ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நெருப்புக் குஞ்சு – பெ.மணியரசன்

Untitled-1 copy
கூட்டமாகச் சேர்ந்திருப்பது, மக்கள் இயல்பு. பெரும்பாலான விலங்குகளும், பறவைகளும் கூட்டமாகவே சேர்ந்திருக்கின்றன; சேர்ந்து இரை தேடுகின்றன. கூட்டமாகச் சேர்ந்திருக்கும் இந்த உணர்வு ஓர் இயல்பூக்கம். மனித மூளையில் கூட்டமாகச் சேர்ந்திருக்கும் விருப்பம் பசி, தாகம் போன்று இயல்பூக்கமாக (Instinct) இயற்கையாக உள்ளது.

தற்காப்பு உணர்ச்சியின் தூண்டுதலாகவே கூட்டமாகச் சேர்ந்திருக்கும் விருப்பம் மக்களுக்கு உருவாகிறது. இதில் நன்மைகள் பல உள்ளன. சில தீமைகளும் உள்ளன. கூட்டு உழைப்பு, கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால் உருவாகும் மனித நேயம், மற்ற மனிதர்கள் மீதான உறவு, நட்பு, பாசம், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்தல், கூட்டாகப் போராடுதல் போன்ற பல நன்மைகள் கூட்டமாகச் சேர்ந்து கொள்வதில் இருக்கிறது. அதே வேளை ஒரு மந்தை மனப்பான்மையும் இதன் பக்க விளைவாக உருவாகிறது.

மந்தை மனப்பான்மை என்பது என்ன? கூட்டமாக உள்ள ஆடுகள் ஓர் ஆடு போகும் வழியில், தலையைக் கவிழ்த்துக் கொண்டு எல்லா ஆடுகளும் செல்வது. கூட்டமாக வாழும் மற்ற விலங்குகளும் இவ்வாறே ஒன்றன் பின்னால் ‘கண்ணை மூடிக் கொண்டு’ செல்கின்றன. கண் திறந்திருந்தாலும் சொந்தமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல், முன்னால் போகும் ஓர் உருப்படியைப் பின்பற்றி மற்றவை அனைத்தும் மந்தையாக அதன் பின்னால் செல்கின்றன.
மக்களும் அவ்வாறு நடந்து கொள்ளும் போது, அவர்களிடம் மந்தை மனப்பான்மை வெளிப்படுகிறது. சரியான திசைக்கு, சரியான நோக்கத்திற்கு மக்கள் கூட்டமாகச் சென்றால் அச்செயல் அனைவர்க்கும் நன்மை விளைவிக்கும். தவறான திசையில் மக்கள் அவ்வாறு மந்தை போல் சென்றால், அச்செயல், செல்பவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்.

விலங்குகளிடம் மந்தை மனப்போக்கு வருவதற்கு ஒரே காரணம், தற்காப்புணர்ச்சி மட்டுமே. ஆனால் சிந்தனை வளர்ச்சி பெற்ற மக்களிடம் மந்தை மனப்பான்மை வருவதற்குத் தற்காப்புணர்ச்சி மட்டுமின்றி அவ்வுணர்வுணர்விலிருந்து கிளைத் தெழுந்த வேறுபல உணர்வுகளும் காரணங்களாகின்றன.

ஒரு பொருளைத் தரமானதாக, அதே வேளை விலைகுறைவாக எந்தக் கடையில் வாங்கலாம் என்ற தேடல் மக்களுக்கு இயல்பானதுதான். ஆனால் இதற்கு சொந்தமாக முயற்சி செய்யாமல், பொறுப்பெடுக்காமல் அதிகமான மக்கள் எந்தக் கடையில் வாங்குகிறார்களோ, அந்தக் கடைக்குச் சென்று வாங்குவது மக்களுக்கு எளிதாக உள்ளது. அந்தக் கடையில், இப்போதும் தரமான பொருளை மலிவான விலையில் விற்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்கப் பலர் முயல்வதில்லை. பெருங்கூட்டம் செல்லும் அந்தக் கடைக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

சென்னை தியாகராயர் நகர் ரெங்கநாதன் தெருவிலும், உசுமான் சாலையிலும் கடைகளுக்கு வரும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அன்றாடம் பெருகிக் கொண்டுள்ளது. சென்னையில் வேறு இடங்களில் இதே விலையில் இதே தரத்தில் பொருள்கள் விற்கப்படவில்லையா? விற்கப்படுகின்றன. ஆனால், பெருங்கூட்டம் கூடும் இடத்தில் தாங்களும் வாங்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் மேலோங்கியுள்ளது. அதனால் தொலைவிடங்களில் இருந்தெல்லாம் மக்கள் ரெங்கநாதன் தெருவிற்கு வருகிறார்கள்.

