ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் - க. அருணபாரதி

உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, “விளையாட்டு’ என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.

ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங் களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.

2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து “இந்தியன் கிரிக்கெட் லீக்” (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒயூரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் ‘உயரிய’ நோக்கம்.

இவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் ‘திறமைசாலி’யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல ‘விளையாட்டு’ வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, விஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் ‘டெக்கான் க்ரோனிக்கல்’ போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒயூரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.

ஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி ‘இந்தியா’ வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.

ஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் ‘இளைப்பாறுதல்’ என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, ‘இரவு’ ‘விருந்தில்’ நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு ‘பாலியல் விடுதலை’ என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.

இவ்வாறு, கோடி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.

மொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை ‘முதலீடு’ என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.

தமது ட்விட்டர் இணைய தளப்பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமை யாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட ‘இரகசியங்களுக்கு’ எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.

நடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.

“மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்” என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. தற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.

‘நல்ல நிர்வாகி’ என்றெல் லாம் போற்றப்பட்ட லலித் மோடி, ‘அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத் திருக்கிறோம்’ என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப் படையாக சீறி எழுந்தார்.

பெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளை யாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ச.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், ‘திடீர்’ அக்கறை யோடு நாடாளுமன்றத்தை கேள்வி களோடு முற்றுகையிட்டது.

உழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பனர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக ‘பொங்கி’ எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.

2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென் னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.

இதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல ‘விலை’யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட் டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.

ஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்ற தென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒயூரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறை யினரால் முற்றுகையிட்டு சோதனை யிடப்பட்டன.

மும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.

இந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த ‘அபார’ வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.

வருமானவரித் துறை யினரின் பல்வேறு கட்ட சோதனை களுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்’ என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டி யின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.

“ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியா வைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக் கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த ‘சீ ஐலாண்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் ‘பெட்பேர்’ எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர் புடையவர்” என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம்தி, ஏப்ரல் 19, 2010).

அணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒயூரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒயூரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப் படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனத்திற்கு தொடர் பிருந்தது தெரியவந்தது.

“அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம் பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை” என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங் களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவ டிக்கையில் இறங்கின. “முடிந்தால் நீக்கிப் பாருங்கள்” என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.

முற்றிலும் வணிகமயமாகி சூதாட்ட மாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.

மேலும், ‘தேசிய விளையாட்டு’ என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய ‘வந்தேறித் தன்மை’யைத்தான் வெளிப்படுத்து கின்றது.

தேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப் பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசு டைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளு கின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.