நிகரன் விடைகள்
அண்ணா அசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரேவால், கிரண்பேடி போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வீசப்படுகிறதே?
இவர்கள் மீது சாற்றப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் வலுவல்லாதவை. இக்குற்றச்சாட்டுகளால் அண்ணா அசாரே குழுவினருக்குள்ள மக்கள் ஆதர வைக் குறைத்துவிட முடியாது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வந்த நன்கொடை தமது அறக்கட்டளைக் கணக்கில் வரவு வைத்து விட்டார் கெஜ்ரேவால் என்கிறார்கள். அதுவும் செயல்படும் அறக்கட்டளை தான். பயணச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் மிச்சத் தொகையைத் தரவில்லை கிரேண்பேடி என்கிறார்கள். இது ஓர் ஊழல் நடவடிக்கையே அன்று.
அண்ணா அசாரேயின் இந்திய தேசிய வெறிதான் மிகவும் ஆபத்தாக உள்ளது. அவரோடு சேர்ந்து காங்கிரசு அரசின் ஊழலை எதிர்த்தும், மக்கள் நீதி மன்ற(லோக்பால்) சட்டத்திற்காகவும் போராடி வருபவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன். அவர் ஒரு கருத்தரங்கில் இந்தியாவோடு இருப்பதா வேண்டாமா என்பதைக் காசுமீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதற்காகக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
இவ்வாறு கருத்துச் சொன்னதற்காக ஆர்.எஸ். எஸ். பரிவாரங்களில் இராம் சேனை என்ற அமைப்பினர் பிரசாந்த் பூசனை அவரது அலுவலக அறைக்குள் புகுந்து கடுமையாகத் தாக்கினர். இத்தாக்கு தலை மிகவும் மென்மையாகக் கண்டித்த அசாரே, பிரசாந்த் பூசன் கருத்தைக் கடுமையாகத் தாக்கினார். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேள்வி கேட்பவர்களுக்குத் தமது அமைப்பில் இடம் இல்லை என்றார். காசுமீரை இந்தியாவுடன் வைத்துக் கொள்வதற்காகப் போராடத் தயார் என்றார். பாகிஸ்தானோடு போர் ஏற்பட்டால் மீண்டும் பட்டாள உடுப்பைப் போட்டுக் கொண்டு போர் புரிய அணியமாக உள்ளேன் என்றார்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அண்ணா அசாரேக்கு, காசுமீரைப் பிடித்து வைத்துக் கொள்வதில் இவ்வளவு ஏகாதிபத்திய வெறி இருந்தால், காசுமீர் மண்ணின் மக்களுக்குத் தங்கள் தாய்மண் விடுதலைக்குப் போராடுவதில் எவ்வளவு உக்கிரம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதில் அண்ணா அசாரேயின் குரல் ஆர்.எஸ். எஸ்.குரல். இது மிகவும் ஆபத்தானது.
சிவசேனையைப் போல் இன உணர்வுள்ள ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருந்தால் போதும் சில தமிழ்த் தேசியர்கள் கூறுகிறார்கள். உங்கள் கருத்தென்ன?
கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதும், சிவசேனையை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் கட்சியை அமைப்பதும் ஒன்றுதான்.
சிவசேனை உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலத்தவர் மராட்டியத்தில் குவிவதை எதிர்க்கிறது என்பதற்காக அக்கட்சியைத் தமிழ்த் தேசியத்திற்கான முன்மாதிரி அரசியல் வடிவமாகக் கருதக் கூடாது.
சிவசேனை இந்துத்துவா அமைப்பு. இந்திய தேசிய வெறி அதன் இலட்சியம். காசுமீரில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கருத்துக் கூறியதற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனை இராம் சேனைக் குண்டர்கள் தாக்கினர். அவ்வாறு தாக்கியவர்களைப் பாராட்டினர் பால்தாக்கரே. ஏற்கெனவே பாபர் மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்தார் பால்தாக்கரே!
சிவசேனை என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் மராட்டியச் சேனை. இந்துத்துவா அமைப்பே வெளியாரை வெளியேற்றுகிறது என்று, நாம் கூறுவது நமது தமிழ்த் தேசியம் சார்ந்த வெளியார் ஆக்கிரமிப்புப் போராட்டத்தின் ஞாயப்பாட்டை வலுப்படுத்த மட்டுமே பயன்படும்! பகை முகாமில் இருக்கும் உள் முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது அது.
ஊழலை ஒழிக்க ஊர்திப் பயணம் நடத்துகிறாரே அத்வானி?
பாரதிய சனதாக் கட்சியில் உள்ள ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க அத்வானி என்ன பயணம் நடத்தப் போகிறார்?
பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் தனியார் நிறுவனத் திடம் கையூட்டு வாங்கியதைக் கையும் களவுமாகப் பிடித்து அம்பலப்படுத்தியது டெகல்கா இணையத் தளம். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறான தொழிலுக்குப் பெண்களை ஏற்றுமதி செய்து பிடிபட்டார்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நலன்களுக்காக, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிப் பிடிபட்ட மக்களவை உறுப்பினர்களில் பெரும்பாலோர் பா.ச.க. வைச் சேர்ந்தவர்களாவர்.