ரெங்கநாதன் தெருவில் கூடும் மக்கள் கூட்டத்திடம் இரண்டு வகை உணர்விருக்கிறது. ஒன்று, தாங்கள் சொந்த முயற்சி எடுத்து அலையாமல் மற்ற மக்கள் தேர்ந்தெடுத்த கடையை எளிதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல். இன்னொன்று, பெருங்கூட்டத்தில் ஒன்றாகி, பிரபலமாகப் பேசப்படும் கடையில் தாங்களும் பொருள் வாங்கினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளுதல். இவ்விரு உணர்வின் தோற்றுவாய் தற்காப்புணர்ச்சிதான். ஆனால் இவ்விரு உணர்வுகளும் தன்முயற்சிக் குறைவு, தற்பெருமை, துணிவின்மை ஆகிய வேறு வேறு கொம்புகளில் படர்ந்த கொடிகளாகிவிட்டன.

மேற்படி காரணங்களினால் ஒரு கடைக்கு வாடிக்கையாளர்களாகிவிட்ட மக்கள் மறுபடியும் மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டு அதே கடைக்குப் போகிறார்கள்.

இதே உளவியல் அடிப்படையில் தான் மக்கள் பெரும்பாலும் பெரிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்றனர். அக்கட்சிகளில் உறுப்பினர்களாகச் சேர்கின்றனர். அக்கட்சிகளை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பிரபலமான தலைவர்கள் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்றும் பிரபலமான பெரிய கட்சியில் இருப்பது பெருமை என்றும் கணிசமான மக்கள் கருதுகிறார்கள். நீண்டகாலம் ஒரு கட்சியை ஆதரித்த பிறகு, அக்கட்சியின் “நிரந்தர வாடிக்கையாளர்கள்” ஆகிவிடுகின்றனர்.
கடையின் வாடிக்கையாளரைவிட கட்சியின் வாடிக்கையாளர் உறுதியானவர். கடையின் வாடிக்கையாளர் உயிரற்ற கடைக் கட்டடம், கடைப் பொருள்கள், காசுக்குப் பொருள் விற்போர் ஆகியோரிடம் உறவு கொண்டுள்ளனர். ஆனால், கட்சி வாடிக்கையாளரோ உயிருள்ள மனிதர்களோடு, உறவு கொண்டாடும் மனிதர்களோடு, “குருதிச் சொந்தமே, கூடப் பிறந்த பிறப்பே” என்று “பாசமழை” பொழியும் தலைவர்களோடு உறவு கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய கட்சிகள் ஆட்சி நடத்தும் போது மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் “நிரந்தர வாடிக்கையாளர்கள்” தங்கள் கட்சியைக் கைவிடுவதில்லை. தற்காலிக வாடிக்கையாளர்களே அக்கட்சிகளைக் கைவிட்டு மாறிக் கொள்வார்கள். அப்படி மாறிக் கொள்ளும் தற்காலிக வாடிக்கையாளர் இன்னொரு பெரிய கட்சியைத்தான் நாடுவாரேத் தவிர, புதிய, சிறிய கட்சிகளை – அவற்றிடம் ஒப்பீட்டளவில் நல்ல கொள்கைகளும், நடைமுறையும் இருந்தாலும் கூட, அவற்றை நாடுவதில்லை. பெரிய கட்சி, பிரபலமான கட்சி, ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சி என்ற அளவுகோல்களை வைத்துத்தான் அவர்கள் புதிய அரசியல் கடைக்குப் போவார்கள்.

மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் என்ன? முன்முயற்சி எடுப்பதற்கான உழைப்பைச் செலுத்த விரும்பாமை ஆகும். வழிகாட்ட வேண்டும் என்ற பொறுப்பெடுக்காமல், பின்பற்ற வேண்டும் என்ற அளவில் தங்கள் முயற்சியை சுருக்கிக் கொள்ளுதல். சரியான ஒன்றைப் புதிதாக உருவாக்க நம்மால் முடியாது என்று ஒதுங்கிக் கொள்ளுதல், துணிவின்மை போன்ற குண இயல்புகளே மக்களின் “வாடிக்கை”த் தேர்வுக்கான முதன்மைக் காரணங்கள்.

ஆனால், இம்மக்கள் எப்போதும் இப்படியே தான் செயல்படுவார்கள் என்று கருதக்கூடாது. குறிப்பிட்ட சூழ்நிலை கொதிநிலை அடையும் போது, அவர்கள் வெகுண்டு எழுவார்கள், வீதிக்கு வருவார்கள். அந்நிலையிலும் ஒதுங்கிக் கொள்ளும் மக்கள் இருப்பார்கள். கொதிநிலைக்கேற்ப களத்தில் குதிக்கும் மக்களைத்தான் வரலாறு சுமந்து செல்லும். ஒதுங்கிக் கொண்டவர்களை ஒதுக்கிவிட்டு வரலாறு முன்னேறும்.

கடந்த 16.12.2012 அன்று இரவில் புதுதில்லியில் தனியார் பேருந்தொன்றில், தன் ஆண் நண்பருடன் பயணம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவியை, பேருந்தில் இருந்த ஆறு கயவர்கள் வல்லுறவு கொண்டனர். எதிர்த்த அப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கினர். அந்த இளைஞனையும் தாக்கினர். இருவரையும் அம்மணமாகப் பேருந்திலிருந்து உருட்டிக் கீழே வீசிவிட்டுப் போய் விட்டனர் காமக்கயவர்கள். தில்லித் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் கொடுத்த அந்த இளைஞன் கூறியதைக் கவனிப்போம்:

“நாங்கள் வீதியில் உடையற்றுக் கிடந்தோம். அந்த வழியே சென்றவர்களை நிறுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல ஆட்டோ ரிக்சாக்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மெதுவாகக் கடந்து சென்றனவே தவிர, 25 நிமிடங்கள் வரை யாருமே நிற்கவில்லை. அதன்பின்னர், யாரோ ஒருவர் நின்றார். போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார்….”
“பொது மக்களில் யாருமே எங்களுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை. எங்களுக்கு உதவி செய்தால், சம்பவத்துக்குத் தாங்கள் சாட்சி கூற வேண்டியது வந்துவிடுமோ, போலீஸ் நிலையத்துக்கும் கோர்ட்டுக்கும் வரச்சொல்லி அலைக்கழிப்பார்களோ என்று அவர்கள் அனைவரும் பயந்தனர்.” (தினத்தந்தி, 06.01.2013) நிகழ்வு நடந்து நான்கு நாள்கள் கழித்து 21.12.2012 அன்று இந்தக் கொடூரத்திற்கு எதிராக மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்தார்கள். நீதி கேட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதியான படகுக் குழாம்(போட் கிளப்) பகுதி போர்க்களம் ஆனது. அடுத்தடுத்து நடந்த பெரும் போராட்டங்கள் நடுவண் அரசைப் பணிய வைத்தன. அந்தப் பெண் இறந்துவிட்ட பின் வீரவணக்க நிகழ்வுகளும் போராட்டங்களாகத் தொடர்ந்து கொண்டுள்ளன.

மக்களின் மனநிலைக்கு இது தக்க எடுத்துக்காட்டு. போக்குவரத்து நிறைந்த சாலையில் 25 நிமிடங்கள் வரை யாரும் கிட்டே வரவில்லை. “யாரோ ஒருவர் நின்றார், போலீசுக்குத் தகவல் கொடுத்தார்” என்கிறார் பாதிக்கப்பட்ட இளைஞர். அந்த “யாரோ ஒருவரை” சென்னையிலிருந்தவாறே என்மனம் இருகை கூப்பி வணங்குகிறது!

