ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முள்ளிவாய்க்கால் - ஆறாத காயம் - பெ.மணியரசன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)
“மனக்காயத்தை ஆற்றும் மருந்து காலம்” என்ற முதுமொழி தமிழர்களைப் பொறுத்தவரை பொய்த்து விட்டது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நம் கண்முன்னால் ஈழத்தமிழினம் அழிக்கப்பட்ட பெருந்துயர் மங்கிவிடுமா? மறைந்து விடுமா? காலம் மாறலாம்; காயம் ஆறாது.

ஓராண்டு முடிகிறது. ஆனால் ஒரு யுகம் நகர்ந்தது போல் கனக்கிறது. பன்னிரண்டு மாதங்களும் வேகமாக ஓடவில்லை. பையப்பைய, நமது கையறு நிலையை அசைபோட்டு, அசைபோட்டு, நமக்கேற்பட்ட மானக்கேட்டை உமிழ் நீராய் விழுங்கி, விழுங்கி, இந்தியா ஈடுபட்டுச் செய்த தமிழின அழிப்பை எண்ணிச் சினந்து சினந்து, ஓராண்டில் ஒரு லட்சம் தமிழர்களும் கடைசி மூன்று நாட்களில் மட்டும் ஐம்பதாயிரம் பேரும் கொல்லப்பட்டதை நினைத்துக் குமைந்து குமைந்து, குமுறிக் குமுறி இந்த பன்னிரண்டு மாதங்களும் படாத பாடுபட்டோம்.

காலம் நம் கவலைகளைத் தின்னவில்லை; கவலைகள் நம் காலத்தைத் தின்றன.

போர்க்களத்தில் சாவுகள் நிகழ்வது இயல்பு தானே என்று ஆறுதல் அடைய முடியவில்லை. “பொது மக்கள்” என்று உலகமொழியில் பேசப்படும் தமிழின மக்கள் ஆயுதம் ஏந்தாத மக்கள், உயிர் பிழைக்க இடம்விட்டு இடம் நகர்ந்த மக்கள் திரள், கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையத்திற்கு வாருங்கள், பாதுகாக்கிறோம் என்று வரவழைத்துக் கொன்றார்கள். வன்னிப் பெருநிலத்தில் 2008 - 2009 மே வரையிலான ஓராண்டு காலத்தில் ஒரு இலட்சம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.

ஐ.நா. மன்றத்தால் தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை, பாஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு நம் மக்களை அழித்தனர். ஐ.நா. மன்றம் தடுத்ததா? உலகநாடுகள் தட்டிக் கேட்டனவா?

இந்தியாவும் சீனாவும் சேர்ந்து கொண்டால், இந்த மண்டலத்தில் எந்த மனிதப் பேரழிவையும், கேள்விமுறையின்றி நடத்திவிடலாம் என்பதை அரங்கேற்றிக் காட்டின. உலகப் பெருநாடுகளைப் பொறுத்த வரை, இந்தியாவும் சீனாவும் பெரிய சந்தைகள். அவற்றுடன் உள்ள உறவில் உரசல் வரக்கூடாது. எவ்வளவு இலட்சம் மனித உயிர்கள் அழிந்தால் என்ன?

தட்டிக் கேட்க தமிழர்க்கொரு சொந்த நாடில்லையே. நிலக்கோளத்தில் பத்துக்கோடிப் பேர் பல நாடுகளில் பரவிக்கிடந்தும் பன்னாட்டு அநாதைகளாக அல்லவா வாழ்கிறோம்! தாய்த் தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேர் வாழ்ந்தும் இந்தியாவின் காலனி அடிமைகளாக அல்லவா கட்டுண்டு கிடக்கிறோம்.

நாம் விரும்பவில்லை என்றாலும் எதிரிகள் நம் மீது ஒரு போரைத் திணித்தார்கள். நடந்தது ஒரு விடுதலைப்போர்.

