ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க.. -பொன்னுச்சாமி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)


பாலியல் தொழில் செய்ததாக, அண்மையில் கைது செய்யப்பட்டார், நடிகை புவனேஸ்வரி. அவர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் திரைத்துறையில் பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பெயர் பட்டியலை சொன்னதாகக் கூறி அந்த நடிகைகளின் புகைப்படங்களுடன் தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. (புவனேஸ்வரி அப்படி கூறினார் என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரையிலும் ”தேசிய” ”நடுநிலை” நாளேடு தினமலர் சமர்ப்பிக்கவில்லை).இதில் நொந்து போன நடிகர் சங்கத்தினர் காவல்துறை ஆணையரிடம் தினமலர் நிர்வாகத்தினர் மீது கொடுத்த புகாருக்கு, தினமலர் சென்னைப் பதிப்பின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். நடிகர்களின் புகாருக்கு என்றைக்கும் ஒரு ‘மார்க்கெட்’ உண்டுதானே!

அத்துடன், நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் தங்களைப் பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகையாளர்களை நடிகர், `நடிகைகள் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

மறுநாளே, தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை யாளர்கள் கொதித்தெழுந்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோனதாக சாலை மறியலில் தொடங்கி, கண்டனத் தீர்மானங்கள் வரை நிறைவேற்றினர். ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கமும் லெனின் கைதைத் தவறு என்று கண்டித்தன.

அண்மைக் காலங்களில் பத்திரிகையாளர்கள் எந்த ஒரு சிக்கலுக்கும் இப்படி தங்கள் ஒற்றுமையைப் பதிவு செய்தது கிடையாது. பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் செய்தி திரட்டுவது வேண்டுமானால், செய்தியாளர்களின் வேலையாக இருக்கலாம். செய்தியாளர்கள் திரட்டித் தரும் அனைத்தும் பத்திரிகைகளில் வந்துவிடுவதில்லை.

இன்னின்ன செய்திகள் தான் வரவேண்டும், இந்தச் செய்தி இந்தப் பக்கத்தில்தான் வரவேண்டும், முதல் பக்கத்தில் இந்தச் செய்திதான் என்பதை எல்லாம் முடிவு செய்வது எல்லாம் பத்திரிகை முதலாளிகள்தான். உழைக்கும் பத்திரிகையாளர்களான செய்தி ஆசிரியர்கள், இணை, உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் இவர்களில் யாருக்கும் பணியில் சுதந்திரம் என்பதே கிடையாது. ஆனால் வெளியே பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்.

பத்திரிகை முதலாளிகளால் ஏற்கெனவே உட்புகுத்தப்பட்ட அரசியலைச் சார்ந்தே அவரின் கீழ் உழைக்கும் பத்திரிகையாளர்களின் சுதந்திரமும், கருத்தும், முடிவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. தினமலர் விடயத்தில், பத்திரிகை தவறு செய்திருப்பது உண்மை என்றால், அதற்காக அந்தப் பத்திரிகை முதலாளி மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே ஒழிய, எந்த சுதந்திரமும் இல்லாத பத்திரிகையாளர்கள் மீது தன் அதிகாரத்தை காவல்துறை காட்டியிருக்கக் கூடாது.

இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கருத்து, முதலாளிகளுடன் மோத எந்த அரசும் என்றைக்கும் தயாராக இருந்தது இல்லை. பத்திரிகையாளர்களும் பத்திரிகையாளர்கள் சங்கமும் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது விவகாரத்தில் உழைக்கும் பத்திரிகையாளர் மீதான நடவடிக்கையைத்தான் கண்டித்திருக்க வேண்டும். மாறாக, ஆதாரமின்றி அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கும், அதன் முதலாளிக்கும் ஆதரவாக செயல்பட்டிருக்கக் கூடாது.

