அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ. மணியரசன்
அம்மாவின் இறப்பும்
அடைக்க முடியாத நன்றிக் கடனும்
அடைக்க முடியாத நன்றிக் கடனும்
பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
என் அன்னை பார்வதியம்மாள் கடந்த தி.பி. 2050 – ஐப்பசி 25 (11.11.2019) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு 92 அகவை இருக்கலாம்.
எத்தனை அகவை ஆனால் என்ன, தாயார், தந்தையார் இறப்பு என்பது எல்லோருக்கும் பேரிழப்புதான்! பற்று துறந்த பட்டினத்தடிகளே, அவரின் தாயார் காலமானபோது, “அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே” என்று பாடிக் கலங்கினார்.
நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் ஆறுதல் சொன்ன பெருமக்களுக்கு நன்றி சொல்லவே இம்மடலை எழுதுகிறேன்.
என் அன்னையார் காலமான செய்தியை உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களும், நம் பிள்ளைகளும், தோழர்களுமே! என் அன்னையார் காலமான சில மணி நேரத்திலேயே வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்கள் அலைப்பேசியில் அழைத்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்!
அரசியல் கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் நேரில் வந்தும், தொலைப்பேசியிலும் ஆறுதல் சொன்னார்கள். அதுபோல் தமிழ்த்தேசியத் தலைவர்கள், உழவர் இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சான்றோர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள், எங்கள் குடும்ப உறவினர்கள், ஊர்க்காரர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்டார்கள்.
திராவிடம் – பெரியாரியம் ஆகியவற்றில் என்னோடு முரண்பாடு கொண்டுள்ள பெருமக்கள், தோழர்கள் ஆகியோர் நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஒரு வேலையின்றி என் அன்னையார் இறப்பிற்குப் பின் நல்லடக்கம் வரை அனைத்துப் பணிகளையும் செய்தோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர்களும் தோழர்களும் – எங்கள் ஊர்க்காரர்களும் ஆவர்! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தோழர்கள், நேரில் வந்து துயரத்தில் பங்கு கொண்டார்கள். வர இயலாத தோழர்கள் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.
இவர்கள் அத்தனை பேர்க்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடைக்க முடியாத ஒரு கடன் நன்றிக்கடன்!
என் தந்தை பெரியசாமிக்கும், என் தாயார் பார்வதிக்கும், என்னை வளர்த்ததில் எனக்குக் கல்வி வாய்ப்பளித்ததில் முக்கியப் பங்காற்றிய என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்) மங்கலம் அம்மாள் அவர்கட்கும் நான் நன்றி செலுத்துவதில் கடன்பட்டவனாகவே இருக்கிறேன். என்னால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது!
எங்கள் ஆச்சாம்பட்டியில் முதல் முதல் கல்லூரிக்குப் படிக்கப் போனதில் நான் இரண்டாவது ஆள். முதலில் சென்றவர் என் மாமா பெ. கோபால்! அவர் முயற்சியால்தான் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் சேர்ந்தேன்.
திருச்சி தேசியக் கல்லூரியில் 1965-66இல் புகுமுக வகுப்பு (PUC) படித்த போது, தேர்வில் முதலில் தோற்றுப் பின்னர் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்று மறு ஆண்டு அதே தேசியக் கல்லூரியிலும், பூண்டி புட்பம் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பம் போட்டேன். இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், திருவாரூர் அருகே குருக்கத்தியில் இரண்டாண்டு படித்து, அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.
மார்க்சியப் புரட்சி ஈர்ப்பால் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் 1972 முதல் செயல்பட்டேன். புரட்சி நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன்.
இந்திராகாந்தி அம்மையார் சனநாயக உரிமைகளைப் பறித்து – எதேச்சாதிகார நெருக்கடிநிலை அறிவித்தபோது, கட்சியில் ஒரு பகுதியினர் தலைமறைவாக இருந்து புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. தலைமறைவாகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன்.
பிடி ஆணை, பிடிக்கத் துரத்தும் காவல்துறை, தப்பித்துத் தப்பித்துத் தலைமறைவு வாழ்க்கை ஓராண்டு! அப்படித் தலைமறைவாக இருந்த போதுதான் எனக்கு இன்னொரு அம்மாவாகவும் விளங்கிய என் அம்மாச்சி மங்கலம் அம்மாள் காலமானார். அம்மாச்சியின் உடலைக் கட்டி அழுவதற்கோ, இறுதிச் சடங்கில் பங்கு பெறவோ எனக்கு வாய்ப்பில்லை, நான் தலைமறைவில்! துக்க வீட்டிலும் காவல்துறையினர்! சி.பி.எம். தோழர்கள்தாம் நான் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்துச் செய்து, பெருங்கூட்டமாகச் சென்று என் அம்மாச்சிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டினார்கள்!
நான் கல்லூரிப் படிப்பை நிறுத்திய நிலையில், என் தந்தையார் காலமாகி விட்டார். எனவே அவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஆற்ற முடியாத பருவம் அது!
வியட்நாம் விடுதலைப் புரட்சி போல், தமிழ்நாடு விடுதலைப் புரட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம்தான் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டபோதும் என் மனத்தில் இருந்தது. சி.பி.எம். கட்சியை விட்டு நானும் தோழர்களும் வெளியேறிய பின் புரட்சிகரத் தனிக்கட்சி அமைத்து செயல்பட்டபோது, தமிழ்த்தேசியக் கருத்தியலை சமூக அறிவியல்படி நாங்கள் வளர்த்தெடுத்தோம்.
