ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” - இனி “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” - இனி “தமிழ்த் தேசியப் பேரியக்கம்” திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், ஆகத்து 15, 16 நாட்களில் திருச்சி, இரவி சிற்றரங்கில் நிறுவப்பட்ட பாவலர் மு.வ.பரணர் அரங்கில் நடைபெற்றது. ஆகத்து 15 – வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சிறப்புப் பொதுக்குழுவை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, சென்னை – தாம்பரம் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க நிகழ்வாக, அமைப்பின் கொடியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார். பாவலர் மு.வ.பரணர் அவர்களது படத்தை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் அண்மையில் மறைந்த சான்றோர்களுக்கும், போராளிகளுக்கும், தமிழீழப் போராளிகளுக்கும், மக்கள் விடுதலைக்காகப் பணியாற்றி மறைந்த உலகத் தலைவர்களுக்கும் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. 

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் குழ.பால்ராசு, நா.வைகறை, அ.ஆனந்தன், கோ.மாரிமுத்து, க.முருகன், க.அருணபாரதி ஆகியோர் மற்றும், தமிழக மெங்கிலுமிருந்து அழைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 
‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்று பெயர் மாற்றப்பட்டது

இந்தியாவில் பல தேசிய இனங்கள், பல தேசிய மொழிகள் இருக்கின்றன. இவற்றுள் தமிழ்த் தேசிய இனமும், தமிழ் மொழியும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்த இனமும் மூத்த மொழியும் ஆகும். மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட எழுத்து இலக்கியம் இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழுக்கு மட்டுமே இருக்கிறது. 

ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டுகொள்ளக் கூடிய அரசியல் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் தேவை என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த 25 ஆண்டுகளாக பரப்புரை செய்தும் போராட்டம் நடத்தியும், இயங்கி வருகிறது. தமிழ் மொழியை முழுமையான ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாகச் செயல்படுத்தல், காவிரி – முல்லைப் பெரியாறு – பாலாற்று உரிமைகளை மீட்டல், கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற உரிமைகளுக்கு முதன்மை கொடுத்துப் போராடி வருகிறது. அதே போல், தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுத்துப் போராடி வருகிறது. இப்போராட்டங்களில், அவ்வப்போது நூற்றுக்கணக்கான தோழர்கள் பல வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டு ஈகங்கள் (தியாகங்கள்) செய்து வருகின்றனர். 

‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியலை வளர்த்து, அதற்கு முதன்மை கொடுத்து இயங்கி வருகிறது. தமிழ்த் தேசியப் போராட்டங்களை முதன்மைப்படுத்தி இயங்கி வரும் இக்கட்சியின் பெயரில், ‘பொதுவுடைமைக் கட்சி’ என்று இருப்பதும், தேர்தலில் பங்குகொள்ளாத இவ்வியக்கத்தின் பெயரில் ‘கட்சி’ என்ற சொல் இருப்பதும் சமகாலத்தில் பொருத்தப்பாடானதாக இல்லை. மேலும், தமிழ்த் தேசிய இனத்திலுள்ள பல்வேறு பிரிவு மக்களையும், ஆற்றல்களையும் இணக்கப்படுத்தி இணைக்க வேண்டிய கடமை இருக்கிறது. 

எனவே, இவற்றுக்கெல்லாம் பொருத்தமாக உள்ள ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்ற பெயரை, இன்றிலிருந்து ஏற்பது என்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரைக் கைவிடுவது என்றும் திருச்சியில் கூடிய ஏழாவது சிறப்புப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது. 

தீர்மானம் - 2: வெளி மாநிலத்தவர்களின் மிகை நுழைவைத்
தடுக்கக் கோரி சென்னையில் சிறப்பு மாநாடு!

தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு முதலியவற்றில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இப்போக்கானது, மண்ணின் மக்களாகிய தமிழர்களை சொந்த மண்ணிலேயே தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் கீழ்நிலைக்குத் தள்ளிவிடும். இதனால், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கமே சிதையும். 

