ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆளவந்தாரின் காழ்ப்பும் மக்களின் ஆவேசமும்


தடைகள் வரும் போது மனித ஆற்றல் இரண்டு மடங்காகப் பெருகுகிறது. தமிழ் இனம் எதிரிகளின் கொடுங்கோன்மையின் கீழும் இரண்டகர்களின் அதி காரத்தின் கீழும் அல்லல்படும் போது எதிர்நீச்சல் போட்டுக் கரையேறுவதே அரசியல் விதியாகிவிடுகிறது.

முள்ளிவாய்க்காலில் ஓராண்டிற்கு முன் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கும், ஈகி முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறப்பதற்கும் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி சாணூரப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டக் குழு ஏற்பாடு செய்தது.

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம் - முத்துக்குமார் சிலை திறப்பு என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது. இணையத் தளங்கள் இச்செய்திக்கு முதன்மை கொடுத்தன. முதல்முதலாக முத்துக்குமாருக்கு சிலை திறக்கப்படுகிறது என்ற செய்தி இன உணர்வாளர்களுக்கு எழுச்சியை ஊட்டியது.

கோடானு கோடித் தமிழர்களின் நெஞ்சில் நிரந்தரச் சிலையாகிவிட்ட முத்துக்குமார் கண்ணெதிரே ஒரு சிலையாகக் காட்சி தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது.

தஞ்சை மாவட்டத் த.தே.பொ.க. தோழர்கள் பன்மடங்கு உற்சாகப் பெருக்கோடு விழாவின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தார்கள்.

திருக்காட்டுப்பள்ளி காவேரி ஆற்றுப்பாலத் திலிருந்து முள்ளிவாய்க்கால் தமிழர்கள் நினைவுச் சுடரேந்தித் தொடரோட்டமாக 50 இளைஞர்கள் ஓடிவர அணியமானார்கள். அதற்காக அணியம் செய்யப்பட்ட கூ.சட்டைப் பனியன்கள் திருப்பூரிலிருந்து வந்தன.

திருக்காட்டுப்பள்ளியில் புறப்படும் சுடரோட்டத்தை வழிநெடுக வர வேற்க, கட்சி வேறு பாடில்லாமல் தமிழர்கள் அணியமானார்கள். விண்ண மங்கலம், பூதலூர், வில்வ ராயன்பட்டி, முத்துவீரக் கண்டியன்பட்டி, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, சாணூரப்பட்டி என சுட ரோட்ட வழிநெடுக வரவேற்புக்கு அணிய மானார்கள்.

குடந்தைச் சிற்பி இராகவன், முத்துக்குமார் உயிர்பெற்று எழுந்தது போல் சிலை வடித்துத் தந்தார். ஈழத்தில் அழியும் தமிழ் இனத்தைக் காப்பாற்ற உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இந்தியா என்ற முழக்கத்தை முன்வைத்து, 29.01.2009 அன்று முத்துக்குமார் தீக்குளித்து சாவைத் தழுவியதும், முத்துக்குமாருக்கு சிலை நிறுவப்படும் என்று முதல் குரலாக அறிவித்தது இளந்தமிழர் இயக்கம். அதை நிறைவேற்றும் வகையில் இந்தச் சிலையை வழங்கியது இளந்தமிழர் இயக்கம்.

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம் - முத்துக்குமார் சிலைதிறப்பு விழாவை 16.05.2010 அன்று நடத்தத்திட்டமிட்ட போதே. பொதுவுடைமைப் போராளி, தமிழ்த் தேசிய முன்னோடி வீரர் புலவர் கலியபெருமாள் நினைவு வந்தது. காரணம், அதே 16.05.2010 புலவர் கலியபெருமாள் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளாகும். எட்டடி உயரம் மூன்றடி அகலத்தில் புலவர் கலியபெருமாள் உருவத்தை உயிரோவியமாய்த் தீட்டியிருந்தார் கரூர் ஓவியப்புலவர் இல.பரணன். படத்தைத் தனி மகிழ்வுந்தில் கரூரிலிருந்து செங்கிப்பட்டிக்குக் கொண்டு வந்து சேர்த்தார் புலவரின் மூத்த மகனும், தந்தையோடு சகபோராளியாக மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்ட ஈகியுமான திருவள்ளுவன். புலவர் கலியபெருமாள் படத்திறப்பு நிகழ்வு விழாவின் ஒரு பகுதியானது.

எல்லா ஏற்பாடுகளும் உற்சாகப் பெருக்கோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடந்து கொண்டிருந்தன. இடையில் புகுந்தது காவல்துறை. சிலை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கியாக வேண்டும் என்றது. சாணூரப்பட்டி தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவன் அவர்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்கிறோம். அதற்கு அரசு அனுமதி தேவை இல்லை என்று மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் குழ.பால்ராசும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதியும் காவல்துறையிடம் வாதாடினர். காவல்துறை செவிமடுக்கவில்லை.

