ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது! கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!


“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் 
பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது!”

கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் 
பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!


“மலைகளின் அரசி” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், கடந்த 2019 ஆகத்து இரண்டாம் வாரத்தில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால், தன் இயல்பை இழந்து தவித்து வருகிறது. சற்றொப்ப 300க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களும், தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இப்போதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடு – உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிந்து வர, கடந்த 18.08.2019 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், தோழர்கள் தமிழ்ச்செல்வன், திருவள்ளுவன், ஸ்டீபன், இராசேசுக்குமார் ஆகியோர் ஒரு குழுவாக கூடலூருக்குப் பயணம் மேற்கொண்டோம்.

வழியெங்கும் நிலச்சரிவுகள்

குன்னூரைக் கடந்து ஊட்டியை நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், அங்கிருந்து கூடலூர் நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், கூடலூரிலிருந்து தேவாலா செல்லும் வரையிலான சாலைகளிலும் என திரும்பிய திசையெங்கும் உள்ள மலைச் சாலைகளில் ஆங்காங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிந்தது. சில இடங்களில் சாலையோர மரங்கள் சரிந்ததுடன், தார்சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அங்கெல்லாம் சாலையில் தடுப்பு வைக்கப்பட்டு, ஊர்திகள் ஒரு வழியாக மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மலைப்பாதையின் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

அனுமாபுரம், பதினாறு, வாளவயல் போன்ற பல இடங்களில் சாலை வளைவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை நேரில் ஆய்வு செய்தோம். வாளவயல் கிராமத்தில், தார்ச்சாலையின் நடுவிலேயே மண் அரிக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. கொளப்பள்ளிச் சாலையில் மிகப்பெரும் அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின்போது அங்கு தன்னார்வப் பணியில் ஈடுபட்ட “கன்சர்வ் எர்த்” அறக்கட்டளைத் தலைவர் இரவிக்குமார், அப்போது தங்கள் குழுவினர் எடுத்த கைப்பேசி படங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மண் பலமிழந்து நிலச்சரிவு ஏற்படக்கூடும் என ஏற்கெனவே ஊகிக்கப்பட்ட பல சாலை வளைவுகளில், இம்மழைக்கு முன்னதாகவே சாலையைப் பலப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. சில இடங்களில் அப்பணிகள் நடந்து முடிந்திருந்தாலும், சில இடங்களில் அவை பாதியில் நின்று கொண்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவில் இதுபோன்ற பணிகள் முன்னெடுக்கப் பட்டாலும், மழைக்கால சீற்றங்களால் மட்டுமின்றி, சாலைகள், தடுப்புச்சுவர் போன்றவற்றின் தரமற்ற தன்மையாலும் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு என்கின்றனர் அப்பகுதி மக்கள்!

மழைப்பொழிவு அளவு

சென்னையின் ஒரு ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1,383 மில்லி மீட்டர் ஆகும். அதுபோல், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோவையில் ஓராண்டுக்கு சராசரியாக 618 மில்லி மீட்டர் மழை கிடைக்கிறது. கடந்த ஆகத்து 6 தொடங்கி ஐந்து நாட்களுக்கு – நீலகரி மாவட்டத்தின் அவலாஞ்சி கிராமத்தில் பெய்த மழையோ 2,528 மில்லி மீட்டர்! இதற்கு முன்பு கடந்த 1943இல் கடலூரில் ஒரே நாளில் 570 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளதே மிகப்பெரும் மழைப் பொழிவாகக் கருதப்பட்டு வந்தது.

இப்போது, அதையெல்லாம் முறியடித்து அவலாஞ்சியில் ஒரே நாளில் 911 மில்லி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. அவலாஞ்சியில் பெய்த இந்தப் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கூடலூர் மலைக் கிராமங்களின் வீடுகளுக்குள் திடீரெனப் புகுந்ததும், இதன் காரணமாக ஆங்காங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளும்தான் இந்த அவலங்களுக்கு முகாமையான காரணம்!