அத்துடன், அன்றாடம் ஆயிரம் பேர், பல்லாயிரம் பேர் என இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து அயல் மொழி பேசும் மக்கள், தமிழ்நாட்டில் நுழைந்து குடியேறுகின்றனர். இந்த நிலைத் தொடர்ந்தால் விரைவில் காலம் காலமாக வாழும் தமிழர்களின், மக்கள் தொகையை விஞ்சக் கூடிய அளவிற்கு அயல் மாநில மக்கள் தொகை உயர்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதன்பிறகு, தமிழ்நாடு தமிழர்களின் மொழிவழித் தாயகம் என 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்ட நோக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். தமிழ்நாட்டிலேயே அயல் இனத்தார்க்கு ஏவல் செய்து பிழைக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாக தமிழ் மக்கள் மாற வேண்டிய அவலம் உருவாகும். 

இவ்வாறு நிகழ்ந்தால், 1956இல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மொழிவழி மாநில அமைப்புச் சட்டமே பொருளற்றதாகிவிடும். எனவே பின்வரும் கோரிக்கைகளை நிறை-வேற்றிடுமாறு, இந்திய அரசையும், அதை வலியுறுத்துமாறு தமிழக அரசையும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
1. 
1. நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதிப்பதற்கு அல்லது மறுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்திற்கு உள்நாட்டு அனுமதி உரிமம் (Inner line permit) என்று பெயர். அதே அதிகாரத்தை, தமிழக அரசுக்கு இந்திய அரசு வழங்க வேண்டும்.

2. தமிழ் பேசும் மக்களுக்குரிய மொழிவழி மாநிலமாக இந்திய அரசால் ‘தமிழ்நாடு’ அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைவரையும் ‘வெளியார்’ என்று கணக்கிடப்பட வேண்டும். அசாமில், வெளியாரை வெளியேற்றும் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புடன் அன்றைய பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் ஒப்பந்தம் போட்டு, அந்த அடிப்படையில் வெளியாரைக் கண்டறியும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. அதைப்போல், தமிழ்நாட்டிலும் இந்திய அரசு தீர்ப்பாயங்கள் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை தமிழக அரசு, இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

3. அன்றாடம் தமிழகத்தில் வந்து குவியும் வெளி மாநிலத்தவர்களுக்கு, குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது. குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கினால், அவர்களை தமிழகத்தின் நிரந்தரக் குடிமக்களாக ஆக்கும். இதனால், மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுககு தமிழ்நாடு கட்டுமான வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப் போவதாக தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள். தமிழகத் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்ற பாகுபாடில்லாமல் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முகலிவாக்கம் விபத்து போல் ஆபத்துகள் நேராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், ஒருவேளை விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்காக வெளி மாநிலத் தொழிலாளர்களை தமிழகக் கட்டுமான வாரிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. தமிழக முதல்வர் அவர்கள், தமது அறிவிப்பு பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்.

4. திருச்சி கொதிகலன்(பெல்) மற்றும் படைக்கலன் தொழிற்சாலை, சென்னை ஆவடி படைக்கலன் தொழிற்சாலைகள், நெய்வேலி நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையம், தென்னகத் தொடர்வண்டித் துறை, வருமானவரி மற்றும் உற்பத்தி வரி அலுவலகங்கள் முதலியவற்றில், பிற மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். தகுதியும், திறனும் உள்ள தமிழக இளையோருக்கு அவ்வேலைகள் மறுக்கப்படுகின்றன. மண்ணின் மக்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிற நிறுவனங்கள், தமிழ்நாட்டில் செயல்படுவது சமூக அநீதியாகும். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில், 80 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை தமிழ் மக்களுக்கே வழங்க வேண்டும். இந்நிறுவனங்கள் அனைத்திலும், தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக மட்டுமே வேலைக்குப் பணியாளர்களையும், அதிகாரிகளையும் எடுக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வைத்து பணியாளர் சேர்க்கும் நிறுவனங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் எழுத்துத் தேர்வு வைக்காமல், தமிழக அரசின் அரசுப்பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும்.
5. 
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” என்ற தலைப்பில், 2014 செப்டம்பர் 28 – ஞாயிற்றுக்கிழமை சென்னையில் முழுநாள் மாநாடு நடத்துவதென்று, தமிழ்த் தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3: காவிரி மேலாண்மை வாரியம்
உடனடியாக அமைக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரை கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடகம் தமிழகத்திற்குரியத் தண்ணீரை திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கர்நாடக அணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது.