பிறகு, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசனும், மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரனும் மாவட்ட ஆட்சியர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசினர். மரியாதை நிமித்தம் மனுவும் கொடுத்துவிட்டு, தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதி தேவை இல்லை என்று வாதிட்டனர். தனியாரிடத்தில் சிலை வைத்தாலும் அரசின் அனுமதி வேண்டும் என்றார் சண்முகம். அதற்கான அரசு ஆணை இருக்கிறது என்றார்.

அந்த அரசு ஆணை நகல் தருமாறு கேட்டு தோழர் பெ.ம. மாவட்ட ஆட்சியர்க்கு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் போட்டார். 05.05.2010 அன்று போட்ட விண்ணப்பத்திற்கு 16.05.2010 வரை விடை இல்லை.

சிலை திறப்பு, சுடரோட்டம், புலவர் படத்திறப்பு, பொதுக் கூட்டம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. 15.05.2010 பிற்பகல் செங்கிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தோழர்கள் குழ.பால்ராசு, இரெ.கருணாநிதி ஆகியோரிடம் சிலை திறப்பு, சுடரோட்டம், பொதுக்கூட்டம் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை அன்று மாலை 6 மணிக்கு திருவையாற்றில் சந்தித்துப் பேசினர் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், பழ.இராசேந்திரன், குழ.பால்ராசு ஆகியோர்.

“சிலை திறக்க அனுமதி முற்றாக அனுமதி கிடையாது. மேலிடத்து ஆணை” என்று மறுத்துவிட்டார் துணைக் கண்காணிப்பாளர். சிலை திறக்கவில்லை. சட்டவழியில் பிறகு அதைப் பார்த்துக் கொள்கிறோம். விழா மேடையில் மட்டும் முத்துக்குமார் சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தி விட்டு, கூட்டமுடிவில் சிலையை எடுத்துக் கொள்கிறோம் என்று கேட்டார்கள் நம் தோழர்கள். காவல் கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட துணைக் கண்காணிப்பாளர் - மேடையில் சிலையை வைத்துக் கொள்ள இசைவு தெரிவித்தார்.

எல்லாம் முடிந்து எழுந்திருக்கும் போது கண்காணிப்பாளரிடம் இருந்து துணைக் கண்காணிப்பாளருக்குத் தொலைபேசி வந்தது. “மேடையில் சிலையை வைக்க எஸ்.எஸ்.பி. மறுத்து விட்டாராம். மேடையிலும் சிலையை வைக்கக் கூடாது” என்றார் துணைக் கண்காணிப்பாளர். “சுடரோட்டம் நடத்திக் கொள்ளுங்கள், பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள். இவற்றை மட்டும் அனுமதிக்கிறோம்” என்றார்.

தோழர்கள் மூவரும் வெளியே வந்த போது அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் எஸ்.எஸ்.பி. என்றால் யார் என்று கேட்டார்கள். “உளவுப் பிரிவின் சிறப்புக் காவல் கண்காணிப்பாளர்(குகுக) என்றார் அவர். துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை விட்டு வெளியே வரும் போது இரவு மணி 8.30 இருக்கும்.

சிறப்புக் காவல் கண்காணிப்பாளர் சந்திசேகரன் தான் அன்றாடம் மூன்று முறை முதலமைச்சரைச் சந்தித்து உளவுத்தகவல்களைச் சொல்பவராம். ஆக, எங்கிருந்து தடை வந்தது என்பது புரிந்து விட்டது.

தமிழ்நாடெங்குமிருந்து, இயக்கத் தோழர்கள், நண்பர்கள், இன உணர்வாளர்கள் செங்கிப்பட்டி நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள். எனவே, அவர்கள் வந்து ஏமாந்து போகக்கூடாது என்ற கருத்தில் கூட்டத்திற்கும் சுடரோட்டத்திற்கும் ஏற்பாடு செய்யும் பணியில் தோழர்கள் ஈடுபட்டார்கள். இரவு 11.30 மணிக்கு செங்கிப்பட்டி - உதவி ஆய்வாளர் கூட்ட மேடைபோட்டுக் கொண்டிருந்த தோழர்களிடம் “சுடரோட்டத்திற்கு அனுமதியில்லை. துணைக் கண்காணிப்பாளர் சொல்லச் சொன்னார்” என்றார்.

“தமிழினத் தலைவர்” ஆட்சியில் இனப் படுகொலைக்குள்ளான தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சுடரேந்தி ஓடிவர, இனத்திற்காகத் தீக்குளித்து மாண்ட ஈகிக்குச் சிலை திறக்க அனுமதி இல்லை.