உயிரிழப்புகள்

மழைப் பொழிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்பால் ஆறு பேர் இதுவரை இறந்துள்ளனர். உதகை அருகே இத்தலார் வினோபாஜி நகரில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்து சென்னி (அகவை 70) என்ற முதியவர் உயிரிழந்தார். குருத்துக்குளி கிராமத்தில் பணிக்குச் சென்று திரும்பிய விமலா, சுசீலா ஆகிய இரு பெண்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கூடலூர் அருகிலுள்ள நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் மீது மண் சரிந்ததில் அமுதா, அவரது மகள் பாவனா (அகவை 10) ஆகியோர் உயிரிழந்தனர். மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின்வாரிய ஒப்பந்தப் பணி மேற்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சஜீவ் (அகவை 30) உயிரிழந்தார். அதுபோல், கோவை மாவட்டம் – பொள்ளாச்சி அருகில் மழைப் பொழிவால் வீடு இடிந்து இருவர் பலியாகினர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

நீலகிரியின் கூடலூரையொட்டியுள்ள பாலவாடி, சூண்டி, பார்வுட், கல்லறைமூலா, சேரன் நகர் போன்ற பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் நிலைமை சீராகவில்லை. பாதை தடைபட்டுள்ளதால், அங்கெல்லாம் நமது குழு செல்ல இயலவில்லை!

மழைப்பொழிவுக்கு காரணம் என்ன?
நீலகிரியில் மட்டுமின்றி, இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள – கர்நாடக வனப்பகுதிகளில் பொழிந்த மழைப்பொழிவு அங்கும் இதுபோல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம். கேரளாவின் வயநாடு பகுதியில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கடற்கரை மாவட்டங்களிலும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக, ஒரே நாளில் அதிகளவிலான மழைப் பொழிவு ஏற்படும் புதிய இயற்கைப் போக்கு உலகெங்கும் எழுந்துள்ளது. மிகப்பெரும் அளவுக்கு புவியின் காற்று வெளி மாசுபட்டு, புவிவெப்பமயமாவதே இதற்கு முதன்மைக் காரணம் என்றாலும், பிற காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

தொல் தமிழர் வாழ்விடமான நீலகிரி

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பேரழகைப் பார்த்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள்தான், இந்த மாவட்டத்தில் “கான்கிரீட்” கட்டடங்களைக் கட்டி முதன் முதலில் இங்கு பழங்குடி அல்லாத மனிதக் குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நீலகிரி மலைக்குத் தொடர்பில்லாத தேயிலை, காபி, தைலம் (யுகலிப்டஸ்), இரப்பர் போன்ற பல புதிய வகைப் பயிர்களையும், மரங்களையும் இங்கு கொண்டு வந்தனர். இந்தக் குடியேற்றங்களுக்கு முன்பு வரை, நீலகிரி மாவட்டம் – பல்வேறு பழங்குடியின மக்களின் தாயகப் பகுதியாக விளங்கியது. இப்போதும் அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ள பல சித்திரக் குறியீடுகள் பாறை ஓவியங்களாக தமிழ்நாட்டின் விழுப்புரம் (கீழ்வாலை), தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டது. பாறை ஓவியங்கள் கிடைத்த மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் முகாமையானது!

கடந்த (2019) சூன் மாதம், நீலகிரியின் கரிக்கையூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியம்தான், தென் இந்தியாவில் கிடைத்த பாறை ஓவியங்களிலேயே மிகப்பெரியது என்கிறார் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவாநந்தம். இவை இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் வரைப் பழமையானவை என்ற செய்தி, நீலகிரி மலைத்தொடரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருவதை விளக்குகிறது.

நீலகிரியில் இப்போதும் வாழ்ந்து வரும் குரும்பர் பழங்குடியின மக்கள், இன்றைக்கும் அதே ஓவிய மரபோடு விளங்குவது இந்த மரபுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. குரும்பர்கள் மட்டுமின்றி, தொதவர், கோத்தர், குறும்பர், பணியர், இருளர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய படுகர் இன மக்களும் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டம் என்பதால், மலையாளிகளும், கன்னடர்களும் கணிசமான அளவில் இங்கு வாழ்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது வறுமை காரணமாக - தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழ் மக்களில் கணிசமானோரை 1948ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்கள் நீலகிரி – கோவை – தேனி போன்ற தேயிலைப் பயிரிடப்பட்ட மலை மாவட்டங்களில் குடியேறினர். அவர்களில் கணிசமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்கவே 1968இல் தமிழ்நாடு அரசின் தேயிலைக் கழகம் (TANTEA - Tamilnadu Tea Plantation Corporation Limited) உருவானது. நீலகிரியிலுள்ள அரசுத் தேயிலைக் கழகத் தோட்டங்களில் தற்போது மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் பணிபுரிகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் தாயகப் பகுதியாக விளங்கும் நீலகிரியில், இன்றைக்கு மண்ணின் மக்களான பழங்குடியினரும், தமிழர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு மலையாளிகளும், கன்னடர்களும், மார்வாடிகளும் பொருளியல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர். கூடலூரின் முக்கிய வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் மலையாளப் பெயர்கள் பொறிக்கப்படுவது இயல்பாகிவிட்டதை அங்கு காணலாம்.