கர்நாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பை தவறாமல் செயல்படுத்துவதற்காக தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்’, ‘காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்தல்’ என்பதாகும்.

கர்நாடக அணைகள் நான்கு, தமிழக அணைகள் மூன்று, கேரள அணை ஒன்று ஆகியவற்றின் நீர் நிர்வாகப் பொறுப்பை காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயம் கூறியது. 

உச்சநீதிமன்றம் கட்டளையிட்டபின் வேறு வழியில்லாமல் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை தனது அரசிதழில் 2013 பிப்ரவரி 19இல் வெளியிட்ட இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது. கர்நாடகம் எதிர்க்கிறது என்பதற்காகவே, நடுநிலை தவறி ஓர வஞ்சனையுடன் தமிழக நலன்களை பலியிட்டு, கர்நாடகத்தின் அராஜகங்களுக்கு இந்திய அரசு துணை போவதை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

காவிரிச் சிக்கிலில், காங்கிரசு அரசைப் போலவே, பா.ச.க. அரசும் தமிழர்களை வஞ்சிப்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, உழவர்களும் வணிகர்களும், அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் போராடி வருவதை கவனத்தில் கொண்டு, பா.ச.க. அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் தலைவர்களை அழைத்துக் கொண்டு தில்லி சென்று தலைமையமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்து, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துமாறும் இச்சிறப்புப் பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் - 4: அரசுப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக
மாற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்!

தமிழக அரசு, தமிழகமுழுவதும் அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க திட்டம் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில், ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் இந்த ஆண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில், 1,2,6,7 ஆகிய வகுப்புகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகளே இல்லாமல் போய்விட்டது. தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகளில் மாணவர்கள் சேரவில்லை என்று இதற்குக் காரணம் கூறுகிறார்கள். 

இந்த நிலைத் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் இன்னும் சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளே இருக்காது. 

ஆங்கிலவழிக் கல்வியை பெற்றோர்கள் விரும்புகிறார்கள், அதனால் தான் அரசு தமிழ்வழி வகுப்புகளுக்கு மாறாக ஆங்கிலவழி வகுப்புகளைத் திறக்கிறது என்ற தமிழக அரசு காரணம் கூறுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை தேர்வு செய்யும் பெற்றோர்கள், தமிழ்வழி வகுப்புகளை தேர்வு செய்யும் வகையில், புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, பெற்றோர்கள் விரும்பவில்லை என்பதை சாக்காக பயன்படுத்திக் கொண்டு தமிழைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தமிழக அரசு செய்யக் கூடாது. 

தமிழ்வழியில் படித்தோருக்கு 80 விழுக்காடு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்நிலைக் கல்வியில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு, ளஅரசுப் பள்ளிகளில் தரமான சோதனைக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள், இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றிற்கு தனித்தனி ஆசிரியர்கள் என உள் கட்டுமானத்தை வலுப்படுத்தினால், பெற்றோர்கள் தமிழ்வழியில் பிள்ளைகளை சேர்ப்பார்கள். தமிழக அரசு இவ்வாறு செயல்பட வேண்டுமென்றும், ஆங்கில வழி வகுப்புகளை முற்றிலுமாக கைவிட வேண்டுமென்றும் இச்சிறப்புப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் - 6: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்!