உலகம் வியக்க எதிரிகள் திகைக்க மாபெரும் போர்ப்படைத் தலைவராய், இளம் வயதிலேயே ஈழதேசத்தின் தந்தையாய் உருவெடுத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன். உலகப்புரட்சி இயக்கங்களில் இருந்து கற்றுக் கொண்டு உலகப்புரட்சி இயக்கங்களுக்குக் கற்றுக் கொடுத்த அரிதிலும் அரிதான புரட்சி இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் இருபால் தளபதிகள், போராளிகள் ஒப்பற்ற வீரர்கள், வீராங்கனைகள்! மக்கள் வாழ்வதற்காகத் தங்கள் கழுத்தில் சாவுத்தாலி கட்டியவர்கள்!

இந்தியாவும் சிங்களநாடும் சேர்ந்து கொண்டு எப்பேர்ப்பட்ட தளபதிகளை, புலிப்போராளிகளை அழித்தார்கள். அமைதிப்பேச்சு நடத்த அழைத்துவிட்டு, அதை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த தளபதிகளை, வீரர்களை சுட்டுக் கொன்றனர்.

2009 மே 16, 17, 18 ஆகிய கடைசி மூன்று நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 50 ஆயிரம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் - “பொதுமக்கள்” என்று உலகம் அழைக்கும் பிரிவினர் - கொல்லப்பட்டனர். 25 ஆயிரம் பேர் குற்றுயிரும் குலை உயிருமாய்ப் படுகாயமுற்றுத் துடித்தனர். இதைப்பார்த்து நெஞ்சு பொறாமல், விடுதலைப்புலித் தலைமை தற்காப்புப் போரை நிறுத்திக் கொண்டு, துப்பாக்கிகள் அமைதியடைகின்றன என்று அறிவித்தது.

முள்ளிவாய்க்கால் என்பது ஓர் ஆண்டின் முன் ஓர் இடத்தின் பெயர். இன்று அது ஓர் இனத்தின் அடையாளம்! வரலாற்றுப் பெருநூலில் ஒரு தொகுப்பின் தலைப்பு. தமிழினத்தின் நெஞ்சில் நிலைத்து விட்ட காயம்!

தாயக விடுதலைப்போரில் வன்னிப் பெருநிலத்திலும் முள்ளிவாய்க்காலிலும் உயிர் ஈந்த தமிழர்களுக்கு வீரவணக்கம்! விடுதலைப்புலித் தளபதிகளுக்கு, விடுதலைப்புலிகளுக்கு வீர வணக்கம்!

போர் இன்னும் முடியவில்லை. பொழுது இன்னும் விடியவில்லை. வதைமுகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வாடுகிறார்கள். ஒட்டுமொத்த ஈழமண்ணே இராணுவ முகாமாக்கப்பட்டு விட்டது.

இன்று ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் சிறிய, பெரிய சிங்களப் படை முகாம்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரம்! அங்கு வாழமுடியாமல் தப்பியோடி அடைக்கலம் தேடிக் கடலெங்கும் தமிழர்கள் அலைகிறார்கள். ஆஸ்திரேலியா நோக்கிச் சென்றவர்களை நடுக்கடலில் இந்தோனேசியா, மடக்கிப் பிடித்து அந்நாட்டின் மொராக் துறைமுகத்தில் வைத்துள்ளது. ஆறுமாதங்களுக்கு மேல் அவர்கள் அங்கே தத்தளிக்கிறார்கள். பசி, பிணி, தூய்மைக்கேடு போன்றவற்றால் அவர்கள் படுந்தொல்லை சொல்லில் அடங்காது. கப்பலிலேயே ஒருவர் இறந்துவிட்டார்.

தஞ்சமளிப்பார்கள் என்று நம்பி மலேசியாவுக்குப் படகில் சென்ற 75 தமிழர்களை வழிமறித்து அந்நாட்டுக்கப்பல் படை பினாங்குத் துறைமுகத்தில் வைத்துள்ளது. ஏற்கெனவே தப்பி வந்த விடுதலைப்புலிகளையும் புலித் தளபதிகளையும், முக்கியத் தலைவர்களையும் பிடித்து சிங்கள அரசிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று கூறி பெருமிதப்படுகிறார் மலேசிய உள்துறை அமைச்சர் இசாமுதீன் உசைன்.

