ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்துத் தேசியமும் இல்லை இஸ்லாமியத் தேசியமும் இல்லை - பெ.மணியரசன்

இந்துத் தேசியமும் இல்லை இஸ்லாமியத் தேசியமும் இல்லை - பெ. மணியரசன்
இந்து மதத்தவர் ஒரு தனித் தேசிய இனம் என்பது போல் சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். - பா... அமைப்புகள் முயலுகின்றன. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனத்தவர் என்பது போல் சித்தரிக்க இஸ்லாமிய அடிப்படை வாதிகள் முயலுகின்றனர்.

சமூக அறிவியல்படி பார்த்தால், இந்துக்களும் ஒரே தேசிய இனத்தவர் அல்லர்; முஸ்லிம்களும் ஒரே தேசிய இனத்தவர் அல்லர். பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்திலும் இருக்கின்றனர்; இஸ்லாம் மதத்திலும் இருக்கின்றனர்.

மதம் ஒரு மெய்யியல்; இது இனஉறவு கொண்ட சமூக வடிவமன்று; ஒரு மெய்யியல் என்ற அடிப்படை யில் மதம் பல்வேறு தேசங்களிலும் பல்வேறு தேசிய இனங்களிலும் பரவுகிறது. அவற்றின் ஆன்மிகச் சிந்தனைகள் மட்டுமே முறையே இந்துக்களிடமும் முஸ்லிம்களிடமும் பொது நிலை கொள்கின்றன. இனம், மொழி வேறுவேறு!

மெய்யியல் என்பது, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவுகளையும் மனிதர்களுக் கிடையே உள்ள உறவுகளையும் பேசும் கருத்தியல் ஆகும். மதங்களும் இவ்வுறவுகள் பற்றிப்பேசுவதால் அவை மெய்யியல் பிரிவில் இடம் பெறுகின்றன. மெய்யியல் பிரிவில் இடம் பெறுவதாலேயே ஒரு மதம் கூறுபவை அனைத்தும் சமூக அறிவியல்படி சரியானவை என்று கருத முடியாது.

நாம் இங்கு, மதங்கள் கூறும் மெய்யியல் சரியா, தவறா என்ற விவாதத்தில் இறங்கவில்லை. மாறாக மதங்கள் தேசிய இனங்களுக்கான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டவை அல்ல என்ற உண்மையை மட்டுமே விவாதிக்கிறோம்.

சமூகத்திற்கான மெய்யியல், தேசங்களின் எல்லை கடந்து, பல்வேறு தேசியஇன மக்களிடையே பரவுகிறது. மார்க்சியம் பல தேசங்களில் பிற்காலத்தில் பரவியதைப் போலவே, ஓர் இனத்தில் தோன்றிய மதங்களும் தேசங்கடந்து பல இனங்களின் மக்களிடையே பரவின.

வைதிக மதம், பிராமண மதம் என்று சொல்லப்படு வதும், சிவனியம் - மாலியம் (திருமால் நெறி) இணைந்த மதம் என்று சொல்லப்படுவதுமான இந்து மதம் பிறப்பு அடிப்படையிலான வர்ணாசிரமக் கோட்பாட்டைக் கொண்டிருப்ப தால், இது கண்டங்கடந்து பரவுவ தற்கான வாய்ப்பை இழந்து விட்டது. இந்து என்பவர் ஏதோ ஒரு சாதியில்தான் பிறக்க வேண்டி யிருக்கிறது. சாதியற்ற மதத்திலி ருந்து இந்துவாக மாற விரும்புபவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்று வரையறுக்க முடியாத அவலம் இம்மதத்தில் இருக்கிறது. ஏனெனில், இந்து மதத்தில் சாதியற்றவர் யாருமில்லை. ஆனாலும், இந்து மதம்- ஒரு மெய்யியல் என்ற அடிப் படையில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்த்தேசம் உள்ளிட்ட பல தேசங்களில் பரவியிருக்கிறது.

