தேசியத் தன்னுரிமையும் ஐ.நா.மன்றமும் - கி.வெங்கட்ராமன்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
வரலாற்று ஓட்டத்தில் மனித குலம் தேசிய இனங்களாகப் படிமலர்ச்சி கண்டபிறகு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தேச அரசு அமைத்துக்கொள்வது இயல்பான பிறப்புரிமை ஆகிறது. ஆயினும் இந்த இயல்புரிமை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பல்வேறு தடைகளைத்தாண்டி, வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவும் ஆதிக்க அரசியலுக்கு முகம் கொடுத்துதான் தேச அரசுகள் உருவாக்கம் கொள்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட போர்கள் - ஆயுத மோதல்கள் தேசியத் தன்னுரிமைக்காகவே நடந்துள்ளன. 1990-க்குப்பிறகு புகுந்த உலகமய அரசியல் தேசியப் போராட்டங்களை தமது சந்தை ஆதிக்கத்திற்கு ஏற்படும் இடையூறாக பார்க்கின்றது.
மிகப்பெரிய ரத்தக்களரிக்குப்பிறகு - அதுவும் தமது ஆதிக்கத் தேவைகளுக்கு ஏற்பவே ருவாண்டா, சோமாலியா, கொசோவா, சூடான் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த தேசியப்போராட்டங்களில் உலக நாடுகள் தலையிட்டன.
தேசியத் தன்னுரிமைப் போராட்டங்கள், அத்தேசிய இனங்கள் சிக்கிக் கொண்டுள்ள நாடுகளின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே உலக நாடுகளால் எதிர்கொள்ளப்படுகின்றன.
வல்லரசுகளின் ஆதிக்க நலன்களும், அவற்றிற் கிடையிலான மோதலும்தான் இந்நிலைக்கு அடிப்படைக் காரணம் என்றாலும் தேசியத் தன்னுரிமைப் போராட்டங்களில் எந்தச் சூழலில் உலகநாடுகள் தலையிடலாம் என்பதற்கான தெளிவான சர்வதேச சட்டங்கள் இல்லாததும் ஒரு காரணமாக அமைகிறது. இதனால் தேசியத் தன்னுரிமையையும், நாட்டின் இறையாண்மையையும் எதிரெதிராக நிறுத்துவது எளிதாகிறது.
அண்மைக்கால வரலாற்றில் தேசியத் தன்னுரிமைக்கு இசைவான சட்டங்கள் உலக அரங்கில் நெடியப் போராட்டங்களுக்குப்பிறகே உருவாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அவை கடந்த 1960 திசம்பர் 14 அன்று அறிவித்த பிரகடனம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது.
‘காலனிய நாடுகள் மற்றும் மக்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம்’ என்ற பெயரில் அமைந்த அத்தீர்மானம் “அனைத்து மக்களுக்கும் தன்னுரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானித்துக் கொள்கிறார்கள். தங்களது பொருளியல், அரசியல் மற்றும் பண்பியல் வளர்ச்சிப்பாதையை சுதந்திரமாகக் கைக்கொள்கிறார்கள்” என்று அறிவித்தது. இங்கும் வேறுபல ஐ.நா.தீர்மானங்களிலும்,பன்னாட்டுச் சட்டங்களிலும் ‘மக்கள்’ (A People) என்று குறிப்பிடுவது தேசிய இனத்தையே ஆகும்.
ஆயினும் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலனி நாடுகளுக்கும், அயல்நாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசங்களுக்கும் மட்டுமே விடுதலை வழங்குவதற்கு இத்தீர்மானம் பயன்பட்டது.
அண்மையில் விடுதலையடைந்த முன்னாள் காலனிகளில் கட்டுண்டு கிடக்கிற அடிமைத் தேசிய இனங்களின் விடுதலைக்கு இது துணைசெய்வதாக அமையவில்லை. இந்த வகை தேசிய விடுதலைப்போராட்டங்கள் தீவிரம் பெறப்பெற அவற்றிற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான முயற்சியும் உலக அரங்கில் நடந்தன.