இவ்வளவு தடைகளுக்கும் இடையூறுகளுக்கும் இடையே முள்ளிவாய்க்கால் தமிழர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மிக எழுச்சியாகத் தொடங்கியது. மாலை 5.30 மணிக்கெல்லாம் ஆயிரம் பேருக்கு மேல் திரண்டுவிட்டனர். 7 மணிக்கெல்லாம் இரண்டாயிரம் பேர்க்கு மேல் திரண்டுவிட்டனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். செங்கிப்பட்டியைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து திரளாக வந்திருந்தனர்.
புதுவைச்சித்தன் செயமூர்த்தியின் எழுச்சி இசை ஆங்காங்கே நின்றிருந்தவர்களை இருக்கைகளை நோக்கி இழுத்தது. நாற்காலி போதவில்லை. மீண்டும் நாற்காலிகளை அவசரஅவசரமாக ஏற்றி வந்து போட்டனர்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப் பாடும் போது மெய்யாகவே செயமூர்த்தி மேடையில் களமாடினார். இசைவழி போர் புரிந்தார்.

எழுச்சி இசை முடிந்ததும் முள்ளிவாய்க்கால் தமிழர் நினைவுக் கம்பத்தில் சுடரேற்றினார் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன். புலவர் புலமைப்பித்தன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குநர் த.புகழேந்தி தங்கராசு, இயக்குநர் ராம் என ஒவ்வொருவராக நினைவுச் சுடரில் தீப்பற்ற வைத்தனர். ஈகச்சுடர் கொழுந்துவிட்டு எரிந்தது. அதே நேரம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. கூட்டத்தினர் எழுந்து நின்றனர். அவர்கள் கைகளில் மெழுகுவத்திகள் எரிந்தன. ஒரு நிமிடம் அமைதி வணக்கம். முடிவில், நினைவுச் சுடர் தூணில் பூக்கள் போட்டனர்.

தமிழினத்தின் அடங்காச் சினத்தை வெளிப் படுத்துவது போல் சீறி எழுந்து ஓங்கிக் கொழுந்துவிட்டு எரிந்தது ஈகச்சுடர்!

நிகழ்விற்குத் தலைமை தாங்கிய தோழர் குழ.பால்ராசு புலவர் கலியபெருமாள் உருவப்படத் திறப்பை அறிவித்தார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து புலவரின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினர். அடுத்து வரவேற்புரை தோழர் இரெ.கருணாநிதி. பின்னர், தலைமையுரை தோழர் குழ.பால்ராசு. அடுத்துப் பேசிய இளந்தமிழர் இயக்கத் தோழர் ம.செந்தமிழன், ‘கருணாநிதியே, முத்துக்குமாரின் ஒரு சிலையைத் திறக்கவிடாமல் தடுத்துள்ளீர்கள். ஆயிரக்கணக்கான முத்துக்குமார் சிலைகளை வீடுதோறும் மேசையில் வைக்கும் அளவுக்கும் திருமணப் பரிசாக வழங்கும் அளவிற்குச் செய்து இளந்தமிழர் இயக்கம் கொடுக்கும்” என்றார். ஒரே கைதட்டல்; ஆரவாரம்!

ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு குமாரசாமி, “தான் ஒரு முத்துக்குமாரை இழந்து விட்டாலும், அவன் ஆயிரக்கணக்கான முத்துக்குமார்களை உருவாக்கி யிருக்கிறான். அவன் எதற்காக கனவு கண்டானோ அதற்காக போராடுங்கள்” என்று பேசி அமர் ந்தார்.

பிறகு, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப் பாளர் க.அருணபாரதி, இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் காசி ஆனந்தன், தோழர் பெ.மணியரசன் ஆகியோர் எழுச்சி முழக்கமிட்டனர். பெ.ம. பேசும் போது, “தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு கருணாநிதி நினைவுச் சின்னங்கள் திறப்பார். தமிழுக்காக, தமிழினத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு மணி மண்டபங்களோ, சிலைகளோ வைக்கமாட்டார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 400 பேர்க்கு மேலானவர்களை சுட்டுக் கொல்ல ஆணையிட்ட பக்தவத்சலத்திற்கு சென்னையிலே மணிமண்டபம் கட்டினார்.


ஆனால், தமிழுக்காகத் தீக்குளித்த கீழப்பழூர் சின்னச்சாமிக்கோ, மற்ற மொழிப்போர் ஈகியர்க்கோ சிலைகளோ, நினைவு மண்டபங்களோ எழுப்பவில்லை. இப்போது முத்துக்குமார் சிலை திறப்பை தடுத்துள்ளார். நீதிமன்றத்தை அணுகுவோம். நீதி கிடைக்கவில்லை எனில் களமிறங்கிப் போராடியாவது முத்துக்குமார் சிலையைத் திறப்போம்” என்றார். கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.

ஆவேச உணர்ச்சியுடன் கூட்டம் நிறைவுக்கு வந்தது.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2010 மாத இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.