இப்பரவலை வைத்துக் கொண்டு, இந்து மதத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே இனம் என்ற கருத்தியலைப் பார்ப்பனிய ஆற்றல்கள் கட்டமைத்துவிட்டன. ஆரியப் பார்ப்பனியத்தின் புதிய காலச் சிந்தனையாளர்களில் முகா மையானவர் சாவர்க்கர். அவர்இந்துத்துவாஎன்பதை ஓர் இனத்தின் அடையாளமாகக் கூறினார்.

இந்து இசம் என்பதை விடவும் விரிவானது இந்துத்துவா. இந்துத் துவாவில் மூன்று முகாமைக் கூறு கள் இருக்கின்றன. 1. இந்து இசம். 2. இந்து தருமம். 3. இந்து மதம். நம்முடைய முழுமையான இந்து மரபினத்தின்(பிவீஸீபீu ஸிணீநீமீ) சிந்தனை மற்றும் செயல்பாட்டின் அனைத் துத் துறைகளையும் உள்ளடக்கியது தான் இந்துத்துவா! இந்து தேசியத்தை (இந்து ராஷ்டிரத்தை) இந்துக்களுக்கு மட்டுமான அரசிய லாகவும், இந்துக்களுக்கு மட்டுமான அரசுக் கோட்பாடாகவும் உருவாக் குவதுதான் இந்துத்துவா. அதாவது, பொதுப் பண்பாடு, பொது மொழி, பொது நாடு, பொது மதம் முதலிய வற்றைக் கொண்ட தனித்தன்மை யுள்ள தேசிய இனமாக இந்துக்கள் விளங்குகிறார்கள் என்பதைக் குறிக் கும் சொல்லேஇந்துத்துவாஎன் பது’’. (காண்க : Essentials of Hindutva, V.D. Savarkar, 1923)

இவ்வாறு சாவர்க்கர் 1920களில் வடித்துத் தந்த ஆரியத் தேசியத் தத்துவமானஇந்துத்துவா’’தான், ஆர்.எஸ்.எஸ்., பா... உள்ளிட்ட பார்ப்பனிய அமைப்புகளின் தேசி யத் தத்துவம் ஆகும்.

இந்துத்துவா தேசியத்திற்குரிய தாயகமாகப் பாரத கண்டத்தையும், பொது மொழியாக சமற்கிருதம் மற்றும் அதன் வாரிசான இந்தியையும், பொதுப் பண்பாடாக - வேத காலம் என்று சொல்லப்படும் காலத்தில் வெளிப்பட்ட சனாதன- வர்ணாசிரமப் பண்பாட்டையும் சாவர்க்கர் வரையறுக்கிறார். ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் சமூக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள் வதற்காகக் கற்பனைச் செங்கற்களால் கட்டிய மனக்கோட்டை தான் சாவர்க்கர் முன்வைக்கும் இந்துத்துவா வழிப்பட்ட இந்தியத் தேசியம். மதச்சார்பின்மையுடன் இணைத்து இந்தியத் தேசியம் பேசும் இடதுசாரிகளும் வலது சாரிகளும், சாவர்க்கர் வைத்த கற்பனை உட்கூறுகளைப்போல்- வேறுவகைக் கற்பனை உட்கூறுகளைக் கூட முன்வைக்காமல் மொட்டை இந்தியத் தேசியம் பேசும் தந்திரசாலிகள் ஆவர்.

சாவர்க்கர் வகையறாக்கள் பேசும் இந்தியத் தேசியத்திற்குப் பலியான அப்பாவிகள் இருக்கி றார்கள். அதேபோல், மதச்சார் பின்மையுடன் கலந்து தந்திரசாலிகள் பேசும் இந்தியத் தேசியத் திற்குப் பலியான அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் இந்தியத் தேசியத்தின் அடிப்பட இந்துமதம் தான்! நேப்பாளத்தில் அரச மதமா கவே இந்துமதம் இருக்கிறது. ஆனா லும், நேப்பாளமும் இந்தியாவும் மத அடிப்படையில் ஒரே நாடாக இருக்க முடியவில்லை.