தேசிய இனத்தின் தன்னுரிமை நிபந்தனையற்று ஆதரிக்கப்பட வேண்டியது; தேசிய இறையாண்மை என்பது தேசிய இன மக்களிடம் தங்கியிருக்கிறது என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் 1975-ஆம் ஆண்டு மேற்கு சகாரா - எதிர்- மொராக்கோ என்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. ‘தன்னுரிமை என்பது அரசாங்கம் மட்டும் பெற்றிருக்கிற உரிமையல்ல. மாறாக முதன்மையாக ஒரு (தேசிய இன) மக்களுக்கே தன்னுரிமை இருக்கிறது’. என்று அத்தீர்ப்பு கூறியது.
ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆணைக்கிணங்க 1980-ஆம் ஆண்டு இரண்டு வல்லுநர்கள் தேசியத் தன்னுரிமைப் பற்றி விவாதித்து அறிக்கை தர நியமிக்கப்பட்டார்கள். ஏ கிரிட்டஸ்கு (A Critescu) மற்றும் ஹெக்டர் கிராஸ் எஸ்பீல் (Hector Gros Espiell) ஆகியோரே அவ் வல்லுநர்கள். இவர்களுள் கிரிட்டஸ்கு தேசியத்தன்னுரிமை குறித்த பொதுவான சட்டக்கோட்பாடுகளை பல்வேறு நாடுகளுடன் விவாதித்து இறுதி செய்து ஐ.நா.முன்வைத்தார் (A critescu , The Right to Self Determination, UN. document 404/1980).
“தெளிவான வரையறுக்கப் பட்ட எல்லைப்பகுதியில் தன்னாட்சி நடத்திய வரலாறும், தனித்த பண்பாடும், இழந்த தன்னாட்சியை மீண்டும் பெறுவதற்கான பொது விருப்பமும், ஆற்றலும் உள்ள (தேசிய இன) மக்களே தேசியத் தன்னுரிமைப் பெறத் தகுதிப்பெற்றோர் ஆவர்” என கிரிட்டஸ்கு அறிக்கை வரையறுத்துக் கூறியது. இது ஐ.நா. பொதுச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டு ஐ.நா.வின். முடிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஐ.நா.வின் பல்வேறு உறுப்புநாடுகளிடம் விரிவான கருத்துக்கேட்டு அணியப்படுத்தப்பட்ட கிராஸ் எஸ்பீல் ஆவணம் எந்த சூழல்களில் தேசிய இன தன்னுரிமையை உலக நாடுகள் அங்கீகரித்துத் தலையிட வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக்காட்டுகிறது (A critescu , The Right to Self Determination, UN. document 404/1980).
“தேசிய இன மக்களே தன்னுரிமைக்கு உரிமை படைத்தோர் ஆவர். (தேசிய இன) மக்கள்(People), தேசம் (Nation) என்பவை மிக நெருக்கமான கோட்பாடுகள் ஆகும். பலநேரங்களில் இரண்டும் ஒன்றையே குறிப்பதாக இருக்கின்றன. இருந்தபோதிலும் நவீன கால பன்னாட்டுச்சட்டங்கள் தன் னுரிமையை (தேசிய இன) மக்களுக்கே உரித்தானதாக திட்ட மிட்டே வரையறுக்கின்றன. காரணம் ஒரு தேசிய இனம் ஒரு தேச அரசை தனக்கென்று உருவாக்கிக் கொண்ட பிறகு அவ்வாறான வாய்ப்புகளில் தேசிய இன மக்களும் , தேசமும் ஒன்றையே குறிப்பதாக அமைகின்றன.
