ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இராயக்கோட்டையில் எழுச்சிமிகுப் போராட்டம் - கோரிக்கைக்கு அரசு நிர்வாகம் பணிந்தது!










எழுச்சிமிக்க மக்கள் போராட்டம்! பணிந்தது அரசு நிர்வாகம்!
தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும்
இராயக்கோட்டை மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! 



இராயக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பு;

கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டையில், வறட்சியைப் போக்கி வேளாண்மையை செழுமைப்படுத்தும் வகையில், தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரும் 'தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை' நிறைவேற்றக் கோரி பல்லாண்டு காலமாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

இக்கோரிக்கையை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான தமிழக உழவர் முன்னணியும், அப்பகுதி மக்களையும், உழவர்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் இயக்கமும்' முன்னெடுத்துச் சென்றன.

இவ்வமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, 2010ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்தது. 2012-2013ஆம் நிதி ஆண்டில், இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2014ஆம் ஆண்டு எப்ரலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.22.20 கோடி செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டது. ஆனாலும், இத்திட்டத்திற்கானப் பணிகள் நடக்கவில்லை.

எனவே, இந்த நிதியாண்டிலேயே இப்பணிகளை நடத்த வேண்டுமெனக் கோரி, இன்று (17.11.2014) இராயக்கோட்டையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பை ஏற்று, வணிகர் சங்கங்களும், காய்கறிக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வணிகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இன்று, காலை முதல் இராயக்கோட்டை பகுதியில் முழுமையான கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில், இராயக்கோட்டை முதன்மைச் சாலையில், தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ஆயிரக்கணக்கான உழவர்களும், வணிகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு எழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர். 

தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.வேலாயுதம், தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு பகுதி நிர்வாகிகள், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். 

இராயக்கோட்டை காவல் நிலையத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில், தேன்கனிக்கோட்டை வட்டம் - வட்டாட்சியர், கிருட்டிணகிரி பொதுப்பணித்துறை திட்ட வடிவமைப்பு உப கோட்டம் உதவி செயற்பொறியாளர்  திருமதி. வனஜா, தேன்கனிக்கோட்டை துணை வட்டாட்சியர், இராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

போராட்டக் குழு சார்பில், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் தோழர் கோ.மாரிமுத்து, இராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணிக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன், முகளுர் கிளைச் செயலாளர் தோழர் முகுந்தன், அளேசீபம் கிளைச் செயலாளர் தோழர் அனுமந்தப்பா, கொப்பக்கரை கிளைச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேச்சுவார்த்தையின் நிறைவில், திட்டத்தை இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றுவதற்கான உடனடிப் பணிகளில் ஈடுபட அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இராயக்கோட்டை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.