ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஜோதிபாசுவின் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் - பெ.மணியரசன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)
நிகரமையில் நாட்டங்கொண்ட இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சிப் பொருளாக 1960களின் இறுதிப் பகுதியில் மேற்கு வங்கம் விளங்கியது. 1967இல் அங்கு ஆட்சிக்கு வந்த கூட்டணியில் ஜோதி பாசு துணை முதலமைச்சர். முதலமைச்சர் அஜாய் முகர்ஜி என்ற பங்களா காங்கிரசுத் தலைவர். கூட்டணியில் கூடுதல் சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். இருப்பினும் அஜாய் முகர்ஜியின் பிடிவாதத்திற்கு இணங்கி அவரை முதல்வராக்கினர்.

காங்கிரசு ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த நில உச்சவரம்புச் சட்டத்தைச் செயலுக்குக் கொண்டுவந்து, மிச்ச நிலங்களையும், போலிப் பெயர்களில் (பினாமி) பதுக்கப்பட்ட நிலங்களையும் குத்தகை நிலங்களையும் கைப்பற்றி உழவர்களுக்கு உரிமையாக்கிய நிகழ்வு சிவப்புச் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முற்றுகைப் போராட்டங்கள(கெரோ), போன்றவற்றில் காவல் துறை தலையிடாமல் தடுத்து வைத்தது மேற்கு வங்க ஆட்சி. ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தில், இந்திய அரசின், தொழிற்சாலை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தொழிலாளர் ஒருவர் இறந்து விட்டார். அந்த அதிகாரியின் கையில் விலங்கு மாட்டி அவரைத் தளைப் படுத்தியது மேற்குவங்கக் காவல் துறை.

உழவர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் ஆதரவான இந்த நடவடிக்கைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்களின் செயல்பாடும் குறிப்பாக ஜோதிபாசுவின் போர்க்குணமும் இந்தியா முழுவதும் பெரும் ஈர்ப்பையும் விவாதத்தையும் எழுப்பியது.

நடுவண் காங்கிரசு அரசு, மேற்கு வங்க ஆட்சியை 1968இல் கலைத்தது. மீண்டும் 1969இல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. துணை முதலமைச்சர் ஜோதி பாசுவிடம் உள்துறை பொறுப்பு வந்தது. இந்த முறை பங்களா காங்கிரஸ் முதலமைச்சர் அஜாய் முகர்ஜியே தமது அரசுக்கு எதிராக உண்ணாப் போராட்டம் தொடங்கினார்.

“காட்டுமிராண்டி அரசாங்கத்தைக் கண்டித்து உண்ணாப் போராட்டம்” நடத்துவதாக அறிவித்து கொல்கத்தா கர்சன் பூங்காவில் 1969இல் முதலமைச்சர் பட்டினிப் போராட்டம் தொடங்கினார். 1970 மார்ச்சில் அஜாய் முகர்ஜி பதவி விலகினார். குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.

அக்காலத்தில் இளைஞர்களை கம்யூனிசத்தின் பால் ஈர்த்த இரு நிகழ்வுகளில் ஒன்றாக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்கள் அமைந்தன. இன்னொன்று வியட்நாம் விடுதலைப் போர். மேற்குவங்க நிகழ்வுகளின் கதாநாயகனாக ஜோதிபாசு அறியப்பட்டார்.

பாவாணர் - பெருஞ்சித்திரனார் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகத்தில் செயல்பட்ட நான், அண்ணாவின் சொற்பொழிவுகளில் - எழுத்துகளில் கம்யூனிசத்திற்கு ஆதரவாகக் கூறப்பட்ட கருத்துகளின் வழி மார்க்சிய ஆதரவாளராக இருந்தேன். உலகத் தமிழ்க் கழகத்தின் வழி, தமிழ்நாடு விடுதலை உணர்வு பெற்றேன். விடுதலைபெற்ற தமிழ்நாட்டில் நிகரமைக் கொள்கை செயலுக்கு வரவேண்டும் என்று விரும்பினேன்.