மத அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் ஒரே நாடாக நீடிக்க முடியவில்லை. மேற்குப் பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்துவிட்டன. கிழக்குப் பாகிஸ் தான், தனது வங்காள மொழி மற்றும் தேசிய இன அடையாளங்களால் வங்காளதேசம் என்ற பெயர் பெற்றது.

ஆனால், உலகம் முழுவதும் ஒருநாள் ஒரே இஸ்லாமிய பேரரசு உருவாகப் போகிறது என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் கூறி வருகின்றனர். ஆன்மிகத்துடன் இணைத்துச் சொல்லப்படுவதால் உலகிற்கான ஒரே கிலாபத் (Caliphate) ஒருநாள் அமையத்தான் போகிறது என்று அப்பாவித்தன மாக நம்பும் இஸ்லாமிய மக்களும் உள்ளனர்.

மக்களிடமுள்ள இந்த கிலாபத் நம் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டுதான் அதிகாரப் பேராசை கொண்ட அடிப்படைவாதக் குழுக்கள் முஸ்லிம் மக்களிடையே உருவாகின்றன.

அண்மையில் அல்-கய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வெளியிட்ட செய்தி இணையத்தளங்களில் வந்து பரபரப்பை உருவாக்கியது. அதில் அவர் பின்வருமாறு கூறினார்:

இந்தியத் துணைக் கண்டத்தில் அல்கய்தா அமைக்கப்படும். அது இந்தியாவில் அசாம், குசராத், ஆமதாபாத், காசுமீர், பர்மா, வங்காள தேசம் ஆகியவற்றில் துன்புற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் துயர்களைத் துடைக்கும்’’.
அல்கய்தாவின் போட்டி அமைப்பான .எஸ்..எஸ் (ஈராக் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு) சிரியாவிலும், ஈராக்கிலும் ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப்போர் நடத்தி வருகிறது. “சியா’’ பிரிவைச் சோந்த முஸ்லிம்களையும் கிறித்த வர்களையும் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது இந்த சன்னிப் பிரிவு .எஸ்..எஸ். அல்கய்தாவி லிருந்து பிரிந்ததுதான் .எஸ். .எஸ்.

.எஸ்..எஸ். அமைப்பு நடத்தும் சிரியா - ஈராக் போரில் போராளிகளாகப் பங்கெடுக்கத் தமிழ் நாட்டிலிருந்தும், தெலுங்கானா மற்றும் மராட்டிய - மாநிலங்களிலிருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் போயிருக்கிறார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் .எஸ்..எஸ். படம் பொறித்த டி-சட்டைகளை முஸ்லிம் இளைஞர்கள் அணிந்து மகிழ்ந் தனர் என்ற செய்தியும் வந்தது.

ஒரு தத்துவத்தை ஏற்றிருக்கும் போது, அதே தத்துவத்தை ஏற்று அயல்நாட்டில் செயல்படுவோர் மீது பாசமும் உளவியல் உறவும் ஏற்படுவது இயல்பு.

வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வட அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் நடந்த போது, தமிழ்நாட்டு வீதிகளில்வியட்நாம் யுத்தம் எங்கள் யுத்தம்! வியட்நாம் இரத்தம் எங்கள் இரத்தம்!’’ என்று கம்யூனிஸ்ட் தமிழர்கள் முழக்க மிட்டனர். இது கம்யூனிசத் தத்து--வத்தால் ஏற்பட்ட உளவியல் உறவு. சேகுவேரா படம் பொறித்த டி-சட்டைகளைத் தமிழக இளைஞர் கள் அணிந்து மகிழ்வதும் தத்துவ உறவால் ஏற்பட்ட உறவின் விரி வாக்கமே! புரட்சி, கம்யூனிசம் என்பவற்றில் ஈடுபாடில்லாத இளைஞர்கள் சிலர் கூட சேகு வேரா படம் போட்ட சட்டை அணிகிறார்கள். அடிப்படையில் தத்துவ ஒருமைப்பாட்டால் உரு வான - உறவு - பின்னர் - தன்னை ஒரு துணிச்சல்காரராகக் காட்டிக் கொள்ள- ஒரு கவர்ச்சிக்காக - என்று வெவ்வேறு நோக்கங்களுடன் சேகு வேரா படம் போட்டு சட்டை அணிவோரை உருவாக்கி விடு கிறது.

கம்யூனிசத் தத்துவமும், சேகுவேரா படமும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகரமை (சோசலிச) சமூக அமைப்பு என்ற இலட்சியங்களின் மீது ஏற்பட்ட பற்றினால் - அதே கொள்கை உடையோரிடம் நாடு கடந்து, இனம் கடந்து, மதம் கடந்து ஓர் உளவியல் உறவை ஏற்படுத்தின. . எஸ். . எஸ் - அல்லது அல் கய்தா தத்துவமும், அடையாங்களும் நாடு கடந்து, இனம் கடந்து முஸ்லீம் இளைஞர்களிடையே ஓர் உளவியல் உறவை ஏற்படுத்தி யுள்ளன. இங்குஇஸ்லாம்’’ என்ற மதத் தத்துவம்தான் அந்த உள வியல் உறவுக்குக் காரணம்.
உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட கிலாபத் அரசு (caliphate) - அதாவது (அல்லாவின்) இறைத்தூதர் அரசு - நபிகள் நாயகத்தின் வழிவந்தோர் அரசு உருவாக்க வேண்டும் என்பதுதான் . எஸ்..எஸ் இலட்சியம்; அதுவே தான் அல்கய்தா இலட்சியம். அந்த அமைப்புகள் நடத்தும் ஆயுதப் போர்கள் - அந்த இறைத்தூதர் அரசுக்கான புனிதப் போர்கள் (ஜிகாத்).

தமிழ் முஸ்லிம் இளைஞர்களில் சிலர் இந்தப் புனிதப் போர்களில் ஆர்வங்கொண்டு, அங்கு செல்ல விரும்புவதும் அந்த அமைப்புகளில் அடையாளங்களைத் தாங்களும் ஏற்றுக் கொள்வதும் சரியா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி இந்தியத் துணைக் கண்டத்தில் புனிதப் போர் நடத்த வேண்டும் என்று அறிவித்தவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அந்த அறிவிப்பைக் கண்டித்தார். இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முஸ்லிம் தலைவர்கள் பலரும், முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களும் ஜவாஹிரியின் அறிவிப்பைக் கண்டித்தனர்.

இறைத்தூதரின் இஸ்லாமிய உலகப் பேரரசு நிறுவும்இலட்சியத்தை’’ ஏற்றுக் கொண்டால், இந்தியாவில் இந்துத்துவாப் பேரரசு இலட்சியத்தையும் ஏற்பதே தருக்க வியல்படி சரியாக இருக்கும்!

இந்துத்துவாப் பேரரசு கோட்பாடு எவ்வளவு தவறானதோ அவ்வளவு தவறானது இஸ்லாமிய உலகப் பேரரசுக் கோட்பாடு!

ஒரு வாதத்திற்காக இந்துத்துவாப் பேரரசு அமைவதாக வைத்துக் கொள்வோம். அப்படி அமைந்தால் என்ன நடக்கும்? பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம தர்மமும் உயர்சாதி ஆதிக்கங்களும் மீண்டும் நிலை நாட்டப்படும். இன்றுள்ள உலகமய முதலாளியத்திற்கு மிகவும் உகந்த சமூக வடிவம் வர்ணசாதிச் சமூக வடிவம்தான்! அரசு சட்டங்கள் இயற்றி, காவல் துறையை ஏவி, உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து போராட முடியாமல் செய்வதை கீழ்ப்படிந்துள்ள உதிரிக் கூட்டமாக மக்களை மாற்றுவதை, - அவ்வாறான வெளி ஒடுக்குமுறைகள் இல்லாமலேயே சமூகம் தன்னைத் தானே மேற்கண்டவாறு ஒழுங்கு படுத்திக் கொள்ளும் அமைப்புதான் வர்ண சாதி சமூகம். ஏகபோக மற்றும் பெரும் முதலாளிகளுக்கு இப்படிப்பட்ட வர்ணசாதி சமூகம் தான் உவப்பான சமூகம்!

இன்று பன்னாட்டு முதலாளிய நிறுவனங்கள் நரேந்திரமோடி அவர்களை ஆதரித்து நிற்பது நமது கருதுகோளுக்கான நடைமுறைச் சான்று!

பன்னட்டு பெரும் முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கூறும் அதே நரேந்திர மோடி, சமூக வளர்ச்சிக்கு வர்ண சாதிப் பிரிவு தேவை என்று வாதம் செய்யும் சுதர்சனராவ் என்பவரை இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தின் (ICHR) தலைவராக அமர்த்தி யுள்ளார்; வர்ணசாதிப் பிரிவை ஞாயப் படுத்தும் தீனாநாத் பத்ராவில் நூல்களைப் பாடப்புத்தகங்களாக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளின் இஸ்லாமிய உலகப் பேரரசு அமைந்தால் என்ன நடக்கும்? அதில் சனநாயகம் இருக்காது; பெண்கல்வி இருக்காது; பெண் ணடிமைத்தனம் உச்சத்தில் இருக்கும். சமத்துவ சமூக அமைப்பு இருக்காது. வரலாற்று அடிப்படையில் உருவான மொழிகள் அவற்றின் தேசிய இனங்கள், அவற்றின் தனித்துவப் பண்பாடுகள் எதற்கும் உரிமை இருக்காது.

அது மட்டுமன்று, சன்னி, சியா பிரிவினர் ஒருவரை, ஒருவர் அழிக்க இடையறாத ஆயுதப் போர்கள் முஸ்லிம்களுக்கிடையே தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு போதும் அமைதி இருக்காது. ஏற்கெனவே ஈராக்கில் அப்படிப்பட்ட கலவரங்கள், -அரசின் ஒடுக்குமுறைகள் இருந்தன. இப்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ஷியா முஸ்லிம்களைஇனப்படுகொலை’’ போல் மதப்படுகொலை செய்து வருகிறது சன்னிப் பிரிவின் . எஸ். . எஸ்.

அல்கய்தாவில் அரபி மொழிகளுக்கும், உருது மொழிக்குமான மோதல் பல்லாண்டுகளாக நடக்கிறது. இப்பொழுது அல்கய்தாவில் முதல் முறையாக உருது மொழியின் கை ஓங்கி உள்ளது. ஒசாமா பின்லேடன் தலைமை அமெரிக்காவில் அழிக்கப்பட்டபின் புதிதாகத் தோன்றிய தலைமை உருது மொழிக்கு முகாமை தருகிறது.

அரபிக்கும் உருதுக்குமே இப்படிப்பட்ட மோதல் என்றால் தமிழ் மொழிக்கெல்லாம் -இஸ்லாமிய உலகப் பேரரசில் சவக்குழியில்தான் இடம் இருக்கும்.

ஒருவேளை இஸ்லாமிய உலகப் பேரரசு அமைந்தால் அதிலும் இதே அமெரிக்க ஐரோப்பிய ஏகபோக முதலாளிகள்தாம் கொட்ட மடிப்பர்கள் என்று நம்ப இடமுள்ளது. ஏகாதிபத்தியங்களின் அரச தந்திரம் அப்படிப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள் மற்றுள்ள வளைகுடா முஸ்லிம் நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  வேட்டைக்காடாக அந் நாடுகளின் முஸ்லிம் அரசுகள் மாற்றியுள்ளன.