1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள சகோதர உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவை இலங்கைக்கு தானமாகக் கொடுத்தது. 

அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரை சிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனது தவறை திருத்திக் கொள்ளாமல் மேலும் தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்று உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

இந்த அணுகுமுறை இந்திய அரசின் தமிழின விரோதப்போக்கையே காட்டுகிறது. 

சட்டவிரோதமாக 1974-இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீக்கி கச்சத்தீவை மீட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்திற்கும், தமிழீழத்திற்கும் இடையே உள்ள இந்த கடல் பகுதியை மரபுவழிப்பட்ட இருநாட்டுத் தமிழர்களும் மீன் பிடித்துக் கொள்ளும் பொதுப்பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 6: இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டுப்
பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்!

ஈழத்தமிழர்களை அழித்த இலங்கை அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில், 2014 மார்ச் 27 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் கீழே அடுத்தக் கூறாக இந்த பன்னாட்டுக் குழு, இலங்கை அரசின் அனுமதி பெற்றுத்தான் இலங்கைக்குள் சென்று விசாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் போட்டது. இப்படியொரு நிபந்தனை இருப்பதால், இது ‘பல்’ இல்லாதத் தீர்மானம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அன்று த.தே.பொ.க.), அப்பொழுதே கூறியது. 

மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து ஆதரவு திரட்டிய வட அமெரிக்க வல்லரசு, பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் இராசபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து, அந்தக்குழு இலங்கைக்குள் சென்று விசாரணை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, பன்னாட்டு விசாரணைக்குழு விசாரணைத் தொடங்குவதற்கு இலங்கைக்குச் செல்லப் போவதில்லை, அதற்கான விசா கேட்டு விண்ணப்பிக்கவும் இல்லை, அதே போல் இந்தியாவிடமும் விசா கேட்கவில்லை என்று கூறுகிறார். நவிப்பிள்ளையின் இக்கூற்று, பொறுப்பற்றது. 

பன்னாட்டு புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக, பொருளாதார அழுத்தங்களைக் கொடுக்க அமெரிக்க அரசும், ஐ.நா. சபையும் முன் வர வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது. 

நரேந்திர மோடி அரசு, தமிழினப் படுகொலைக் குற்றவாளியாக உள்ள சிங்கள இனவெறி அரசுடன், காங்கிரசைப் போலவே மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வளர்க்க விரும்புகிறது. கொழும்பில் சிங்கள அரசு நடத்தவுள்ள படைத்துறைக் கருத்தரங்கிற்கு, இந்தியப் படைத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளை மோடி அரசு அனுப்புகிறது. ஏற்கெனவே, வல்லரசுகளின் பன்னாட்டுத் தரகர் சுப்பிரமணிய சாமியை தமது அந்தரங்கத் தூதராக இராசபக்சேயை சந்திக்க நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். இந்திய அரசின் இவ்வாறான தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளையும், சிங்கள இனவெறி ஆதரவுச் செயல்பாடுகளையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்திற்கு எதிரான தனது உள்நாட்டு – வெளிநாட்டுக் கொள்கைகளை கைவிடுமாறும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் - 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக,
இரசாயனக் குப்பை மேடாக மாற்றாதே!

இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக, மற்றும் தனது ஆதாயங்களுக்காக மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது.

மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து கொண்ட தமிழ் மக்கள், கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, இடிந்தகரையைத் தளமாகக் கொண்டு மூன்றாண்டுகளாகப் போராடி வருகின்றனர். அந்த எதிர்ப்பை ஒடுக்கி முதல் அணு உலையைச் செயல்படுத்திய இந்திய அரசு, இப்பொழுது அதே கூடங்குளத்தில் மேலும் 7 அணு உலைகள் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. 