உலகத் தமிழ்க் கழகத்திற்குள்ளேயே பாவிசைக்கோ, உணர்வுப் பித்தன், இரும்பொறை ஆகியோர் இக்கொள்கை கொண்டிருந்தனர். அவர்களுடன் அப்போது நெருங்கிப் பழகினேன்.

இவ்வாறான மனநிலையில் மேற்கு வங்க நிகழ்வுகள், மார்க்சியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் பால் என்னை ஈர்த்தன. 1970-இல் அக்கட்சியுடன் தொடர்பு கொண்டு, பின்னர் அதில் உறுப்பினராகிவிட்டேன்.

1975-76 அவசர காலக் கொடுமைக்குப் பிறகு 1977-இல் நடந்த பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஜோதிபாசு முதல்வரானார்.

1978ஆக இருக்கலாம். முதல்வர் ஜோதிபாசு தமிழகம் வந்தார். திருச்சி வழியாக வந்த அவரை தஞ்சை மாவட்ட எல்லையிலிருந்து மன்னார்குடி வரை அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

செங்கிப்பட்டி, தஞ்சை ஆகிய இடங்களில் எழுச்சி மிக்க வரவேற்பு கொடுத்தோம். அவருடன் பேசும் வாய்ப்பும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கிடைத்தன.

தமிழக அரசு மேற்குவங்க முதல்வருக்கு அளிக்க முன்வந்த காவல்துறைப் பாதுகாப்பை ஜோதிபாசு மறுத்துவிட்டார். தமிழக அரசு கொடுக்க முன்வந்த காரையும் அவர் ஏற்கவில்லை. கட்சி ஏற்பாடு செய்த காரிலேயே வந்தார். உணவுப் பழக்கமும் எளிமையாகவே இருந்தது.

1973 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்திய மாணவர் சங்கத்தின் நடுவண் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது அங்கு ஜோதி பாசுவைப் பார்த்திருக்கிறேன். ஆட்சியில் இல்லாத நிலையில் அவரைப் பார்த்ததற்கும் முதலமைச்சராகப் பார்த்ததற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

ஜோதி பாசுவின் எளிமை என்னைப் போன்றவர்களை ஈர்த்தது. அதுவும் தமிழக ஆட்சியாளர்களின் ஆரவாரம், ஆடம்பரம், அணுக இயலாத் தொலைவு ஆகியவற்றைப் பார்த்தவர்களுக்கு ஜோதிபாசுவின் எளிமை ஒரு கவர்ச்சிதான். ஒரு கம்யூனிஸ்ட்டிடம் இருக்க வேண்டிய எளிமை அது.

ஆனால் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜோதி பாசுவின் சாதனைகள் என்ன? அரசியல், பொருளியல், பண்பியல் துறைகளில் அவர் பதித்த தனி முத்திரைகள் யாவை? அவருடைய தனி முத்திரைகள் என்று பார்க்காவிட்டாலும் அவர் கட்சியின் ஆட்சிச் சாதனைகள் யாவை?

அறுபதுகளின் இறுதியில் நடந்த நிலச்சீர்திருத்தம் தவிர, குறிப்பிட்டுச் சொல்லும்படியான சாதனை எதுவுமில்லை.

“மேற்கு வங்கத்தைப் பாரீர்” என்று சி.பி.எம். கட்சி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த முன்மாதிரிச் சாதனையும் இல்லை. “தேர்தல் கட்சியாகிவிட்ட சி.பி.எம். கட்சியின் சீரழிவைப் பாரீர்” என்று எடுத்துக் காட்டுவதற்கான கெடுபுகழ்ச் சின்னமாகவே மேற்கு வங்கம் விளங்குகிறது.

அறுபதுகளின் இறுதிப்பகுதியில் அல்லது 1970-71 ஆக இருக்கும். சி.பி.எம். தலைவர்களில் ஒருவரான பி.டி.ரணதிவே இலண்டன் போயிருந்த போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்டார்கள். “நீங்கள் புரட்சி செய்ய வேண்டும் என்கிறீர்கள். பிறகு எப்படி முதலாளிய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கெடுக்கிறீர்கள்? மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் தேர்தல் மூலம் வந்து ஆட்சி நடத்துகிறீர்கள்? இது முரண்பாடில்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ரணதிவே விடையிறுத்தார்; “நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உள்ளிருந்து கொண்டே உடைக்கப் போகிறோம்” (ஜிஷீ தீக்ஷீமீணீளீ tலீமீ சிஷீஸீstவீtutவீஷீஸீ யீக்ஷீஷீனீ ஷ்வீtலீ வீஸீ).

ஆனால் நடந்ததென்ன? உள்ளிருந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்தை உடைக்கவில்லை. புரட்சியைத்தான் உடைத்தார்கள். வெறும் தேர்தல் கட்சியாக சி.பி.எம் கட்சியை மாற்றினார்கள். முதலாளிய நாடாளுமன்றம் ஓர் “அரட்டை மடம்” என்று ஒரு காலத்தில் வர்ணித்த சி.பி.எம். தலைவர்கள், அரட்டை மடத்தின் தலைவர் பதவிக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

இந்திய ஆளும் வர்க்கத்தில் முற்போக்கான தேசிய முதலாளிப் பிரிவு இருக்கிறது. அப்பிரிவிற்குத் தலைமை தாங்குவோர் நேரு, இந்திரா காந்தி. அவர்களின் கையை வலுப்படுத்தி இடதுசாரித் திசையில் காங்கிரசைத் திருப்பிவிட காங்கிரசு கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று செயல்திட்டம் வகுத்தது டாங்கே தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அது திருத்தல் வாதம் என்று கூறி அக்கட்சியை உடைத்து வெளியேறி புரட்சி முழக்கம் செய்தனர் சி.பி.எம். தலைவர்கள். கடைசியில் சோனியாவின் முற்போக்கைக் காத்து நிற்கும் துணைத் தளபதிகளாக செயல்பட்டார்கள் ஜோதிபாசு உள்ளிட்ட சி.பி.எம். தலைவர்கள்.

காங்கிரசின் கையடக்கப் பிரதிகளாக சி.பி.ஐ., சி.பி.எம். இரு கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தன. திருத்தல்வாதி டாங்கேயின் சீடராகவே ஜோதி பாசு மரித்தார். கல்லறையில் டாங்கே புரண்டு படுத்திருப்பார்!

1996இல் காங்கிரசிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத போது ஜோதிபாசுவைப் பிரதமராக்க காங்கிரசு, ஜனதா தளம் போன்ற கட்சிகள் இசைவு தெரிவித்தன. சி.பி.எம். நடுவண் குழு, அந்த முன்மொழியை ஏற்கவில்லை. பிரதமராகும் வாய்ப்பை ஏற்காதது கட்சி செய்த “மாபெரும் வரலாற்றுத் தவறு” என்று கூறினார் ஜோதி பாசு.

தம் கட்சியில் நாற்பது மக்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, 544 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் இவர் பிரதமர் ஆகியிருந்தால், இவருக்கு என்ன தற்சார்பு இருந்திருக்கும்? உழைக்கும் மக்களுக்காதரவாக இவர் என்ன முற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க முடியும்? ஆளும் வர்க்கத்திற்கு நல்ல பிள்ளையாக நடந்திருப்பார். பாட்டாளிவர்க்கத்தின் துரோகியாக அம்பலப்பட்டிருப்பார். இவரின் மேற்குவங்க ஆட்சியைப் பார்த்து, முதலாளியத்தின் காவலராகச் செயல்படத் தகுந்த இடதுசாரி என்று ஆளும் வர்க்கத்தினர் கணித்திருப்பர்.

ஜோதி பாசு மற்றும் சி.பி.எம். கட்சியின் மேற்கு வங்க ஆட்சிச் “சாதனைகளை” சமூக, தேசிய இன உரிமை, பொருளியல், சனநாயக மதிப்பீடுகள் என்ற தளங்களில் விவாதிப்போம்.