எனவே தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் .எஸ்..எஸ் மற்றும் அல்கய்தா அடிப்படை வாத அமைப்புகளின் மீது ஈர்ப்புக் கொள்வது தன்னழிவுப் பாதை யாகவே முடியும்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் முஸ்லிம் மக்கள் மத அடிப்படையில் பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்றால் - இங்கு மாற்றங்களை உருவாக்கப் போராட வேண்டும். எங்கோ சென்று வீண் வேலையில் ஈடுபட வேண்டியதில்லை.

முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிலரின் அடிப்படைவாதச் செயல் பாடுகளுக்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை ஐயப்படுவது முஸ்லிம்களை எதிர்ப்பதற்கென்று இந்துத்துவா அமைப்புகளில் சேரு வது தமிழ்நாட்டு இந்து மக்களின் நலனுக்கு எதிராகவே முடியும். இந்துத்துவா என்பது பார்ப்பன ஆதிக்கம் வடநாட்டு ஆதிக்கம் ஆகியவற்றைத் தனது கருவில் கொண்டது. இந்த வரலாற்று உண்மையை, நடைமுறை உண்மையை ஒவ்வொரு தமிழ் இந்துவும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்துப்பெரும்பான்மை ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிறோம் என்று முஸ்லிம்களும், முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள இடத்தில் அவர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிறோம் என்று இந்துக்களும் ஆகிய தமிழ் மக்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கி றார்கள்.

இந்தக் குறைகளைக்களைய என்ன செய்ய வேண்டும்? இந்துக்களும் முஸ்லிம்களும் அவரவர் மதம் சார்ந்து தீவிர முகாம்களை அமைத்துக் கொண்டால் - மோதல் முற்றும்; நோய் தீராது தீவிரம டையும்!

இந்து மதமாக இருந்தாலும் இஸ்லாம் மதமாக இருந்தாலும் வேறு எந்த மதமாக இருந்தாலும் சமூக வாழ்வில் மதத்தின் பங்கு என்ன என்று வரையறுக்கப்பட வேண்டும்.

ஒருவருக்குத் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையும் இருக்கிறது; அதே வேளை அவருக்கு சமூக வாழ்க்கையும் இருக்கிறது. சொந்த வாழ்க்கையில் வழிபாட்டுரிமை, மதத்தின் வழிவந்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கடைபிடிக்கும் உரிமை போன்றவற்றில் மதத்தைப் பின்பற்றுவது சரி. ஆனால் பொது வாழ்வான அரசியல், அரசு, கல்வி போன்றவற்றில் மதச்சார்பு இருப்பது கூடாது. மதச்சார்பின்மை (secularism) என்பதன் சரியான பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றைக் கிருத்துவ மதம் கோலோச்சிய ஐரோப்பாவில்-மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களின் கருத்துருவாக்கமாக - சனநாயக ஆட்சியின் வழிகாட்டியாக மதச்சார்பின்மைக் கோட்பாடு உருவானது.

இந்தியாவில், தமிழ்நாட்டில் பலமதங்கள் இருக்கின்ற நிலைமையில், சனநாயகக் கருத்தியல் ஒப்பீட்டளவில் அன்றைய ஐரோப்பாவை விட வளர்ந்துள்ள சூழலில்  அரசியல், அரசு, கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு இருப்பது முற்றிலும் பொருத்த மற்றது.

