ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்

 சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அதேபோல இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் திரு. லிண்டோ அவர்களும் ஓய்வு பெறுவதற்கு முன் ஊடகவியலாளர் சந்திப்பில்இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தேர்தல் முறை எவ்வாறு இருக்கும்?” என்ற கேள்விக்கு விடை அளிக்கும் போதுஇருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இருக்குமா?” என்று பதில் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற ஐயங்கள் சிந்தனையாளர்களிடையே தோன்றிக் கொண்டே இருக்கின்றன. காரணம் தேச அரசுகளை நிறுவிக் கொள்ளும் தகுதியும் ஆற்றலும் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் இந்திய ஒற்றை வல்லாண்மை அரசின் காலனிகளாக சிறைப்பட்டிருப்பதுதான். தேசிய இனங்கள் தங்களின் அடையாள மீட்புக்காகவும் நீர், நில உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொடர் போராட்டங்களுக்கு இந்திய ஒற்றை வல்லாண்மை அரசு முகம் கொடுக்க முடியாமல் போகும் நிலையில் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று ஓப்பன் (OPEN) என்ற ஆங்கில வார இதழில் (சூலை, 2010) வெளியான கேஸ்ரோலிக் குழுவின் ஆய்வறிக்கையின் சாரமே இக்கட்டுரை.

·         இந்திய ஐக்கிய நாடுகள்
·         அரைதற்சார்புள்ள நகர அரசுகள்
·         22க்கும் மேலான புதிய அரசுகள்

இந்திய ஆளும் வர்க்கம் மாற்றுத் திட்டங்கள், வழிகள் மேற்கொள்ளாவிட்டால் 2025இல் இந்தியத் துணைக் கண்டம் இந்த திசை வழியில்தான் செல்லப்போகிறது எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.

கேஸ்ரோலிக் குழு’ - நிதி, வணிகம், பொது அலுவல், ஊடகம், கொள்கை உருவாக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் இந்திய மரபு வழிவந்த ஐம்பது வயதிற்குட்பட்ட உயர்மட்ட வல்லுநர்களைக் கொண்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாங்கும் சக்தி, உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள ஏற்பு என்ற பெருமித நிலை ஒருபுறம் உள்ளது. தகவல் அறியும் சட்டம், வாக்காளர்களின் முதிர்ச்சி என்ற விழிப்புணர்வு நிலையும் வளர்ந்துள்ளது. ஆயினும், கட்டுக்குள் கொண்டுவர முடியாத எங்கும் நிறைந்திருக்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரவர்க்கத்தின் இரக்கமற்ற ஆணவப் போக்கு மறுபுறம் உள்ளது.

“இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள சமூக உணர்வாளர்கள், சிந்தனையாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் புறக்கணிக்கும் போக்கு மறுபுறம்” என்று அதிகார வர்க்கத்தின் மனப்போக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.

“மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்படுத்தும் அழுத்தங்கள், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் உண்மை நிலைக்கும் உள்ள இடைவெளி, சாதி மற்றும் பழங்குடி மக்களின் சிக்கல்களின் வேர்களைக் கண்டறியும் அக்கறையின்மை. மேலும் அவர்களின் வாழ்வாதாரம், சொத்துப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதிக்குப் பொறுப்பு ஏற்கும் கடமையைத் தவிர்க்கும் போக்கினால் மா.லெ. குழுக்களின் வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் காரணிகளாகும்” என்று இந்த ஆய்வுக்குழுக் கூறுகிறது.

மேலும் பாகிஸ்தான், வங்க தேசம், சீனா, நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களினால் இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள். அண்டை நாடுகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அந்நாட்டு மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயரும் வாய்ப்பும் அதன் விளைவாக மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடியும் அடையாள இழப்பும் ஏற்படுவதற்கு எதிராக வெளியாருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

பல்வேறு காரணங்களால் நிலவுடைமை நொறுங்கிப் போவதாலும் இடுபொருள்களின் விலையுயர்வு, விளை பொருள்களுக்கு உரிய ஞாயமான விலையின்மை, வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்ற சொல்லொன்னா துயரங்களுக்கு ஆட்படும் விவசாயிகளும், விவசாய கூலிகளும் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பதால் நகர்ப்புறங்கள் குடிநீர்ப் பற்றாக்குறை, சுகாதாரச் சீர்கேடுகளுக்கு உள்ளாவதால். புறநகர்ப் பகுதிகள் வேகமாக உருவாதல், உழவுத்தொழில் நசிவால் உணவு உற்பத்தி குறைந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய அபாய நிலை ஏற்படும்.

வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு சுருங்கிப் போதல், உள்நாட்டில் படிப்புக் கேற்ற வேலை தேடும் இளைஞர்கள் பெருகுதல் இந்நெருக்கடிகளின் விளைவாக இளைஞர்கள் மதங்களின் பிடியிலிருந்து விலகி பகுத்தறிவுச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுதல் என்ற பல்வேறு காரணிகளின் காரணமாக, இந்த நிலை ஏற்படும் எனத் தங்களின் முடிவுகளுக்கானக் காரணத்தை வரிசைப்படுத்துகிறது கேஸ்ரோலிக் குழு.