வன்னி வதைமுகாம்களில் இருந்து சிலரை விடுதலை செய்தது இராசபட்சே அரசு. அவர்கள் தங்கள் ஊருக்குச் சென்றால், அந்த ஊரையே காணோம். சிங்களப்படை அந்த ஊர்களைத் தகர்த்தெறிந்து விட்டது. சில ஊர்களில் சில வீடுகள் விட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வீடுகளில் சிங்களர்கள் குடியிருக்கிறார்கள்.

வதைமுகாம்களிலிருந்து விடுதலை பெற்று வந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் குடியேற முடியவில்லை. மறுபடியும் கோயில்கள், பள்ளிகள் என்று தங்கியுள்ளனர். அந்த அவலம் தாங்காமல் சிலர், கமுக்கமாகப் படகுகள் ஏற்பாடு செய்து அடைக்கலம் தேடி அயல்நாடுகளுக்குப் போகிறார்கள். தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருவதைத் தடுக்கிறது கடலோரக் காவல்படை. மீறிவந்தாலும் தமிழக அகதி முகாம்களில் விலங்குகள் போல் வாழ்வதற்கான வசதிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே அவர்கள் ஆஸ்திரேலியா, மலேசியா என்று போகிறார்கள். நடுக்கடலில் மறிக்கப்பட்டு, திரும்பிப் போகச் சொல்கின்றன இந்தோனேசிய, மலேசிய நாடுகள்.

மலேசியாவின் பினாங்குத் துறைமுகத்தில் கடலில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் மக்கள் - “எங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அந்நாட்டரசு எங்களைக் கொன்று விடும். அதற்குப்பதில் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் கடலில் குதித்து இங்கேயே செத்துப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் கூறிய இச்சொற்கள் நம் காதுக்கு வரும்போது நெஞ்சம் பதறுகிறது. செய்வதறியாது திகைக்கிறோம். பெருஞ்சக்தியாய் உடனடியாக மக்களைத் திரட்டிப் போராடி அரசைத் திக்குமுக்காடச் செய்யும் சூழல் இன்று தமிழ்நாட்டில் இல்லை. அடையாளப் போராட்டங்களை நடத்துகிறோம். இன எதிரியாக உள்ள இந்திய அரசோ, கங்காணி வேலை பார்க்கும் தமிழக அரசோ அடையாளப் போராட்டங்களுக்கு அசையாது.

உண்மையான இன உணர்வுள்ள இளைஞர்கள் பலர் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றனர். தமிழ்த் தேசியப் புரட்சியை, தமிழ் நாட்டு விடுதலையை முன்னிறுத்தி உண்மையாகச் செயல்படும் அமைப்பை உரியவாறு அடையாளங் காணாமல் தங்கள் ஆற்றலை விரையம் செய்கிறார்கள்.

இதோ ஓர், அவலத்தை, அவமானத்தைப் பாருங்கள். நம்முடைய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதியம்மாள், மருத்துவம் செய்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து 16.4.2010 இரவு சென்னை வந்தார். இரவு 10.30 மணியளவில் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் வந்தவரை, தரையிறங்க விடாமல் தடுத்துவிட்டார்கள் இந்திய அரசின் குடிவரவுத்துறை அதிகாரிகள். தஞ்சாறூரில் இருந்த எனக்கு நள்ளிரவில் செய்தி வருகிறது. சென்னையிலிருக்கும் தோழர்களுக்குச் செய்தி சொல்லி வானூர்தி நிலையம் போகச் சொன்னேன். தோழர்கள் போனார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம் எனில், போதிய எண்ணிக்கை இல்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம், பூங்குழலி அவர்களுடனும், அய்யா பழ.நெடுமாறன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பார்வதியம்மாவை, அழைத்து வர வானூர்தி நிலையம் சென்றிருந்த அவர்கள், அம்மாவை அதே வானூர்தியில் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்ற செய்தியைச் சொன்னார்கள். வைகோ வரவேற்க வந்துள்ளார் என்ற செய்தியும் கிடைத்தது.

நாம் வலுவாக இருந்தால், அந்த நேரத்தில் இல்லாவிட்டாலும் அடுத்தநாள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை மெய்யாகவே முற்றுகை இட்டிருக்கலாம். இந்திய ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து கூட்டுச் சதி புரிந்த தமிழக ஆட்சியாளர்களுக்கும் பாடம் புகட்டியிருக்கலாம்.