அந்த “யாரோ ஒருவர்” ஆயிரத்தில் ஒருவர். அவர் முன்கை எடுக்கும் மனத்துணிவும், ஆற்றலும் பெற்றவர். அப்படி ஒருவர் முன்கை எடுத்தால், முன்முயற்சி எடுத்தால், செயல்படத் தயங்கிய, மக்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். பேராடுவார்கள்; அரசு எந்திரத்தைப் பணிய வைப்பார்கள் என்பதற்கு இந்நிகழ்வு தக்க எடுத்துக்காட்டு. அந்த நிலையிலும் செயலற்ற மக்கள் ஒரு பகுதி இருப்பார்கள்; செயலற்ற மக்களில் இருபிரிவினர் உள்ளனர். முதல் பிரிவினர், தங்களது வீடுகளில் தொழிற்சாலைகளில், வயல்வெளிகளில், அலுவலகங்களில், வணிக நிலையங்களில் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டே, அநீதியை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களை ஆதரிப்பவர்கள், கருத்துச் சொல்பவர்கள், கருத்துகளைப் பரப்புவோர்கள் ஆவர். அவர்களும் வரலாற்றின் ஓட்டத்தில் பயணம் செய்வோர். அவர்கள் நீதிக்கான போராட்டத்தின் பக்கம் நிற்போர்.

இன்னொரு பிரிவினர், அந்நிலையிலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், கருத்துச் சொல்லாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்போர். இவர்களைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்காகவும் போராட வேண்டிய பொறுப்பு சமூக அக்கறையுள்ள முன்முயற்சியாளர்களுக்கு இருக்கிறது.

சமூக அக்கறையுள்ளோர், முன்முயற்சி எடுப்போராக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், கூட்டம் சேருமா சேராதா என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. 

அவ்வாறான எண்ணம் ஊசலாட்டத்தின் வெளிப்பாடாகும். முன்முயற்சி எடுப்போர் ஆயிரத்தில் ஒருவர் தாம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்போர் வரலாற்று மாற்றத்திற்கான “முன்கையெடுப்போர்” ஆவர். இப்பொழுது இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள். சூழ்நிலையானது பொது மக்களும் சூட்டை உணரும் அளவிற்குக் கொதிநிலை அடையும் போது, தமிழ்த்தேசியம் பெரும் சூறாவளியாகி, ஆதிக்க பீடங்களை ஆடச் செய்யும். மக்கள் பெருந்திரளாகத் தமிழ்த் தேசியப் பதாகை ஏந்திப் போர்க்கோலம் பூணுவார்கள்.

தமிழ்த்தேசியம் எழுச்சி பெறும் போது, இதிலும் “மந்தை மனப்பான்மையைப்” பயன்படுத்திக் கொள்வோர் உருவாகலாம். தமிழ்த் தேசிய முழக்கத்தின் கீழ் மக்கள் திரளும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் வணிகம் எழுவது இயல்பே. தலப்பாகட்டு பிரியாணிக்கடை ஊருக்கு ஊர் உருவாவதுபோல், தமிழ்த் தேசிய அரசியல் கடைகளும் உருவாகும்.

தமிழ்த் தேச விடுதலை தான் தமிழ்த் தேசியத்தின் உயிர்; தமிழ்த் தேச விடுதலையை முன்வைக்காத தமிழ்த்தேசியம் உயிரில்லா உடல்; வெறும் பிணம்! தமிழர் மரபு வளம், தமிழர் அறம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொள்ளாத தமிழ்த்தேசியம், மண் சார்ந்த கருத்தாக்கமாக இருக்காது. மண்ணோடு பொருந்தாத இறக்குமதிக் கருத்தியலாகவே இருக்கும். இந்த உண்மைகள் மக்களைக் கவ்வச் செய்தால், வணிகத் தமிழ்த் தேசியத்திலிருந்து மக்களைப் பெருமளவில் காப்பாற்றலாம். இல்லையேல், பெருங்கூட்ட மந்தை அரசியல் தமிழ்த் தேசியத்தின் பெயராலும் உருவாகி, ஏகாதிபத்திய இந்திய தேசியத்திற்கு ஏவல் செய்யும்!
தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தை பெருவாரியான மக்கள் ஏற்கும் கொதிநிலை இன்னும் உருவாகவில்லை என்று நாம் கருதினால், அக்கொதிநிலையை உருவாக்காதது நமது குற்றமே என்று பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிறிய அமைப்புதான். ஆனால் அது தமிழகத்தில் தமிழ்த் தேசிய சகாப்தத்தை சனநாயக நடைமுறையில் தொடங்கி வைத்தது. 1990 பிப்ரவரி 25-இல் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டை நடத்தி, புதிய வாசல் திறந்து வைத்தது. அதன்பிறகு தமிழ்த் தேசியக் கருத்தியலை புரட்சிகர சித்தாந்தமாக வளர்த்தது.

