செயலலிதா வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
செயலலிதா வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
”செயலலிதா வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கில் டி குன்கா நேர்மையாளர் என்றும், யாருக்கும் அஞ்சாதவர் என்றும் ஏற்கெனவே பெயர் பெற்றவர்.
செயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கும் சட்டவிதிகள் அனுமதித்த எல்லா வாய்ப்புகளையும் வழங்கி, இதனால் இவ்வழக்கு விசாரணை 18 ஆண்டுகள் நீடித்து அதன் பிறகு நேர்மையான முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து நிவாரணம் பெற சட்ட வழிகளைப் பின்பற்றி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேல் முறையீடு செய்வதே சரியான நெறிமுறையாகும். அதை விடுத்து, தொடர்ந்து தமிழ்நாட்டில் அன்றாட மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்துவது சரியல்ல.
அத்துடன் இத்தீர்ப்பையும் செயலலிதா பெங்களூரு சிறையில் கைக்கப்பட்டிருப்பதையும் தமிழர்களுக்கெதிரான கன்னடர்களின் சதி என்றும், இது இனமுரண்பாடு என்றும் அ.இ.அ.தி.மு.க.வினர் காட்ட முயல்வது முற்றிலும் தவறான செயல். இவ்வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாடு எதுவும் வெளிப்பட்டதாக தெரியவில்லை.
1991 நவம்பர் – டிசம்பரில் கன்னடர்கள் கர்நாடகத் தமிழர்களின் வீடுகளை, வணிக நிருவனங்களை சூறையாடினார்கள் – எரித்தார்கள், தமிழர்கள் பலரை கொலை செய்தார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் செயலலிதாதான், அப்போது அ.இ.அ.தி.மு.க.வினர் கன்னடர் இனவெறிக்கு எதிராக தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.
காவிரி தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தமிழகத்திற்குள்ள காவிரி நீர் உரிமைக் குறித்து தீர்ப்பளித்த போதெல்லாம் அதைச் செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. அப்போதெல்லாம் அ.இ.அ.தி.மு.க.வினர் கர்நாடக அரசின் சட்ட விரோத போக்கை கண்டித்து காவிரி நீர் பெற ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை.
இப்போது இவ்வழக்கில் கன்னடர்கள், தமிழர் எதிர்ப்பு இனவெறியோடு நடந்து கொள்வதாக கூறி அ.இ.அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்துவது தன்னல அரசியல் தவிர வேறல்ல. இது நீதித்துறையின் தற்சார்பு தன்மையை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இப்போக்கை அ.இ.அ.தி.மு.கவினர் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
Leave a Comment