ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? - ரான் ரெட்னூர்

மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது.

முழுக்கட்டுரைகளுக்கும் காண்க: http://www.ronridenour.com/.

தமிழில்: அமரந்தா


“உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்... எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் எங்கள் சகோதரர்கள்” என்றார் ஃபிதல் காஸ்த்ரோ.

‘புரட்சிக்கான கருத்தியல் உந்து சக்தியாக விளங்குபவன் புரட்சியாளன். அவன் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை மறந்தால், அவன் வழிநடத்தும் புரட்சி, மற்றவர்களுக்கு உந்துதல் அளிக்கும் ஆற்றலை அறவே இழந்துவிடும். அவனும் சொகுசான செயலற்ற நிலையில் அமிழ்ந்துவிடுவான். இந்த நிலையை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாத நமது எதிரியான வல்லரசியம், நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உருவாக உழைப்பது நமது கடமை. அதே வேளை அது புரட்சிக்கான முன் நிபந்தனையும் கூட. இதைத்தான் நாம் நம் மக்களுக்குக் கற்பிக்கிறோம்’ என்று எழுதினார் சேகுவேரா.

இலங்கை இனவெறி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததன் மூலம் க்யூபா, பொலிவியா, நிகராகுவா அரசுகள்ள்ள்ள்ள் ‘சனநாயக சோசலிசக் குடியரசான’ இலங்கை வாழ் தமிழ் மக்களை மட்டுமல்லாது ‘பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும்’, ‘ஒடுக்கப்பட்ட மக்களையும்’ முற்றிலுமாகக் கைவிட்டு விட்டன. ‘லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான மாற்றுப் பொருளாதார அமைப்பைச்(Bolivian Alternative for Latin America -ALBA - ஆல்பா) சேர்ந்த கியூபாவும், பொலிவியாவும், நிகராகுவாவும் “மனித உரிமைகளைப் பேணி, பாதுகாத்ததற்காக” இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பில், 2009 மே 27ஆம் தேதி கையொப்பமிட்டன. இந்நாடுகள் 1983ஆம் ஆண்டு தொடங்கி 2009 மே 19 அன்று தோற்கடிக்கப்படும் வரை அரசுக்கு எதிராகப் போரிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ‘பயங்கரவாதத்தை’க் கண்டித்தன.

போரின் இறுதியாண்டில் இலங்கை அரசு சட்ட விரோதமாக, கொடூரமாக ஐந்து இலட்சம் தமிழர்களை கண்காணிப்புக் காவலில் வைத்தது. இவர்களில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பேர் புலிகள் சரணடைந்தபின், “நலவாழ்வு மையங்களில்” அடைத்து வைக்கப்பட்டனர். ஆறு மாதங்களுக்குப் பின்னர், சில ஆயிரம் பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும்” நிலைக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அவர்களின் நிலை - உணவும் தண்ணீரும் அடிப்படை சுகாதார வசதிகளுமற்று நூற்றுக்கணக்கானோர் இறந்து போய்விட்டனர்.

ஞாயமற்ற ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்து கையொப்பமிட்டார்களே தவிர ‘முற்போக்கு - புரட்சிகர - சோசலிச ‘ஆல்பா’ அரசுகளில் எதுவுமே, சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையோ, அடிப்படை வசதிகள் எதும் இல்லாதிருப்பதையோ சுட்டிக்காட்டி இலங்கை அரசை கண்டிக்கவே யில்லை.

இங்கிலாந்திடமிருந்து 1948- இல் விடுதலை பெற்றது முதல், சிங்களத் தலைமையிலான இலங்கை அரசு தமிழர்களை எப்போதும் முறை கேடாகவும், தாழ்வாகவும் நடத்தியதோடு, இனப்படுகொலை களையும் அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளது. இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வந்துள்ளதை நான் ஆதாரப் பூர்வமாக விளக்குகிறேன்.

இதில் தொடர்புடைய மேற்சொன்ன நான்கு ஆல்பா கூட்டணி நாடுகளும் உண்மையை புறக்கணித்ததோடு, இப்படுகொலை குறித்த விசாரணை ஏதும் நடை பெறாமல் தடுத்து, இலங்கையின் குரூரமான இனவெறி அரசுக்கு ஏன் ஆதரவு அளித்தன என்பதற்கான காரணங்களையும் ஆராய முற்படுகிறேன்.

சம உரிமைக்கான தமிழர்களின் போராட்டத்தையும், மேற்கத்திய நாடுகளும், அவற்றிற்கு எதிரான சீனா, ஈரான், ஆகிய நாடுகளுக்குமிடையே நடைபெற்று வரும் புவி அரசியல் அதிகாரத்திற்கான போட்டிகளையும் விளக்கி, இறுதியாக தமிழர்களின் இன்றைய நிலையைச் சொல்கிறேன்.