தமிழ்நாட்டில் மத அரசியல் கட்சிகளும், சாதி அரசியல் கட்சிகளும் என்ன செய்கின்றன? சொந்த மத அரசியல் அமைப்பில் இருக்கலாமே தவிர, பல மதத்தினர் கலந்துள்ள அமைப்புகளில் இருக்காதீர்கள் என்று மத அரசியல் அமைப்புகள் தங்கள் மதத்தவர்களுக்கு காவல் மதில் எழுப்புகின்றன. அதே போல் சாதிக் கட்சிகளும், சொந்த சாதிக் கட்சியில் இருக்கலாமே தவிர பல சாதிகள் உள்ள கட்சிகளில் - அமைப்புகளில் இருக்கக் கூடாது என்று - காவல் மதில் எழுப்புகின்றன.

ஆனால் எந்த சாதித் தமிழராக இருந்தாலும் எந்த மதத் தமிழராக இருந்தாலும் அவர்கள் பொது வாழ்வில் சந்திக்கும் எந்தச் சிக்கலுக்கும் அந்தந்த சாதி அமைப்போ அல்லது மத அமைப்போ தீர்வு கண்டுவிடப் போவதில்லை. அதற்கான ஆற்றல் எந்தத் தனிச் சாதி அமைப்பிடமும் இல்லை; தனி மத அமைப்பிடமும் இல்லை. பல மதத்தவரும் பல சாதியினரும்- தமிழ்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சேர்ந்திருக்கும் அமைப்புகள் - உண்மையாகப் போராடினால் - செயல்பட்டால் தமிழ்நாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும்.

பல மதத்தவரையும் பல சாதியினரையும் கொண்டுள்ள பெரிய கட்சிகள் - இன்றைக்கு தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க முடியவில்லை எனில், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைக் காக்க முடியவில்லை எனில், அந்த அமைப்பு களுக்குத் தலைமை தாங்குவோரின் - சந்தர்ப்பவாதம், ஆற்றலின்மை ஆகியவையே காரணங்களாகும்.

தேசியம் - என்பது தேசிய இனம் சார்ந்து வருவது. மதம் சார்ந்து வருவதன்று. மதத்தை ஒரு தேசியத்தின், தேசத்தின் அடிப்படைக் கூறாகத் திரித்துக் கூறுவோர்க்கு வேறுவகைத் தன்னல நோக்கங்கள் இருக்கக் கூடும்.

பெரும்பான்மைத் தேசிய இனங்களுக்கிடையேசிக்கிக் கொண்ட சிறுபான்மைத் தேசிய இனங்கள் தங்கள் மக்களைத் திரட்டிக் கொள்ள  - தங்கள் மதங்களைச் சில இடங்களில் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக பஞ்சாபில் சீக்கிய மதம்; காஷ்மீரில் முஸ்லிம் மதம். ஆனால் தேசிய இன வரையறுப்பு என்று வரும் போது முன்னவர் பஞ்சாபியர்; பின்னவர் காஷ்மீரிகள்!

இந்து, முஸ்லிம், கிறித்தவர் போன்ற மதங்களைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய இனத்தவர் ஆவர்! இவர் களுக்குரிய தேசியம் தமிழ்த் தேசியம். முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறியுள்ள தெலுங்கு, கன்னடம், உருது சௌராட்டிரம், மராத்தி போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் தமிழ்த் தேசியத்திற்குரிய மக்களே!

தமிழ்த் தேசியம்’’ ஒரு கருத்தியலாக வளர்ந்துள்ளது. அது மதச் சார்பின்மை கொண்டது மட்டு மின்றி, இந்துத்துவாவையும், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் ஏற்காதது. தமிழ்நாட்டிலுள்ள இந்து, முஸ்லிம், கிறித்தவ, பௌத்த, சமண மதத்தினர் அனைவர்க்கும் உரியது தமிழ்த் தேசியம்!
தமிழ்த் தேசியம் அவரவர் வழிபாட்டுரிமையைப் பாதுகாக்கும்.


மத அடிப்படையில் எந்த தேசியமும் உருவாகாது; எந்தத் தேசமும் நிலைக்காது!   

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.