எண்பது அகவை மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாய் வானூர்தியில் கொண்டு வரப்பட்டவர். அவரை மனிதநேயம் சிறிதுமின்றி தமிழின வெறுப்பையும் தன்னல அரசியலையும் தலையில் சுமந்துள்ளவர்கள், திருப்பி அனுப்பிவிட்டார்கள். இத்தனைக்கும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முன்கூட்டியே விண்ணப்பித்து, முறைப்படி விசாரணை நடந்து சென்னைக்குக் கடவுச்சீட்டு பெற்றுள்ளார் பார்வதி அம்மையார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் தமிழ் இனத்தின் தாயார். அவருக்குச் செய்த இன்னல், தமிழ் இனத்திற்குச் செய்த இன்னல். அவர்க்கு இழைக்கப்பட்ட மதிப்புக் கேடு தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட மதிப்புக் கேடு.

இவ்வாறான இழிவுகள் கொடுமைகள் நடக்கும்போது நாம் கொந்தளித்துக் குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொண்டால் போதுமா? கொஞ்சம் பேர் கூடி ஆர்ப்பாட்டமோ, உண்ணாப் போராட்டமோ நடத்தினால் போதுமா? இந்த இழிவை - இந்தக் கொடுமையை இழைத்த ஆட்சி யாளர்களைப் பின்வாங்கச் செய்யும் அளவிற்குப் போராட வேண்டாமா?

“கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடீ”

என்று இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், சிலரைப் பார்த்து பாரதியார் பாடிய வரிகள் நமக்கும் பொருந்துமா என்பதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் போரை நிறுத்தினார்களே தவிர, இலங்கை அரசும் இந்திய அரசும் போரை நிறுத்தவில்லை. தமிழ் இனத்திற்கெதிரான போரின் வடிவத்தை இரு அரசுகளும் மாற்றியுள்ளன. ஆனால் போரைத் தொடர்கின்றன.

“வடக்கின் வசந்தம்” என்ற தலைப்பில் ஈழத்தின் வடக்கு மாநிலத்தில், தமிழர்களின் விளைநிலங்களை சிங்களர் ஆக்கிரமித்துப் பண்ணைகள் நடத்திட இந்திய அரசும் சிங்கள அரசும் கூட்டாகத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துச் சிங்களர் நடத்தும் வேளாண்மையை நவீன முறையில் எப்படிச் செய்வதென்று அறிவுரை வழங்க, பயிற்சி தர எம்.எஸ்.சுவாமிநாதனை இந்தியா ஏற்பாடு செய்து தந்துள்ளது.

தமிழர் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்து வேளாண்மை செய்ய, குடியிருக்க துணிந்து வரும் சிங்களர்க்கு முன்தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் சிங்கள அரசு தருகிறது. போருக்குப் பிந்தைய துயர் துடைப்புப் பணிகளுக்காக என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தந்த நிதி சிங்களர் ஆக்கிரமிப்பிற்கும் - சிங்களர் நலனுக்கும்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்தியாவுக்குத் தெரியும்.

வதைமுகாம்களில் உள்ள தமிழர்களிடமும், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களிடமும் கஞ்சா போதைப் பழக்கத்தைத் திட்டமிட்டு சிங்கள அரசு உருவாக்குகிறது. பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் - குறுந்தகடுகள் ஆகியவற்றை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ கொடுத்துத் தமிழர்களின் நாட்டத்தை சீரழிவு நுகர்வுப் பண்பாட்டில் திருப்பிவிடுகின்றது.

தமிழர் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி வலுவோடு ஓர் இனம் இனி இருக்கக் கூடாது. தமிழர்களுக்கான தாயகப்பகுதி என்று இனி ஒரு நிலப்பகுதி இருக்கக்கூடாது என்பதே சிங்கள அரசின் திட்டம். அதற்கு முழு ஒத்துழைப்பை இந்திய அரசு வழங்குகிறது.

சிங்கள அரசு தனது படை வலுவை - போருக்குப் பின் இரண்டு மடங்காக்கி உள்ளது. எனவே இலங்கையும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் தமிழர் களின் நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? இந்தப் பேரழிவிலிருந்து நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகள் என்ன? இவையே நாம் விடையளிக்க வேண்டிய வினாக்கள்.