தமிழ்த்தேசியப் புரட்சி ஆயுதப் போர் அன்று; அது மக்கள் எழுச்சி என்று வரையறுத்தோம். பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய வீரர்களைக் கொண்ட பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்க்க முடிவு செய்து, அதற்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டோம்.
இதனால், என் தாயார், என் தம்பி ரெங்கராசு, என் தங்கை மணிமேகலை ஆகியோர்க்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் எதையும் செய்ய முடியவில்லை. நான் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி புரட்சி அரசியலுக்கு வந்து விட்டதாலும், எங்கள் தந்தை நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே காலமானதாலும், என் தம்பி – தங்கை இருவரும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.
தந்தைக்கு அடுத்த நிலையில், என் குடும்பத்தினர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த என் தாயாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
என்னுடைய அம்மாச்சி குடும்பம் நில உடைமைக் குடும்பம். என் தாத்தா (அம்மாச்சியின் கணவர்) சப்பாணிமுத்து ஆச்சாம்பட்டி பட்டா மணியக்காரர் (கிராம முன்சீப்). தமிழறிஞர் உலக ஊழியன் அவர்கள் முயற்சியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பால பண்டிதம் படித்தார். என் தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எடுத்த முயற்சியால் 1937 வாக்கில் எங்கள் ஆச்சாம்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது. அதில் என் தாயார் பார்வதி ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.
என் தாயார் பெயர் பார்வதி என்றாலும், அவரை பாப்பு என்று அழைப்பார்கள். என்னை பாப்பு மகன் என்று அழைப்பார்கள். “பார்ப்பு” என்ற சொல்லிலிருந்து பாப்பு உருவானது. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை” – தொல்காப்பியம் (548). பறவைக் குஞ்சுகளை “பார்ப்பு” என்றும், “பிள்ளை” என்றும் அழைப்பது மரபு. அப்பெயர்களை செல்லமாகக் குழந்தைகளுக்கு வைத்தார்கள். “பார்ப்பு” என்பதுதான் “பாப்பா” என்றும், “பாப்பு” என்றும் ஆனது! ஆண் பிள்ளைகளுக்கும் பாப்பு என்று பெயர் வைப்பதுண்டு.
தாத்தா சப்பாணிமுத்து திருடர்கள் - சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்ததால், அவர்கள் அவரைக் கொலை செய்தனர். இதனால் என் அம்மா படிப்பு ஐந்தாம் வகுப்புடன் தடைபட்டது.
என் தந்தைவழி நிலமும், என் தாத்தா வழி கிடைத்த நிலமும் எங்கள் குடும்பத்திற்குப் போதுமானது. ஆனால் என் படிப்பிற்காக ஒரு பகுதி நிலங்கள் விற்கப்பட்டன.
என் தாத்தா – அம்மாச்சி வழியாக எங்களுக்கு வந்த பத்து ஏக்கர் நிலத்தில்தான் என் மகன் செந்தமிழன் “செம்மை வனம்” வைத்துள்ளார். எங்கள் அம்மாச்சி வழியாகக் கிடைத்த எங்கள் ஆச்சான் வயலில்தான் பார்வதியம்மாள் இறுதி உறக்கம் கொள்கிறார்! அதுவும், அம்மாச்சியின் நினைவாக என் மகளுக்கு மங்கலம் என்று பெயர் சூட்டினேன். நான்கு வயதுக் குழந்தையில் மூளை நரம்பியல் நோய் ஏற்பட்டு, மங்கலம் இறந்துவிட்டது. குழந்தை மங்கலத்தை அடக்கம் செய்த நினைவிடத்திற்கு அருகில்தான், அவள் அப்பாயி பார்வதியம்மாள் படுத்துள்ளார்.
எவ்வளவோ தந்த என் தாயாரை நான் உரியவாறு கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும், கவலையும் எனக்குண்டு. என் தாயாரை எந்த நாளும் நான் புறக்கணித்ததில்லை. என் பொது இலட்சியத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டதால், என்னால் அவர்களை உரியவாறு பேணிட முடியாமற் போனது.
முதுமைக் காலத்தின் கடைசி ஆண்டுகளில் என் தங்கை மணிமேகலையும், அவர் மகள்களும்தான் என் அம்மாவை மிகச் சிறப்பாகப் பாதுகாத்தனர். என் மனைவி இலட்சுமி, தன் தாயைக் கவனித்ததைவிடப் பன்மடங்குக் கூடுதலாக தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டார். என் தம்பி ரெங்கராசும் அக்கறையோடு அம்மாவைக் கவனித்துக் கொண்டான்.
சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட போதும், இப்போது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் செயல்படும் போதும் எனது குடும்ப வாழ்வைக் கவனித்துக் கொண்டது இவ்விரு இயக்கங்களும்தான்! என் தாயாரின் இறுதிச் சடங்குகளுக்கான அனைத்துச் செலவுகளையும் பகிர்ந்து கொண்டோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களே!
என்னால் அடைக்க முடியாத எனது நன்றிக்கடன் என் அம்மாவுக்கு மட்டுமல்ல, எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட உங்கள் அனைவருக்கும்தான்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment