ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் வழக்கு ; சூலை ஏழாம் தேதி விசாரணை


ஏழு தமிழர் வழக்கு ; சூலை ஏழாம் தேதி விசாரணை

இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாகவிளங்கிய இராசீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால் சிறையில் இருந்து விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் செயலலிதா தமிழக அமைச்சரவையை கூட்டி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வதுடன் இந்த வழக்கில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யும் முடிவை எடுத்தார்.

இதுபற்றி மத்திய அரசு தனது கருத்தை 3 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் செயலலிதா கூறியிருந்தார்.

தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை அப்போதைய காங்கிரசு தலைமையிலான மத்திய அரசு ஏற்க மறுத்ததுடன் 7 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை 7 பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணையின்போது 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதாடினார்.

தமிழக அரசு வக்கீல் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சட்டப் பிரிவுகளை எடுத்துக்கூறி வாதாடினார். இந்த வழக்கில் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வு பெறுவதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் நாளான கடந்த ஏப்ரல் 25–ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நிருபர்களிடம் கூறினார்.

ஆனால் தேர்தலுக்கு முன் தீர்ப்பு கூறினால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும் நீதிபதி தீர்ப்பு கூறும் விவரத்தை நிருபர்களிடம் பேட்டியாக கொடுப்பதா என்றும் எதிர்ப்பு கிளம்பியதால் நீதிபதி சதாசிவம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். 

நீதிபதி சதாசிவம் ஓய்வுக்குப்பின் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவி ஏற்றார்.

இந்த நிலையில் ராசீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற சூலை மாதம் 7ம் தேதி முதல் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.