தமிழர்கள் என்று குறிப்பிடும் போது முகாமையாக மூன்று பகுதிகளில் வாழும் தமிழர்களையே களப்பணிக்கு நாம் இப்பொழுது அழைக்க முடியும்.

1. ஈழத்தில் வாழும் தமிழர்கள்

2.புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள்

3. தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

இணையத் தளங்களிலும் இம்மூன்று பகுதித் தமிழர்களின் செயல்பாடுகள் பற்றியே விவாதிக்கப்படுகிறது.

முதலில் படிப்பினைகள் யாவை என்று பார்ப்போம்.

1.இந்தியாவைப் பற்றிய வரையறுப்பு

தமிழீழ விடுதலைக்கு இந்தியாவை நட்பு நாடாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொண்ணூறுகளின் பிற்பாதியிலிருந்து விடுதலைப் புலிகள் தலைமை பெருமுயற்சி எடுத்தது. அதற்காக, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கெதிரான வல்லரசிய சக்திகள் நடமாடாமலும், செல்வாக்குப் பெறாமலும் தமிழீழம் தடுக்கும்; அம்மண்டலத்தில் இந்தியாவின் காவல் அரணாகத் தமிழீழம் விளங்கும்; அது இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைமை அறிவித்தது. மாவீரர் நாள் உரைகளிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இக்கருத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவை நட்பாக்கிக் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக, இந்தியாவில் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை மதியுரைஞர் ஆன்டன் பாலசிங்கம் எதிர்த்தார். வடநாட்டிலிருந்து வரும் ஆங்கில ஏடொன்றுக்கு இலண்டனில் செவ்வி கொடுத்தபோது, அவர் காஷ்மீர் விடுதலைப் போராட்டம் தவறானது என்றும், இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருப்பதால் தமிழ்நாட்டிற்குத் தன்னாட்சி இருக்கிறது, எனவே தனித்தமிழ்நாடு கோரிக்கை தேவையற்றது என்றும் கூறினார். (இலண்டனில் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தபோது மேற்கண்ட அவரது நிலைபாடுகள் சரியல்ல எனச் சுட்டிக்காட்டினேன். விடுதலைப்புலிகளின் இந்த நிலைப்பாட்டை த.தே.பொ.க. ஏற்கவில்லை என்று கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதியுள்ளோம்)

2. மேற்கண்ட நிலைபாடு இருந்ததால், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் அரசியல் வழிப்பட்ட உறவு கொள்ளவில்லை. இன அடிப்படையில் ஈழ விடுதலைக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உதவ வேண்டிய கடமைப்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் உறவு கொண்டார்கள்.

3. புலம்பெயர்ந்த நாடுகளுக்கு உரையாற்றச் செல்லும் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்களையும் தோழர்களையும் அறிமுகப்படுத்தும் போதுகூட இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்வார்களே அன்றி, தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதாகச் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு சொன்னது வேண்டுமென்றே சொல்லப்பட்டதன்று. நடைமுறை இயல்பு, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அப்படித் தான் இருக்கிறது.

4. தமிழ்நாட்டு உரிமைச் சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்படுவது போன்றவை குறித்து ஈழத்தமிழர்களிடமும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் விடுதலைப்புலிகள் எடுத்துரைக்கவில்லை. அவர்களின் செய்தி ஏடுகள், ஊடகங்கள் மேற்கண்ட சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. ஈழத் தமிழர்களும் இச்சிக்கல்களில் அக்கறை காட்டவில்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு வழிப்பாதையே கடைபிடிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியர்களாகிய நாமும் ஈழவிடுதலைப் போர் கடுமையாக நடந்து கொண்டுள்ளது. இப்போது இத்திறனாய்வுகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று, ஈழஆதரவுப் போராட்டங்களையே அதிக எண்ணிக்கையில் நடத்தி வந்தோம்.

