ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய் மாற்றுத் திறனாளிகளே திகழ்கின்றனர்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!

தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய்
மாற்றுத் திறனாளிகளே திகழ்கின்றனர்
சென்னை மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் 
தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!


“தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய் மாற்றுத் திறனாளிகளே திகழ்கின்றனர்” என, சென்னை தென்னக தொடர்வண்டி நிலையத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடி வரும் மாற்றுத் திறனாளிகளிடையே, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தமிழகத்தில் சற்றொப்ப 22 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை சீர்தூக்கி விடும் வகையிலான பல சட்டங்களை நடுவண், மாநில அரசுகள் அவ்வப்போது இயற்றி வருகின்றன. ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்த மாற்றுத் திறனாளிகள் கடும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கிறது. தொடர்வண்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனிப்பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அதை மாற்றுத்திறனுடையோர் அல்லதார் அத்துமீறி நுழைந்து பயன்படுத்துகின்றனர். அதோடு மட்டுமின்றி, அப்பெட்டியில் ஏறும் மாற்றுத் திறனாளிகள் மீதும் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. மாற்றுத் திறனாளிகளை இழுத்துத் தள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அவ்வகையில், கடந்த 13.06.2014 அன்று காலை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு. தீபக், திருச்சியிலிருந்து சென்னை வரை பல்லவன் தொடர்வண்டியில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த போது, மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் அப்பெட்டியில் ஏறியுள்ளனர். இதனைத் தட்டிகேட்ட அவரை, அருவருக்கத்க்க வார்த்தையில் இழிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு செய்தவர்கள் வேறு யாருமல்ல, இலால்குடியில் பணியாற்றும் தொடர்வண்டித்துறை ஊழியர்களே அவர்கள்.

சென்னை திரும்பியதும், திரு. தீபக் இது குறித்து எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலும், இருப்புப்பாதை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். 17 நாட்கள் கடந்தும்கூட இப்புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற புகார்களை, தென்னகத் தொடர்வண்டி நிர்வாகமும், காவல்துறையும் கண்டுகொள்வதே இல்லை.

இது குறித்து முறையிட, கடந்த 30.06.2014 அன்று சென்னையிலுள்ள தென்னகத் தொடர்வண்டி நிர்வாகப் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராவை சந்திக்க திரு. தீபக் தலைமையில் சென்ற மாற்றத்திறனாளிகளை, நடுவண் காவற்படையினர் வாயிலிலேயேத் தடுத்து நிறுத்தினர். பின்னர், அங்கேயே அமர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 3 நாட்களாக அங்கு இரவும் பகலுமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த, இன்று காலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் ஆகியோர் சென்றனர்.


அங்கு மாற்றுத் திறனாளிகளிடையே உரையாற்றிய தோழர் பெ. மணியரசன், பின்வருமாறு பேசினார்:

“தொடர்வண்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டப் பெட்டிகளில் மற்றவர்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, கடந்த மூன்று நாட்களாக இங்கு பட்டினிப் போராட்டத்தையும், முற்றுகைப் போராட்டத்தையும் ஒருசேர நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகள் - தமது உறுதிமிக்கப் போராட்டங்களின் வழியாக, கடந்த இரண்டு – மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். அவ்வகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு மாற்றுத் திறனாளிகளே நீங்கள் தான் வழிகாட்டியாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அதிகாரியிடம், நமது கோரிக்கையை சொல்வதற்கே, மூன்று நாட்கள் பட்டினி கிடந்து போராட வேண்டும் எனச் சொன்னால், இங்கு சனநாயகம் இருக்கிறதா அல்லது இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா எனக் கேள்வி எழுகிறது.

தொடர்வண்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குரியப் பெட்டிகளில் மற்றவர்கள் ஏறுவதற்கு, காவல்துறையை வைத்து கண்காணித்து, தொடர்வண்டித் துறை நிர்வாகம் எளிதில் நடவடிக்கை எடுக்கலாம். ஒருவேளை, இக்கோரிக்கையை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால், அதை கோரிக்கை எழுப்பியவர்களிடம் தெரிவிக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தை வருவதற்கே நாம் போராட வேண்டும் என்பதே இன்றைய இழிநிலை! இதை மாற்ற வேண்டுமென்ற உங்களுடையப் போராட்டம் நியாமானது. வரவேற்கத்தக்கது.

மாற்றத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில், மற்றவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. அது காலியாகவே சென்றாலும், அது அவர்களுக்கென ஒதுக்கப்பட்டது அதில் நாம் ஏறக்கூடாது என்ற பண்பு வளர்ச்சியும் நமக்கு வேண்டும். மற்றவர்கள் அதில் ஏறினால், தொடர்வண்டிக் காவல்துறை அவர்களை வெளியேற்ற வேண்டும்.

போராடுகின்ற மாற்றுத் திறனாளிகளே, நீங்கள் தனித்து இல்லை. மகுடம் சூட்டிக் கொண்ட ராஜா ராணிகள் ஆதரவு தராவிட்டாலும், எமது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போல இதே சென்னையில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் உங்களுடன் பயணிக்கிறோம்! எனவே, நீங்கள் தனித்து இல்லை! உறுதியுடன் போராடுங்கள். துணிந்து நில்லுங்கள்! உங்களது அடுத்தகட்டப் போராட்டங்களில் உங்களுடன் இணைந்துப் போராட தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி உறுதியேற்கிறது. உங்கள் போராட்டம் உறுதியாக வெல்லும்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.  

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.