ஐ.நா. மனித உரிமை அமைப்புத் தீர்மானம் S-11/1: மனித உரிமைகளைப் பேணவும், பாதுகாக்கவும் இலங்கை அரசுக்கு உதவியளித்தல் போர் முடிந்த பின்பு, 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை அமைப்பின் 17 நாடுகள் இலங்கை நிலைமை குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டின. ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் நவீன்பிள்ளை, இலங்கை, உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களையும், ‘சுதந்திரமான நம்பகமான சர்வதேச ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்’ எனக் கூறினார்.

(நவீன்) பிள்ளையின் கடமையுணர்வும், இரக்கவுணர்வும் கொண்ட நடுநிலையான இந்த முன்மொழிவு சபையில் அனுமதிக்கப்படவோ, விவாதிக்கப் படவோ இல்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கெனடா, அர்கென்தினா, உருகுவாய், மெக்சிகோ, சிலே ஆகிய 17 உறுப்பு நாடுகள் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே முன்மொழிந்தன. அதாவது தனது மிருகத்தனமான நடவடிக்கைகளை இலங்கை அரசு தானே விசாரிக்க வேண்டும் என்ற பயனற்ற படு பிற்போக்கான யோசனையை முன்மொழிந்தன பெரும்பாலான அணிசேரா நாடுகள் ஐ.நா.வும், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும் (தமிழ் மக்களுக்கு) “உடனடியாக தங்கு தடையின்றி” மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

அணிசேரா நாடுகளுள் ஒன்றான சிலே மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக, ஆய்வு ஏதும் தேவையில்லை - உடனடியாக உதவிகள் வழங்க வேண்டுமென வாக்களித்தது. “உடனடியான தங்கு தடையற்ற” மனிதாபிமான உதவி என்பது பின்னர் “தேவைக்கேற்றவாறு உதவிகளைப் பெற வழி செய்வது” எனச் சுருங்கி பின்னர் அதுவே குடிநீர், உணவு, மருந்து ஆகியவற்றை ஆயுதங்களாக எதிரியின் மீது பயன்படுத்தும் உரிமையை இலங்கை அரசுக்கு அளித்தது. ஆம், இப்போது இலங்கை அரசின் எதிரி தமிழ் மக்கள் தான். தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அல்ல.

மேற்சொன்ன ஐ.நா. மனித உரிமை அமைப்புச் கூட்டத்தில் இலங்கை பார்வையாளராகக் கலந்து கொண்டது. 2006 முதல் ஆறு ஆசிய உறுப்பினர்களுள் ஒன்றாக அமைப்பில் உறுப்பு வகித்த இலங்கை, 2008இல் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது.

ஓராண்டு காலத்திற்குப் பின்னர், இந்த உண்மையை எளிதாக மறந்துவிட்டு, பெரும்பாலான அணிசேரா நாடுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்துவிட்டன.

ஆனால் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் உலகெங்கிலும் மதிக்கப் பெறும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செங்மாண் டுட்டு, அதால்ஃபோ பெரேஸ் எங்குய்வெல் ஆகியோரும் இலங்கை அரசை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“இலங்கை அரசப்படைகளின் திட்டமிட்ட அத்துமீறல்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கொடூரமானவை. சொந்த மக்களையே சித்ரவதை செய்து சட்டத்திற்குப் புறம்பாக எண்ணற்ற கொலைகளை செய்து வருகிறது” என்று கூறி 2008 மே மாதத்தில் மனித உரிமை அமைப்பில் இலங்கை இடம் பெறுவதை எதிர்த்து டுட்டூ பேசினார்.

ஓராண்டு கழித்து இதே மனித உரிமை அமைப்பு, இலங்கை அரசு தொடர்ச்சியாக ‘மனித உரிமைகளைக் காக்கும் கடமையையும் சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதாக, அதனை வெட்கமின்றி பாராட்டுகிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான இந்தத் தீர்மானத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க உதவிய நாடு நான் எட்டாண்டுக்காலம் தங்கியிருந்து அரசுப் பணியில் பங்கேற்ற நாடான எனது நேசத்திற்குரிய கியூபா என்பது தான் வேதனையளிக்கிறது.

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்பட்ட S- 11/1, தீர்மானம் 29 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

“ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கையின் இறையாண்மை, எல்லை, சுதந்திரம் இவற்றோடு நாட்டு மக்களைப் பாதுகாத்து, பயங்கரவாதத்தை எதிர்க்கும் தனி உரிமையையும் மதிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அதே வேளையில் பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தி அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிக்கிறோம்”

“இலங்கை அரசு ஐ.நா. அமைப்புகளின் உதவியோடு போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகளை குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள், உணவு, மருந்துகள், மருத்துவ சேவைகள் ஆகியவற்றை அளித்து வருவதால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்”

1. “போரினால் இடம் பெயர்ந்த மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம்”

2. “அனைத்து மனித உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதில் இலங்கை அரசின் கடப்பாட்டை வரவேற்கிறோம். மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதில் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் விதிகளைத் தொடர்ந்து கடைபிடிக்க ஊக்கம் அளிக்கிறோம்”

5. “போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச மனித நேய அமைப்புகளுக்கு அனுமதியளித்த இலங்கை அரசின் கட்டுப்பாட்டுணர்வைப் பாராட்டுகிறோம்”.

மேலே குறிப்பிடப்பட்ட 1, 2, 5 ஆகியவை உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை; இலங்கை அரசு தமிழ் மக்களையோ அவர்களது உரிமைகளையோ மதிக்கவில்லை. அவர்களது “உடனடித் தேவைகளை” நிறைவேற்றவும் இல்லை.

பயங்கரவாதமும் இனப் படுகொலையும்

1992ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ‘பங்கரவாத அமைப்பு’ என முத்திரை குத்தியது. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் 1997ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்த பின்பு தான் 1998ஆம் ஆண்டு இலங்கை அரசு புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என அறிவித்தது.

2006 மே 30 அன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடையும் விதித்தது. விடுதலைக்குப் பின்பான இலங்கை வரலாற்றில் தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துள்ளன.

1950ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று இலங்கை அரசு ஐ.நா.வின் வரைவுப்படி இனப்படுகொலையில் ஈடுபடுவதில்லை என உறுதி ஏற்றது. 1948 டிசம்பர் 9 அன்று நடந்த இனப்படுகொலை தடுப்பிற்கும், அக்குற்றம் இழைப்போரை தண்டிப்பதற்குமான ஜெனீவா மாநாட்டின் தீர்மானங்கள் 1951 சனவரி 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. அதன் விதி -II (5) பின்வருமாறு.
“எந்த ஒரு தேசிய இனத்தையோ, இனக்குழுவையோ, மரபினத்தையோ அலலது மதக்குழுவையோ முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்கத்துடன் கூடிய கீழ் வரும் அனைத்து செயல்பாடுகளும் ‘இனப்படுகொலை’ என இம்மாநாடு வரையறுக்கிறது;.

“தமிழினத்தை முழுமை யாகவோ அல்லது அதன் ஒரு பகுதியினரையோ அழித்தொழிக்கும்” வேலையைத்தான் கடந்த அறுபதாண்டு காலமாக இலங்கையின் சிங்கள அரசுகளும், புத்தபிக்குகளும் செய்து வந்துள்ளனனர். இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

ரீகன் தலைமையிலான வட அமெரிக்க அரசின் உதவி அடார்னி ஜெனரலாக பணியாற்றிய புரூஸ்ஃபெயின் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய இராஜபக்சே மீதும் இராணுவத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சரத்பொன்சேகா மீதும் “தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்துவதாக” குற்றம்சாட்டி, கலிபோர்னிய மைய மாவட்ட நீதிமன்றத்தில் 2009 பிப்ரவரி மாதத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

கோத்தபய ராஜபக்செ வட அமொரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார். பொன்சேகா வடஅமெரிக்காவில் தங்கியிருப்ப தற்கான உரிமையளிக்கும் பச்சை அட்டையை வைத்துள்ளவர். எனவே இவ்விருவரின் பேரிலும் வட அமெரிக்காவில் வழக்குத் தொடுக்க முடியும். “சட்டத்திற்குப் புறம்பாக 3550 பேரை கொலை செய்தது, 10,000 பேர்களுக்கு உடலில் காயங்களை ஏற்படுத்தி துன்புறுத்தியது, 13 இலட்சம் பேரை வாழ்விடங் களிலிருந்து வெளியேற்றியது” ஆகிய குற்றங்களுக்காக இவ்விருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூன்று ஆல்பா உறுப்ப நாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இலட்சக்கணக்கில் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப் பட்ட தமிழர்கள் சிங்களர்களால் மிருகத்தனமாக நடத்தப்படுவதையும் தொடர்ந்து அவர்கள் பாரபட்சமாக இழிவாக நடத்தப்படுவதையும் ஆல்பா நாடுகள் அறிந்திருக்க வேண்டும்.

‘மொழி, மதம், பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அனைவருக்கும் சமஉரிமை’ என்னும் ஆல்பாவின் கொள்கைக்கு இது முற்றிலும் முரணானது. மிக அண்மையில் உருவாக்கப் பட்ட பொலிவியாவின் புதிய அரசியல் சாசனம், பொலிவியா வாழ் மக்கள் ‘எம்மதத்தவராயினும், எம்மொழி பேசுவோராயினும் அனைவரையும் மதிக்கும் பல்தேசியங்களின் நாடு’ என்று பிரகடனப்படுத்துகிறது.

வெனிசுவேலாவின் புதிய அரசியல் சாசனமும் இதனையே பிரகடனப்படுத்துகிறது. அப்படியிருந்தும், இத்தகைய மக்கள் அரசுகள் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற இனவெறி இலங்கை அரசின் கைகளில் வீழ்ந்துள்ளன. இலங்கை அரசை ஆதரிக்கும் வளரும் நாடுகள், தங்களது பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனவா?

சீனாவும் ஈரானும் வளரும் நாடுகளுக்குத் தேவையான மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் தந்து உதவுவதாலேயே அந்நாடுகளின் தவறான நிலைபாடுகள் கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லையா?

அவ்வாறிருப்பின் வளரும் நாடுகளின் இந்நிலைப்பாடு சோசலிசக் கருத்தியலுக்கும், மனிதநேயக் கோட்பாடுகளுக்கும் முரணானது. இந்நிலைப்பாடு அறநெறிகளுக்கு எதிரானது. அரசியல் ரீதியான அடிபணியாமல், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக் கொள்ள முடியாதா?

மற்றொரு பிரச்சினை மதச்சார்பின்மை. ஆல்பா நாடுகளும் உண்மையில் சோசலிசத்தை நோக்கிச் செல்லும் அரசுகளும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு மதத்தை அதுவும் ஒரே ஒரு மதத்தை மட்டும் தேசிய மதமாகவும் அரசின் மதமாகவும் அறிவித்துள்ள இலங்கை அரசை மதச்சார்பற்ற தேசிய அரசுகளும் அமைப்புகளும் எவ்வாறு “சனநாயக சோசலிச” அரசாகக் கருத முடியும்? மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் மட்டும் தான் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும்.

முடிவுரை

பல பத்தாண்டு காலமாக க்யூபாவையும், ஆல்பா நாடுகளின் உருவாக்கத்தையும் ஆதரித்து வந்துள்ள இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள முற்போக்குத் தமிழர்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ‘இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்’, தமிழ்நாட்டில் கியூபா, ஆல்பா நாடுகளுக்கு ஆதரவாக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. சேகுவேரா, ஃபிதெல்காஸ்த்ரோ உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்கர் களால் எழுதப்பட்ட புத்தகங்களை தமிழில் கொண்டு வந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை சபையில் ஆல்பா நாடுகளும், கியூபாவும் இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டு வந்த தீர்மானத்தைக் குறித்து அறிந்தபின், அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். கியூபா, ஆல்பா நாடுகளின் செயல்பாட்டைக் கண்டித்து அமரந்த்தா எழுதிய கடிதத்தின் ஒரு சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. அமரந்த்தா 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலத்தீன் அமெரிக்காவைப் பற்றிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சில நூல்களைத் தானே எழுதியுள்ளார்.

“தமிழருக்குச் சொந்தமான இலங்கை மண்ணில் தமிழினம் துடைத்தழிக்கப்பட வேண்டும் என இந்நாடுகள் விரும்பக் காரணமென்ன? தமிழினத்துக்கு எதிராகவும் இலங்கைப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் குரல் கொடுக்கும் கொடூரமான முடிவை எடுக்கும்படி இவர்களுக்கு இப்பிரச்சினை குறித்து பிழையான வரலாற்றுத் தகவல்களை அளித்தது யார்? இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககாக உயிர் நீத்த சர்வதேசியவாதியான மாவீரன் சேகுவேராவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் முன்னெப்போதைக் காட்டிலும் இக்கணத்தில் நம்மைத் திணறச் செய்கிறது”

http://www.greenleft.org.au/ எனும் இணையதளத்தில் கருத்துக்களை வெளியிடும் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய இடதுசாரி அமைப்பான ‘சோசலிசக் கூட்டணி’யின் (Democratic Socialist Perspective - DSP) கருத்துகளோடும் நான் உடன்படுகின்றேன். “கியூபா, வெனிசுவேலா, பொலிவியா உள்ளிட்ட புரட்சிகர இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உண்மை நிலையைத் தெளிவாக்கி, இலங்கை அரசுக்கு அவை அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை அங்கீகரிக்கச் செய்ய நாம் உறுதியேற்க வேண்டும்.

ஒடுக்குமுறை அரசுகளின் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற போலியான முழக்கத்தை நம்பி, மூன்றாமுலக நாடுகளிலுள்ள அசலான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் எந்தக் காரணத்திற்காக ஆதரிக்கத் தவறினாலும், காலப்போக்கில் அது புரட்சிகர அரசுகளுக்கும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்”

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.