முகாமையான மேற்கண்ட நான்கு திறனாய்வுகளைப் படிப்பிணைகளாக இப்போது ஏற்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் இந்தியா எப்போதும் பகை சக்தியாகவே நடந்து வந்துள்ளது. 1980களில் ஈழ விடுதலைக் குழுக்களுக்கு போர்ப் பயிற்சி கொடுத்தபோது கூட தமிழ்ஈழம் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் இந்திராகாந்திக்கோ இந்தியாவுக்கோ இல்லை என்று குறுநூல் ஒன்றை விடுதலைப்புலிகள் வெளியிட்டனர். (India and Eelam Tamils crisis, தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு வெளியீடு, 1988)

சிங்களர்களும், தமிழர்களும் சண்டை போட்டுக் கொண்டு, சமரசம் செய்து வைக்கக் கோரித் தில்லியிடம் இருதரப்பாரும் வரவேண்டும் என்பதே இந்தியாவின் உத்தி. அந்த அளவுக்குத் தமிழர் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தால் போதும், அந்த அளவுக்கு இக்குழுக்கள் வலுப் பெற்றால் போதும் என்பதே இந்திய அரசின் திட்டம் என்று அந்நூல் சரியாக அடையாளங் காட்டியது.

ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்களில் விடுதலைப்புலிகள் மட்டுமே இந்தியாவின் இராணுவத் தலையீடின்றி சொந்த வலுவில் ஈழவிடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தது. இதைத் தெரிந்து கொண்டு, விடுதலைப்புலிகளைப் பாரபட்சமாக நடத்தத் தொடங்கியது இந்திய அரசு. விடுதலைப் புலிகளுக்குப் பழைய ஆயுதங்களையும், ஏனோ தானோ என்று பயிற்சியும் கொடுத்தது. வலுவற்ற டெலோ போன்ற குழுக்களுக்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி, செயற்கையாக வீங்க வைத்தது. இவை அனைத்தையும் அக்குறுநூலில் அப்போதே விடுதலைப் புலிகள் எழுதியிருந்தார்கள்.

ஆனால் மேற்கண்ட சரியான நிலைக்கு மாறாக விடுதலைப் புலிகள் நிரந்தரமாக இந்தியாவின் ஆதரவைக் கோரும் உத்தியை 1990களின் பிற்பாதியில் வகுத்துக் கொண்டது முரணாக உள்ளது.

இந்தியாவைப் பகை சக்தியாக வரையறுத்து, அக்கம் பக்கமாகவோ அல்லது தொலைவுகளிலோ உள்ள மற்ற சில நாடுகளின் நட்பைப் பெற விடுதலைப்புலிகள் முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு நட்பைப் பெற்றிருந்தால் நாம் பன்னாட்டு அனாதையாக ஆகியிருக்கமாட்டோம். இவ்வளவு பெரிய இழப்புகளை தவிர்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நமக்கும் சில நாடுகள் அதிகாரப்பூவமாகவே உலக அரங்கில் குரல் கொடுத்திருக்கும்.

இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமான பகை 4000 ஆண்டு இனப்பகை. ஆரிய-தமிழர் இனப் பகை. சிங்களரும் ஆரியரே! சிங்களர் ஆரியரல்லாதவராக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிராக அவர்களுக்கே இந்தியா துணை நிற்கும்.

4000 ஆண்டுகளுக்கு முன் நம் சிந்துவெளி நகரங்களை ஆரியர்கள் அழித்தார்கள். இப்பொழுது நம் கிளிநொச்சி நகரத்தை அழித்து, நம் தேசிய நிர்வாகத்தையும் அழித்தார்கள். நம் படையையும் நம் இனமக்களையும் பேரழிவுக்குள்ளாக்கினார்கள். இனியாவது மூன்று பகுதித் தமிழர்களும் இந்தியாவைப் பகை சக்தியாக வரையறுத்துச் செயல்பட வேண்டும். ஈழவிடுதலை என்ற ஒரு முனைப் பார்வையை விடுத்து, ஈழவிடுதலை - தமிழக விடுதலை என்ற இருமுனைப் பார்வை கொள்ள வேண்டும்.

இனி, ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தமிழ் நாட்டுத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காதரவாக ஈழத்தமிழர்களும் இயல்பாகச் செயல்பட வேண்டும். அதே வேளை ஈழ விடுதலைக்கான போராட்ட வடிவம், உத்திகள் வேறாக இருக்கும். தமிழ்த் தேசியப் புரட்சிக்கான போராட்ட வடிவம் உத்திகள் வேறாக இருக்கும்.