இறுதியாக, நிலவும் நெருக்கடிகளுக்கு அடிப்படையானக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாகக் களைவதற்கான தெளிவான கொள்கைத் திட்டங்களை முன்வைக்காமல், அச்சிக்கல்கள் வரம்பு மீறாமல், அதே நேரத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் ஆளும் வர்க்கத்தினுடைய அணுகுமுறை கவலையளிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது அக்குழு.

கேஸ்ரோலிக் குழு மேலே பட்டியலிட்டுள்ள முரண்பாடுகள் முற்றிவரும் நிலையில் இந்தியா தவிர்க்க இயலாதவாறு மீண்டும் பிரிவினைக்கு உள்ளாகும் என்னும்  ஆய்வு முடிவுகள் அச்சத்தின் விளைவாக எழுந்த கற்பனையாக இருக்குமா? அல்லது உண்மையில் நடந்தேறுமா? கேஸ்ரோலிக் குழுஅளித்துள்ள காலவரையரைக்குள் (2025) பிரிவினை நடந்தேறாவிட்டாலும், இந்தியா பல தேசங்களாகப் பிரிவது தவிர்க்க முடியாதது என்பது இயக்கவியல் உணர்த்தும் பாடம்.

இந்திய விடுதலைப் போருக்குத் தலைமைதாங்கிய பெருமுதலாளியப் பார்ப்பனிய இந்தி ஆதிக்க  ஆற்றல்கள் வெள்ளையனை வெளியேற்ற அவர்களால் செயற்கையாக இணைக்கப்பட்ட பல்வேறு மொழி இன மக்களுக்கு ஆசைவார்த்தை கூறியும் உறுதிமொழியளித்தும் தங்களுக்குப் பின் அணிதிரட்டிக் கொண்டார்கள். விடுதலைக்கு முன் மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து போகலாம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் விடுதலைக்கு பின் மாநில அதிகாரங்களைப் பறித்து மாநகராட்சி அளவிற்கு மதிப்பிழக்கச் செய்தனர். மொழிவழி மாநிலங்களைப் பெற உயிரிழப்பும் பெரும் போராட்டங்களும் தேவையாயிருந்தன. இவ்வாறு பல வழிகளிலும் வஞ்சிக்கப்பட்ட பன்மொழி பேசும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் நீர் - நில உரிமைகளுக்காகவும், சட்டம் ஒழுங்கு - நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இன்றைய காலகட்டம் தேசிய இன உரிமைப் போராட்டக் காலகட்டம். ஒரு நாடு என்ற சிறைக்குள் அடைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்கள் பிரிந்து பல்வேறு தேசிய இன அரசுகள் உருவாகிக் கொண்டிருப்பதும், பிரிந்திருந்த தேசிய இனங்கள் ஒரு தேசமாக, ஒரு நாடாக உருவாகிக் கொள்வதுமான காலகட்டம். 14 நாடுகளைக் கொண்டிருந்த ஐரோப்பா முதல் உலகப் போருக்குப் பின் 26 நாடுகளாகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின் 35 நாடுகளாகவும் மாறியது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிக்குப் பிறகு புதிதாக 15 நாடுகள், செக்கோசுலோவேக்கியா இரண்டு நாடுகளாதல், யூகோசுலேவியா ஆறு நாடுகளாதல் எனப் புதிய தேசிய இன அரசுகள் உருவாயின. கனடாவில் கியுபெக்கும் கூட்டு முடியரசில் (United Kingdom) ஸ்காட்லாந்தும் தனி அரசு இலக்கை நெருங்கி வருகின்றன.

உலகமயத்தை வலியுறுத்துகிற உலக வணிக மாநாடுகள் நடைபெறும் காலங்களில், உலகின் பல பகுதிகளில் வாழும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களான பாரம்பரிய உடைகளுடனும், அணிகலன்களுடனும், உற்பத்திப் பொருட்களுடனும் மாநாடுகள் நடக்கும் அரங்குகள் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்தும், உலகமய மாநாட்டுக்கு மாற்றாக தேசிய இன மக்களின் மாநாடுகள் நடத்தியும் வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அடைபட்டுச்  சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தேசிய இன மக்களிடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டி வருவதால் அந்நாடுகள் கொதி நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.

இந்தியா ஒரு தேசம் அல்ல, பல தேசங்களைக் கொண்ட ஏகாதிபத்திய நாடு என்ற முடிவிற்கு வருவது தவிர்க்க முடியாதது. மாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் இன்று உலகம் போய்க் கொண்டிருக்கும் திசைவழியில்தான் தவிர்க்க முடியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் இந்தியத் தேசியம், இந்திய ஒருமைப்பாடு முழக்கங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு மாநில உணர்வுகள் மொழி, இன உரிமை முழக்கங்கள் முன்னுக்கு வருவது!

இன்றைய உலக சமூகத்தின் அடிப்படை அலகு ஒரு தேசிய இனம், அதற்கொரு நாடு என்பதாகும். இந்த அறிவியல் அணுகுமுறையில் முகிழ்த்ததுதான் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்,

எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது இலக்கு  இறையாண்மையுள்ள  தமிழ்த் தேசக் குடியரசு


என்னும் தமிழ்த் தேசியக் கருத்தியல் இயல்பானது, அறம் சார்ந்தது, இது ஒரு கட்சியின், இயக்கத்தின் கருத்தியல் அன்று. இது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கருத்தியல். தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் சரியான நிலைபாடு என்பதைத் தான் கேஸ்ரோலிக் குழு அறிக்கை மறுவகையில் உணர்த்துகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.