நீலகிரி மாவட்டத்தின் கணிசமான தனியார் தேயிலைத் தோட்டங்களும், பணப்பயிர் தோட்டங்களும், சொகுசு சுற்றுலா விடுதிகளும், வணிக நிறுவனங்களும் அயலார்க்கே சொந்தமானதாக உள்ளது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் முகாமையான சுற்றுலா நகரங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது.

வரைமுறையற்ற மனித ஆக்கிரமிப்புகள்

மண்ணின் மக்களான பழங்குடியினர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த இப்பகுதிகள், இப்போது மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. அவ்வப்போது இங்கு நடைபெறும் இயற்கைச் சீற்றங்களுக்கு முகாமையான காரணமாக இதுவே உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட “கான்கிரீட்” கட்டட மரபு, இன்றைக்கு மலையையே தகர்த்துவிட்டு சுற்றுலா விடுதி கட்டும் அளவுக்கு சீரழிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடி, மோயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள், உணவகங்கள் முதலியவை யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருபுறம், நீர்த்தொட்டியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தின் முகாமையான நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து மாசுபடுவது நடக்கிறது; இன்னொருபுறத்தில், பணப்பயிர் வேளாண்மைக் காகவும், கட்டடக் கட்டுமானங்களுக்காகவும் நீர்நிலைகளும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற மனித அத்துமீறல்களால் நீலகிரியின் மலைகள் தனது சூழலியல் தற்சார்பை மெல்ல இழந்து வருகின்றன. இவ்வாறு, கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2017 வரையிலான 12 ஆண்டுகளில் சற்றொப்ப 32,000 ஹெக்டேர் வனப்பகுதியை இழந்துள்ளது நீலகிரி மாவட்டம்!

நீர்வழித்தடங்கள் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாலும் வெள்ள நீர், பாய்ந்தோடு வழியின்றி வீடுகளையும், விளை நிலங்களையும் விட்டு வைக்காமல் சென்றுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.

பணப்பயிர் வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறத்தில் சட்டவிரோதமாக அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் நடப்பதாக நீலகிரி சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சோலைக்காடுகள், முட்புதர்காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் எனப் பலவகையான வனப்பகுதிகளும் இவ்வாறு அழிவை சந்தித்து வரும் நிலையில், இது மழைப் பொழிவை குறைப்பதுடன், நீரை உள்ளே தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையை இம்மலைகள் இழந்து விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், நீலகிரியில் மட்டும் இவ்வாறு நான்காயிரம் ஓடைகள் வற்றி விட்டதாகத் தெரிவிக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் மலைப்பகுதி கட்டுமான விதிமுறை களை மீறிக் கட்டப்பட்ட கட்டுமானங்களின் எண்ணிக்கை 1,337 என நீதிமன்றத்திலேயே தெரிவித்தார் நீலகிரி நகராட்சி ஆணையர் சிவக்குமார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன் பேரில் காட்டையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 39 சொகுசு விடுதிகளை மாவட்ட நிர்வாகம் இழுத்து மூடியது. உதகையிலிருந்து கூடலூர் செல்லும் வழியிலுள்ள டி.ஆர். பசார் என்ற பகுதியில் மலைச்சரிவில் ஆபத்தான முறையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட சொகுசு விடுதியை நாங்கள் நேரில் கண்டோம். இவற்றைக் கண்டவுடன், குளிர்ச்சியான நீலகிரிப் பகுதி இதுபோன்ற அடுக்கடுக்கான கான்க்ரீட் கட்டடங்களால் வெப்ப மண்டலமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழத் தொடங்கியது.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின்போது நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இப்போது நீலகிரியிலும் கிட்டத்தட்ட அதுதான் நடந்துள்ளது. மலைப்பாங்கான சரிவுப் பகுதி என்பதால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதும் இங்கு நடக்கிறது. இந்த மழையில் கூட அவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களை எட்டியுள்ள “வளர்ச்சிப் பேரழிவு” நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை!

