ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத 11 மத்திய அரசு ஊழியர்களுக்கு 'மெமோ'


அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது ஆரிய இந்திய அரசு. 

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக்கொள்ளலாம் என்று கடந்த 27.05.2014 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 பேருக்கு ‘மெமோ’கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையொப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப்போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. 

தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாசக அரசு, இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மையத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கூறுகையில் இந்தி மொழி தேவையில்லாதது. எங்களுக்கான ஆவணங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகின்றன. அதை சரிபார்த்து ஆங்கிலத்தில் அரசுக்கு விளக்கம் அளிக்கிறோம்.

எனவே, ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாமே தவிர, இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்ளுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
  
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும், இந்திய ஒன்றிய அலுவல் மொழியாகத் தமிழும் இணைக்கப்பட வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை இதை நாம் முன்னேடுக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.