அவ்வாறு அமையாத வாய்ப்புகளில் யாருக்குத் தன்னுரிமை உண்டு என்பதை வரையறுப்பதற்காகவே இந்த வேறுபாடு காட்டப்படுகிறது.தேசிய இன மக்களுக்கே தேசியத் தன்னுரிமை உண்டு” (Para -56)
ஐ.நா. உறுப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிரதேசக் கட்டுக்கோப்பை பாதுகாக்கும் ஐ.நா.வின் கடமைகளை தேசியத் தன்னுரிமைப் போராட்டத்திற்கு எதிராக நிறுத்துவது வழமையாக நடந்துவருகிற ஒன்று. இச்சிக்கல் குறித்து எஸ்பீல் தனது அறிக்கையில் விவாதிக்கிறார்.
“தற்போதைய சர்வதேச மெய்நிலையை கணக்கில்கொண்டால் தேசிய இனமக்களின் தன்னுரிமை என்பது வேறு எந்த சட்ட உரிமைகளையும் விட முதன்மை பெற்றது (Jus cogens) என்பதை யாரும் மறுக்க முடியாது” என தெளிவுப்படுத்துக்கிறார் (Para 74).
தேசியத் தன்னுரிமை அமைதி வழியில் மறுக்கப்படுகிறபோது ஆயுத மோதல்களாக வடிவெடுக்கிறது என்று கூறும் எஸ்பீல், அந்த மோதலை உள்நாட்டுப்போராக (Civil war) வரையறுக்கக்கூடாது; அது தேசங்களுக்க இடையில் நடக்கும் மோதல் என்பதாகவே பார்க்கப் படவேண்டும் எனவும் தெளிவுப் படுத்துகிறார் (Para 96).
கிராஸ் எஸ்பீல் அளித்த இந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரால் ஏற்கப்பட்டு ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விரு அறிக்கைகளும் காலனிய மற்றும் வெளியார் ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்களின் தன்னுரிமையைப் பற்றியே பெரிதும் பேசுகின்றன என்று முரண்டுபிடிப்போர் உண்டு.
இச்சூழலில் தேசிய தன்னுரிமைப் போராட்டங்களை ஐ.நா.வும், உலக நாடுகளும் நிபந்தனையின்றி ஆதரிக்கவேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்ததன் காரணமாக 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தேசிய தன்னுரிமைக் குறித்த முதல் உலகமாநாடு ஒன்றை ஜெனிவாவில் ஐ.நா.கூட்டியது. பலதரப்பட்ட சட்ட அறிஞர்கள் பல கோணங்களில் ஆய்வறிக்கைகளை இம்மாநாட்டில் முன்வைத்தனர்.
சட்ட வல்லுநர் கரேன் பார்க்கர் அம்மையார் (Karen Parkar) தமது ஆய்வறிக்கையில் தமிழீழம், திபேத், காசுமீர், மேற்கு சகாரா போன்ற தேசிய இனப் போராட்டங்களை வரலாற்று வழிப்பட்டு விளக்கமாக முன்வைத்தார்.
ஏற்கெனவே ஐ.நா.மன்றங்களில் பேசப்பட்டுவரும் ‘ காலனிய மற்றும் வெளியார் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தேசிய இன மக்களின் தன்னுரிமை’ என்பதில் எடுத்துக் கொள்ளப் படவேண்டிய தன்னுரிமைச் சிக்கல்களை சட்டவழியில் விரிவுப்படுத்தினார்.
காலனிய நீக்கம் (Decolonization) என்பதற்கு சட்ட வழியில் சொல்லப்படும் விளக்கத்தை விரிவுபடுத்தினார். ஏகாதிபத்திய நாடுகள் ஒரு தேசிய இனப்பகுதியை எவ்வாறு காலனியாக அடிமைப் படுத்தினார்களோ சுதந்திரம் கொடுக்கும்போது அம்மக்களிடமே அதிகாரத்தை ஒப்படைத்து காலனிய நீக்கம் செய்யாமல் பல்வேறு தேசிய இனமக்களையும் ஒன்றுகூட்டி ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டிப்போட்டு, அத்தேசிய இனங்களுள் பெரிய தேசிய இனத்தின் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு செல்வதை சீரற்ற காலனிய நீக்கம் (imperfect Decolonization) என்று வரையறுத்தார்.