தொடங்கி வைப்பதற்கான ஓர் எடுத்துக்காட்டை இங்கு நினைவு கூரலாம். 1992-இல் நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமை நிர்வாகியை முற்றுகையிட்டு, காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு, தமிழ்நாட்டு மின்சாரம் செல்லக் கூடாது, அதை தடை செய்து தமிழ்நாட்டிற்கு வழங்குங்கள் என்று முழக்கமெழுப்பியது த.தே.பொ.க.முற்றுகைப் போராட்டம் நடத்திய தோழர்கள் தளைப்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று, அந்தக் கோரிக்கை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறது. சிறிய அமைப்பாக இருந்தாலும், சரியான திட்டத்தை முன்வைத்து முன்கை எடுத்தால் காலப்போக்கில், மக்கள் திரள் அக்கோரிக்கையை ஏற்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டல்லவா?

சமூகக் கொதிநிலைக்கான அனைத்து சூழலும் இப்போது நிலவுகிறது.

தேசிய இனப்புரட்சிக்கான அத்தனை நெருக்கடிகளையும், தமிழ்த் தேசிய இனம் சந்தித்து வருகிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பாசன நீர் உரிமைகளை இழந்து பல இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலை நிலம் ஆகிக் கொண்டிருக்கின்றன. குடிநீருக்கும் வழியில்லாத நிலை உருவாகிறது. அமராவதி, சிறுவாணி, பவானி ஆறுகளையும் மலடாக்க முயல்கிறது அண்டை மாநிலம். கோடிக்கணக்கான உழவர்கள் ஊர்களை விட்டு வெளியேறும் அவலம் உருவாகி வருகிறது. கடல் உரிமையை சிங்கள நாடு பறித்துக் கொண்டு, 600 தமிழ் மீனவர்களைக் கொன்றுவிட்டது. கச்சத்தீவை இழந்துவிட்டோம். ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழ்ச் சொந்தங்களைப் பலி கொடுத்து விட்டோம். இத்தனை உரிமை இழப்புகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் பின்னணியில் இந்திய அரசு இருக்கிறது.

மனித குலத்தை குறிப்பாக தமிழ்மக்களைக் கூட்டம்கூட்டமாக அழிக்கும் அபாயமுள்ள கொலைக்களமான கூடங்குளம் அணு உலைக் களத்தை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக மக்கள் போராடியும், அழிந்தால் தமிழ் மக்கள்தானே அழிவார்கள் என்ற புறக்கணிப்பு மன நிலையோடு இந்திய அரசு அணு உலையைத் திறக்க இராணுவத்தையும், காவல்துறையையும் பயன்படுத்துகிறது

1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் தொடங்கிய மொழிப் போரில், 300 பேருக்கு மேற்பட்டத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்றொப்ப 10 தமிழர்கள் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தனர். ஆனால், இம்மண்ணில் இந்தியும் ஆங்கிலமும் தமிழ்மொழியை அழித்து வருகின்றன. அயல் இனத்தாரின் வேட்டைக்காடாகத் தமிழகம் மாற்றப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் தமிழர்களின் மக்கள் தொகையைவிட அயல் இனத்தாரின் மக்கள் தொகை அதிகமாகக் கூடிய ஆபத்து நெருங்கி வருகிறது. இன்னும் எத்தனை, எத்தனை பாதிப்புகள்!

இனப்புரட்சி ஏற்படுவதற்கான எல்லா நெருக்கடிகளும் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ளன. காய்ந்து கிடக்கும் காட்டில் சிறு தீக்குச்சி பெருநெருப்பை உண்டாக்கிவிடும்.

முன்கையெடுப்போர் முனைந்தால், முன்முயற்சி எடுப்போர் எண்ணிக்கை பெருகினால் தமிழ்த் தேசியப் பதாகையுடன் வீதிகளில் மக்கள் போர்ப்பரணி பாடுவார்கள். அந்த இலக்கை நோக்கி இயங்குவோம்!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்
- பாரதியார்

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 பொங்கல் மலரில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.