ஜோதி பாசுவின் ஆட்சி சமூகநீதிக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது. அங்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. மண்டல் குழு மேற்குவங்கம் போய், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காக விசாரணை நடத்தியது. “மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களே கிடையாது. எனவே எங்களிடம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் கிடையாது. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தேவை இல்லை”என்று கூறிவிட்டார் அப்போதைய முதல்வர் ஜோதி பாசு.

ஆனால் மண்டல் குழு, தற்சார்பாக விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பட்டியலை அணியம் செய்தது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, உரியவாறு சமூக நீதி வழங்கியதா ஜோதி பாசு ஆட்சி இல்லை. 1977-1982 ஆட்சிக் காலத்தில் ஜோதி பாசு அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக்கப்படவில்லை. காங்கிரசு ஆட்சியில் இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்கள் 35 விழுக்காடு இருந்தனர். உயர்சாதி காயஸ்தர்கள் 31 விழுக்காடு பேர், உயர்சாதி வைசியர்கள் 23 விழுக்காடு பேர் அமைச்சர்களாக இருந்தனர். 1982 க்குப் பிறகு தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கு அமைச்சரவைஜீயல் இடம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு பேர்க்கு? 1.5 விழுக்காட்டு அளவில். மேற்கு வங்கத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் மக்கள் தொகை 24 விழுக்காடு. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் உள்ள மாநிலம் மேற்கு வங்கம்.

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை, அரசுப் பணிகள், சமூகம், ஆகியவற்றில் பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சாதிகள் பார்ப்பனர்கள், காயஸ்தர்கள், வைசியர்கள் ஆவர். ஜோதி பாசு காயஸ்தர் வகுப்பில் பிறந்தவர். மேற்கண்ட மூன்று சாதிகளையும் இணைத்து “பத்ரலோக்” என்று அழைப்பார்கள். ஜோதிபாசு கொற்றத்திலும் பத்ரலோக்குகள் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.

ஜோதி பாசு அமைச்சரவையிலும் பிறகும், அமைச்சராக இருந்த சுபா‘;சக்ரவர்த்தி, தாம் முதலில் பார்ப்பனர், பின்னர்தான் கம்யூனிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்தார். அது அப்போது சர்ச்சையானது இங்கு கவனிக்கத்தக்கது.

லெனினது தேசிய இனங்களின் தன்னுரிமைக் (ஷிமீறீயீ-பீமீtமீக்ஷீனீவீஸீணீtவீஷீஸீ ஷீயீ tலீமீ ழிணீtவீஷீஸீணீறீவீtவீமீs) கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறது. மார்க்சிய லெனினியத்திற்கும், உலகம் ஒப்புக் கொண்ட சமூக அறிவியலுக்கும் புறம்பாக இந்தியாவை ஒரு தேசம் என்கிறது அக்கட்சி. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட இந்தியாவை ஒரு தேசம் என்று கூறவில்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தவுடன், தேசிய இனத் தன்னுரிமைக் கோரிக்கை காலாவதியாகிவிட்டது என்கிறது அக்கட்சி.

எனவே, அக்கட்சிக்கு மாநில சுயாட்சி என்ற கோரிக்கை கூட இல்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற வெறும் நிர்வாகப் பார்வை மட்டுமே அக்கட்சிக்கு இருந்தது. சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் மாநில சுயாட்சி ஏன் வேண்டும் என்பதை விளக்கி 1970 களில் குறுநூல் ஒன்று எழுதியிருந்தார்.

ஆனால் அந்த நூல் வழிகாட்டும் நூல் அன்று எனப் பின்னர் அக்கட்சியின் அனைத்திந்திய நடுவண் குழு முடிவெடுத்தது. அதிக அதிகாரம் மட்டுமே கோர வேண்டும். மாநில சுயாட்சி கோரக் கூடாது என்று நடுவண் குழுகூறியது. “மாநில சுயாட்சி” (ஷிtணீtமீ ணீutஷீஸீஷீனீஹ்) என்ற சொற்கள் பிரிவினையைத் தூண்டக் கூடியவை என்று 1980 களின் தொடக்கத்தில் அக்கட்சியின் நடுவண்குழு வரையறுத்தது.

