ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மனதை சிதைக்கிறது சிறை - மைசூர் சிறையிலிருந்து அன்பு


(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை)
மைசூர் நடுவண் சிறையிலிருந்து எழுதப்பட்ட உருக்கமான மடல்
இன்றைய சமூகத்தில் பல்வேறு பிரச்ச¤னைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், சமூக மக்களால் புறக்கணிக்கப்பட்ட இடமான இச்சிறைச் சாலையில் இருந்து வரும் எங்களின் அவலக் குரல், பொது மக்களுக்கோ அல்லது அறிவு ஜீவிகளின் காதுகளுக்கோ கேட்கிறதோ இல்லையோ, தெரியவில்லை. நாங்களும் இந்நாட்டு மக்கள் தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை எங்கள் நிலை.

சிறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள், உழைப்பாளிகள், தலித்துகள், தொழிலாளிகள். ஒரு தவறுக்காக தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும், தண்டனை அனுபவிப்பது அவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தான். ஒரு சிறையாளியின் குடும்பத்தையும் சிறைக்கைதியாகவே பார்க்கும் அவல நிலை நம் சமூகத்தில் உள்ளது.

“குற்றத்தை விட்டு விட்டு, குற்றவாளியை வெறுக்கும் மனநிலை” தான் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சிறைவாசியை விட அவன் குடும்பம் படும் அவமானம் மிகக் கொடுமையானது. சிறையில் இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள். இவர்களால் பணம் செலவழித்து சொந்தமாக வக்கீலை அமர்த்தி வழக்கு நடத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள்.

இப்போது இருக்கும் சிறைச் சட்டம், 1894 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் இயற்றப்பட்ட சட்டம். வெள்ளையனுக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கிளர்ச்சிகள் நடந்த காலகட்டம் அது. நமது மக்களை அடக்கி ஒடுக்கி ஆள ஒரு கடுமையான சிறைச் சட்டம் தேவைப்பட்டது.

அதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இன்றைய சிறைச்சட்டம். சிறையில் இருப்பதே கொடுமையான விசயம். அதிலும் அரசியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசிகளின் நிலைமை மிகக் கொடுமையானது. ஆயுள் தண்டனை என்பது உயிர் உள்ள வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது வெள்ளையன் போட்ட சட்டம். இதையே 1947க்குப் பின் சிறு சிறு மாற்றங்கள் செய்து சிறையில் நன்னடத்தையுடன் அதாவது உயிரிருந்தும் உணர்வற்று, சிறையில் அதிகாரிகள் அடித்தாலும் உதைத்தாலும், நாம் எதிர்த்துப் பேசாமல் 20 ஆண்டுகள் இருந்தால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதை மாநில அரசுகள் இதுவரையிலும் பின்பற்றி வருகின்றன.

நன்னடத்தை கொண்ட ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு நிலைபாட்டைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசியையும் விடுதலை செய்யவில்லை. கடந்த ஆண்டு திமுக அரசு 1409 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் தங்களுடைய தண்டனையில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து இருந்தால் போதுமானது என்று விடுதலை செய்தார்கள். இது வரவேற்கத்தக்க நல்ல முடிவு தான்.

2006 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் J.D.S., B.J.P. கூட்டு அரசாங்கம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இருக்கும் ஆண் ஆயுள் தண்டனை சிறைவாசியையும், ஆயுள் தண்டனை பெற்ற பெண் சிறைவாசிகள் தங்கள் தண்டனை காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களையும் மொத்தம் 309 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்தனர்.

ஆனால் கர்நாடகத்தில் இப்போது உள்ள பா.ச.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சிறைவாசியையும் விடுதலை செய்யவில்லை, அரசாங்கத்தில் அமருபவர்களைப் பொருத்து இந்த முடிவு செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் விடுதலையை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டுள்ள சிறைவாசிகளின் மன உளைச்சலை யார் அறிவார்கள்? ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலையில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடிய சிறைவாசிகளுக்கு இதுவரை ஒரு தெளிவான தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் தரவில்லை. பல்வேறு கால கட்டங்களில் பல நீதிபதிகள் பலதரப்பட்ட தீர்ப்புகளை கொடுத்துள்ளார்கள். ஆனால் ஆயுள் தண்டனை சிறைவாசி தன் விடுதலையை உரிமையாக இதுவரை கோர முடியவில்லை.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி 2007ஆம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் மொத்தம் 1,276 சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 சிறைவாசிகளை சிறை வைக்கலாம். இந்த சிறைகளில் விசாரணை சிறைவாசிகளே 2 லட்சத்து 50 ஆயிரத்து 727 பேர் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கையில் 66.6% ஆகும் என்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் திரு. அஜய் மேகனே கூறியுள்ளார்.

இவரின் கூற்றுப்படியே விசாரணை சிறைவாசிகளே அளவுக்கு மீறி இருக்கும் போது அதில் தண்டனை சிறைவாசிகளையும் சேர்த்தால் அளவை விட பல மடங்கு அதிகமாகி விடும். அப்படிப்பட்ட மக்கள் நெருக்கடி உள்ள சூழ்நிலையில் பல்வேறு மன உளைச்சலும், சுகாதாரம் இல்லாமலும் தன் தண்டனை காலத்தை ஒரு ஆயுள் சிறைவாசி எப்படி கழிக்க முடியும்?

ஆயுள் தண்டனை பெற்று 10, 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஒருவன் விடுதலை ஆவான் என்றால், அவனால் அவன் குடும்பத்துக்கோ, சமூகத்துக்கோ எந்தப் பயனும் இல்லை. அவனின் உழைக்கும் சக்தி முழுவதையும் சிறையிலேயே கழித்து விட்டு அனைவருக்கும் ஒரு பாரமாகவே வாழ வேண்டிய ஒரு நிலை உள்ளது.

