விரோதமான அர்த்த சாஸ்திரம், கால ஓட்டத்தில் தமிழரை அடிமை கொண்டது வரலாறு. இடைச்சங்க மற்றும் கடைச் சங்க காலத்தில் அரசு உருவாகத் தொடங்கிய போது, அதற்கு எதிரான கருத்தியல்கள் தமிழரிடையே வளர்ந்தன.


ஆரியத்தின் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக, தமிழரின் கருத்தியல்கள் தோற்கடிக்கப்பட்டு, அரசுகள் ஆரிய மேலாதிக்கத்தோடு உருவாகின. இன்றைய இந்திய அரசு, நவீன அர்த்த சாஸ்திரக் கோட்பாடு என்பதாலேயே நடக்கிறது. அரசுத் தலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பார்ப்பனீய மேலாதிக்கவாதிகளே வைத்திருக்கின்றனர். பிரதமர், முதலமைச்சர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தம் விருப்பப்படி கோட்பாடுகளை உருவாக்க இயலாத நிலை நிலவுகிறது.


கோட்பாட்டு உருவாக்கம் (Policy Making) என்பது, பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த ‘ரா’(RAW) உளவுத்துறை, இந்து ராம் போன்றோர் அடங்கிய ஊடகத்துறை, இந்துத்துவ மத நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோர் இடத்திலே தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர், அறிவாளர் மிக மோசமாக சுரண்டப்படுகின்றன. விவசாயம் சார்ந்த அனைத்துத் தொழில்களும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப் படுகின்றன. விவசாயிகள், நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.


விபசாரம் நீக்கமற நிறைந்திருக்கிறது, சாணக்கியன் கூறும் கணிகையர் போலவே இன்றும் அரசதிகாரத்திற்குள் விபசாரப் பெண்கள் தலையீடு செய்கின்றனர். இப்பெண்களுக்கு உயர் வசதிகள் கிடைக்கின்றன. இந்திய அரசு எனும் அமைப்பு ஆரியப் பார்ப்பனர் நலன்களை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. அவ்வரசின் கோட்பாடுகள் ஆரியப் பார்ப்பன வேதங்களின் தந்திரங்களின் மறுவடிவங்களேயாகும். இன்றைய தேவைகளுக்கு ஏற்ப பனியா முதலாளிகள் ஆதிக்கத்திற்கு இசைவான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பனியா வர்க்கச் சுரண்டலும், ஆரிய இன ஆதிக்கமும் இணைந்து செல்வதற்கு ஏற்ற பொறியமைவாக இந்திய அரசு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்த் தேசிய அரசியலை முன் வைப்போர், இந்திய அரசின் அரசர் கோட்பாட்டை மேலும் விரித்து உள்வாங்கிக் கொள்ளுதல் அவசியம். அரசு மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், நிலவும் அரசின் கட்டமைப்பும் அதன் பின்புலக் கோட்பாடும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சான்றுகள்

(1). அர்த்த சாஸ்திரங்கள் எனும் சாஸ்திரங்களின் நீதி நூல் - தமிழில் ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா (ஸ்ரீ இந்து பதிப்பகம் - மே 2009) பக்கம் 12

(2). மேலது - பக்கங்கள் 29, 30

(3). மேலது - பக்கம் 30

(4). மேலது - பக்கம் 106

(5). மேலது - பக்கங்கள் 111, 112

(6). மேலது - பக்கம் 109

(7). மேலது - பக்கம் 271

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.