அந்த நிலைப்பாட்டில் ஜோதி பாசுவுக்கு முழுக்க முழுக்க உடன்பாடு உண்டு. அவர் 70களின் இறுதிப் பகுதியில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் தலைவர்களுடன் கூடுதல் மாநில அதிகாரங்களுக்காக நடத்திய குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆனால் பின்னர் அக்கூட்டங்களில் அவர் ஈடுபாடு காட்டவில்லை. அதிக அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டு விட்டது சி.பி.எம்.

மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று உருப்படியான போராட்டமோ அல்லது முயற்சியோ செய்யவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி 1970 களில் அமைத்த நீதிபதி இராசமன்னார் குழு போன்ற ஒன்றைக் கூட அமைக்கவில்லை. அவ்வாறான குழு ஒன்றை அமைத்து மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கேட்கும் கோரிக்கைகளை இந்திய அரசுக்கு அனுப்பவில்லை.

1970களின் பிற்பகுதியில் ஜோதி பாசு, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கோரியதில் கூட அவரின் சொந்த முத்திரை இல்லை. அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த முனைவர் அசோக்மித்ராவின் அசல் நிலைபாடாகும் அது. அசோக் மித்ரா அமைச்சராக இருந்தபோது அவர் சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் இல்லை. இடதுசாரிப் பொருளியல் வல்லுநர் என்ற அளவிலேயே அவரை நிதியமைச்சராக்கினார் ஜோதி பாசு.

இந்தியாவின் தனித்தன்மைகளில் ஒன்று வர்ணசாதிச் சுரண்டலும் ஒடுக்கு முறையும். இன்னொன்று தேசிய இனச் சிக்கல். இவ்விரண்டிலும் காங்கிரசைத் தாண்டி, சி.பி.எம். கட்சிக்கோ, ஜோதி பாசுக்கோ தனித்த நிலைப்பாடு எதுவும் இல்லை.

ஒரே ஒரு வரிவசூல் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. அது வணிகவரி (விற்பனை வரி) வசூலிக்கும் உரிமை. அதை இந்திய அரசு பிடுங்கியது. அவ்வாறு பிடுங்குவதை உ.பி. தமிழகம் போன்ற மாநிலங்கள் எதிர்த்தன.

நடுவண் அரசு விற்பனை வரியை எடுத்துக் கொண்டு, மதிப்புக் கூட்டு வரியாக (க்ஷிகிஜி) மாற்றியது. அந்த ஆக்கிரமிப்பை, முந்திக் கொண்டு ஆதரித்தது சி.பி.எம்.மின் மேற்கு வங்க அரசு. மதிப்புக் கூட்டு வரியை செயல்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க ஒரு குழுவை அமைத்தது இந்திய அரசு. அக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் மேற்குவங்க சி.பி.எம். நிதியமைச்சர் அசிம்தாஸ் குப்தா.

அடுத்து சரக்கு மற்றும் சேவை வரி (நிஷீஷீபீs ணீஸீபீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ ஜிணீஜ்) என்ற புது வரியை நடுவண் அரசு திணிக்கிறது. அந்த வரியை ஞாயப்படுத்தி ஏற்கச் செய்யும் குழுவிற்கும் அதே அசிம்தாஸ் குப்தா தலைவர். கொஞ்ச நஞ்சம் இருக்கும் மாநில உரிமைகளையும் பறிக்கும் இந்திய அரசின் அத்தனை ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கும் துணை நிற்கிறது மேற்கு வங்க சி.பி.எம். ஆட்சி. காரணம் சி.பி.எம். கட்சிக்கு மேற்கு வங்கத்தில் வழிகாட்டுவது மார்க்சியம் அன்று. பத்ரலோக் பார்ப்பனியம்!