இவ்வாறு சீரற்ற காலனிய நீக்கம் நிகழ்ந்துள்ள இடங்களில் காலனிய நீக்கத்தை முழுமைப்படுத்த பழைய காலனிகளுக்குள் கட்டுண்டுக்கிடக்கிற தேசிய இன மக்களுக்கு தன்னுரிமை வழங்கி இறையாண்மையை மீட்டுக்கொள்ள உதவி செய்வதே ஐ.நா.வின் கடமை என்று கரேன் பார்க்கர் வலியுறுத்தினார்.
அதேபோல் வரலாற்றைத் திரித்துக்கூறி சீனா திபெத்தை ஆக்கிரமித்திருப்பது வெளியார் ஆக்கிரமிப்பு என்று வரையறுத்து அங்கும் காலனிய நீக்கம் நிறைவு பெறச்செய்ய வேண்டும் என அவர் கோரினார்.
தேசியத் தன்னுரிமைப் போராட்டங்களை விசாரித்து ஐ.நா.வுக்கு அறிக்கை அளிக்க தன்னுரிமை ஆணையம் (Self Determination Commission) நிறுவ வேண்டும் என்று பிராங்கோவிட்ஸ் (Frankovits) என்ற அறிஞரும், தெளிவான வரலாறும் இறையாண்மை யை மீட்டுக்கொள்ளும் உறுதியான விழைவும் உள்ள தேசிய இன மக்கள் அடங்கிய இரண்டாவது அவை ஒன்றை ஐ.நா.வில். ஏற்படுத்தலாம் என காசுமீரைச் சார்ந்த மஜீத் ட்ராம்போ (Majith Tramboo) என்ற வல்லுநரும் யோசனைகளை இம்மாநாட்டில் முன்வைத்தனர்.
ஆயினும் 2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பைப் பயன்படுத்தி உலகில் நடக்கிற அனைத்து உரிமைப் போராட்டங்களையும் பயங்கரவாதம் என்று வரையறுப்பதில் உலக வல்லரசுகள் பெருமளவு வெற்றியடைந்தன.
இந்தச்சூழலிலும் 2004-இல் ஐ.நா.நிறுவிய உயர்மட்டக்குழு (உலகம் சந்திக்கும் அச்சுறுத்தல்கள், சவால்கள் மற்றும் மாறுதல்கள் குறித்த உயர்மட்டக்குழு) தேசியத்தன்னுரிமை மறுப்பில் ஒரு உறுப்பு நாட்டு அரசு எல்லைகடந்து போகுமானால் அவ்வாறான சூழலில் உலகநாடுகள் தலையிடுவதுதவிர்க்க முடியாதது என்று கூறியது.
இந்நிலையில் தேசியத் தன்னுரிமைக்காகப் போராடும் இயக்கங்கள் உலக வல்லரசுகளின் காய் நகர்த்தல்களை திறமையாக எதிர்கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில் இன்று அப்பழுக்கற்ற - சனநாயக வழிப்பட்ட சர்வதேசியம் எதுவும் நடப்பில் இல்லை.
அந்தந்த தேசங்களும் அல்லது நாடுகளும் தமது தேவைகள், அல்லது தமது ஆதிக்க நலன்கள் ஆகியவற்றிக்கு உட்பட்டே உலகை ஹிμம்கின்றன. இந்த மெய்நிலையை புரிந்துகொண்டு வியூகம் வகுக்கும் விடுதலைப்போராட்டமே வெற்றி பெற முடியும்.
அதற்குத் தக உலக அரங்கில் தேசியத் தன்னுரிமைக்கு ஆதரவான பன்னாட்டுச்சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு அறிவாளர்களும், மனித உரிமைப்போராளிகளும் களம் காணுதும் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
Leave a Comment