ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வருங்காலத்திற்கு வழிகாட்டும் மாநாடு! வாருங்கள் தமிழர்களே! - தோழர் பெ.மணியரசன் அழைப்பு!





சென்னையில் நடைபெறும் “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு!

வருங்காலத்திற்கு வழிகாட்டும் மாநாடு!  வாருங்கள் தமிழர்களே! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ.மணியரசன் அழைப்பு!

எனது அழைப்பு யாருக்கு? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கா? இல்லை. அவர்கள்தாம், “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாட்டை நடத்துகிறவர்கள்! எனவே, அவர்களுக்கு அழைப்பு விடுப்பது எனக்கு நானே அழைப்பு விடுத்துக் கொள்வது போன்றது.

“அரசியல் முனிவர்கள், இலட்சியக் காதலர்கள்” என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களை அழைக்க விரும்புகிறேன். “பணம் – பதவி - விளம்பரம்” மூன்றுக்கும் ஆசைப்படாத முனிவர்களாகப் புரட்சிக்கரத் தமிழ்த் தேசியர்கள் விளங்க வேண்டும். அதே வேளை பருவகாலப் பாலியல் ஈர்ப்பை விடப் பெரும் ஈர்ப்பு அவர்களுக்குத் தமிழ்த் தேசிய இலட்சியத்தின்பால் இருக்க வேண்டும்.

இவ்வாறான இலட்சிய தாகமும் தனிநபர் ஒழுக்கமும் கொண்ட ஆண்களும், பெண்களும், குடும்பங்களும் ஆயிரம் ஆயிரமாய்த் தமிழ்த் தேசத்திற்குத் தேவை!

வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது; வழிகாட்டிய இனம் தடுமாறி நிற்கிறது. வரலாறு விடுத்துள்ள அறைகூவலை ஏற்றாக வேண்டும்! வருக செருக்களம்!

“நல்ல செய்திதான்; ஆனால் நம்மால் முடியுமா” என்று ஒதுங்கிக் கொண்டால் நடைபிணமாகத்தான் வாழலாம்! “நல்ல இலட்சியம் தான், ஆனால் இதெல்லாம் இப்போது இயலக்கூடியதா” என்று தயங்கினால் வையகமெங்கும் நடக்கும் வரலாற்று எழுச்சிகளை – மாற்றங்களைக் கண்டும் காணாத பத்தாம் பசலிகளாகத்தான் இருப்போம்!

இன்று, வையகமெங்கும் நடக்கும் இந்த வரலாற்று மாற்றங்களில் தமிழ்நாடு பின்தங்கி விடவில்லை! தமிழ்த்தேசியம் என்ற புரட்சி இலட்சியம், மாற்றார் மருளும் அளவிற்குப் பகைவர்கள் பதைக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது.

போலிகள் எதிலும் உண்டு; தமிழ்த்தேசியத்திலும் உண்டு. புத்தத்தில் போலிகள் தோன்றவில்லையா? மார்க்சியத்தில் போலிகள் தோன்றவில்லையா? ஆனால் முளைக்கும் போதே தமிழ்த் தேசியத்தில் போலிகள் தோன்ற வேண்டுமா என்ற வேதனை எழத்தான் செய்கிறது. நெல் முளைக்கும் போதே களையும் சேர்ந்தே முளைக்கிறது. உழவர்கள் களைகளை அப்புறப்படுத்துகிறார்கள். வில்லேர் உழவர், சொல்லேர் உழவர் போல கருத்தேர் உழவர்களாகவும் இளைஞர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

உலகின் மூத்த இனம் தமிழினம்; அதற்கு ஒரு கண்டத்தின் அளவு விரிந்து பரந்த தாயகம் ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் அது இன்றுள்ள தமிழ்நாடாக சுருங்கிக் கிடக்கிறது. பஃறுளி ஆறு ஓடிய – பன்மலை அடுக்கங்கள் நிறைந்த குமரிக் கண்டம் – தலைச்சங்கம் வைத்து தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. அது கடல்கோளால் அழிந்தது. குமரிமுனையிலிருந்து இமயமலை, சிந்துச் சமவெளி வரை தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றுக்கான சான்றுகள் இன்றும் உள்ளன. அந்தத் தாயகத்தையும் இழந்தோம். கரிகால் பெருவளத்தான் அரண்மனையும் கடல் வாணிகக் கடை வீதிகளும் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டினமும் கடலுக்குள் போய்விட்டது.

தமிழகம் ஒரு மாநிலமாக சுருங்கிய போது, வடவேங்கடம் – சித்தூர் – திருக்காளத்தி போன்ற செந்தமிழ் நிலங்களை ஆந்திரப்பிரதேசத்திடம் இழந்தோம்; தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, நெடுமங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோட்டை புறநகர் வட்டம் போன்ற தமிழர் தாயகப் பகுதிகளைக் கேரளத்திடம் இழந்தோம். கோலாறு தங்க வயல், கொள்ளே காலம் பகுதிகளைக் கர்நாடகத்திடம் இழந்தோம்!

சுருங்கிச் சுருங்கி இன்றைக்குள்ள தமிழகமாகச் சிறுத்துள்ளது நமது தாயகம்! ஆந்திரப் பிரதேச நிலப்பரப்பு தமிழகத்தைப் போல இரண்டு மடங்கிற்கும் அதிகம்; நம்மைவிட மக்கள் தொகை குறைவாகவுள்ள கர்நாடகத்தின் நிலப்பரப்பு தமிழகத்தைவிட 31 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அதிகம்.