இந்திய தேசியத்தின் தத்துவத் தளம் பார்ப்பனியம் தான்.

வர்ண - சாதி, தேசிய இனம் ஆகியவற்றில் பார்ப்பனத் தத்துவத்தைப் பின்பற்றும் சி.பி.எம். கட்சி, பொருளியல் கொள்கையிலாவது மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுகிறதா? இல்லை.

இந்தியாவிலேயே மிகவும் முந்திக் கொண்டு, மிகவும் கொடூரமாக முதலாளிய உலகமய கொள்கையைச் செயல்படுத்தும் மாநிலம் மேற்கு வங்கம்தான்!

முதலாளிய உலகமயக் கொள்கையை மேற்கு வங்கத்தில் அரங்கேற்றியவர் ஜோதிபாசு. அவர் முதல்வராக இருந்தபோது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் போய் பன்னாட்டு முதலாளிகளை மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க கூவிக் கூவி அழைத்தார். டாட்டாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார்.

கெரோ, வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டுத் “தொழில் அமைதியைக்” கெடுக்காமல் தொழிலாளர்களைக் கட்டுப் படுத்தி வைத்துக் கொள்கிறேன் என்று டாட்டா, பிர்லாக்களுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் உறுதி மொழி கொடுத்தார் ஜோதி பாசு. அதை நிறைவேற்றியும் காட்டினார்.

ஆனால் பெரு முதலாளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்கள் விருப்பம் போல் வேட்டையாடலாம். இந்தியாவிலேயே மிக அதிகமாகச் சட்ட விரோதக் கதவடைப்புகள் நடந்த மாநிலம் மேற்கு வங்கமே. பெருமுதலாளிகளின் கட்டற்ற சந்தை வேட்டையால் சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமும் அதுவே.

163 பெருந்தொழிற்சாலைகள் சட்ட விரோதக் கதவடைப்புச் செய்தன. தாக்குப் பிடிக்க முடியாமல் 22,733 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலை இழந்ததால் பிழைக்க வழியின்றித் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை 1983 முதல் 1992 வரை மட்டும் 903 பேர்.

ஜோதிபாசு முதல்வர் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் முதல்வரான புத்ததேவ் பட்டாச்சாரியா ஜோதிபாசு போட்ட முதலாளிய உலகமயப் பாதையில் காவல்துறையின் பூட்சுகளை மாட்டிக் கொண்டு வேகமாக ஓடுகிறார்.

டாட்டாவுக்காக சிங்கூரில் 1000 ஏக்கர் விளை நிலங்களை உழவர்களிடமிருந்து பறித்தார். எதிர்த்த உழவர்களை காவல்துறையையும் கட்சிக் குண்டர்களையும் ஏவிப் படுமோசமாகத் தாக்கினார்.

இந்தோனேசியாவின் பன்னாட்டு முதலாளிக்கு 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நந்திகிராமத்தில் உழவர்களிடமிருந்து பறித்தார். எதிர்த்த உழவர்களைக் காவல்துறையினரையும் கட்சிக் குண்டர்களையும் ஏவி சுட்டுக் கொன்றார். சற்றொப்ப 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிங்கூர், நந்திகிராம் ஆகிய இடங்களில் பெருமுதலாளிக்காகவும் பன்னாட்டு முதலாளிக்காகவும் நடந்த அரச வன்முறைகளை ஜோதிபாசு ஆதரித்தார்.

வரலாறு தலைகீழாக மாறியது. நிலப்பறிப்பு எதிர்ப்புரட்சியாளர்களாக ஜோதி பாசுவும் புத்ததேவும் மாறினார்கள். காங்கிரசின் இன்னொரு பிரிவுத் தலைவர் மம்தா பானர்ஜி நில மீட்புக் கதாநாயகி ஆனார்.