சர்வதேசியம் தமிழினத்தைக் கைவிட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர் சர்வதேசியம் ஒன்றை நம்மால் கட்டி அமைக்க முடியும். அதன் அடித்தளமாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் அமைய வேண்டும். ஏனெனில் தமிழகமும் தமிழீழமும் இரண்டு தமிழ்த் தேசங்கள். அந்தந்தத் தமிழர்களின் வரலாற்றுத் தாயகங்கள்.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, பல நாடுகளுக்கு உழைப்பாளிகளாய்ப் போய் அந்நாடுகளின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே மொழி அடிப்படையில் பன்னாட்டு உறவும் இப்போது நிலவுகிறது. எனவே, தமிழர் சர்வதேசியம் அமைக்க நம்மால் முடியும்.

தமிழர் சர்வதேசியம், வணிக உறவாகவும், பொருளியல் சார்ந்தும் வளர வேண்டும். அவ்வாறு இனம், மொழி, பண்பு, பொருளியல் என்ற அடிப்படையில் தமிழர் சர்வ தேசியத்தை நாம் கட்டி எழுப்பினால் விரைவில் நம்மினமில்லாத நாடுகள் பல நம்மோடு பொருளியல், அரசியல் உறவுகொள்ள வாய்ப்பு ஏற்படும். அப்போது தமிழ் இனத்திற்கும் சர்வதேசிய அரசியலில் ஒரு தாக்கம் இருக்கும்.

அடுத்து, இந்தப் பேரழிவிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள், குறிப்பாகத் தமிழ்த் தேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

1. இந்தியாவைப் பகை சக்தியாகக் கருத வேண்டும்

இந்தியாவின் தலைவர் களான நேரு, பட்டேல், இந்திரா காந்தி போன்றோரைப் புகழ்வதும் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏற்கெனவே பெருமை இருந்ததாகக் கூறிக் கொள்வதும் தமிழ்த் தேசிய உணர்ச்சியை ஊட்டாது. இந்திய தேசிய உணர்ச்சியைத்தான் ஊட்டும். நேரு, இந்திரா காந்தி போன்று இப்போதுள்ள சோனியா, மன்மோகன் இல்லையே என்று திறனாய்வு செய்வது இந்திய தேசிய மற்றும் காங்கிரஸ் பார்வையாக இருக்குமே தவிர தமிழ்த் தேசியப் பார்வையாக இருக்காது.

இந்திய ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் தேச இறையாண்மையை மீட்கப் போராடாமல் இந்தியாவுடன் ஒத்துப் போனால், இந்தியாவை ஈழவிடுதலைக்கு ஆதரவாக திருப்பி விடலாம் என்று கருதுவதும் அடிப்படையற்ற கற்பனையே.

2. தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்களுக்கும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் முன்னுரிமைச் செயற்களம் தமிழ்நாடு தான். ஈழம் அடுத்தநிலை ஆதரவுக்களம் தான். அதே போல் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமைச் செயற்களம் ஈழம்தான். அடுத்தநிலை ஆதரவுக் களம்தான் தமிழ்நாடு.

தமிழ் ஈழம் என்ற ஒருமுனை அரசியலை மட்டும் தமிழ்நாட்டில் நடத்தினால், நிலையான மக்கள் திரள் ஆதரவு பெற்ற இயக்கமாகத் தமிழ்த் தேசிய அமைப்புகள் வளர்ச்சி பெறா. மக்கள் திரள் சக்தி பெறாமல் தமிழ்த் தேசிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் தமிழ்நாட்டிற்கும் உரிய பயன்தராது. ஈழத்திற்கும் உரிய பயன் தராது.

3. தமிழ்த் தேசிய அமைப்பு என்றால் புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும். தேர்தலில் பங்கு பெறுவதும், தேர்தலில் பங்கு பெறாவிட்டாலும், தேர்தலுக்குத் தேர்தல் யாருக்காவது வாக்குக் கேட்பது போன்ற செயல்களும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் நடைபெறும் இந்தியத்தேசியம் தவிர வேறன்று.