கர்நாடகத்தில் பா.ச.க. ஆட்சி நடக்கிறது. பா.ச.க. முதல்வர் எடியூரப்பா ஊழல் திருவிளையாடல் நடத்தி மாட்டிக் கொண்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். சுரங்கக் கொள்ளைக்காரர்களான ரெட்டி சகோதரர்கள் கர்நாடகத்தில் பா.ச.க. அமைச்சர்கள். அவர்களில் மூத்தவர் ஜெனார்த்தன ரெட்டி, சி.பி.ஐ. போட்ட வழக்கில் ஆந்திரப் பிரதேச சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இந்த ரெட்டி சகோதரர்களின் கொள்ளைப் பணத்தில் ஒரு பகுதி பா.ச.க. வின் மக்களவைக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராசுக்குப் போகிறது. சுஷ்மாவின் செல்லப் பிள்ளைகள் ரெட்டி சகோதரர்கள்.
மன்மோகன் சிங் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரிக்கப் பணம் வாங்கியதாக பா.ச.க. முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் பகன்சிங் குலஸ்தே, மற்றும் மகாவீர் சிங் பகோரா ஆகிய இருவரும் அண்மையில் தளைப்படுத்தப் பட்டனர்.
ஊழல், கருப்புப் பணம், பதவி வேட்டை உள்ளிட்ட சீரழிவுப் பண்பாட்டிலும் ஒழுக்கக் கேட்டிலும் ஊறித் திளைக்கும் கட்சி பா.ச.க. ஊழல் அரசியலில் காங்கிரசும் பா.ச.க.வும் ஒரு கரு இரட்டையர்கள்! பா.ச.க.வின் மூத்த தலைவர் அத்வானி, ஊழல் ஒழிப்பு ஊர்திப் பயணம் நடத்துவது இராசபட்சே மனித உரிமைப் பரப்புரை செய்தால் எப்படியோ அப்படித்தான்.
கூடங்குளம் அணு உலை குறித்து தி.மு.க.வின் நிலைபாடு என்ன?
மன்மோகன் சிங் நிலைபாடுதான்! கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று பெருமெடுப்பில் பரப்புரை செய்ய வேண்டும். அதே வேளை கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் திட்டமிட்டபடி தொடங்க வேண்டும் என்பது இந்திய அரசின் நிலைபாடு. மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கிவிட்டு கூடங்குளம் திட்டத்தைத் தொடங் குங்கள் என்று அண்மையில் மகளைப் பார்க்க தில்லி போன கருணாநிதி மன்மோகன் சிங்கிடம் நேரில் கூறியுள்ளார். இது ஏடுகளில் வந்தது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் செயலலிதா கோருவது சரியா?
முதலமைச்சர் செயலலிதாவின் இக்கோரிக்கை பிழையானது. காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில், தமிழகத்திற்குரிய காவிரி நீரை மிகவும் குறைத்து விட்டது. அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று கூறி இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டுள்ளது. இப்பொழுது தமிழக அரசே, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கோருவது தமிழக அரசு தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் முயற்சியாகும்.
இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்போ 192 ஆ.மி.க. கர்நாடகம் தரவேண்டும் என்று கூறுகிறது. அதில் 10 ஆ.மி.க. சுற்றுச் சூழலுக்காகவும், கடலில் வீணாகக் கலக்கும் நீர் 4 ஆ.மி.க. என்று கணக்கிட்டு அதையும் கர்நாடகத்தில் பிடித்தம் செய்து கொள்வது என்றும் இறுதித் தீர்ப்பு கூறுகிறது. இந்த 14 ஆ.மி.க. தமிழகத்திற்குரிய 192 ஆ.மி.க.வில் கழித்துக் கொள்ளப்படும். மிஞ்சுவது 178 ஆ.மி.க. மட்டுமே. இது மிக மிகக் குறைவான தண்ணீராகும்.
இறுதித் தீர்ப்பான 192 ஆ.மி.க.வை அரசிதழில் வெளியிட்டு விட்டால் பிறகு தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் உருப்படியான வாதம் எதுவுமிருக்காது.
இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக, கேரள, புதுவை அரசுகளும் வழக்குப் போட்டுள்ளதால் அவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் வரை இடைக்காலத் தீர்ப்பே செயலில் இருக்க வேண்டும். இடைக்காலத் தீர்ப்பை 1991 நவம்பரில் நடுவணரசு தனது அரசிதழில் வெளியிட்டு அதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்த உச்சநீதி மன்றத்திடம் இடைக்கால ஆணை கோரலாம். அல்லது மீண்டும் அரசிதழில் வெளியிட இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தலாம்.
இந்நாள் முதல்வர் செயலலிதாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இறுதித் தீர்ப்பை அரசி தழில் வெளியிடுமாறு நடுவணரசைக் கோருவது பெரும் பிழையாகும். தமிழகத்திற்குப் பாதகமாக முடியும்.
Leave a Comment