இவற்றில், சிறிய அளவில் கதிர்வீச்சு வெளிப்பட்டாலும் தமிழ்நாடு சுடுகாடாக மாறக் கூடிய ஆபத்து உள்ளது. வட தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தென்மேற்கே, தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரத்தில், நியூட்ரினோ அணுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், இந்தியா முழுவதுமுள்ள அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்குமிடம் ஆகியவற்றை கட்டி வருகிறது. அழிவு ஏற்பட்டால் தமிழகத்திற்கு, ஆதாயம் கிடைத்தால் மற்றவர்களுக்கு என்ற திட்டத்தில் இந்திய அரசு செயல்படுகிறது. 

உலகத்தில் எங்கும் அமையாத அளவிற்கு டெல்டா மாவட்டங்களில், வளம் நிறைந்த காவிரிச் சமவெளியை இயற்கை தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அங்கு, மீத்தேன் எரிவளி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி, காவிரிப்படுகையை இரசாயனக் குப்பை மேடாக்கும் செயலில் இந்திய அரசு இறங்கியுள்ளது. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, குடிநீருக்கும் பாசனத்திற்கும் பயன்படாத இரசாயனக் கலவையாக மாறிவிடும்.

கேரளத்திலிருந்து கர்நாடகத்திற்கு எரிவளி கொண்டு செல்வதற்காக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி போன்ற மாவட்டங்களில் விளை நிலங்களை பாழ்படுத்தும் வகையில் நிலத்தடிக் குழாய்களை புதைக்கிறது, இந்திய அரசின் கெயில் நிறுவனம். 

வெளிநாடுகளுக்குத் தாது மணலை அனுப்புவதற்காக, தென் மாவட்டங்களின் நிலவளத்தைச் சூறையாட தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது. 

உலகின் முதல் நாகரிகம், தமிழர் நாகரிகமாக அமைவதற்குக் காரணமாக உள்ள தமிழகத்தின் செவிலித்தாய்களாக விளங்கும் ஆறுகளைச் சின்னாபின்னப்படுத்தி சிதைப்பதற்கு, மணல் கொள்ளையை அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழக ஆற்று மணல், வெளி மாநிலங்களுக்கும், கப்பல் கப்பலாக வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

இயற்கையின் கொடைகளாக உள்ள திருவண்ணாமலை கவுத்தி மலை, சேலம் சேர்வராயன் மலை போன்ற இடங்களில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்ல தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது, இந்திய அரசு. 

தமிழக இயற்கை வளத்தை அழித்து, சுற்றுச் சூழலைக் கெடுத்து, தமிழக மக்கள் வாழத் தகுதியில்லாத மண்ணாக மாற்றிவிடும் மேற்படித் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டுமென்று, இந்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்த வளங்களைப் பாதுகாக்க அங்கங்கே தனித்தனியாக நடைபெறும் போராட்டங்கள், ஒருங்கிணைந்த போராட்டமாக வடிவெடுக்க அனைவரும் முயல வேண்டுமென்றும், அந்த முயற்சியில் உறுதியாகப் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானித்துள்ளது.

தீர்மானம் - 8: மொழிப் போர் ஈகி கீழப்பழுர் சின்னச்சாமியின்
முழு உருவச் சிலையை உடனே திறக்க வேண்டும்.

தமிழ் மொழியை அழிக்க வரும் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழ் மொழியைக் காக்கவும் முதன் முதலாக 1964 சனவரி 25-இல், தீக்குளித்து மாய்ந்தவர் தழல் ஈகி கீழப்பழுர் சின்னச்சாமி. அவர் தீக்குளித்த திருச்சி மண்ணில், அவருக்கு முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். இன்னும், அச்சிலை நிறுவப்படாமல் உள்ளது. உடனடியாக, தழல் ஈகி கிழப்பழுர் சின்னச்சாமிக்கு திருச்சயில் சிலை நிறுவித் திறக்குமாறு தமிழக முதல்வரை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது. 

1938 மற்றும் 1965 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களையும் நிகழ்ந்த ஈகங்களையும், தமிழக அரசு பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று, தமிழ்த் தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.