ஈழவிடுதலையை ஆதரிக்கும் கட்சிகளுடன் தேர்தல் வகையில் கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்பட்டால் அந்நடைமுறை தமிழ்த் தேசிய அமைப்புகளையும் சந்தர்ப்பவாத சக்திகளாகவே மாற்றிவிடும். அதே வேளை ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ அரசின் அடக்குமுறைகளைச் சந்திக்கும் போது, அதை எதிர்க்கக் கூடிய தேர்தல் கட்சிகளுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தேவை. அதே போல், மற்ற கட்சிகளின் சனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவாகக் கூட்டுப் போராட்டங்கள் நடத்துவதும் தேவை. தேர்தல் அடிப்படையிலான எந்த அரசியல் கூட்டணியுடனும் நம்மை இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இங்கு வலியுறுத்தப்படும் கருத்து.

தமிழீழத்துக்கும் தமிழ்த் தேசத்திற்கும் இந்தியா என்பது பகை சக்தி. இலங்கைத் தீவு இந்திய - சீன ஆதிக்க மோதலின் களமாக இருப்பது உண்மை. ஆயினும் இந்த மோதலின் ஊடாக ஏதோ ஒரு கட்டத்தில் இந்தியா தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தரும் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது. இந்த வரையறுப்புகளில் நின்று கொண்டு ஈழவிடுதலைப் புரட்சியின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்த்தால் மேற்கண்ட வரையறுப்புகளுக்கு வரமுடியும்.

தமிழீழ விடுதலைப்புரட்சி இப்போது தோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்வி இல்லை என்றோ, வெறும் பின்வாங்கல் என்றோ கணிக்கக் கூடாது. இது நிரந்தரத் தோல்வி இல்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொண்டுவிட்டால், வெற்றிக்கான புதிய உத்திகளை வகுக்க முடியும்.

உலகப்புகழ் பெற்ற பல புரட்சிகள் முதலில் தோற்றுப் பின்னரே வெற்றி பெற்றன. ரசியப்புரட்சி 1905-இல் தோல்வியடைந்தது. அது 1917-இல் வெற்றி பெற்றது. கியூப் புரட்சி 1953-இல் தோல்வியுற்றது. அது 1959-இல் வெற்றி பெற்றது. அல்ஜீரியப் புரட்சியும் முதலில் தோற்றுப் பின்னரே வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆயுதப் புரட்சி செய்து ஆட்சி நடத்தினார்கள். அமெரிக்கப் படையால் அது தோற்கடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட தலிபான்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று கருதப்பட்டது. அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பொழுதும் அங்கு இருந்து தலிபான்களை எதிர்த்துப் போரிடுகின்றன. ஆனால் தலிபான்கள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி சொந்த ஆட்சி நடத்தி வருகின்றனர். தலிபான்களின் சமூகவியல் கோட்பாடுகள் பலவற்றை நாம் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடுகிறார்கள் என்ற அளவில் அவர்களின் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

எனவே புரட்சிகர சக்திகளுக்குத் தோல்வி இல்லை. ஈழவிடுதலைப் புரட்சிக்கும் தோல்வியில்லை. மீண்டும் எழும்.

இப்பொழுது நாம் தோற்றிருக்கிறோம். நம்மைத் தோற்கடித்தவர்களை நாம் தோற்கடிப்போம். தமிழர் வீரமும், தமிழர் அறமும் ஒருநாளும் தோற்காது. நமக்கு அழிவறியா ஆற்றல் தரும் மொழி நமது தாய்த்தமிழ்!

வன்னிப் பெருநிலத்தில் - முள்ளிவாய்க்காலில் மண்ணுக்குள் விதையாகிப் போன நம் மக்களும் புலிகளும் பல்லாயிரமாய் பல லட்சமாய் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்!

இது அவர்களுக்கு முதலாமாண்டு நினைவேந்தல்!

இப்பொழுது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

ஈழத்தமிழர்களைக் காக்க தம்முடலைத் தணலுக்கீந்த முத்துக் குமார் உள்ளிட்ட நெருப்புப் போராளிகள் 18 பேர்க்கும் வீரவணக்கம் செலுத்துவோம்!

தமிழீழம் வெல்க!

தமிழ்த்தேசம் மலர்க!
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

1 comment:

  1. Don't waste your time in blaming India.
    Try to do something for the people who are in need.

    At least that will help....

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.