தலைகீழாகத் தொங்குவதால் வவ்வால்களுக்கு வலிப்பதில்லை. அப்படித் தொங்குவதுதான் அவற்றிற்கு வசதி. ஜோதிபாசும் - புத்ததேவும் - பிரகாஷ் காரத்தும் பெருமுதலாளிகளுக்காக உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பதை ஞாயப் படுத்தினர்.

முதலாளிய உலகமயத்திற்கு மாற்றாக ஒரு சனநாயகப் பொருளியல் திட்டத்தை வகுத்து, அதைச் செயல்படுத்த அதிகாரம் வேண்டும் என்று கேட்டாரா ஜோதிபாசு? இல்லை. முதலாளிய உலகமயத்தில் சவாரி செய்தார்.

சனநாயக மதிப்பீடுகளைக் காப்பதில் மேற்கு வங்கம் முன் நிற்கிறதா? இல்லை. பிரபல அரம்பர்கள் (ரவுடிகள்) சி.பி.எம். கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில் கட்சிக் குண்டர்கள் கையில் ஆயுதம் கொடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, சி.பி.எம். கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வது மேற்கு வங்கத்தில் வாடிக்கையாகிவிட்டது.

நந்திகிராம் துப்பாக்கிச் சூட்டில், சி.பி.எம். குண்டர்கள் காக்கி உடுப்பில் சென்று உழவர்களைச் சுட்டுக் கொன்றதை நடுவண் புலனாய்வுக் காவல்துறை (சி.பி.ஐ.) அம்பலப்படுத்தியது.

ஜோதிபாசு மீது தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக வரவில்லை. அவர் மகன் சந்தன் பாசுவின் தொழிலுக்குச் சலுகைகள் காட்டினார் என்பதைத் தவிர, கருணாநிதி, செயலலிதா போன்ற ஊழல் குற்றச் சாட்டுகள் அவர் மீது வரவில்லை. ஆனால் கட்சியின் இதர மட்டங்களில் கீழ்வரை ஊழல் சீழ் பிடித்து நாற்றமெடுத்துள்ளது. ஊழலை சனநாயகப் படுத்திய மாநிலம் மேற்கு வங்கம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு குழுப்போட்டு அக்குழுவின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் இயங்கமுடியாத நிலையை உண்டாக்கினார்கள். சிற்றூர்களில் சணல் உழவர்களுக்குச் சலுகை விலை கிடைக்கவேண்டுமானால் சி.பி.எம். தலைமையில் உள்ள சிற்றூர்க்குழு பரிந்துரைத்தால்தான் சலுகை விலை கிடைக்கும். அவ்வாறு பரிந்துரை கிடைக்க உழவர்கள் கையூட்டுக் கொடுக்க வேண்டும்.

பேருந்துகளுக்கு தட உரிமம் பெற வேண்டுமெனில், அதற்கென சி.பி.எம். மாவட்டச் செயலாளர் தலைமையில் உள்ள போக்குவரத்துக் குழு பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரை கிடைக்கக் கையூட்டு களிநடம் புரியும்.

இவை தவிர, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், மே.வங்கம் ஆகிய துறைகளில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது.

பின்னர் எதில்தான் மேற்குவங்க சி.பி.எம். ஆட்சி இந்தியாவுக்கு வழி காட்டுகிறது? ஜோதி பாசு வழி காட்டினார்?

ஜோதி பாசுவின் எளிமை, ஆடம்பரமின்மை, போன்ற குணங்கள் முதலாளிய அரசியல் தலைவர்கள் சிலரிடமும் உண்டு. இராசாசி, காமராசர், கக்கன், அண்ணா போன்றவர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால் கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் தனித்தன்மை, முதலாளியப் பகை அறுக்கும் போர்க்குணத்தில், நிகரமைப் பொருளியல் கூறுகளில் அடங்கி இருக்கின்றன.

ஒரு புரட்சிக் கட்சி, ஒரு புரட்சியாளன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் மேற்கு வங்க சி.பி.எம். ஆட்சியும் ஜோதிபாசுவும்.!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.