பத்திரிகையாளர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்குமேயானால், பத்திரிகையாளர் முத்துக்குமார் மரணத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். செய்யவில்லையே? (ஒரு மாத இதழில் பக்க வடிவமைப்பாளராக வேலை செய்த முத்துக்குமார், பத்திரிகையாளரா என்று, கேட்ட பத்திரிகை யாளர்களும் உண்டு. பத்திரிகைச் சட்டத்தின்படி யார், யாரெல்லாம் பத்திரிகையாளர்கள் பட்டியலில் வருவார்கள் என்பது கூட பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை)

இந்தச் சிக்கலில் கருத்து, சுதந்திரம் பற்றி எல்லாம் பேசும் பத்திரிகையாளர்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சக பத்திரிகையாளனுக்கு அநீதி இழைக்கப்படும் போதோ, வேலை பறிக்கப்படும் போதோ அதை எதிர்த்துப் போராடும் துணிச்சல் வந்ததாக வரலாறு உண்டா? கேட்டுச் சொல்லுங்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அமைதி காத்த பத்திரிகையாளர்கள் அதே காலகட்டத்தில் சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே விக்ரமதுங்கே கொல்லப்பட்டதற்காக கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை பத்திரிகையாளர் சங்கத்தினர் நடத்தினார்கள். மோசமான விளைவுகள் நிகழும் என்று தெரிந்தே சிங்கள அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கட்டுரைகள் எழுதி வந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் திஸநாயகம் விசாரணையின்றி 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டார். (அமெரிக்க அதிபர் ஒபாமா திஸ நாயகத்தின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தார்)

வெகு அண்மையில் நடந்த பத்திரிகைச் சுதந்திரம் மீதான இந்த அடக்கு முறைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு கண்டனம் எதையும் தெரிவிக்க வில்லையே ஏன்?
இலங்கையில் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கை,கால்களைக் கட்டி சிங்களப்படையாட்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சி ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோலாட்சியை உலகிற்குக் காட்டியதே. அதை வெளியிட்டது யார் தெரியுமா? இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவிலாளர்கள் என்கிற அமைப்பு.

இந்த அமைப்பில் உள்ளவர்கள் எல்லாம் சிங்களப் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கருணாநிதியை ‘அய்யா’ என்றும், ஜெயலலிதாவை ‘அம்மா‘ என்றும் அழைக்கும் நம் பத்திரிகையாளர்கள் தங்களில் ஒருவரின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே முடிந்தவர்கள். வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால்?

இரு மாதங்களுக்கு முன் திருப்பூரில் தினமலர் நாளிதழில் திருப்பூர் மாநகராட்சிப் பற்றி வெளியான அவதூறு செய்திக்காக அந்த செய்தியை சேகரித்த நிருபரை மாநகராட்சி மேயர் செல்வராஜ் (திமுக) தாக்க முற்பட்டார். அந்த நிகழ்வைக் கண்டித்து திருப்பூர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தினமலரில் இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் கூட (மேயரால் அவமானப்படுத்தப்பட்ட நிருபர் உட்பட) கலந்து கொள்ள வில்லை என்பதில் இருந்தே அவர்களின் நேர்மையையும், துணிச்சலையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால், அப்படிப் பட்ட தினமலர் நாளிதழ் மீதான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் பிற பத்திரிகையாளர்கள் சங்கத்தைப் போல திருப்பூர் சங்கமும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றியது என்பதுதான் அதியற்புதமான நிகழ்வு. தினமலருக்கு ஆதரவாக களம் கண்ட தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களே, இனி உங்களில் யாரும் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசாதீர்கள்.

அடிமைகளாய் வாழ்வதிலேயே அகமகிழ்ந்து போகும் உங்களுக்கு எதற்கு ஒரு கருத்து, ஒரு சுதந்திரம்?

இப்படிப்பட்ட உங்கள் அகராதிப்படி நோக்கினால், மாவீரன் முத்துக்குமார் பத்திரிகையாளன் இல்லைதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(பின் குறிப்பு) நடிகைகளைப் பற்றிய அவதூறு செய்திக்கு மறுநாளே தினமலர் வருத்தம் தெரிவித்துவிட்டது. பத்திரிகையாளர்களை வசைபாடிய தற்காக சில நடிகர்களும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மொத்தத்தில் யாருக்குமே வெட்கம் இல்லை!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.