மண்ணின் மக்களுக்கே வேலை கேட்டு சென்னை சென்ட்ரலில் தொடர்வண்டி மறியலில்
மண்ணின் மக்களுக்கே வேலை கேட்டு சென்னை சென்ட்ரலில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது!
“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில் இன்று (12.12.2014) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சியுடன் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 90 விழுக்காட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும், இதைச் செயல்படுத்த கர்நாடகத்தில் உள்ள சரோஜினி மகிசி குழு போல் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கேற்ப, சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், திரளான த.தே.பே. தோழர்கள் கூடினர். “வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”, “தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு தமிழருக்கே! தமிழருக்கே!” என்பன உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை எழுப்ப, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டத் தோழர்களை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடனே அங்கேயே சாலையில் அமர்ந்த தோழர்கள் 200க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் கொண்டு சென்றனர்.
இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையிலான இன்னொரு குழுவினர், தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்து, 11.30 மணியளவில் புறப்பட்ட மங்களுர் விரைவுத் தொடர்வண்டியைத் தடுத்து நிறுத்தி, தண்டவாளத்தில் அமர்ந்தனர். தோழர்களின் போராட்ட முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த தொடர்வண்டி ஓட்டுநர்கள், தொடர்வண்டி நிலையக் காவல்துறையினரையும், வெளியில் ஆர்ப்பாட்டத் தோழர்களை கைது செய்து கொண்டிருந்த காவல்துறையினரையும் உதவிக்கு அழைத்தனர். அதன்பிறகு, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்த போது, கடும் வாக்குவாதமானது.
இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், குடந்தை விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் புளியங்குடி பாண்டியன், மதுரை மேரி, விளவை இராசேந்திரன், ஈரோடு இளங்கோவன், சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், ஓசூர் செம்பரிதி, திருச்செந்தூர் தமிழ்த்தேசியன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட முன்னணிச் செயல்பாட்டாளர்களும், தமிழகமெங்கும் திரண்டு வந்திருந்த த.தே.பே. தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டு கைதாயினர். மதுரை இளமதி, புதுமொழி, சத்யா உள்ளிட்ட திரளான பெண் தோழர்கள், தங்கள் குழந்தைகளுடன் கைதாயினர்.
இப்போராட்டத்தில், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன், சைவத்தமிழ்ப் பேரவை தலைவர் திருவாட்டி கலையரசி நடராசன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட தோழமை அமைப்புத் தலைவர்களும் கலந்து கொண்டு கைதாயினர்.
கைதான தோழர்களை, யானை கவுனி பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
Leave a Comment