காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளபடியும், இது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள அடிப்படையிலும் இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கீழ் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த 2013 பிப்ரவரியில் அரசிதழில் வெளியிடப்பட்டு ஒராண்டு கடந்த பின்னும் மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 12.06.2014 காலை 11 மணி அளவில் சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைப் பெற்று சூன் 12 அன்று மேட்டூர் அணையை திறந்து சாகுபடிக்குத் தண்ணீர் வழங்கியிருக்க வேண்டிய தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர மறுப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பொறியாளர் என்.ஜெயபாலன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்டத் தலைவர் திரு.அ.கோ.சிவராமன் , செயற்குழு உறுப்பினர்கள் திரு. நாராயணசாமி, திரு.பொன்னுசாமி, திரு. இராசேந்திரன், திரு. அ.மதிவாணன், திரு.மா.கோ.தேவராசன், திரு மு.சம்பந்தம் உள்ளிட்ட திரளான உழவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது:
”கர்நாடகத்தினர் அனைத்துக் கட்சி குழுவின் சார்பில் பிரதமரிடம் அளித்துள்ள மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிடவில்லை என்றும் அது வெறும் பரிந்துரைதான் என்றும் நெஞ்சாரப் பொய் கூறுகின்றனர்.
காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொகுதி 5 பக்கம் 224 ல் இது குறித்து கூறப்பட்டிருப்பதை நான் அப்படியே படிக்கிறேன். அதில் இந்திய அரசு இத்தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் (shall constitute) என்று தான் கூறியுள்ளது. வெறும் பரிந்துரையாகக் கூறவில்லை.
இவ்வாறு தாம் ஆணையிட நேர்த்ததற்கான சட்டச் சூழல்களையும் அத் தீர்ப்பு விளக்குகிறது.
நர்மதை ஆற்றுத் தீர்ப்பு 1970 ல் வழங்கப்பட்டபோது அதைச் செயல் படுத்த பொறியமைவு இல்லாததால் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்தது. செயல்படுத்தும் பொறியமைவு உருவாக்குவதற்காகவே 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர்த் தகராறு சட்டத்தில் 6 A என்ற பிரிவு ஒரு திருத்தச் சட்டத்தின் மூலம் 1972 இல் சேர்க்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டிய தீர்ப்பாயம், காவிரி இடைக்கால தீர்ப்புக்கு நேர்ந்த கதியையும் எடுத்துக் கூறுகிறது. இடைக்காலத் தீர்ப்பு போல் இந்த இறுதித் தீர்ப்பும் ஏட்டுச் சுரைக்காயாக போய்விடக் கூடாது என்பதற்காகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதாக தீர்ப்புரை கூறுகிறது. இதைக் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவிடம் எடுத்துக் கூறியிருக்க வேண்டிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்துகொண்டிருக்கிறார். இந்த மௌனம் தமிழினத்தை வஞ்சிக்கும் மௌனம்.
மறுபுறம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கும் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவெடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தர வேண்டுமென்றும், கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவில் இந்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, ஆனந்த குமார் ஆகியோர் இடம் பெற்றது அவர்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்ற முறையில் தான் என்றும், நியாயப்படுத்தியிருப்பது தமிழக உரிமையை காட்டிக் கொடுப்பதாக உள்ளது.
பதவிப் போட்டி இலாவணி அரசியலில் காவிரி உரிமை பலியாவதை தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக உழவர்கள் அனுமதிக்கக் கூடாது. கட்சி வேலிகளைக் கடந்து தமிழர்களாக, உழவர்களாக ஒன்று திரண்டு போராட வேண்டும் “ என்று அவர் குறிப்பிட்டார்.
நிறைவில், செயற்குழு உறுப்பினர் திரு.தங்க. கென்னடி நன்றி கூறினார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Leave a Comment