ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் குற்றமா? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் குற்றமா? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!






தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் குற்றமா? தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் (கில்டு) சங்கச் செயற்குழுவில், தமிழில் பேச அறிவுறுத்தியதற்காக வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்காக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, சற்றொப்ப 3000 உறுப்பினர்களைக் கொண்ட, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கான சங்கம்(GUILD) செயல்பட்டு வருகின்றது.
இச்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த தமிழன் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் அய்யா கா.கலைக்கோட்டுதயம், செயலாளராக இருந்த திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குநர் திரு. ஜாக்குவார் தங்கம், செயற்குழு உறுப்பினர் திரு. ஆதிராம் ஆகியோரை, சங்கத்தின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, சங்கத்தின் தலைவரான கிரிதாரிலால் நாக்பால் என்ற வடநாட்டுக்காரர் ஒருதலை பட்சமாக அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழின உணர்வாளர்களான தோழர்கள் கா.கலைக்கோட்டுதயம், ஜாக்குவார் தங்கம், ஆதிராம் ஆகியோர் செய்த ‘குற்றம்’ என்ன தெரியுமா?
சங்கத்தின் கூட்டத்தில், தமிழில் பேச வேண்டுமெனக் கேட்டதும், இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவரும் சங்கச் செய்தி இதழை தமிழிலும் வெளியிட வேண்டுமெனக் கேட்டதும்தான், இவர்கள் செய்த மாபெரும் “குற்றம்”!

தமிழகத்தின் தொழில் வணிகங்களில் ஆக்கிரமிப்பு செய்ததோடு இல்லாமல், தமிழர்களைக் கொண்டு செயல்படும் பல திரைப்பட சங்கங்களையும் வடநாட்டுக்காரர்கள் உள்ளிட்ட அயலார் கைப்பற்றியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே, இந்நிகழ்வு நடைபெற்றள்ளது.

இந்நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து, 13.09.2014 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி தலைமையேற்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், திராவிட மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. ஞானசேகரன், ஐ.சி.எப். பயிற்சி மாணவர் சங்கத் தோழர் இம்ரான் கான், தமிழக மீனவர்கள் கழகத் தலைவர் தோழர் கோ.சு.மணி, தமிழ்த் திரைப்படப் பாதுகாப்புக் கழகத் தலைவர் திரு. கே.இராசன், இயக்குநர் வெ.சேகர், தமிழர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவழகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கலந்து கொண்டு, தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கமான கில்டுக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசினார். தமது பேச்சின்போது, தமிழ்நாட்டின் தொழில் – வணிகங்களை மட்டுமின்றி, அடிப்படைத் தொழில்களில் தொழிலாளர்களாக வந்தும்கூட, தமிழினத்தின் உரிமைகளை அயலார் பறித்து வருகின்றனர் என தோழர் க.அருணபாரதி குறிப்பிட்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், திரளான தமிழுணர்வாளர்களும், தமிழ்த் திரையுலக உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.