இன்று எஞ்சியுள்ள தமிழர் தாயகத்திற்குள் அன்றாடம் ஆயிரம் ஆயிரமாய் அயல் மாநிலத்தார் வந்து குடியேறுகிறார்கள். இங்கேயே நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் தங்கி விடுகிறார்கள். வெளியார் மக்கள் தொகை தமிழர்களின் மக்கள் தொகைக்குச் சமமாக பெருகிவரும் ஆபத்து அதிகரித்துள்ளது. அப்படி நடந்தால் அதன்பின் தமிழகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. கலப்பு இனங்களின் தாயகமாக மாறும். தமிழினம் தனது கடைசி நிலப்பரப்பையும் இழந்துவிடும்!

தமிழர் தாயகமாக விளங்கிய போதிலும் தமிழ்நாட்டின் தொழில், வணிகம் ஆகியவற்றில் மார்வாரிகள், குசராத்திகள், ஆந்திரப்பிரதேசத் தெலுங்கர்கள், கேரள மலையாளிகள் உள்ளிட்ட பிற இனத்தவர்தாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களை அண்டித்தான் தமிழர்கள் தொழில், வணிகம் செய்கிறார்கள்.

உலகமயப் பொருளியல் வந்த பிறகு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழர் தாயகத்தைப் பாதுகாத்திடவும், அதில் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை, கல்வி உள்ளிட்ட வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திடவும் திட்டங்கள் வகுத்திட – தீர்மானங்கள் நிறைவேற்றிட – அறவழியில் மக்கள் திரள் களங்கள் அமைத்திட 28.09.2014 சென்னை மாநாடு நடைபெறுகிறது.

“இத்தனைப் பெரிய வேலைகளை இவர்களால் செய்ய முடியுமா” என்று சிலர் நம்மைப் பார்த்து ஐயம் கொள்ளக்கூடும்! வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் இந்தக் களத்திற்கு வேறு யாரும் வராத நிலையில் நாம் வந்திருக்கிறோம் என்பதே நமக்கான முதல் தகுதி!

காஞ்சிபுரம், ஐயம்பேட்டையில் 1992 – பிப்ரவரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் (அப்போது த.தே.பொ.க.) முதல் மாநாடு நடத்தியபோதே, வெளியார் ஆக்கிரமிப்பை எதிர்த்துத் தீர்மானம் போட்டோம். அதன்பிறகு 2005 மே 21-ஆம் நாள் ஈரோட்டில் வெளியார் ஆக்கிரமிப்புக்கு எதிரான சிறப்பு மாநாடு போட்டோம்; வினாவிடை வடிவில் விளக்க நூல் வெளியிட்டோம்.

வெளியாரின் மிகை நுழைவைத் தடுத்திட, வெளியாரின் தொழில் - வணிக - வேலை ஆக்கிரமிப்புகளைத் தடுத்திடத் தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறோம். அப்போராட்டங்களில் நம் தோழர்கள் சிறை சென்றார்கள். வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள்.

எந்த ஈகத்திற்கும் அணியமாகி, முன்வைத்த காலைப் பின் வைக்காமல் தமிழர் தாயகத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கக் களத்தில் நிற்க வேண்டும். அதற்கு மக்களைத் திரட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். நமக்குத் தேர்தல்கள் – பதவிகள் என்பவற்றில் எந்த நாட்டமும் இல்லை.

வெளியார் தொடர்பாக நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் ஏற்கெனவே இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டப்படி செயல்படுத்தப்படுபவைதாம்!

ஒரு மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் உள்ளே நுழைவதற்கு அந்த மாநில அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய பர்மிட்(Inner Line Permit) முறை வடகிழக்கு மாநிலங்களில் இருக்கின்றன. ஜம்மு காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை இருக்கிறது. கர்நாடகத்தில் பிற மாநிலத்தவர் விளை நிலங்களை வாங்கத் தடை இருக்கிறது. இந்த உரிமைகளையும், இவற்றிற்கான சட்டங்களையும்தான் நாம் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் கேட்கிறோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இம்மாநிலங்களின் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம்தான் தொழிலாளர்களும் பணியாளர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் ஆணை ஏற்கெனவே உள்ளது. இப்போது நாம் கேட்பது இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை வாய்ப்பை தமிழ் மக்களுக்கு வழங்குங்கள் என்பதுதான்.

மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில்தான், இங்கு புதிதுபுதிதாக வந்து குவியும் வெளி மாநிலத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்கும் வேட்டைக்காடாக தமிழ்நாட்டைத் திறந்துவிடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், சட்டப்படியான வேலைப்பளு போன்றவற்றை வழங்கிட, தமிழகத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு, தமிழக அரசு ‘தொழிலாளர் மானியம்’ வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

எனவே, நாம் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளையோ, நடப்பிலுள்ள இந்தியச் சட்டங்களுக்குப் புறம்பான கோரிக்கைகளையோ முன்வைக்கவில்லை.

இக்கோரிக்கைகளை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்கவும், தமிழ் மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளவுமான ஏற்பாடாக “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” என்ற இச் சிறப்பு மாநாடு நடைபெறுகின்றது.
வருங்காலத்திற்கு வழிகாட்டும் மாநாடு இது! வாருங்கள் தமிழர்களே!

என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாகத் தலைவர் பெ. மணியரசன் அழைப்புவிடுத்துள்ளார்


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.