என்னுடைய 12 ஆண்டு சிறை வாழ்க்கையில் திருமணம் ஆன பின் சிறைக்கு வந்த பெரும் பாலானவர்களின் திருமண வாழ்வு முறிந்து போய் உள்ளது. அப்பா மகன், அப்பா மகள், கணவன் மனைவி சம்பந்தங்களும், ஒட்டுமொத்த குடும்ப கட்டமைப்பே சிதைந்து போகிறது. இதன் தாக்கமாக மன நோய்க்கு ஆளானவர்கள் அதிகம். சமுதாயத்தில் தவறுகள் நடக்க பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் உள்ளன.

தவறு செய்தவனுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. தவறு செய்யும் போது தண்டிக்கும் சட்டம், தன் தவறை நினைத்து வருந்தும் போது அவனை வாழ விட கடமைப்பட்டுள்ளது. எந்த வகையிலும் சமூகம் சட்டத்தைச் சார்ந்து இருக்கவில்லை. இது ஒரு சட்ட ரீதியான கற்பனையே. மாறாக சட்டமே சமூகத்தைச் சார்ந்து இருக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கை நிலை மாறும் போது சட்டமும் மாறித்தான் ஆக வேண்டும். சிறைச் சட்டங்கள் இன்னும் மென்மையாக்கப்பட வேண்டும். “கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளை உருவாக்கும்” என்பதை கவனத்தில் கொண்டும் சிறையில் இருப்பவர்கள் பெரும் பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் தான் என்பதைக் கவனத்தில் கொண்டும் இந்த சிறை சட்டத்தை மாற்றி அமைத்தே தீரவேண்டும்.

ஆயுள் தண்டனை என்பது 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானது என்னும் குரல் இந்தியா முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதையே தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். கடந்த ஆண்டு திமுக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தது போல இனிவரும் ஆண்டுகளில் தொடர வேண்டும்.

மக்கள் விரோத சிறைச் சட்டங்களையும், விடுதலை சிபாரிசு கமிட்டியின் விதிமுறைகளையும் களைந்துவிட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் சிறை பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் கொண்ட ஒரு குழுவை அந்தந்த மாநில அரசுகள் அமைத்து, புதிய சிறை சட்டத்தையும், சிறை மேம்பாட்டையும் உருவாக்க வேண்டும்.

இந்திய சிறை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பின் 1983ஆம் ஆண்டு நீதிபதிகள் திரு. ஆனந்த், திரு. நாராயண், திரு. முல்லா ஆகிய மூவர் குழு ஒன்றை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் அமைத்தார். அந்தக் குழு இந்தியாவில் உள்ள, தமிழகம் உட்பட பல முக்கிய சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்து அதன் இறுதி அறிக்கையை 1984 ஆம் ஆண்டு நடுவண் அரசுக்கு சமர்பித்தது. அந்த அறிக்கையை “முல்லா கமிசன்” அறிக்கை என்றே அழைப்பர்.

அந்த அறிக்கையில் மிக முக்கியமாக தெரிவித்தது என்ன வென்றால் எந்த ஒரு கைதியையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைத்து இருந்தால் அவனின் மனித பண்புகளை மறக்கச் செய்வதுடன், அவன் மிகக் கொடூர சிந்தனையுள்ளவனாக மாறிவிடுவான். இது சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். இது எதார்த்த உண்மைதான்.

ஆனால் இந்த கமிசன் அறிக்கை குப்பையில் போடப்பட்டு விட்டது. இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள், முற்போக்காளர்கள், அறிவுஜீவிகள், மத்தியில் முதலில் ஒரு விழிப்புணர்வுக்கு வர வேண்டிய தேவை உள்ளது. ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் தண்டனைக் காலம் என்பது 7 ஆண்டுகள் என்றே வரையறை செய்து கொண்டு விடுதலை செய்து வர நாம் அரசை வலியுறுத்த வேண்டும்.

இதே கருத்தை வலியுறுத்தி கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற சிறைகளில், சிறைவாசிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி. கடந்த 31-8-09 அன்று கர்நாடகம் முழுவதும் 1000 ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு மேல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக சிறைத்துறை அமைச்சர் திரு. உமேஷ்கத்தி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின் கீழ்வரும் கோரிக்கைக்காக நான் அரசுடன் பேச்சு நடத்தி உங்களுக்கு சுமூக தீர்வை ஏற்படுத்தி தருகிறேன் என்று உறுதிமொழி கொடுத்து சென்றுள்ளார்.

கோரிக்கைகள்:

1. ஏழு ஆண்டுகள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

2. ஆயுள் தண்டனை பெற்று 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ள பெண் ஆயுள் தண்டனை சிறைவாசியை விடுதலை செய்ய வேண்டும்.

3. 60 வருடங்களுக்கு மேல் வயதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசியை 4 ஆண்டுகளில் விடுதலை செய்ய வேண்டும்.

4. சிறையில் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் உள்ள தண்டனை சிறைவாசியை கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அய்யா எங்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு. இந்த மோசமான நிலையை மாற்றி அமைக்கப்பட் வேண்டும் என்ற எங்களின் (ஆயுள் சிறைவாசிகளின்) நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்,

“மனிதன் சட்டத்திற்காகவோ, அரசுக்காகவோ இருக்கவில்லை, ஆனால் இவை இரண்டும் மனிதனுக்காக இருக்கிறது”.

- அன்பு, நடுவண் சிறை, மைசூர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.