மாறுபடும் நிலத்தின் தன்மை

அந்தந்த திணைக்கும் அந்தந்த தாவரங்கள் என்பது இயற்கையின் திணை ஒழுங்கு. இது மீறப்படுவதை “திணை மயக்கம்” என்று பழந்தமிழர்கள் குறித்தனர். இது அழிவை உண்டாக்கும் என எச்சரித்தனர். நீலகிரியில் இந்த மீறல்தான் “வளர்ச்சி” என்ற பெயரால் நடந்துள்ளது.

மண்ணின் பழங்குடியின மக்களின் அரவணைப்பில் மண்ணுக்கேற்ற மரங்கள் இயல்பாக வளர்ந்திருந்தபோது நீடித்து நின்ற நீலகிரி மலைகள், இப்போது மண்ணுக்குத் தொடர்பில்லாத தேயிலை, தைலம் போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்ட பிறகு தனது இறுக்கத்தன்மையை மெல்ல இழந்து நிற்கின்றன. இந்த நிலையில், திடீரென ஏற்படும் பெருமழைப் பொழிவு நிலத்தை நெகிழ வைத்து விடுகிறது. இதன் காரணமாகவே, ஆங்காங்கு நிலச்சரிவுகளும், குடியிருப்புகள் தகர்வதும் நடந்துள்ளது. பல இடங்களில் தேயிலைத் தோட்டத்தையொட்டி நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம்.

வன உயிரினங்களுக்கு பேராபத்து

ஐ.நா.வின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு, தமிழ்நாடு - கேரளா - கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையொட்டியுள்ள 5,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை – 1986ஆம் ஆண்டு “நீலகிரி உயிர்க்கோள் காப்பகம்” (Biosphere reserves) என அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் “உயிர்க்கோள் காப்பகம்” இதுதான்! முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் இங்குதான் அமைந்துள்ளது. அந்தளவிற்கு மிக முகாமையான உயிரியல் பன்மைத்துவம் பேணப்பட வேண்டிய பகுதி இது. ஆனால், மனித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் - வன உயிரினங்களுக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது.

காடுகள் அழிக்கப்பட்டு செயற்கையாக வேளாண் நிலங்கள் உருவாக்கப்படுவதும், விடுதிகளும் கட்டுமானங்களும் விரிவாக்கப்படுவதும் வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை அளித்துள்ளது. எனவேதான், அவை மனிதக் குடியிருப்புகளை நோக்கி சீற்றமிடுகின்றன. யானைகள், கரடிகள், காட்டுமாடுகள் ஆகியவை அவ்வப்போது குடியிருப்பு நோக்கி வருவதற்கு உணவுத் தேடலே முதன்மைக் காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்!

யானைகளுக்கு மிகப்பிடித்த உணவான எலுமிச்சை வகைப் புற்கள் (லெமன் கிராஸ்) அழிக்கப்படுவதால், மலை உச்சிகளில் அவை வளரும் இடத்தை நோக்கி யானைகள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மலைகளிலிருந்து கீழே விழுந்து அவை இறக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அதுபோல், பொதுவாகவே அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் பழக்கம் கொண்ட காட்டுமாடுகள் இப்போது, உணவு தேடி இரவில் பயணிக்கும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலை இப்படியே நீடிப்பது வன உயிரினங்களுக்கு மட்டுமின்றி, வனத்திற்குமே நல்லதல்ல!

அடர்ந்த வனங்களுக்கு அருகில் உள்ள வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் வேதி உரங்களும், முறைப்படுத்தப்படாத சுற்றுலாவும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. வெறும் 7.5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலாவுக்காக இங்கு குவிகின்றனர். இதனால் ஏற்படும் மாசுபாடு மற்றும் போக்குவரத்துகளால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவை கவனம் கொள்ள வேண்டிய முகாமையான சிக்கலாகும்.

தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைவிட நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறைவுதான் என்றாலும், தற்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ளவை எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகாமையான உயிர்ச்சூழல் மையங்களில் ஏற்படும் பாதிப்புகள், அங்கிருப்போரை மட்டும் பாதிக்கப்போவதில்லை – அங்கிருந்து நமக்கு வரும் ஆறுகள் சுருங்கி சமவெளி மக்களும் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவோம் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்? - பரிந்துரைகள்
1. முதலில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால வேகத்தில் சாலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

2. அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

3. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

4. வனப்பகுதிக்குள் வசித்தாலும் கூட, வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசே வீடு கட்டித் தர வேண்டும்.

5. நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகள், நிறுவனங்கள், வீடுகள், வேளாண் நிலங்கள் இருப்பின் அவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். வீடுகள் இழக்கும் ஏழைகளுக்கு பகுதிகளில் வீடு ஒதுக்கித் தரலாம்.

6. நீலகிரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா விடுதிகளுக்கோ, தோட்ட விரிவாக்கத்திற்கோ அனுமதி தரக்கூடாது.

7. பாதுகாக்கப்பட்ட நிலங்களாக உள்ள “பிரிவு 17” வகை நிலங்களில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், இவ்வகை நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனங்களை அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும்.

8. சாலை வளைவுகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, கான்க்ரீட் பலப்படுத்தும் முறைகளை மட்டும் கையாளாமல், மண்ணை இறுக்கமாக்கும் மரங்களை நட்டு வளர்க்கும் பணியையும் வனத்துறை மேற்கொள்ள வேண்டும்.

9. மலையையொட்டி சாய்வான பகுதிகளில் கட்டுமானங்கள் கட்டுவோர், சம உயர வரப்புகள் ஏற்படுத்தியே அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு கட்டாததால் நிலச்சரிவுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இவற்றை மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும்.

10. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்து வரும் சிகை, உண்ணி போன்ற களைத் தாவரங்களை அகற்றி, யானைகளுக்கான உணவாக உள்ள புற்களை வனத்துறையே நடவு செய்ய வேண்டும்.

11. நீலகிரி மாவட்டத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகளையும், இம்மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவத்தையும் இம்மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைத்து, வளரும் தலைமுறையினரிடம் இதைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.

12. வரைமுறையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை வரம்புக்குள் கொண்டு வர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் உள் அனுமதிச் சீட்டு (Inner Line Permit) முறையைக் கொண்டு வர வேண்டும். நெகிழிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.

13. நீலகிரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், இப்பகுதியை சுற்றுலா மண்டலமாகப் பார்க்காமல் உயிர்ச்சூழல் மண்டலமாகப் பார்க்கும் பொறுப்புணர்வுடன் இங்கு வர வேண்டும்.

14. நீலகிரி மாவட்டத்திற்குள் மண்ணின் பழங்குடியினர், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பூர்வகுடி மக்கள் தவிர்த்து பிறர் இங்கே குடியேற நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.

15. நீலகிரி பெருமழை பாதிப்புகளை சரி செய்ய 200 கோடி ரூபாய் வேண்டுமென தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ வெறும் 30 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார். இந்தத் தொகை போதுமானதல்ல – கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பாதிப்புகளைப் பார்வையிட்டு துயர் துடைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கை விரைந்து செயல்படுத்தினால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழலியல் பேராபத்திலிருந்தும் நீலகிரி மலைமகளைப் பாதுகாக்கலாம்!

சூழலை - வனங்களைப் பாதுகாக்கும் பணியில் பொது மக்களையும் ஈடுபடுத்தும் வகையிலான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இந்நோக்கில், 1800களில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட “நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கம்” தனது பணியிலிருந்து விலகி நிற்பதை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரே அதிலிருந்து விலகும் நிற்கும் அளவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளின் “கேளிக்கை மன்றம்” போல் மாறி நிற்கும் அச்சங்கத்தை ஏன் கலைத்து விடக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, இதுபோல் இல்லாமல் அந்தந்த வட்டார அளவில் உள்ள பழங்குடியின மக்கள், பூர்வகுடிமக்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிய சூழல் காப்பு தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னால் இயன்ற அளவில் மலைவாழ் மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது! நீலகிரியைப் பாதுகாப்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.